கட்டுரைகள்
ஒரு படைப்பு சிறந்த படைப்பா என்பதை எது தீர்மானிக்கிறது?…. சங்கர சுப்பிரமணியன்.
படைப்பின் சிறப்பு அது சொல்ல வரும் கருத்திலா? அல்லது அதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தா? பொதுவான ஒரு கருத்தை கண்ணைமூடிக் கொண்டு எல்லோரும் ஆதரிப்பார்கள். அப்படியானால் பொதுவான கருத்துள்ள படைப்பை சிறந்த படைப்பு என்று சொல்லிவிடலாமா? அப்படியும் சொல்லிவிட முடியாதல்லவா? ஏனென்றால் சிறந்த படைப்பு என்றால் அதில் எதாவதொரு சிறப்பு இருக்கவேண்டும் அல்லவா?
அதிகப்படியான மக்கள் பார்ப்பதால் ஒரு படத்தை சிறந்தபடம் என்று சொல்லமுடியுமா? உப்புக்கு சப்பாணியான படத்தைக்கூட அப்படத்தில் நடித்திருப்பவருக்காக மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பார்ப்பதில்லையா? அதே சமயம் நன்றாக அறியப்படாத ஒருவர் நடித்த படம் சிறந்த படமாக போற்றப்படவில்லையா? இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பு என்பது அதிகப்படியானவர்கள் அனுகுவதால் ஒரு படைப்பை சிறந்த படைப்புஎன்றோ நன்றாக அறியப்படாதவரின் படைப்பு என்பதால் சிறந்த படைப்பல்ல என்றோ தீர்மானித்து விடமுடியாது. சில தரமற்ற படங்களும் கூட தாராளமாக ஓடும். அதற்கு காரணம் அப்படம் வரும் நேரத்ததைப் பொருத்தது. வெகுகாலமாக படங்களே வராதிருந்து திரைப்பட விரும்பிகள் என்ன ஆயிற்று படம் எடுப்பவர்களுக்கு எல்லோரும் ஊரைவிட்டு ஓடிவிட்டார்களா? என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது வரும்படமும் நன்றாக ஓடும். ஆலையில்லா ஊருக்கு இழுப்பைப் பூவும் சர்க்கரை அல்லவா? அதைப்போலத்தான் இதுவும். இன்னொன்றும் நடக்கும். மொக்கைப் படங்கள் கூட சக்கைப்போடு போடும். என்ன இது புரியாத புதிராக உள்ளதா? புதிரும் அல்ல ஒரு புடலங்காயும் அல்ல. நீங்கள் அறிந்த ஒன்றுதான். அப்படங்கள் பண்டிகை நாட்களில் வருவதுதான். இந்த பண்டிகைகால கொண்டாட்டங்களில் படத்தைப் பார்த்து விடவேண்டும். அப்போதுதான் பண்டிகை முற்றுப்பெறும். இல்லாவிடில் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இருப்போரும் உண்டு. தொலைக்காட்சிகளில் கூட பண்டிகை நாட்களில் திரைப்படம், சிறப்பு பட்டிமன்றம் எல்லாம் வருகின்றன அல்லவா? இதில் இன்னொரு கூத்தும் நடக்கும். ஒரு நடிகருக்காக படத்தை ஓடவிடுவதும் உண்டு. இதற்காக பெரியநெட் ஒர்க்கே ஓவர்டைம் போட்டுக் கொண்டு வேலைசெய்யும். விளம்பரப் படுத்திக்கொண்டே இருக்கும். திரையரங்கில் சுமாரான கூட்டம் இருந்தாலும் படம் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி என்னதான் இருக்கிறது என்று மக்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். எப்படியோ அந்த நடிகருக்கு பெயரை வாங்கிக் கொடுப்பார்கள். அந்த நடிகர் அதில் ஒரு சேட்டை செய்திருப்பார். அல்லது பஞ்ச் டயலாக் பேசியிருப்பார். அதையும் ஒருகூட்டம் பாராட்டி எதுவோ யாரும் செய்யாததை அவர் செய்து விட்டதாக் அவரை புகழின் உச்சிக்கே ஏற்றிவிடும். அடுத்ததாக ஒரு குறுகியவட்டமாக ரசிகர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு படைப்பை ஆகா ஓகோ என்று பாராட்டிக் கொள்வார்கள். ஒரு படைப்பு என்றால் வெகுவாக அனைத்து தரப்பு