“அமைதியான நதியினிலே ஓடம்” என்ற பாட்டை சிலவேளைகளில் யூடியூபில் தேடிப்பிடித்து கேட்பேன். அப்போதெல்லாம் என் நினைவலைகள் தவழ்ந்து வந்து என் சிறவயது நினைவுகளை என்னுள் கரை சேர்க்கும். தாய்வழித் தாத்தா ஊரான திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் தங்கி பேட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்த நாட்கள் இன்பமாய் வந்துமோதும்.
குளிப்பதற்காக வயல் வெளிகளில் நீரப்பாய்ச்ச ஓடிக்கோண்டிருக்கும் பம்ப்செட்டுக்கு செல்வேன். அப்போது பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தின் அருகிலுள்ள வேப்ப மரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்கள் என்காதுகளில் விழுந்து கொண்டிருக்கும். அப்படி விழுந்து என்மனதில் பதிந்த பாடல்களில் ஒன்றுதான் அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடல்.அப்போது என் மனது அடைந்த ஆனந்தத்திற்கும் இருந்த அமைதியான சூழ்நிலைக்கும் எல்லையில்லை. அவையெல்லாம் இப்போது எங்கே சென்று ஒளிந்து கொண்டன. கொஞ்சம் கவனம் சிதறினால்கூட காலணியில்லா கால்கள் வரப்பில்இருக்கும் வளமான புல்லில் வழுக்கி வயலுக்குள் விழுந்து பூமித்தாயை வணங்க வைக்கும். இப்போது கொஞ்சம் கவனம் பிசகினால் வழுக்கிக் கொண்டு சாலையில் ஓடும் வாகனம் நம்மை வானுலகம் அனுப்பி நம் உறவுகளை வணங்க வைக்கும். சீக்கிரம் போங்கள் தீர்ந்துவிடும் என்று மொட்டைச் சாத்தான் குட்டையில் விழுந்த கதையாக மனைவி அவசரப்படுத்தினாள். “என்ன தீர்ந்துவிடும்? எதற்கு அவசரப்படுத்துகிறாய்?” என்றேன் மனைவியிடம். “வயசானாலும் ஆச்சு இப்படியா மறதி இருக்கும். வழக்கமாக போகும் பல்பொருள் அங்காடியில் காப்பித்தூள் அந்த சிறந்த பிராண்டிற்கு பாதி விலையில் “சேல்” போட்டிருக்காம். சீக்கிரம் போய் இரண்டு டப்பா வாங்கி வாருங்கள்” “ஓ! அதைச் சொல்றயா?” என்று கேட்ட படியே கராஜைத் திறந்து வாகனத்தை இயக்கி சிட்டாய் பறந்தேன். பக்தனுக்கு பகவான் தரிசனம் கிடைத்ததுபோல் மனைவி சொன்ன குறிப்பிட்ட காபித்தூள் கண்முன்னே அருள் பாலித்தது. இரண்டுதான் வாங்கச் சொன்னாள். ஆசை யாரை விட்டது. ஐந்து வாங்கினேன். சோழாவரம் கார் பந்தயத்தில் முதலில் வந்தமாதிரி பெருமிதத்துடன் வீடுவந்து சேர்நதேன். மனைவியிடமிருந்து விருது கிடைத்தது. இது என் திறமைக்கு கிடைத்த விருது. திருவிளையாடலில் தருமிக்கு கிடைத்த விருது போல் அல்ல. ஒருமாதம் ஓடியது. இரவு உணவை என்முன் இறைவனுக்கு படைப்பதுபோல் மனைவி பரிமாறினாள். சிறிது நேரத்தில் தபாலில் வந்த கடிதத்தை என்முன் நீட்டினாள். சிவப்ப விளக்கில் தாண்டியதற்கான அபராதத் தொகையைப் பார்த்தேன். என் பாட்டி பாசத்துடன் என்னை “எங்க குலசாமியப்பா நீ” என்று கொஞ்சியது ஞாபகத்துக்கு வந்தது. என் பாட்டி எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை உணர்ந்தேன். அது எவ்வளவு பெரிய உண்மை. என்முன் இரவு நேர படையல். மனைவி அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். நான் அந்த கடவுளப்போல் சாப்பிடாமல் அமைதியாக இருந்தேன். அர்ச்சனையை முடித்தவள், “கரடியாய் கத்தறேன். அபராதம் வாங்கிவந்துட்டு அமைதியாய் இருக்கீங்களே?” கேட்டாள் மனைவி. “நான் கடவுளாகிவிட்டேன்” என்று பதிலளித்தேன். “என்னது?” வியப்புடன் கேட்டாள். அவளுக்கு விபரமாக பாட்டி குலசாமி என்று கொஞ்சியதைச் சொன்னேன். இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றவள் செல்லமாக என்கன்னத்தில் ஒரு இடி இடித்ததோடல்லாமல் அவள் முகவாய்க்கட்டை தோளில் இடித்தபடி சென்றாள். கடவுளுக்கு பசிக்காது. எனக்கு பசிக்கிறதே? இரவு உணவை இனிதே உண்டேன். நான் என்ன தப்பு செய்தேன்? எல்லாம் அவன் செயல். காப்பித்தூள் மேல் ஆசையைத் தூண்டியவனும் அவனே. வாகனத்தை வேகமாய் ஓட்ட வைத்து சிவப்பு விளக்கில் தாண்டச் செய்தவனும் அவனே. அபராதம் போட்டவனும் அவனே. எல்லாம் அவன் செயல். சாப்பிட்டு முடித்து தலைநிமிர்ந்தேன். “கடவுள் இருக்கிறான் குமாரு” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் எதிரே சுவரில் தொங்கிய நாள் காட்டியில் முருகன் “யாமிருக்க பயமேன்” என்றபடி சிரித்துக் கொண்டிருந்தார். -சங்கர சுப்பிரமணியன்.