Featureகட்டுரைகள்
சடுகுடு ஆடும் கிழக்கு அரசியல் : இருமுகம் காட்டும் தலைமைகள் – எவர் எந்த பக்கம் என அறிய முடியாத நிலையில் முஸ்லிம் அரசியல் !!!
திசை தெரியாத பறவைகள் போல இலங்கை அரசியல் சர்வதேச வானில் மிதந்துகொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், உற்பத்தி பொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசைகள், பதுக்கல்கள், இல்லை என்ற வசனங்கள், உட்கட்சி மோதல்கள், அரச பங்காளிகளின் உள்ளக யுத்தம், சர்வதேச அரசியல் காய் நகர்த்தல்கள், தேசத்தின் வளங்கள் சூறையாடப்படல், பிரதமர் பதவிக்கான நாற்காலி போட்டி, அமைச்சர் பதவிகள் நீக்கம், புதிய நியமனங்கள் என்று ஊடகங்களுக்கு செய்திப்பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் மிக அழகாக கடந்து போகின்றது. இதில் சிறுபான்மையினரின் உடும்புப்பிடி போராட்டங்கள், கடலுக்குள்ளால் நெருப்பை கொண்டுசெல்லும் காய் நகர்த்தல்கள் என இலங்கை அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதில் கிழக்கு முஸ்லிங்களின் அரசியல் நிலை என்ன என்பதே இன்றைய அலசலின் முக்கிய நோக்கம்.
சான் ஏற முழம் சறுக்கும் முஸ்லிம் அரசியலின் நிலைதான் இன்றைய நாட்களில் மிகவும் பரிதாபமானது. 20ம் திருத்தத்தையும், வரவு செலவு திட்டத்தையும், அரசின் நிலைப்பாடுகளையும் ஆதரித்த எம்.பிக்களை கட்சிக்குள் இருந்து துரத்திய தலைவர்கள் சமீபத்தைய நாட்களில் அரசியல் துறவறம் பூண்டுள்ளனர் என்பது தான் உண்மை. இதில் முஸ்லிங்களின் தாய்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் “பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்” என்று கண்டியில் சூளுரைத்து அரசுக்கு எதிராக உரத்து பேசிக்கொண்டிருக்கிறார். அதே நாள் அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் (பிரதித்தலைவர்) சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அரசை ஆதரித்து சிறுபான்மை மக்களின் மீதான அரசின் பார்வை அண்மைய நாட்களில் திரும்பியுள்ளதை நிதியமைச்சர் பசிலின் அண்மைய அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இனவாத சாயமில்லாத தேசிய அரசை நிறுவ தயாராகி வருவதாக அறிவிப்புக்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனிடையே எங்களின் ஜனாஸாக்களை எங்களின் பிரதேசங்களிலையே நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது என்று கூறி பிரதமர், நிதிமைச்சர் போன்றோர்களின் செயற்பாடுகளை பாராட்டிக்கொண்டிருக்கிறார். நாட்டின் நிலைகள் தொடர்பிலும், முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு களமாடல்களை செய்துவரும் ஹக்கீம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்குமாறு வலியுறுத்தி கண்டி, டொரிங்டன் ஜோர்ஜ் ஏ. டீ சில்வா மைதானம் முன்பாக, பாரிய கையெழுத்திடும் நிகழ்விலும், எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தபோதும் சரி, எரிபொருள் பிரச்சினையை மையமாக கொண்டு கண்டியை நோக்கி காலை நேரப் பயணம் செய்த நேரத்திலும் சரி, இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்கியை உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதும் சரி, இலங்கைக்கான நியுஸிலந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லெடொன் அவர்களை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதும் சரி இன்னோரன்ன எந்த சந்திப்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எம்.