மக்களும் பாராட்டவேண்டும். நமக்கே தெரியும் அப்படி விருப்பு வெறுப்பின்றி பாராட்டப்பட்ட திரைப்படங்களும் நூல்களும் உள்ளன என்று. ஒரு படைப்பு பாராட்டைப் பெறும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கக்கூடாது. சான்றாக பிக்பாஸ் போன்ற படைப்புக்கள் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டாலும் அதனால் பண்பாடு பாழாகிறது என்ற குற்றச்சாட்டுக்களும் பெரிய அளவில் எழாமலும் இல்லை. ஜெய்பீம் போன்ற படங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பலராலும் போற்றப்படுகிறது. ஒரு இனவிடுதலையை கொச்சைப்படுத்தி படைக்கப்படும் படைப்புக்களெல்லாம் சிறந்த படைப்புக்கள் ஆகிவிடுமா? அங்கூர், செம்மீன், பாசமலர் போன்ற படைப்புகளுக்கு எதிராக ஏதேனும் ஒன்றைச் சொல்லவிடத்தான் முடியுமா? ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் தானாக கனியாத கனியை தடிகொண்டு கனியவைக்கவேண்டும் என்று. ரசிகர்கள தமக்கு வேண்டிய நடிகருக்கு எப்படியாவது பெயர் வாங்கிக் கொடுக்க முயல்வார்கள். நான்கூட சில நேரங்களில் நினைப்பதுண்டு பெரிய பெரிய நடிகர்களுக்கே இல்லாத ஆரவாரங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏன் என்று. ஆனால் அதெல்லாம் புற்றீசல்கள் என்பது போகப்போக புரிந்துவிடும். அதற்காக ஒட்டு மொத்தமாகவும் இதை தள்ளிவிடமுடியாது. ஏனென்றால் இப்படி விளம்பரம்தின் மூலம் வெகுஉயரத்தை எட்டியவர்கள் தொடர்ந்து கடின உழப்பால் அடுத்தடுத்து படைப்புக்களை கொடுத்து தானும் திறமைசாலிதான் என்று நிரூபித்தவர்களும் இருக்கிறார்கள். இருப்பு இருப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து செலவு செய்யமுடியும். இருப்பு இல்லாதவர்கள் கையில் இருப்பதை வைத்து நிலபுலன்களை விற்று ஒன்றிரண்டு படைப்புக்களை தந்துவிட்டு மறைந்து விடுவார்கள். விளம்பரத்தை மட்டும் வைத்தே வித்தை காட்ட முடியாதென்பதை அவர்களும் புரிந்து கொள்வார்கள். மேலும் ஒரு படைப்பு என்பது இயல்பிலேயே சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். விளம்பரப்படுத்தி ஆளைச்சேர்த்து சிறந்த படைப்பாக்க முற்படக்கூடாது. அவர் நடித்த படம் இவர் நடித்த படம் என்ற அடிப்படியில் பார்த்து வரும் கூட்டத்தை வைத்தும் சிறந்த படைப்பாக அடையாளப் படுத்தமுடியாது. எது சிறந்த படைப்பு என்பது மக்களுக்கு நன்றாகவே புரியும். ஒரு படத்தை இத்தனை பேர் ஏன் பார்க்கிறார்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் புரியும். அதிக விளம்பரமில்லாத நியாயமான விளம்பரத்துடன் யாருடைய படைப்பு என்று பாரமல் பொதுவான கண்ணோட்டத்துடன் ஒரு படைப்பை அனுக வேண்டும். பிறமொழி திரைப்படங்களையோ நூல்களையோ கவிதைகளையோ கதை கட்டுரைகளையோ அனுகுவதுபோல் அனுகவேண்டும். படைப்புக்களில் கருத்துக்கள் சமூகத்துக்கு எந்தவகையில் பலனளிக்கிறது எண்ணங்களை உயர்த்துகிறது என அறிதல் வேண்டும். ஒரு படைப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அதிகமானவர்கள் பார்த்தார்கள் என்பதால் சிறந்த படைப்பாகிவிடாது. நல்ல கருத்துக்களைக் கொண்ட மக்களை சித்திக்க தூண்டும் ஆரவாரமற்ற படைப்பே சிறந்த படைப்பாகும். -சங்கர சுப்பிரமணியன்.