Featureகதைகள்

பதைபதைப்பு!…. ( சிறுகதை ) ….. ஏலையா க.முருகதாசன்.

மனைவி அடுப்படிக்குள் காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தாள்.மனம் காரைச் சுற்றியே சென்று கொண்டிருந்தது. கார் இயந்திரத்தின் தண்ணீர் விடும் கொள்கலனுக்குள் இன்று தண்ணீர் விட்டேயாகவேண்டும் என்ற தீரமானத்துடன்,காலைச் சாப்பாடு சாப்பிட்டவுடன் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி குளியலறைக்குள் தாடிமயிரை மழித்துக் கொண்டிருந்தன்.

படுக்கையறையிலிருந்த எனது கைத்தொலைபேசிமணி ஒலிக்கும் சத்தத்தைக்; கேட்ட நான் குளியலறையைவிட்டு வெளியேவர மனைவியும் அடுப்படிக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருக்கையில் கைத்தொலைபேசி அடிப்பதை நிறுத்தியிருந்தது.மனைவி யார் என்பது போல என்னைப் பார்க்க எங்களடைய பேரனின்; பெயர் அதில் இருக்கவே, ஏன் தொலைபேசி எடுத்தவன் என்னவாக இருக்கும் இப்ப பள்ளிக்கூடத்திலல்லவா இருப்பான் என்ற யோசனையுடன் பேரனின் பெயரை அழுத்த’ தாத்தா’ என்ற குரல் கேட்க, „ஏனப்பு அடிச்சனி என்று பதைபதைப்புடன் கேட்க, „தாத்தா கெதியிலை வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போங்க,எனக்கு வயிற்றுக் குத்து, சத்தியும் எடுத்தனான்’ என்றான்.

„நீ ஒன்றுக்கும் யோசியாதை தாத்தா இப்ப உடனேயே வருகிறேன் „ என்ற நான், „வகுப்பு ஆசிரியருக்கு தெரியுமோ’ என்று கேட்க’ தெரியுந் தாத்தா கெதியிலை வாங்கோ’ என்றான் பேரன்.’கஜனுக்கு வயிற்றுக் குத்தாம் நான் டக்கென்று போறன் என்று சொல்லிக் கொண்டே மனைவியிடம் தொலைபேசியைக் கொடுக்க மனைவி’ ஐயோ கடவுளே அவன் அந்தரப்படப் போகிறானே „என்று சொல்லிக் கொண்டே தொலைபேசியை வாங்கியவள் „ அப்பு யோசிக்காமல் கவலைப்பாடாமல் இரு, தாத்தா பத்து நிமிசத்திலை உன்னட்டை வந்திடுவார்’ என்று ஆறுதல் படுத்தியவள்’இஞ்சருங்கோ கெதியாய் வெளிக்கிட்டு ஓடுங்கோ, பாணைக் காரிலை போய்க் கொண்டு இருக்கும் போதே சாப்பிடுங்கோ பிள்ளைக்கு வட்ஸ் அப்பிலை எழுதிப் போட்டு வெளிக்கிடுங்கோ என்றாள்.

மகளுக்கு’ பேரனுக்கு வயிற்றுக் குத்தாம் கூப்பிடப் போறன்,நீ ஒன்றுக்கும் கவலைப்படாதை „ என்று எழுதிவிட்டு,மிகுதித் தாடியை வேகமாக மழித்துவிட்டு,அவசரம் அவசரமாக முகத்தைக் கழுவி திருநீறைப் பூசிக் கொண்டே, அம்மாளாச்சி பேரனுக்கு வயிற்றுக் குத்து சுகமாக வேணும் „ என்று வேண்டிக் கொண்டே உடுப்பை வேமாக உடுத்திக் கொண்டு புறப்பட்ட என் கையில் ஜாம் பூசிய பாண்துண்டுகளையும் கோப்பியையும் தந்த மனைவி „ செருப்போடை போகிறியள்’ என்று சுட்டிக்காட்ட, மனைவி பாணையும் கோப்பியையும் திருப்பி வாங்க,சப்பாத்தைப் போட்டுக் கொண்டு வேகமாக காரடிக்கு ஓடிய எனக்கு, கார் இயந்திர கொள்கலனுக்குள் தண்ணீர் விடவேண்டும் என்பது ஞாபகம் வர கொள்கலனுக்குள் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்க முடியாது, நேரம் போயிடும், பேரன் நான் எப்ப வருவன் என்று பார்த்துக் கொண்டிருப்பானே என பதைபதைக்க