பிக்களை அவர் அழைத்திருக்க வில்லை. இந்திய பிரதிநிதிகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது அழைத்ததை தவிர. சட்டமுதுமானியாக இருந்து கொண்டு இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை, சட்டப் புத்தகத்திலிருந்து முற்றாக நீக்கவேண்டும் என்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்குமாறு வலியுறுத்தி கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக, பாரிய கையெழுத்திடும் நிகழ்விலும், எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்த ஹக்கீம் பிலியந்தலையில் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்குள்ளான பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். ஆனால் அவரை தலைவராக கொண்டாடும் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய ஹபாயா விவகாரத்தில் பேசப்பட்ட பெண் ஆசிரியை தனது காலடிக்கு கொழும்புக்கு அழைத்து பிரச்சினையை கேட்டறிந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டாலும் பின்னர் மறந்தோ அல்லது மறைந்தோ சென்றுவிட்டது. விவாகரத்து செய்த கணவன் மனைவி போன்று வெளித்தோற்றத்தில் இருந்தாலும் திரைமறைவில் ஒட்டி உறவாடும் காதலர்களாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், எம்.பிக்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது போன்றே அகில இலங்கை மக்கள் காங்கிரஸும். சிறைசென்று திரும்பிய றிசாத் பதியுதீன் ஊரூராக சென்று தனக்கு அநீதி நடந்ததாக மோதுமேடைகளில், மக்கள் சந்திப்புக்களில் ஒப்பாரி வைத்தார். அவர் சிறையில் வாடிக்கொண்டிருக்க அரசின் உல்லாசம் அனுபவித்த மயிலின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அம்பாறையில் முஷாரப் அணி, றிசாத் அணி என்று இரண்டு அணிகள் உருவாகியுள்ளது. அதில் றிசாத் அணிதான் பலமானதாக இருந்தாலும் கூட முஸாரபின் சிறியளவிலான செல்வாக்கு அந்த கட்சிக்கு இல்லாமல் போகியது துரதிஷ்டம் எனலாம். அதனால் அடுத்த தேர்தலை சந்திக்க இப்போது கோஷ்டி சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் முஷாரப். ஏனைய எம்.பிக்களான அனுராதபுர எம்.பி இசாக் ஹாஜியும், புத்தள எம்.பி அலிஷப்ரி ரஹீமும் தன்னுடைய அரசியல் ஆணிவேரை சேவைகளை கொண்டு நிறுத்த அரசை மட்டுமின்றி தன்னுடைய பொருளாதாரங்களையும் வாரி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா கோமாவிலிருந்து எழுந்தவன் போன்று நாட்டிலும், முஸ்லிம் சமூகத்திலும் நிறைய பிரச்சினைகள் இருக்க நாட்டின் சகல பாகங்களிலும் முஸ்லிங்களுக்கு உரிமை ரீதியிலான பிரச்சினை இருக்கத்தக்கதாக அம்பாறை மாவட்டத்தின் பெயரினை மாற்றுவதாக இருந்தால் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் பெறப்பட வேண்டும் என எதோ ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு கோத்தாபய அரசு அமைச்சை பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவுடன் தனது மொட்டு காய்ச்சல் நிலைப்பாட்டில் சற்று தெளிவை பெற்றுள்ளார். பெயர்மாற்றம் செய்வது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்ற அளவுக்கு