கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம்!…. ( சுவை முப்பத்து மூன்று ) …… மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
பனையில் இருக்கும் பாளையினைச் சீவியே பூத்துணர்ச்சாறு எடுக்கப்படுகிறது. அதுதான் பின்னர் கள்ளாயும் மாறுகிறது என்றும் பார்த்தோம்.பூந்துணர்ச்சாற்றினைத் தருகின்ற நிலையில் ஆண்பனைகளைவிடப் பெண் பனைகளே அதிகளவில் தருகின்றன என்பது நோக்கத்தக்கதாகும் ,ஆண்பனையானது ஏழு மாதம் தொடக்கம் எட்டுமாதங்கள் வரைக்குமே சாற்றினைத் தந்து நிற்கும்.ஆனால் பெண்பனையானது ஏழு மாதம் தொடக்கம் ஒன்பது மாதம் வரை தந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆண் பனைகளைவிடப் பெண் பனைகளே அதிகமாகச் சுரக்கின்றன என்பது முக்கியமாகும்.ஆண்பனைகளில் கள்ளெடுக்க்கும் முறையும் , பெண்பனைக ளில் கள்ளெடுக்கும் முறை வேறு வேறுவிதமாகவே காணப்படுகிறது.
பெண்பனையில் பாளைவரும் நிலையில் – அப்பாளை இளம் பாளையாக இருக்கும் பொழுது அதனைச் சீவி கள்ளெடுக்கப்படுகிறது. இப்பருவத்தில் கள்ளெடுக்கும் முறையை ” தட்டுப்பனை முறை ” என்று அழைக்கிறார் கள்.. பெண் பனையின் பாளைகள் முதிர்ந்த நிலையில் அதனிலிருந்து கள் எடுக்கும் முறையை ” காய்வெட்டிப் பனை முறை ” என்றும் அழைக்கிறார்கள். ஆண் பனையில் இளம்பாளைப் பருவத்தில் கள்ளெடுக்கிறார்கள். அதற்கு ” அரிபனை முறை ” என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆண் பனையில். முதிர்ந்த பாளைகளிலிருந்து கள் பெறப்படும் முறைக்கு ” வழுப் பனை முறை ” என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதும் நோக்கத் தக்கதா கும்.இவையனைத்தும் கள்ளோடும் , பத நீரோடும் சம்பந்தப்பட்ட தொழில் நுட்பப் பெயர்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது,
கள் குடிப்பது சரியா தவறா என்னும் நிலை சமூகத்தில் எழுச்சி பெற்றிருக்கிறது என்பதையும் கருத்திருத்த வேண்டும்,அதே வேளை கள்ளிறக்குதல் என்பது தொழிலாகவும் , வருமானத்தைக் கொடுப்பதாகவும் அமை ந்தும் இருக்கிறது.
கள்ளினைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களே சொல்லுகின்றன. கள்ளுக்கடை மறியல், கள்ளுக்கடைப் போரா ட்டம் என்றெல்லாம் நடைபெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. கள்ளானது மருத்துவ குணம்மிக்கது என்றும், கள்ளினை அளவுடன் குடிப்பதால் தீங்கு பெரிதும் இல்லை என்றும் கருத்துக்கள் பரவலாக இருப்பதும் நோக்கத் தக்கதாகும்.கள்ளினை விரும்பிக் குடித்துக் கொண்டே ஒரு மன்னன் சங்ககாலத்தில் இருந்தானாம், அவன் கள் ளினை விற்றவர்களுக்கு உரிய பொருளைக் கொடுக்காமல் கடன்காரனாக இருந்தானாம் என்றும் சங்க இலக் கிய வாயிலாக அறிய முடிகிறது. ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் கள்ளினை விரும்பிக் குடித்தார்கள் என்றும் இலக்கியக்கியங்கள் இயம்பி நிற்கின்றன. அதேவேளை தமிழரின் மருத்துவமாகிய சித்த மருத்துவம் கள்ளை மருத்துவ குணம் மிக்கது என்று காட்டுவதும் நோக்கத்தக்கதாகும்.
விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம்வோம்
பந்தமாந் தாதுவுமே பாரிக்கும் – உந்துபித்தந்
தோன்றும்பா டாணங்கள் சுத்தியுமாந் தோகைமின்னே
என்ற பனைமதுவிற் கே
அகத்தியர் குணபாடத்தில் கள் பற்றி இப்படிக்கூறப்பட்டிருக்கிறது. இதில் கள்ளானது – உடலுக்கு வலிமை யினைக் கொடுக்கிறது. ஆண்மையை உண்டாக்குகிறது. நீர் வேட்கையினைப் போக்குகிறது.அதுமட்டுமல்லாமல் மருந்துகள் செய்வதற்குப் பயன்படுத்தும் பாஷாணங்களையு தூய்மை செய்யவும் பயன்பட்டு நிற்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.
கள்ளைப்பற்றி எங்கள் ஈழநாட்டுப் புலவரான நவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் பாடியிரு க்கிறார்.