„முருகா பள்ளிக்கூடம் போய் வரும்வரையாவது காருக்கு ஒன்றும் நடக்காமல் இருக்க வேண்டும்’ என்று முருகனை வேண்டிக் கொண்டு காரை இயக்கி செலுத்திக் கொண்டிருந்தன்.

விரைவுப் பாதையில் காரைச் செலுத்துவது போல வேகமாக செலுத்த வேண்டுமென்று மனம் சொன்னாலும் வீதியின் ஓரத்தில் நடப்பட்டு வைத்திருக்கும் கம்பங்களில் ஐம்பது கிலோமீற்றர் வேகம் மட்டுமே என்பதை கவனித்த போதும் காரின் வேகம் அறுபது கிலோமீற்;றர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

பேரன் படிக்கும் பள்ளிக்கூடம் எங்களுடைய வீட்டிலிருந்து இருபத்தொன்பது கிலோ மீற்றர் தூரத்திலிருந்தது.

கைத்தொலைபேசி மணி அடிக்கவே காரை வீதியோரமாக நிறுத்திவிட்டு கைத்தொலைபேசியைக் காதில் வைக்க,மறுமுனையில் மகள்’ அப்பா பதட்டப்படாதையுங்கோ அவசரப்பட்டு வேகமாக காரைச் செலுத்தாதையுங்கோ, நான் மகனோடு கதைத்தனான், தாத்தா வருவார் என்று சொன்னனான்’ என்று சொல்ல, „மனுசனுக்கு சொன்னனியே’ „ஓம் அப்பா நீங்கள் யோசிக்காமல் போங்கள் „என்றாள்.

மகளும் மருமகனும் வேலைக்குப் போகிறவர்கள்.பேரன்; பள்ளிக்கூடத்துக்கு பேருந்தில்தான் போய் வந்தான்.

மனம் ஏதேதோ நினைத்தது.பேரன் என்னையே பார்த்துக் கொண்டிருப்பானே என்ற யோசனையில், எனது காருக்கு முன்னால் சிவப்பு சமிக்ஞை விளக்குகள் எரிவதால் நிறுத்தி வைக்கப்படும் கார்கள் மீதும் சிவப்பு சமிக்ஞை விளக்கு மீதும்’ இந்த நேரம் பார்த்து….’என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது’.மழளையர் பள்ளியில் பேரன் படித்துக் கொண்டிருக்கும் போது,தன்னைக் கூப்பிட எப்ப தாத்தா பாட்டி வருவார்கள் என பள்ளிக்கூட யன்னலுக்கூடாகப் பார்த்துக் கொண்டிருப்பான். மழளையர் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை அவரவரின் பெற்றோர் வந்து கூட்டிக் கொண்டு போகும் போது மற்றைய பிள்ளைகள் ,தமது பெற்றோருக்காகவோ தாத்தாவுக்காகவோ பாட்டிகளுக்காகவே காத்திருப்பார்கள்.

அப்பொழுது மற்றைய பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போகிறவர்கள் வரும் போதெல்லாம் தன்னைக் கூட்டிக் கொண்டு போக தாத்தா பாட்டி வருகின்றனரா என ஏக்கத்துடன் காத்திருப்பதும்,மழளையர் பள்ளி கதவைத் திறந்து நாங்கள் உள்ளே போனதும் முகமலர்ச்சியுடன் ஓடிவந்து கட்டிபிடிக்க நான் பேரனை தூக்க மனைவி கொஞ்சிக் கொண்டே „அப்பு பயந்திட்டியா’என்று பேரனைக் கேட்க,’ நாங்கள் எப்பிடியும் வருவந்தானே,எங்கடை அப்புவைக் கூட்டிக் கொண்டு போக’ என்று செல்லமாக சொல்வதுமாக ஆண்டுகள் சென்று இன்று பேரன் ஐந்தாவது வகுப்பு படிக்கிறான்.