விடாப்பிடியாக இருந்து அம்பாறை எனும் பெயரும் இந்த மாவட்டத்தின் பெயரும் இவ்வாறு இருக்கும் பொழுது, திடீரென இம்மாவட்டத்தின் பெயரினை, அதன் எல்லையை திகாமடுல்ல என மாற்றவேண்டும் என முன்மொழியப்பட்டது. இருந்தாலும், தங்களது மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களது மாவட்டத்தின் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. அவ்வாறு பெயரினை மாற்றுவதாக இருந்தால் இங்கு வாழுகின்ற மக்கள் எல்லோருடைய அபிப்பிராயத்துடன் அது மாற்றப்பட்ட வேண்டும். அப்படி மாற்றப்படுகின்ற பொழுது வரலாறுகள் அதில் பேசப்பட்ட வேண்டும் என இப்போது திடீரென அந்தர்வேல்டி அடிக்க ஆரம்பித்துள்ளார். அதே போன்று காணிகள் தொடர்பாக கேட்கின்ற பொழுது, கடைசியாக இந்தப் பிரதேசம் 1990 ம் ஆண்டுகளுக்குப்பிறகுதான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு ஒவ்வொரு பற்றுக்களாக தமிழர்களும் முஸ்லிம்களும், சிங்கள மக்களும் வாழ்ந்தார்கள். ஒரு இடத்தில், ஒரு பெயரில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு திட்டமிடப்பட்டு கடந்த காலங்களில் வெவ்வேறு செயலகங்களாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. காணிகள் எல்லா மக்களும் பாவிக்கக்கூடிய வகையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு இன்றைக்கு முஸ்லிம்கள் என்று போனால், அது அவர்களுடைய பிரதேசம் அல்ல. இது தமிழர்களுடைய பிரதேசம் அல்லது சிங்களவர்களுடைய பிரதேசம் என்று காணிகளை கபளீகரம் செய்கின்ற நிலைமைகள் இருக்கின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களை எடுத்துக் கொண்டால், அதன் பின்னால் இனவாதம் அல்லது இனத்துவேசம் இருப்பதனை நாம் அறிகின்றோம். எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறும் அளவிற்கு இனவாதம் உச்சத்தில் தோற்று விக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் எனும் தொனியில் நாம் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எந்த சட்டமாக இருந்தாலும் மார்க்கங்களை அது கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் மார்க்கம் என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானது அல்ல. இது உலக மக்கள் எல்லோரும் கையாளும் ஒன்றாகும். என இவ்வளவு காலமும் அமைதிகாத்துவிட்டு அதிர்ச்சி வைத்தியத்தின் பின்னர் இப்போது கோத்தா அரசுக்கு பாடம் எடுக்கிறார். அமைச்சர் கனவில் மிதந்த பலருக்கும் இப்போது இந்த அரசின் போக்கில் தெளிவுகள் கிடைத்திருப்பது காலத்தின் கோலத்தை அப்பட்டமாக காட்டுகிறது. தற்போதைய சில வெளிநாட்டு சக்திகள் நமது நாட்டை இன்னமும் அடிமைப்படுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என எண்ணியுள்ளனர். அவர்களே அரசியலை தீர்மானிக்கின்றவர்களாக மாறியிருக்கிறார்கள். பாராளுமன்ற சக்தியையும், ஜனாதிபதியை தீர்மானிக்கின்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இருந்த போதும் தேசிய காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினை நேசித்ததுக்கொண்டே வந்திருக்கிறது. ஏனென்றால் அவர் இந்த கிழக்கு மக்களுக்கு நல்லவைகளை செய்துள்ளார் என்பதற்காக. இன்று நாட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள், வினோதமான