தம்பிராசா ஞானத்தைக் கூட்டிக் கொண்டு போய் விறாந்தையில் இருந்த கதிரையில் தானும் உட்கார்ந்து கொண்டே ஞானத்தையும் உட்காரச் சொல்லுகிறான்.
கொண்டக்ரர் மணியம் ஏற்கனவே இருந்த கதிரையோ என்னவோ, ஞானத்திற்குப் பக்கத்தில் கதிரையொன்று இருந்த போதும் ஏனோ அதைத் தவிர்த்துவிட்டு அதற்கடுத்த கதிரையில் போய் உட்கர்ருகையில் அவர் உட்காரப் போகும் கதிரையை பார்த்தவன் கண்களில் அந்தக் கதிரையின் வலதுபக்க காலோடு மறைத்தும் மறையாமல் இருக்கின்ற கிளாசையும் அதற்குள் இருப்பதையும் பார்க்கிறான்.
அரைவாசிக் கிளாசுக்கும் கீழ் இருந்த அது நிச்சயமாக தேத்தண்ணியாக இருக்காது, அது குடிச்சு அரைகுறையாக வைச்ச சாராயமாகத்தான் இருக்க வேணும் எனத் தீரமானித்தவனின் மூக்கும் சாராய மணத்தை உணருகின்றது.
தம்பிராசா பக்கம் திரும்பிய ஞானம்’சொல்லுங்கண்ணை அவசரமாகக் கூப்பிட்டியள்,என்ன விசயமென்கிறான்.
„இல்லை…..’ என்று இழுத்த தம்பிராசா ….சும்மா கதைப்பம் என்றுதான் கூப்பிட்டனான் „ என்ற தம்பிராசா கொஞ்சம் தலையை பின்னுக்கு கொண்டு வந்து,ஞானத்தின் முதுகுக்கு பின்னாக கொண்டக்ரர் மணியத்தைப் பார்க்க,அவர் கேள் என்பது போல கண்ணைக் காட்டுகிறார்.
„இல்லை ஞானம் என்னெண்டால்’ என்று ஏதோ கேட்க நினைத்து,’மெய்யே ஞானம் எம்.ஜி.ஆற்றை படம் ஏதேன் வந்திருக்கே „என்கிறார்.
„இல்லையண்ணை இப்ப யாழ்ப்பாண தியேட்டர்களிலை எம்.ஜி.ஆற்றை படம் எதுவும் வரேலை, பாரதிராஜாவின்ரை டைரக்சனில் கமலகாசன் நடிச்சஎ டிக் டிக் டிக் மற்றது ஆணிவேர்,அமரகாவியம் இவைதான் அங்கை ஓடுகின்றன, அது சரி அண்ணை என்ன எம்.ஜி.ஆற்றை படம் பற்றிக் கேட்கிறியள்’
„எனக்கு எம்.ஜி.ஆற்றை படம் என்றால் பிடிக்கும், நல்ல கொள்கைப் படங்களிலைதான் நடிக்கிறவர், நானும் எனக்கென்று சில கொள்கைகளை வைச்சிருக்கிறவன் அதுதான்…’ என்று இழுத்துக் கொண்டிருந்தார் தம்பிராசா.
ஞானம் தம்பிராசவின் பக்கம் முகத்தைத் திருப்பிக் கதைச்சுக் கொண்டிருந்த நேரம் பார்த்து கொண்டக்ரர் மணியம் கதிரைக்காலடியில் மறைச்சு வைச்சிருந்த சாராயக் கிளாசை எடுத்து வேகமாக குடிச்சிட்டு உடுத்திருந்த கைலியால் வாயைத் துடைச்சு ஒரு செருமலும் செருமிப் போட்டு ஞானமும் தம்பிராசாவும் கதைச்சக் கொண்டிருக்கிற விசயத்தில் தனக்கு எந்த அக்கறையும் இல்லையென்பது போல பாவனை காட்டினாலும் ஞானம் என்ன சொல்லப் போறான் என்பதில் கண்ணும் கருத்துமாக காதைக் குடுத்தபடி இருந்து கொண்டு,ஐஞ்சாறு பெரிய பிலாக் காய்களோடிருந்த பிலா மரத்தைப் பார்த்தவன்’ இஞ்சை ராசா அங்கை பார் அந்தப் பிலாக்காய்க் காம்படியில் மெதுவாய் மஞ்சளடிக்குது அதை இறக்கு விட்டியென்றால் காகம் குருவி அணில் கோதிப்படும் „ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
„நானும் காலமையே கண்டிட்டன்,மாவிடிக்க வந்த உவள் நாகியிட்டை சொல்லிவிட்டனான், அவளின்ரை புருசன் அவன் தவசியை வரச்சொல்லி அதை வெட்டி இறக்குறதுக்கு’ என்று ஒவ்வொரு சொல்லையும் அழுத்தியும் சாதித் திமிருடன் ஞானத்தை கiடைக்கண்ணால் பார்த்தபடியே சொன்ன தம்பிராசா,ஞானத்தின் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்பதையும் கவனிக்கிறான்.
தம்பிராசா எதிர்பார்த்தபடியே ஞானத்தின் முகம் மாறுவதைக் கண்டதும், ஞானம் தனது வலையில் விழுந்தவிட்டான் என்பதை உணுருகின்றான்.