ஏழைகட்குஞ் செல்வருக்கும் மேற்ற பனைமரத்திற்
பாளைவருங் காற்பருவம் பார்த்ததனை – தாழ
திடுக்கித் தடிகொண் டிடுக்கிப் பிடியால்
அடித்து நுனியை யரிந்து – மடக்கியே
முட்டிவாய் வைத்து முடிந்துவிடின் மெல்லவே
மட்டுலாங் கள்ளூறி வந்திருக்கும் – இட்டமுடன்
வாமமதத் தாரதனை வாமிக்கு வைத்துண்டு
காமியம் வேண்டிக் களிப்பார்கள் – ஏமமிகு
கள்ளைக் குடித்து களியாடல் நல்லறிஞர்
எள்ளி விடுத்த விழிதொழிலாம் – உள்ளநிலை
போக்குங்கள் ளுண்ணிற் பொருந்து முடல் வலிமை
நீக்குஞ் சிரங்குமுத நோர்பிணிகள் – ஆக்குகின்ற
ஏரா முறைமை யியம்புகிறேன் நீயதனை
நேராகக் கேட்டிடுவாய் நேரிழையே – சேரும்
அரபொடியூ சிக்காந்த மாங்கீச்சுக் கிட்டம்
உரமுடனே முட்டியிட் டூற – மருவுநிலை
எழுமுடன் சென்றா லிறக்கியதி காலையுண்ண
ஈழைகா மாலையிவை யேகுங்காண் – பாளைதனிற்
கள்ளிறக்குதல் தொழிலில் பலர் ஈடுப்பட்டிருக்கிறார்கள். கள்ளிறக்கும் தொழிலில் உள்ளவர்களில் சிலர் கள்ளினை இறக்கி விற்றுக் காசு எடுப்பதில் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்றும் , கள்ளினை அவர்கள் விரும்பிக் குடிக்காது இருக்கிறார்கள் என்றும் அறிந்திட முடிகிறது.கள்ளுக்குடித்தால் அதனால் தீமை வருமா அல்லது வராதா என்றும் விவாதிக்கும் நிலையிலில்லாமல் அவர்கள் கள்ளினைக் குடிக்காமல் இரு க்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது.அதே நேரம் கள்ளினைப் படித்தவர்களும் குடிக்கிறார்கள். பெரிய பதவி களில், உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்களும் குடிக்கிறார்கள். சிலர் தெரியக் குடிக்கிறார்கள். சிலர் இரகசிகசிமாய் க் குடிக்கிறார்கள்.கள் என்றால் ஒரு ஆசை எல்லோரிடமும் குடி கொண்டே இருக்கிறது. அந்த ஆசையானது அன்று தொடக்கமே ஆரம்பமானது என்பதும் நோக்கத்தக்கதாகும்.
கள்ளினை மரத்திலிருந்து இறக்கியவுடன் குடிப்பதற்கென்றே செல்லுபவர்களும் இருக்கிறார்கள். அதே வேளை கள்ளினை விற்பதற்கென்று அமைக்கப்பட்ட கள்ளுக் கொட்டில்களை நாடிப் போவோரும் பலர் இருக் கிறாற்கள். கள்ளுத் தவறணை என்னும் பெயரிலும் கள் விற்கும் இடங்களும் அமைந்து காணப்படுகின்றன. மற்றைய குடிவகைகள் போல் நாகரிமுடைய குடிவகையாக கள் இருக்கவில்லை. அதனால் கள் விற்கும் இடங்கள் சாதாரண இடங்களாக நாகரிக நிலை புகா இடங்களாகவே அமைந்திருக்கின்றன என்பதும் நோக்கத் தக்கதாகும்.கள்ளைக் குடிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களே பெரும்பாலும் பனை ஓலையினால் அமைந் ததாகவே இருக்கிறது. பச்சை ஓலையினால் ஆக்கப்படும் அதனைப் ” பிளா ” என்று பெயரிட்டு அழைக்கிறா ர்கள். பனைக்குக் கீழரமர்ந்து பனை ஓலையினால் செய்யப்பட்ட பிளாவைக் கையில் ஏந்தி கள்ளினை வாங்கிக் குடிப்பதில் பலரும் ஆனந்தம் அடைகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.மற்றைய குடி வகைகளைக் குடிப் பதற்கென்று விதம் விதமான கண்ணாடிக் குடுவைகள் வந்திருக்கின்றன. அவற்றில் குடிப்பதையே நவநாகரிகம் என்று பலரும் நினைக்கிறார்கள். அதுதான் அந்தக் குடிவகைகளுக்கான விசேடம் என்னும் நிலையும் அமைந்து விட்டது. ஆனால் கள் என்பது கிராமியத்தின் அடை யாளமாக இருப்பதால் அதில் நவநாகரிகம் நுழைய முடி யாமல் ஆகி விட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ! கள்ளினைப் போத்தல்களில் அடைத்து விற்ப னைக்கும் விடுகின்ற நிலையினையும் தற்போது காணக்கூடியதாகவும் இருக்கிறது.