நிகழ்வுகள் இவைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் அரசியல் அமைப்புக்கள் 20 வரை சென்று விட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டு மக்கள் எப்படி இருந்தார்களோ அதே நிலையில் தான் அனைத்து இன மக்களும் வாழ வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு அடிமையாக இருந்த மாதிரி, சுதந்திரத்திற்கு பின்னர் அடிமையாக வாழ முடியாது. இந்த விடயத்தில் தேசிய காங்கிரஸ் மிகத்தெளிவாக இருக்கிறது என இப்போது வியாக்கியானம் பேச ஆரம்பித்து விட்டார். ஏனெனில் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட துளியளவும் வாய்ப்பில்லை என்பதை உள்ளர்ந்தரீதியாக உணர்ந்து கொண்டார் என்பதை அவரது அண்மைய நாட்களின் நகர்வுகளிலிருந்து தெளிவாக தெரிகிறது. நல்லாட்சியில் மைத்திரி அணியில் பயணித்து பஸிலின் எதிர்ப்பை சம்பாதித்த அதாஉல்லா எம்.பி தொடர்ந்தும் பஸிலின் ராஜாக் கத்தியினால் வெட்டுவாங்கிக்கொண்டே வருகிறார். பொதுத்தேர்தல் வேட்பாளர் நியமனத்தில் தொடங்கி அமைச்சராக பதவியேற்க ஆடையணிந்து தயாரானவருக்கு பிரதிமைச்சை கூட கொடுக்காமல் ஏமாற்றியது என பட்டியல் நீள்கிறது. பஸிலின் எதிரிகளுடன் கூட்டணியமைத்து பேசிவந்த அதாஉல்லாவுக்கு அரசின் வழமையான சலுகைகளை தவிர விசேடமாக எதுவும் கிடைப்பதில்லை. 20க்கு கையுயர்த்தியதுடன் மட்டுமின்றி வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியது, அரசின் திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது வரை அரசுடன் அதிலும் குறிப்பாக பசிலுடன் ஒட்டி உறவாடும் ஹரீஸை மீறி அதாஉல்லா அம்பாறையில் எதையும் சாதிக்க முடியாது என்பது வெளிப்படை உண்மை. தனக்கு சேவகம் செய்யும் சிலருக்கு துப்பரவு தொழிலாளி நியமனத்தை கூட பெற்றுக்கொடுக்க முடியாத அதாஉல்லா சாய்ந்தமருத்துக்கு எப்படி நகரசபை பெற்றுக்கொடுப்பார் எனும் வாதம் இப்போது சாய்ந்தமருதில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. இவைகளெல்லாம் இப்படி இருக்க தன்னுடைய அரசியல் அஸ்தமனத்தை உணர்ந்து தன்னுடைய குடும்ப சொத்தான தேசிய காங்கிரஸ் கைநழுவி போகிவிடும் என அஞ்சி அக்கட்சியின் தேசிய இணைப்பாளர், மேலதிக தேசிய அமைப்பாளர், தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர், சட்டவிவகார, கொள்கை அமுலாக்கள் செயலாளர், மதவிவகார செயலாளர், சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளர் உட்பட உயர்பீட, செயற்குழு உறுப்பினர்கள் பலருக்கும் அண்மைய பேராளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தனக்கோ தன்னுடைய வாரிசுகளுக்கோ பங்கம் வராத உயர்சபை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய காங்கிரசில் இரு அணிகள் இப்போது தோற்றம் பெற்றுள்ளது. செல்வாக்கில் சரிவை நோக்கி நகரும் மு.கா, தே.கா, ம.கா என எல்லா கட்சிகளும் இப்போது தடுமாற்றத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. திருமலையில் தௌபீக், மட்டக்களப்பில் ஹாபீஸ் நஸீர், அம்பாறையில் ஹரீஸ் ஆகியோர் ஒரே கூட்டில் நின்றாலும் தலைவர் ஹக்கீம் அந்த கூட்டுக்கு ஆதரவானவர் என்பதும் அம்பாறை முஷாரப், புத்தளம் அலி சப்ரி ரஹீம், அனுராதபுரம் இசாக் ஹாஜி தன்னுடைய பாதையில் பயணிக்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் நிந்தவூர் தாஹீர், கல்முனை ஜவாத், சம்மாந்துறை