மழளையர் பள்ளிக்கூடத்தில் ஏக்கத்துடன் பேரன் காத்திருந்தது போல இப்பொழுதும் காத்திருப்பானே என மனம் நெகிழ்ந்தது.போகும் வழியில் ஒரு

புகையிரதக் கடவை இருக்கின்றது.புகையிரதம் போகும் நேரங்களில் வீதியை மறித்து தடுப்புத் துலா இறக்கப்பட்டுவிடும்.

புகையிரதக் கடவையில் புகையிரதம் வருவதற்காக தடுப்புத்துலா இறங்கியிருக்குமோ என எண்ணிக் கொண்டே போய்க் கொண்டிருந்த போது, நான் போகும் வலதுபக்கப் பாதையில் பலகார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிற்பது தெரிந்தது.’ அட என்ன இது „என்று சலித்துக் கொண்டே முன்னால் நின்ற காருக்குப் பின்னால் காரை நிறுத்தினன்.

புகையிரதக் கடவையில் வாகனங்களை நிறுத்தும் போது, வாகனங்களிலிருந்து வரும் புகை சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்திவிடும் என்பதற்காக இயந்திரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது சட்டம்.

இயந்திரத்தை நிறுத்தினால் பிறகு அதை இயக்கும் போது இயந்திரம் இயங்காது விட்டால் என்ன செய்வது என:ற பயத்தில் இயந்திரத்தை நிறுத்தாது சிலவிநாடிகள் இருந்த நான் பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாகப் பார்த்தேன், காவல்துறை வாகனம் மெதுவாக எனது காருக்குப் பின்னால் வந்து நின்றது.கார்களின் இயந்திரங்கள் இயங்குகின்றதா இல்லையா என்பதை நிறுத்திவைக்கப்படும் விளக்கின் ஒளிர் தன்மையிலிருந்தும், புகைவரும் குழாயை கவனித்தும் கண்டு பிடித்துவிடுவார்கள்.

நான் உடனே இயந்திரத்தை நிற்பாட்டினேன்.புகையிரதம் சென்றதும் தடுப்புத்துலா மேலெழ காரின் இயந்திரத்தை இயக்கினன்,.இயங:கியது.நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி காரைச் செலுத்திக் கொண்டிருந்தன்.அந்த வீதியில் வேகக் கட்டுப்பாடு ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்டக்கூடாது.எனது காருக்குப் பின்னால் காவல்துறையினர் வந்து கொண்டேயிருந்தனர்.வேகத்தடையை மீறி காரைச் செலுத்தினால் காவல்துறையினர் எனது காரை தடுத்து நிறுத்தி தண்டம் அறவிடுவதைவிட பேரனைக் கூப்பிடக் காலதாமதமாகவிடுமே என்பதற்காக வேகத்தடைக்கு கட்டுப்பட்டு காரைச் செலுத்தினாலும்’இவங்கள் நேரம் காலம் தெரியாமல் எனக்குப் பின்னாலை வந்து கொண்டிருக்கிறாங்களே’ எனக் கொஞ்சம் படபடப்பு கொஞ்சம் கோபத்துடன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க,பின்னால் வந்த காவல்துறை வாகனம் வலதுபக்க வீதியில் திரும்பிப் போனதைக் கண்ட நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டன்.

ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தடையை மீறக்கூடாது என்று மனம் சொன்னாலும், பேரன் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பானே என்ற பதைபதைப்பு வேகத்தடையை கொஞ்சம் மீறி ஐம்பத்தைந்து என வேகம் காட்டும் கருவி காட்டிக் கொண்டிருந்து.கொஞ்சத் தூரம் போனால் இன்னொரு புகையிரதக்கடவை வரும்.அங்கேயும் புகையிரதம் கடந்து போவதற்காக தடுப்புத்துலா இறக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் வர,அப்படி இருக்கக்கூடாது என்ற நினைத்தவாறு காரைச் செலுத்திக் கொண்டிருந்த போது எனது கண்கள் தூரத்திலே தெரிந்த புகையிரதக் கடவைத் துலாவைப் பார்க்க அது செங்குத்தாக நிற்பதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டன்.

புகையிரதக் கடவையைக் கடந்து போய்க் கொண்டிருந்த போது,மகளின் வீட்டுக்குப் போகும் பிரதான வீதி, வீதித் திருத்த வேலைக்காக இருப்பக்க வழி நிறுத்தப்பட்டு சமிக்ஞை விளக்குகள் மூலம் போவதும் வருவதும் ஒரு வழியாக இருப்பதைப் நாங்கள் பார்த்தபடியால், சில வேளை வீதித் திருத்த வேலை காரணமாக வீதியை போக்குவரத்துக்குத் தடை செய்திருந்தால் என்ன செய்வது,அப்படியென்றால் வேறு வேறு வீதிகள் வழியாக சுற்றிச் சுற்றிப் போக வேணும், அப்படிப் போனாலும் அந்த வீதிகளும் எங்கெங்கு கொண்டு போய்விடுமோ தெரியாதே என்ற படபடப்புடன் போய்க் கொண்டிருந்த எனக்கு வீதி மூடப்படாமலிருந்தது நிம்மதியைத் தந்தது.

பேரனின் பள்ளிக்கூடத்துக்கு இன்னும் ஐந்து கிலோமீற்றர் தூரமேயிருந்தது..வயிற்றுக் குத்தால் அழுவானோ சத்தியெடுப்பானோ என மனம் ஒரு நிலையில்லாது எனது சிறுவயது ஞாபகம் ஒன்று வந்தது.

தெல்லிப்பழைச் சந்திக்கு கிட்டவுள்ள பெரியம்மா வீட்டுக்கு போய்விட்டு வீதியால் வந்து கொண்டிருந்த போது எனக்கு மலம்கழிக்கும் உந்துதல் வரவே நான் அழுதவாறு நடந்து கொண்டிருந்தன்.

கட்டைக்காற்சட்டை தெறிகளை கழற்றி காற்சட்டையை கீழிறக்கி வேலியோரத்திலாவது மலம் கழிக்காது அழுதவாறே நடக்க மலம் என்னையறியாமலே வெளியே வந்து கால்களில் பிரள அதோடேயே வீடு போய்ச்சேர அம்மா காற்சட்டையை கழற்றிவிட்டு தண்ணீர் ஊற்றி மலவாசல் மலம் பிரண்ட கால்கள் என எல்லாவற்றையும் „ கக்கூசுக்கு வந்தால் காற்சட்டையைக் கழற்றிப் போட்டு,ஒளிவுமறைவில இருந்திட்டு வரலாந்தானே’ என அடியாத குறையாக ஏசியது நினைவுக்குவர பேரனின் வயிற்றுக் குற்று ஒருவேளை பேரனுக்கும் எனக்கு நேர்ந்தது போல நடந்திடுமோ என்ற எணணத்தை „ச்சாய்ச்சாய்’ அப்படி ஒன்றும் நடக்காது என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு காரைச் செலுத்திக் கொண்டிருக்கையில் பேரனின் தொலைபேசி வர காரை வீதி ஓரமாக நிறுத்திவிட்டு’ என்னப்பு’ என்று கேட்க, „கெதியிலை வாங்க’ என்று பேரன் சொல்ல,’இந்தா இன்னும் ஒரு நிமிசத்துக்குள்ளை பள்ளிக்கூடத்திலை நிற்பன் „ என்று , பேரனுக்குச் சொன்னதிலும் பார்க்க,கெதியிலை பள்ளிக்கூடத்துக்கு போய்ச் சேர்ந்த நான் காரை நிறுத்தி,வேகமாக கதவைத் திறந்து நடக்க பேரன் „தாத்தா வந்திட்டியளா’ என்று தொலைபேசியில் கேட்க , „தாத்தா வந்திட்டன், இதோ வாறன்’ ஓடாத குறையாக பேரனின் வகுப்பு எங்கையிருக்கும் என்று எண்ணியபடியே போய்க் கொண்டிருந்த நான் எனக்கெதிரே வந்து கொண்டிருந்த மாணவனிடம் ஐந்தாம் வகுப்பு அறை எங்கே இருக்கிறது என்று கேட்க, அந்த மாணவன் எனது பதைபதைப்பை புரிந்து கொண்டு தானாகவே முன்வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போக வகுப்பறை நோக்கிய படியில் நான் கால் வைக்க பேரன் கதவைத் திறந்து கொண்டு ஓடிவந்து கட்டிப்பிடிக்க,அப்பொழுதுதான் என்னைச் சூழ்ந்து ஆட்டிப்படைத்த பதைபதைப்பும் படபடப்பும் நீங்கி என்னை நிம்மதியாக்கி கண்கள் கசிந்தது. நானும் அவனை அணைத்தபடியே „ இப்ப எப்படி இருக்குது அப்பு „ என்று கேட்க,’இப்ப கொஞ்சம் சுகம் தாத்தா’என்று சொன்னது நிம்மதியாகவிருந்தது.

