Featureகட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!…. ( இரண்டாம் பாகம் )….. அங்கம் -01 ….. முருகபூபதி.

கடல்சூழ்ந்த கண்டத்தில் முதலில் சந்தித்தவர்கள் !

புளுக்கொடியலை ஒடித்து முகர்ந்து பார்த்த அதிகாரிகள் !!

முருகபூபதி.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் முதல் பாகத்தில் வெளியான 75 அங்கங்களையும் தொடர்ச்சியாகப் படித்து, தமது கருத்துக்களை எழுதிய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

1987 ஆம் ஆண்டு, பெப்ரவரி 07 ஆம் திகதி இரவுதான், மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரம் பேர்த்தில் வந்து இறங்கினேன்.

அன்றைய நாளிலிருந்து எழுதப்படவிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தின் முதல் அங்கத்திற்கு வாசகர்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

முதல் பாகத்தில் வெளியான 75 அங்கங்களிலும், எனது எழுத்துலகப்பிரவேசம், பத்திரிகைப் பணி, சந்தித்த மனிதர்கள், இணைந்திருந்த வெகுஜன மற்றும் அரசியல் இயக்கங்கள், சந்தித்த நெருக்கடிகள், பயணித்த நாடுகள், பார்த்த இடங்கள் பற்றியெல்லாம் முடிந்தவரையில் விரிவாக எழுதியிருந்தேன்.

நினைவாற்றல்தான் மனிதர்களின் சிறந்த மனசாட்சி. அதுவே நீதிபதி. எனினும் நினைவில் வைத்திருக்கத் தகாத பல சம்பவங்களும் மனிதர்களும் கூட நினைவில் வந்துகொண்டேயிருக்கும் கொடுமையை அனுபவிப்பவர்களும் மனிதர்கள்தான். அதனால், நினைவாற்றல் கூட சோதனைக்கும் வேதனைக்குமுரியதுதான்.

1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி, முற்பகல் 10 மணியளவில் தாய்லாந்து , பேங்கொக் விமான நிலையத்திலிருந்து அந்த தாய் ஏயார்வேய்ஸ் விமானம் என்னையும் இதர பயணிகளையும் சுமந்துகொண்டு, மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி பறந்துகொண்டிருந்தபோது, விடைகொடுத்துவிட்ட தாயகத்தில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் நினைவில் மீண்டும் மீண்டும் சஞ்சரித்தனர்.

கண்களை மூடியிருந்தாலும் மனக்கண்களில் அவர்கள் நடமாடிக்கொண்டேயிருந்தனர்.

வீரகேசரியில் முதலில் பிரதேச நிருபராகவும் பின்னர் ஒப்புநோக்காளராகவும், அதன்பிறகு அங்கிருந்து விலகும் வரையில் துணை ஆசிரியராகவும் எனது முழுநேரத்தொழில் வாழ்க்கையை கடந்திருக்கும் நான், இனி என்ன செய்யப்போகின்றேன்…? 36 ஆண்டுகாலம் படிப்பு, தொழில், திருமணம், குடும்பம் என்று பலருடனும் வாழ்ந்திருக்கும் எனக்கு, இனிவரப்போகும் வாழ்க்கையின் தொடக்கம் தனிமையில்தான் ஆரம்பிக்கப்போகிறதா..?

அம்மாவின் கருவறையில் வாழ்ந்த சில மாத காலத்திலிருந்த தனிமைதான், இந்த புலம்பெயர்வாழ்வின் தொடகத்தில் சில மணிநேரங்கள் இந்த இராட்சதப்பறவையின் வயிற்றில் நான் பெற்றிருக்கும் தனிமையா..?

பாசமுள்ள குடும்பம், தினம் தினம் தொட்டு அரவணைத்த குழந்தைகள், விரும்பி நேசித்த தொழில் அனைத்தையும் விட்டுவிட்டு பரதேசியாக புறப்பட்டுவிட்டேனே…!? இனி நான் புகலிடம் பெறும் நாடு எப்படி இருக்கும்.