மாஹீர், பாலமுனை அன்சிலை கொண்டு கட்சியை வளப்படுத்த வேலைத்திட்டங்களை முடுக்கி விட்டுள்ளார். ஓடிய ஓட்டத்தில் சாய்ந்தமருதை கைப்பற்றிய அதாஉல்லா இப்போது கையேறு நிலையில் மாட்டிக் கொண்டார். சபையை முன்னிறுத்திய சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி சலீம் தேசிய காங்கிரஸிலிருந்து தன்னுடைய காலை எடுக்கும் நேரம் கனிந்துள்ளது எனும் செய்தி இப்போது கசிந்துள்ளது. தோடம்பழ அணி மக்கள் மத்தியில் விமர்சனத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளமையினால் மீண்டும் நகரசபை போராட்ட கோசம் வலுப்பெறும் நிலை தோன்றியுள்ளது. இதனால் மீண்டும் போராட காத்திருக்கிறது சில அரசியல் ஆசைகொண்ட கால்கள். இப்போது கிழக்கு அரசியலில் மாற்றம் வரும் பொழுதுகள் கனிந்துள்ளது. தேசிய காங்கிரசின் தலைமையின் போக்குகளினால் அக்கட்சியின் செல்வாக்கு அம்பாறையில் 40 ஆயிரம் வாக்குகளிலிருந்து 18 அளவுக்கு குறைந்துள்ளதையும், மட்டு, திருமலையில் அழிந்து கிடப்பதையும் எதிர்வரும் ஒரு தேர்தலில் நாம் காணலாம். மக்கள் காங்கிரசில் எதிர்வரும் மாகாண சபையில் 45ஆயிரம் வாக்குகளுக்கு மேல் மயில் பெற்று தாஹிரும், அவருடன் இணைந்து மாஹீர் அல்லது ஜவாத் அம்பாறையிலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினராவர் எனும் நிலை தோன்றியுள்ளது. அது மட்டுமின்றி மட்டக்களப்பில் அமீரலியின் வெற்றி இப்போதுவரை எட்டாக்கனியாக இருப்பதுடன் மட்டு, திருமலையிலும் ஆசனத்தை பெரும் வாய்ப்பை மயில் பெரும். மு.காவில் இப்போது இரண்டு அணிகள் உள்ளது அதில் ஹக்கீம் அணியை விட ஹரீஸ், பைசால், ஹாபீஸ்,தொளபீக் அணியே கிழக்கில் பலம். இருந்தாலும் தேர்தலில் அந்த அணிகள் எப்போதும் போல இப்போதும் ஒன்றிணைந்து செயற்படும். அதனால் மு.காவின் வசமே அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அரசை ஆதரிக்கும் போது பல விமர்சனங்களை சந்தித்த 20க்கு ஆதரவளித்தோரின் காய் நகர்த்தல்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சம் வெல்ல ஆரம்பித்துள்ளதாக அவர்களின் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவைகளெல்லாம் இப்படி இருக்க முஸ்லிங்களின் நிறைய பிரச்சினைகள் கிடப்பில் இப்போதும் இருக்கிறது. சம்மாந்துறையை இரு உள்ளுராட்சி மன்றங்களாக பிரித்தல், சாய்ந்தமருது நகரசபை, கல்முனை உப பிரதேச செயலகம், கரங்கா வட்டை- வட்டமடு காணி பிரச்சினைகள், எல்லை பிரச்சினைகள், முகுதுமஹா விகாரை அடங்களாக ஆயிரம் பிரச்சினைகள் அம்பாறையிலும் அதிகார பிரச்சினைகள், காணி பங்கிடுகள், பிரதேச செயலக பிரச்சினைகள் மட்டு, திருமலையிலும் என கிழக்கில் நீளமான பட்டியலில் பிரச்சினைகள் உள்ளது. இவைகளுக்கு மத்தியில் ஓய்வாக இருந்த முன்னாள் ஆளுநர் டாக்டர் எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லா ஹெலியில் கிழக்கு மண்ணுக்கு அவசரமாக தேர்தல் பணிக்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது. நல்லவர்கள் என பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற திறமையான, ஆளுமைமிக்க, மொழியாற்றல் கொண்ட, சர்வதேச தொடர்புகள் நிறைந்த பலரும் அரசியலில் களம் கண்டு வெல்லும் வாய்ப்பு உருவாகதாவரை முஸ்லிங்களுக்கு விடிவில்லை என்பதே எதார்த்தம். நூருல் ஹுதா உமர் மாளிகைக்காடு நிருபர்