காரில் ஏறியிருந்து கொண்டு மகளுக்கு வட்ஸ்அப் மூலம் „பேரனை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறன் „ என செய்தியனுப்பிவிட உடனடியாகவே, தொலைபேசியில் மகனிடம் „தாத்தாவுடன் வீட்டிலை இரு, தாத்தா றஸ்க்கும் தேத்தண்ணியும்; தருவார் குடிச்சிட்டு படுத்திரு,நான் கெதியிலை வந்துவிடுவன் „ என்று சொன்னாள் மகள்.

பேரனைக் கூட்டிக் கொண்டு போய் அவனுக்கு தேத்தண்ணி போட்டுக்கொடுத்து றஸ்க்கும் கொடுத்தன்.றஸ்க்கை தேத்தண்ணியில் நனைச்சு சாப்பிட்டுத் தேத்தண்ணியையும் குடித்த பேரன்,கைத்தொலைபேசியை நோண்டியபடி எனது மடியில் படுத்திருந்தான்.

வழமையாக வரும் நேரத்தைவிட முன்கூட்டியே மகள் வர தாயைக் கண்டதும் எழுந்து தாயை அணைத்துக் கொண்டிருக்க,கையோடு வாங்கிவந்த மருத்தை மகனுக்கு குடிக்கக் கொடுத்தாள்.மகளிடமும் பேரனிடமும் விடைபெற்று எங்களுடைய வீட்டை நோக்கி காரைச் செலுத்திக் கொண்டிருந்தன்.

இனி எனக்கு முன்னால் நிறையக் கார்கள் சென்றால் என்ன, புகையிரதக் கடவையில் தடுப்புத்துலா வீதியைத் தடுத்து நின்றால் என்ன, காவல்துறை வாகனம் என் காரின் பின்னால் வந்தால் என்ன கவலையே இல்லை.மனம் கனம் குறைந்திருந்தது.ஐம்பது கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாட்டை மீறாது அமைதியாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தன்.

என்னையும் மனைவியையும் சந்திக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் „உங்களுக்கென்ன மூன்று பிள்ளைகளையம் கட்டிக் கொடுத்திட்டியள் இனி என்ன சாய்மணைக் கதிரையில் சாய்ந்து கொண்டு சிங்கனும் சிங்கியும் எதைபற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியதுதான் „ எனச் சிரித்துக் கொண்டே சொல்வார்.

ஆனால், தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும் வாழ்பவர்கள்தான் பேரன்களும் பேத்திகளும் என்பதை அவருக்கும் பேரன் பேத்திகள் வந்தால்தான் அறிவார்……

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.