சந்திக்கப்போகும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்..?

காகிதத்தையும் பேனையையும் தவிர வேறு எதனையும் தொட்டுப்பார்த்து வேலை செய்திராத நான், கடல் சூழ்ந்த கண்டத்துள் பிரவேசித்து எத்தகைய தொழிலைச்செய்து எனது குடும்பத்தை காப்பாற்றப்போகின்றேன்?!

“ உனக்கு வேறு என்ன தொழில் தெரியும்..? “ என்று அழுதுகொண்டே என்னைக் கேட்டவாறு வழியனுப்பிய அம்மாவுக்கு, “ அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டங்கள் இருக்கின்றன. அப்பிள் பறிக்கும் தொழில் செய்தாவது உங்களையும் குடும்பத்தையும் கவனிப்பேன் “ என்று வீறாப்புடன் சொன்னதை, அந்த விமானத்திலிருந்தவாறு நினைத்து மனதிற்குள் சிரித்தேன்.

என்னுடன் பணியாற்றிய நண்பர் பிரணதார்த்தி ஹரன், ( இவர் தற்போது தினக்குரல் பிரதம ஆசிரியர் ) எனக்கு அன்பளிப்பாக வழங்கிய கி. ராஜநாராயணன் தொகுத்திருந்த நூல் ஒன்றை அது இருந்த கைபேக்கிலிருந்து எடுத்தபோது வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் கைவசம் இருந்த அடையாள அட்டைகள் வெளியே விழுந்தன.

சில நாட்களுக்கு முன்புவரையில் ( 1987 ஜனவரி 31 இற்கு முன்புவரையில் ) எனக்குத் தேவையாக இருந்த அவற்றை, இனிமேல் எதற்காக பயன்படுத்தப்போகிறேன்.

அந்த அட்டைகளின் கடமை நான் வீரகேசரியிலிருந்து வெளியேறியதுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இவற்றை வைத்துக்கொண்டுதானா நான் செல்லவிருக்கும் நாட்டில் வேலை தேடப்போகின்றேன்..?! கைவசம் இருப்பதோ மூன்று மாதங்களுக்கான விசா. அதன்பின்னர்….?

அவ்வாறு அந்த விமானத்திலிருந்து அன்றைய தினம் யோசித்துக்கொண்டிருந்த நான், முப்பத்தியைந்து ஆண்டுகளை இக்கண்டத்துள் வாழ்ந்து கடந்துவிட்டேன் என்பதை திரும்பிப்பார்க்கும்போது, இந்தத் தொடரில் இனிவரவிருக்கும் அங்கங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய முன்தீர்மானங்களுடனேயே எழுதத் தொடங்குகின்றேன்.

அன்று 1987 ஆம் ஆண்டு பெப்வரி மாதம் 07 ஆம் திகதி இரவு மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் விமான நிலையத்தில் நான் இறங்கிய காட்சியை, பின்னாளில் 1988 ஜூலை மாதம் நான்கு அங்கங்களில் எழுதிய காலமும் கணங்களும் நெடுங்கதையில் வாசகர்கள் படிக்கலாம். இக்கதை எந்தவொரு இதழிலும் வெளிவராமல், 1998 ஆம் ஆண்டு வௌிவந்த எனது வெளிச்சம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அன்று பேர்த் விமானநிலையத்தில் இறங்கியபோது நான் கற்றதையும் பெற்றதையும் மனதிலிருத்தி ஒரு நெடுங்கதையை எழுதுவேன் என்ற எண்ணம் அப்போது மனதில் தோன்றவேயில்லை.

வாழ்வின் தரிசனங்களே நாம் எழுதும் கதைகள். இக்கடல் சூழந்த கண்டத்தின் தரையில் இறங்கியதுமே முதலில் நான் சந்தித்தவர்கள், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் சுங்கப்பிரிவு பரிசோதகர்களும்தான்.

அவர்களில் ஒருவர் வரிசையில் நின்ற என்னிடம் வந்து, எனது கடவுச்சீட்டை போட்டோ பிரதி எடுத்துவிட்டு தருவதாக சொல்லி வாங்கிச்சென்றார்.

சொன்னவாறு கொண்டுவந்து திருப்பித்தந்தார். எனது பெரிய பேக்கில், எனக்குத் தெரியாமல் குஞ்சியம்மா வைத்துவிட்ட புளுக்கொடியல் பக்கட்டுகள்தான் எனக்கு பெரும் சோதனையாகிவிட்டது.

சுங்கத்திணைக்கள அதிகாரி, அதனை திறந்து ஒடித்து முகர்ந்து பார்த்தார். “ அப்படி ஒரு வஸ்துவை அதற்கு முன்னர் தான் பார்த்ததில்லை. “ என்றார்.

முழுபேக்கையும் துலாவினார். மூன்று மாத விசாவில் வந்திருக்கும் இவன், பேங்கொக் மார்க்கமாக வருகிறான். இது மனிதர்கள் சாப்பிடும் ஒரு தாவர வகையைச்சேர்ந்தது என்றும் சொல்கிறான். இவன் சொல்லும் மரத்தின் பழத்தின் விதையிலிருந்து வளர்கிறது என்கிறான். இவனை எப்படி நம்புவது..?

அவரது முகத்தில் தோன்றிய ரேகைகள், அவரது மனதில் என்னைப்பற்றி எத்தகைய சித்திரம் வரையப்படுகிறது என்பதை உணர்த்தின.

அவர் மேலும் இரண்டு சுங்க அதிகாரிகளை அழைத்து வந்தார். அவர்களும் ஒடியலை முறித்து முகர்ந்து பார்த்தனர்.

சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். அதற்கு அவர்கள் தயாரில்லை. நான் சாப்பிட்டு காண்பிக்கவா..? என்றேன். அதற்கும் அனுமதியில்லை. சுமார் அரைமணிநேரம் அவர்கள் தமக்குள் விவாதித்தனர். அவர்கள் பேசியது ஆங்கிலமாகவிருந்தாலும், உதிர்ந்த அவுஸ்திரேலிய மொழிவழக்கை புரிந்துகொள்ள முடியாதிருந்தது.

இந்த நாட்டில் முதலில் மனிதர்களை தெரிந்துகொள்வதற்கு முன்னர், இவர்கள் பேசும் மொழியின் உச்சரிப்பை புரிந்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்ற முதல் பாடத்தை அன்று பேர்த் விமான நிலையத்தில் பெற்றேன்.

பின்னாளில் நான் அந்த விமான நிலைய அனுபவத்தை கதையில் எழுதும்போது, பின்வரும் வரிகளை பதிவுசெய்திருந்தேன்:

…. பேக்கிலிருந்த உடைகளை வேறாகவும் வீட்டாரின் லட்டு , ஒடியல், பைத்தம் உருண்டை, பலகார பட்சணங்களை வேறாகவும் பிரித்துவைத்துவிட்டு நிமிர்ந்தான் அதிகாரி.

“ இவைகள் என்ன..?

“ உணவுப்பொருட்கள் “

“ என்ன மாதிரியான உணவுப்பொருட்கள்…? “ அந்தக்கேள்வி புரியவில்லை.

நாவற்குழி முகாமுக்கு முன்பாக லட்டையும் பைத்தம் உருண்டையையும் உருட்டி உருட்டிப்பார்த்து “ பொடி போம்பத “ ( சிறிய குண்டா ) சிரிப்புடன் கேட்ட ஆர்மிக்காரன், உண்மையிலேயே அவற்றினை முன்பு ருசி பார்த்திருக்கமாட்டானா..? அதுபோல், இந்த

அவுஸ்திரேலியனும் சீவியத்திலேயே இதனைக்கண்டிருக்கவே மாட்டானா..?

வேற்று இனத்தவர்களிடம் தமிழர் உணவுப் பதார்தங்களை விளக்குவதற்கே தனியாக கற்றுக்கொண்டு வரவேண்டிய தலைவிதியை என்னவென்பது?

முகங்கள் அந்நியம் – காற்று அந்நியம் – தண்ணீர் அந்நியம். எல்லாமே அந்நியமாகிவிட்ட மண்ணில், சொந்த நாட்டின் சொந்த மண்ணின், சொந்த கலாசாரத்தின் உணவுப்பதார்த்தங்களை என்ன சொல்லி விளக்குவது?

இவ்வாறு அந்த நெடுங்கதை தொடர்ந்தது.

அக்கதைக்கு அன்று நான் சூட்டிய காலமும் கணங்களும் என்ற தலைப்பினையே பின்னர் மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய எனது தொடரின் தலைப்பாகவும் சூட்டிக்கொண்டு நூற்றியம்பதிற்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதிவிட்டேன்.

ஒருவாறு பரிசோதனைகளை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலேயே பணம் மாற்றிவிட்டு, வெளியே வரும்போது இரவு எட்டுமணியும் கடந்துவிட்டது.

என்னை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்த முகவர் தந்துவிட்டிருந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டேன். மறுமுனையில் நான் பெயர் சொல்லி அழைத்த ரமணன் – சாந்தி தம்பதியர் பேசினார்கள்.

சில நிமிடங்களில் அவர்கள் அங்கே வந்து என்னை அழைத்துச்சென்றார்கள். அவர்களுடன் வந்திருந்த சிவராசா என்பவரும் என்னைப்போன்று சில மாதங்கள் விசாவுடன்தான் பேர்த்தில் மற்றும் ஒரு இளம் குடும்பத்தினருடன் குடியிருந்தார்.

அவர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தபோது, ரமணன் – சாந்தி தம்பதியர் என்னை பல இடங்களுக்கும் தங்கள் காரில் அழைத்துச்சென்றனர். ரமணன் சுரங்கத்துறை பணியிலிருக்கும் பொறியிலாளர்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் நிறைய கனிம வள சுரங்கங்கள் இருக்கின்றன. அவற்றுள் தங்கம் விளையும் சுரங்கங்களும் அடக்கம்.

அந்தத் தம்பதியர் இலங்கை வடபுலத்தில் கல்வியங்காட்டை சேர்ந்தவர்கள். அச்சமயம் அவர்கள் மணமுடித்து சில மாதங்கள்தான். குழந்தைகள் அப்போது இருக்கவில்லை.

நான் பத்திரிகையில் பணியாற்றியமையால், இலங்கை அரசியல் புதினங்களை கேட்டவாறிருந்தனர்.

ஒருநாள் பேர்த்திலிருந்த தமிழ் அமைப்பொன்றின் முக்கியஸ்தரான பொறியிலாளர் கெங்காதரனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினர்.

அவரும் இலங்கை அரசியல் புதினங்களைத்தான் கேட்டறிந்தார். பேர்த்தில் தொழில் பெறுவதிலிருக்கும் சிரமங்களை அவர்கள் மூவரும் சொன்னார்கள்.

பொறியிலாளர் கெங்காதரன், உள்ளே சென்று தனது காசோலை புத்தகத்தை எடுத்துவந்து அதில் ஒன்றை உருவி, ஐம்பது டொலர் எழுதி என்னிடம் நீட்டினார்.

நான், எதற்கு அய்யா…? வேண்டாம். கைவசம் பணம் இருக்கிறது. வேண்டாம் என்றேன்.

இல்லை…. இல்லை வைத்திரும். உமக்கு தேவைப்படும்போது உதவும் என்றார்.

இப்போதுதானே வந்தேன். என்னிடம் இங்கு வங்கிக்கணக்கும் இல்லை. உங்கள் காசோலையை நான் எப்படி மாற்றமுடியும் என்று கேட்டேன்.

உடனே ரமணன். அய்யா தருவதை வாங்கும். நான் மாற்றித்தருவேன் என்றார்.

அங்கிருந்து புறப்படும்போது, சாந்தி, முருகபூபதி உங்களது அவுஸ்திரேலியா வாழ்வின் தொடக்கம் நல்ல அறிகுறியுடன் ஆரம்பிக்கிறது.

பொறியிலாளர் கெங்காதரன், இங்கிருக்கும் இலங்கை தமிழ்ச்சங்கத்திலும் வேறு சில அமைப்புகளிலும் முக்கிய பதவிகளில் இருக்கிறார். உங்களைப்போன்று இங்கே வருபவர்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவது அவரது இயல்பு என்றார்.

அவர்களால் எனக்கு அறிமுகமான சிவராசா, ஒருநாள் என்னை பஸ்ஸில் அழைத்துச்சென்று தான் பணியாற்றும் ரெஸ்ரூரண்டை காண்பித்தார். அது கடற்கரையோரத்தில் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் ரமணனின் உறவினர். அவரும் ஒரு பொறியியலாளர்.

சிவராசாதான் அந்த ரெஸ்ரூரண்டில் அனைத்துப்பணிகளையும் செய்தார். அங்கு சைவ – அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவருக்கு உதவியாக சில நாட்கள் அங்கே தொட்டாட்டு வேலைகளைச் செய்தேன்.

பொழுதுபோகவேண்டும் என்பதற்காகவே அந்த வேலைகளை அவருடன் சென்று செய்தேன். இரவு அவரது வீடு திரும்பிய பின்னர் கடிதங்கள் எழுதினேன். மறுநாள் அவருடன் வெளியே செல்லும்போது அக்கடிதங்களை தபாலில் சேர்ப்பித்தேன்.

பேர்த்தில் வேலை தேடும் படலத்தில் ஈடுபடவேயில்லை. வேறு செலவுகளும் இருக்கவில்லை. அங்கு வேலை எடுப்பது சிரமம் என்று மாத்திரம் ரமணனும் சாந்தியும் சிவராசாவும் தினமும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

நீர்கொழும்பிலிருந்து நான் விடைபெறும்போது, அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் தனது மகன் ரஞ்சன் வைத்தியநாதனின் தொலைபேசி – முகவரியை தந்துவிட்டிருந்த இராஜரட்ணம் அய்யா நினைவுக்கு வந்தார்.

சிவராசாவின் வீட்டிலிருந்து ரஞ்சனுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். அப்போதுதான் பேர்த்திற்கும் மெல்பனுக்கும் இடையே இருந்த நேர வித்தியாசம் தெரிந்தது.

ரஞ்சன் மெல்பனுக்கு புறப்பட்டு வருமாறு அழைத்தார். மெல்பனுக்கு ரயிலிலும் விமானத்திலும் பஸ்ஸிலும் செல்ல முடியும். ரயில் – பஸ் பயணத்தில் 48 மணிநேரங்களை செலவிடவேண்டும். அதாவது இரண்டு நாட்கள். என்றார் சாந்தி.

நான் விமானத்தில் புறப்படுவதற்கு விரும்பவில்லை. மீண்டும் ஒடியலுக்கு விளக்கம் கொடுப்பதற்கு நான் தயாரில்லை சாந்தி என்றேன்.

மெல்பன் செல்லும் பாதையில் ஊர்களை பார்த்துக்கொண்டு செல்லலாம். அதனால் பஸ்ஸிலேயே புறப்படுகிறேன் என்றேன்.

அவரே மெல்பன் செல்லும் பஸ்ஸிற்கு அனுமதிச்சீட்டு பெற்றுத்தந்து ஒரு நாள் காலை என்னை வழியனுப்பிவைத்தார்.

குறிப்பிட்ட காலமும் கணங்களும் நெடுங்கதையில் சாந்தி ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறார்.

அக்கதையை இதுவரையில் வாசிக்காதவர்களுக்காக இந்தத் தொடரின் அடுத்த அங்கத்திலிருந்து பதிவுசெய்கின்றேன்.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.