இலங்கை தினகரனுக்கு 90 வயது!…. முருகபூபதி.
இலங்கையில் தமிழ் படைப்பிலக்கியத்தில்
தினகரனின் வகிபாகம்!
முருகபூபதி.
ஏரிக்கரை பத்திரிகை (Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல், நாளிதழாக வெளியாகிறது. 23- 05 -1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த் தினசரி தினகரன்.
இதன் நிறுவனர் ( அமரர் ) டீ. ஆர். விஜேவர்தனா அவர்கள், “நாட்டின் தேசிய அடையாளமாக உருவாகிக்கொண்டு வரும் தேசியவாத எழுச்சியின் வீச்சை பத்திரிகைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கும்.” என்று ஏரிக்கரை ஏடுகள் தொடங்கப்பட்ட காலத்தில் தெரிவித்திருந்தார்.
இது இவ்விதமிருக்க, ( அமரர் ) பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும், தினகரன் ஆசிரியராக பதவியேற்ற காலப்பகுதியில் “ தேசிய உணர்வு வெள்ளம் வடிந்தபின்னும் அந்த இலக்கியம் அந்த நாட்டில் மட்டுமன்றி, உலகமெங்கும் மதிக்கப்படுவதற்கு சில நிரந்தர இலட்சியங்களே உதவுகின்றன. அந்த நிரந்தர உண்மைகளை தேசிய உணர்வு மூலம் கண்டுகொள்வதே தேசிய இலக்கியம் படைப்பவனின் பெருஞ்சோதனையும் பொறுப்புமாகும் “ என்று தெரிவித்திருந்தார்.
இவர்களின் கூற்றுக்களிலிருந்து 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினகரனின் கலை, இலக்கிய வகிபாகம் இலங்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியிருந்தது என்பது புலனாகும்.
கைலாசபதி, தினகரனை பொறுப்பேற்பதற்கு முன்னர் அதில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது.
தினகரனில் அவ்வேளையில் கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பகைப்புலமாகக் கொண்டு எழுதினார்கள். இதனால் அன்றைய இலங்கைத் தமிழ்த் தேசிய படைப்பிலக்கியம் தேக்கம் கண்டது. அதனை உடைத்தெறிந்தவர்தான் கைலாசபதி.
அவர் இலங்கை எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம் தந்து ஊக்கமளித்தார். தமிழ்ப்பத்திரிகையின் செல்நெறியை வகுத்தார்.
கைலாசபதிக்குப் பின்னர், தினகரன் ஆசிரியராக பொறுப்பேற்ற இ. சிவகுருநாதன், யாழ்.பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெறுவதற்காக சமர்பித்த ஆய்வில், ” தேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ச்சி காண கைலாசபதி களம் அமைத்துக் கொடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கைலாசபதி, தான் மாத்திரம் வளராமல், தன்னைச் சூழ இருந்தவர்களையும் வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும் படைப்பாளிகளாயினும் கலைஞர்கள், ஓவியர்கள், கார்டூனிஸ்ட்டுகளாயினும் சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் ஆரோக்கியமாக வளர்வதற்கு உற்றதுணையாக விளங்கியவர்.
“ தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், ஆகியோருக்குப்பின்னர்தான் பேராசிரியர் க. கைலாசபதி அந்த ஆசிரிய பீடத்திற்கு வருகிறார். 1959 ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் தினகரன் பத்திரிகை மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது.
யாழ்ப்பாணத்திலும் தினகரன் விழா நடந்தது. இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியேர் கலந்து கொண்டனர்.
சிவாஜி கணேசன் அந்த விழாவில்தான் கலைக்குரிசில் பட்டமும் பெற்றார்.
தமிழ்த் தேசிய இலக்கியம், கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட
சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்தையும் அதன் வளர்ச்சி போக்குகளையும் வெளிக் கொணரும் வகையில் ஆக்க இலக்கியங்களும் அது தொடர்பான கட்டுரைகளும் வெளிவருவதற்கு ஏற்றவாறு தினகரன் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம், பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை தினகரனின் தனித்துவமான சிறப்பாகும்.
தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு, தெற்கு மலையகம் சார்ந்த இலக்கிய படைப்புகளை தினகரன் வெளிக்கொணர்ந்துள்ளது.
சி.வி. வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.
“ பல புதிய அம்சங்களும் பரிசோதனைகளும் தினகரனில் இடம் பெற்றன. வாசகர்கள் பங்கெடுக்க கூடிய வகையில் திங்கட் கிழமைகளில் திங்கள் விருந்தும் புதன் கிழமைகளில் புதன் மலர் , வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம் மஞ்சரி, சனிக்கிழமைகளில் மாணவர் உலகம் என்பன இடம் பெற்றன. “
மூத்த தலைமுறை வாசகர்கள் சவாரித்தம்பர், சின்னக்குட்டி முதலான பாத்திரங்களை மறந்திருக்கமாட்டார்கள். இவர்கள் கூத்துக்கலைஞர்களோ, மேடை நாடக நடிகர்களோ அல்லர். கற்பனைப்பாத்திரங்கள்.
அந்த கேலிச்சித்திரங்களில் நடமாடிய அவர்கள் வடபுலத்தின் ஆத்மாவை பிரதிபலித்தவர்கள்.
அவர்களைப் படைத்தவர்தான் பின்னாளில் சிரித்திரன் என்ற மாசிகையை வெளியிட்ட சிவஞானசுந்தரம்.
அக்காலத்தில் காலையில் தினகரனில் கண்விழிக்கும் இலங்கை, தமிழ் முஸ்லிம் வாசகர்கள், முதலில் பார்க்கும் பகுதி குறிப்பிட்ட சவாரித்தம்பர், சின்னக்குட்டி பாத்திரங்கள் என்ன சொல்கின்றன..? என்பதை சித்திரிக்கும் பக்கம்தான்.
காவலூர் இராசதுரை, சுபைர் இளங்கீரன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, எச். எம். பி. மொஹிதீன், பி. ராமநாதன், சில்லையூர் செல்வராசன், இ.முருகையன், கே. கணேஷ், பிரேம்ஜி , அகஸ்தியார் ஆகியோர் தினகரனில் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள்.
பாரதி நூற்றாண்டு ( 1982 – 1983 ) காலத்திலும் தினகரன் தொடர்ச்சியாக பாரதி ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளது.
தினகரன் பெரு விருட்சம். இந்த விருட்சத்தின் நிழலில் இலங்கை இலக்கியம் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.
—-000—-