கள்ளுக் குடிப்பது என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது என்ற போதிலும் – கள்ளானது கேட்டினை விளைவிக்கக் கூடியது என்னும் கருத்தும் முகிழ்த்து வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய விடய மேயாகும்.கள்ளினைக் குடிப்பவர்களை சமுதாயத்தில் ஒருவிதமாக நோக்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.கள் குடிப்பவர்களுடன் உறவினையே வைத்துக் கொள்ளுவதை விரும்பா நிலையும் சமூகத்தில் காணப்படுகி றது.கள்ளுக் கொட்டில் என்றாலே அருவருப்பாக எண்ணுபவர்களையும் காண முடிகிறது.கள்ளினை வியந்து கூறிய பழந்தமிழ் இலக்கியங்கியங்களின் கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அதற்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை மிகவும் ஆணிதரமாக எடுத்துரைக்க எழுந்தது பழந்தமிழ் இலக்கியம். அது என்ன வென்று அறி ந்திட ஆவலெழுகிறதல்லா ? அதுதான் பொய்யா மொழி எனப் போற்றப்படும் “ திருக்குறளாகும்“.கள்ளுக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்திய முதற் போராளியாக வள்ளுவரை எடுத்துக் கொள்ளலாம்.எப்படியெல்லாம் வாழக்கூடாது என்று சொல்லுவதோடு அமையாமல் ” இப்படித்தான் வாழ வேண்டும் ” என்று சொல்லி அத ற்கான வழி வகைகளையும் மிகவும் சிறப்பாகவே வள்ளுவர் திருக்குறள் வாயிலாக வழங்கி இருக்கிறார். திருக்குறளில் ” கள்ளுண்ணாமை ” என்று ஒரு அதிகாரத்தையே வைத்து கள் பற்றிய கருத்துக்களை வள்ளுவர் வழங்கி இருக்கிறார்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
விலைமகளே ஒதுக்கப்பட வேண்டியவள். அவளுடன் கள்ளினை ஒப்பிடுகிறார் வள்ளுவர். விளைமகளையும் , கள்ளினையும் நாடுபவர்கள் திருமகளாலேயே ஒதுக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டுவதும் நோக்கத்தக்கது.
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
கள்ளினை விடாது எப்போதுமே அதில் மிகுந்த விரும்பம் உடையவர்களாக இருந்தால் – அவரைக் கண்டு எவருமே பயப்படவே மாட்டார்களாம். அதுமட்டுமன்றி தமக்கிருக்கும் புகழையுமே இழந்து விடுவார்களாம்.
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
கள்ளைனைக் குடிப்பாரைச் சான்றோர்கள் மதிக்கவே மாட்டார்கள். பெற்றெடுத்த தாயின் முகத்திலும் துன்ப த்தை ஏற்படுத்திவிடுவாம்.
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்கூற்றத் தார்க்கு
நாணம் என்னும் நற்பண்பே நிற்காமல் ஓடிவிடுமாம். நாணமில்லாவிட்டால் அவன் மனிதனே இல்லை என்றாகி விடுமல்லவா என்று வள்ளுவர் இடித்துரைக்கின்றார்.இப்படியே கள்ளின் தீமையினை வள்ளுவர் எடுத்துரைத்து கள்ளுக்குடிப்பதனை வன்மையாகவே கண்டிக்கின்றார்.
மகாத்மா காந்தி கள்ளினை எதிர்த்தார். சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார். பூதானச் செம்மல் வினோபாஜி எதிர்த்தார்.பல தலைவர்களும் கள்ளினை எதிர்த்தார்கள்.கள்ளினைக் குடித்தால் மதியானது மயங் குகிறது. கள்ளுக்குடித்தவன் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையில் பல தவறுகளையே செய்தும் விடுகிறான். அளவுக்கு மிஞ்சிக் கள்ளினைக் குடித்தவர்களால் குடும்பத்தின் ஒற்றுமையே சீர்குலைந்து போயி ருக்கிறது.குடிகாரக் குடும்பம் என்னும் அவப்பெயர்கூட சமூகத்தில் வந்த்திருக்கிறது. இதனால் கள் குடிப்பதை விட வேண்டும். கள் குடிப்பது என்பது அறத்துக்குப் புறம்பானது என்னும் கருத்தானது சமூகத்தில் வலுப் பெற்றிருக்கிறது.அப்படி வலுப்பெற்ற கருத்தானது ஈழத்துச் சிந்தனைக் கவிஞரால் எப்படிக் கவிதையாக வந்திருக்கிறது பாருங்கள்.
கள்ளுக்கடைப் பக்கம் போகாதேகாலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலேஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலேவிட்டேனோ கள்ளுக்குடியை நான்பாவிப் பயலே கொஞ்சம் கேளடாபாலூட்டி வளர்த்த நானுன் தாயடாபற்றி எரியுதெந்தன் வயிறடாபனங்கள்ளை மறந்து நீயும் வாழடாகடவுள் தந்த பனைமரங்கள் தானடாகடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடாவாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோகள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்கடன்காரனாக உன்னை மாற்றிடும்கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்கடவுளே என் மகனும் இதனை உணரானோகள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோஅன்னை சொல்லு கேட்பானென்றால்ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே….