எம். வாமதேவனின் நீங்காத நினைவுகளில்…. மலையக மண்ணின் மைந்தர்கள்!…. முருகபூபதி.
படித்தோம் சொல்கின்றோம் :
எம். வாமதேவனின் நீங்காத நினைவுகளில்…. மலையக மண்ணின் மைந்தர்கள்
முருகபூபதி.
நினைவுகள் சாசுவதமானவை. நினைவுகளை தேக்கி வைப்பதற்கு நினைவாற்றலும் தேவை. அத்துடன் நினைவுகள்தான் மனச்சாட்சி. அத்துடன் நீதி புகட்டும் ஆவணம்.
இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை எழுத்தாளர், ஆய்வாளர், இலங்கை அரச மட்டத்தில் பல உயரிய பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன் “ நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள் “ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இலங்கை எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசுவழங்கும் திட்டத்தின் அடிப்படையில் நடத்திய போட்டியில் கட்டுரைப்பிரிவில் தாம் எழுதிய “ குன்றிலிருந்து கோட்டைக்கு “ நூலுக்கு இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசினைப்பெற்றிருக்கும் எழுத்தாளர் வாமதேவனுக்கு வாழ்த்துக் கூறியவாறு, இந்நூல் பற்றிய நயப்புரைக்குள் வருகின்றேன்.
கல்வி, தொழிற்சங்கம் – அரசியல், நிர்வாகம், இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி அமரத்துவம் எய்திவிட்ட, இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், டி.வி. மாரிமுத்து, எம். சின்னத்தம்பி, வி. கே. வெள்ளையன், பெ. சந்திரசேகரன், ஓ. ஏ. இராமையா, எம். இராமலிங்கம், சி. நவரட்ன, பி. முருகேசு, சி. வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி. குமார் எஸ். எம். கார்மேகம், ந. நெடுஞ்செழியன், பொன். கிருஷ்ணசாமி ஆகியோர் பற்றிய நினைவுகளை நூலாசிரியர் வாமதேவன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் சித்திரிக்கும் இந்த நூலைத் திறந்ததும் மனதை அதிர வைக்கும் செய்தியையும் அறிந்துகொள்கின்றோம்.
அதனைப்பார்த்தவுடன் மனம் கனத்துப்போனது. சில நிமிடங்கள் மனம் உறைந்துவிட்டது.
நூலாசிரியர் வாமதேவனின் அருமைத் தந்தையாரும் அன்புச் சகோதரிகள் மூவரும் 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அப்புத்தளை பெரகலை மண்சரிவில் உயிர் நீத்திருக்கும் செய்தியே அது.
அவர்களுக்கும் அதன்பின்னர் இயற்கை எய்திய அன்புத்தாயருக்கும் நூலாசிரியர், இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
மலையகத்தை பசுமையாக்கி, இலங்கையின் அந்நியசெலாவணியில் 60 சதவீதத்தை ஈட்டித்தந்த மக்களின் வாழ்க்கை, இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கியது. அவர்கள் இரண்டு அரசுகளின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் கப்பலேற்றப்பட்டார்கள். எஞ்சியவர்களின் வாழ்க்கைத்தரம், குடியிருப்பு, கல்வி முதலான பல விடயங்கள் பற்றி அக்கறையோடு கவனம் செலுத்தி உழைத்த உத்தமர்களின் பணிகளை தனது நினைவுகளிலிருந்து பதிவுசெய்துள்ளார் வாமதேவன்.
மலையகத்தில் புகழ்பெற்ற அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி சமூகத்திற்கு வழங்கியிருக்கும் ஆளுமைகள் பற்றிய பல செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
வாமதேவன், இலங்கை அரச மட்டத்தில் நிருவாகத்துறையில் பல உச்சங்களைத் தொட்டவர். அவர் தான் கல்வி கற்ற காலத்திலும் பல்கலைக்கழகம் சென்ற பின்னரும், உயர் பதவிகளில் அமர்ந்ததையடுத்தும் , தொடர்ச்சியாக தொடர்பிலும் உறவிலுமிருந்த 17 ஆளுமைகளின் சிறப்பியல்புகளை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
இலங்கை அரசியலிலும் தொழிற்சங்கத் துறையிலும் ஈடுபட்ட பல மலையகத் தலைவர்கள் மத்தியில் நேர்ந்த முரண்பாடுகள், அதன் பெறுபேறுகள் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
மலையக கலை, இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உரமாகத் திகழ்ந்திருக்கும் சி.வி. வேலுப்பிள்ளை, சாரல் நாடன், தமிழோவியன், மல்லிகை சி. குமார் ஆகியோரின் படைப்பூக்கம் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
ஆளுமைகள் குறித்த நினைவுப்பதிகையை எழுதும்போது, வாசகர்களை தம்மோடு அழைத்துச்செல்லும் வகையில் செய்திகளை பகிரும் பண்பிலும் நூலாசிரியர் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இலங்கை மலையகத்திற்கு அப்பால் மலையகம் குறித்த தேடுதலில் ஈடுபடுபவர்களுக்கு இந்நூல் உசாத்துணையாகவும் விளங்கும்.
இந்நூலுக்கு முன்னோட்டமாக நினைவோட்டக் குறிப்புகளை இலக்கிய ஆர்வவலர் – கல்விப்பணிப்பாளர் சு. முரளீதரனும், தமது பாக்கியா பதிப்பகத்தின் ஊடாக இதனை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்பு திலகர் ஓர் உணர்வும் நினைவும் என்ற தலைப்பில் பதிப்புரையும் எழுதியிருக்கின்றனர்.
—0—