ஞானத்திற்கு „உவள் நாகி’ „அவன் தவசி’ என்று சொன்னது பிடிக்கவேயில்லை.தம்பிராசாவிற்கு சூடு குடுக்க வேண்டுமென்று நினைச்ச ஞானம், „ அண்ணை கேட்கிறன் என்று குறை நினைக்காதையுங்கோ, அது என்ன உவள் நாகி, அவன் தவசி என்று கதைக்கிறது,சும்மா நாகியென்றும் தவசியென்றும் கதைக்கலாந்தானே’ என்று தம்பிராசாவை நோக்கி ‚சூடான வார்த்தையில் கேட்டுக் கொண்டே, தம்பிராசா இருந்த கதிரைக்குப் பக்கத்திலிருந்த தூணடியில் மறைச்சு வைச்சிருந்த சாராயப் போத்தலையும் கண்டு விடுகிறான்.
„ஏன் அவையை நீங்கள், நாங்கள் என்று சொல்லியே கூப்பிட வேணும், என்ன இருந்தாலும் அவை இழிசாதி அவையை வைக்க வேண்டிய இடத்திலைதான் வைக்க வேணும், அதுசரி உனக்கேன் கோபம் வருது, அதுகளின்ரை செத்தைக்கிளை பொம்பிளை எடுக்கப்: போறியோ’ என்று கேட்டதும் ஞானம் பொறுமையாக’அண்ணை உந்தப் பிலாக்காயை இறக்க உங்களுக்கோ உங்கடை வீட்டிலை இருக்கிறவைக்கோ துணிச்சலும் இல்லை திராணியும் இல்லை, உங்களையே நீங்கள் எடை போட்டுப் பாருங்கள், நீங்கள் ஒரு நோயாளி மாதிரி, பயந்தாங் கொள்ளி,அவை வெட்டி இறக்கிற அவையின்ரை கைபட்ட பிலாப்பழத்தைத்தானே சாப்பிடப் போறியள்,சொல்லப் போறியளாக்கும் பிலாப்பழத்தை கழுவினால் தீட்டுப் போயிடும் என்று, தொட்டது தொட்டதுதான்,உங்கடை வீட்டிலை இருக்கிறவைக்கு உஉலக்கையைப் பிடிச்சு இடிக்கத் தெரியாது,அதுக்கான உடம்பு வலுவில்லை அவையின்ரை கைபட்ட மாவிலையிருந்து இடியப்பம்,புட்டவிச்சுச் சாப்பிடப் போறியள் அப்ப அது தீட்டில்லையோ, அதுக்குச் சொல்லவியளாக்கும் அவிச்சாப் போயிடும் என்று,’ ஞானம் இப்படிச் சொல்வான் என்பதைத் தம்பிராசாவும் கொண்டக்ரர் மணியமும் எதிர்பார்க்கவில்லை.
„சரி சரி அது கிடக்கட்டும் வேறு ஏதாவது பேசுவம் „என்ற தம்பிராசா „ஞானம் நீதான் அடிக்கடி படம் பார்க்ப் போறனி, கிட்டடியிலை படம் போர்க்கப் போகலையோ’ என்று தம்பிராசா கேட்க,எந்தத் தாமதுமும் இல்லாமால்’ நேற்றுப் போனனான் உங்களுக்கு அது தெரிஞ்சிருக்மே அதுக்கேன் அங்கை போய் இங்கை போய்சுத்தி வளைச்சுக் கேட்கிறியள்’ என்று வெடுக்கென்று சொல்ல’ இதென்ன புதுக்கதையாயிருக்கு எனக்கென்னெண்டு தெரியும் நீ படத்துக்கு போனதென்று’ என்று தம்பிராசா சொல்ல’ ஏன் இவர் சொல்லேலையோ சொல்லியிருப்பாரோ ஊரிலை ஆரார் என்ன செய்யினம், எந்தெந்தெந்த வீட்டிலை என்னென்ன நடக்குது என்று சொல்வதுதானே இவற்றை வேலை……’
„கொண்டக்ரர் என்ற சொல்லுக்கு அர்த்தமான வேலையைத்தான் செய்கிறார்.கொண்டக்ற் என்றால் கடத்துதல் என்ற அர்த்தமும் உண்டு’ என்று சொன்னதைக் கேட்ட கொண்டக்ரர் மணியம்’ இஞ்சை வா ஞானம் தேவையில்லாமல் கதைக்காதை, நான் ஒன்றும் இவருக்கு கோள் மூட்டவில்லை, ஊருக்குள்ளை எல்லாருக்கும் தெரியும் நீ என்ன
செய்யிறாய் என்று.சரி நான்தான் சொன்னதென்று வைச்சுக் கொண்டாலும் அதிலை என்ன பிழை,நீ செய்யிற செயலாலை எங்கடை சனம் சாதிக்குள்ளை எவ்வளவு அவமானம்,ஒவ்வொருத்தரும் என்னைப் பிடிச்சுக் கேட்கிறாங்கள் உனக்கு மருமோன் முறையான ஞானம் ஆரோ நடுகைக்காரியோடை சுத்தித்திரியிறான் என்று அதுதான் தம்பிராசாவின் காதிலை போட்டு வைச்சனான்.உன்ரை வயது எதையும் யோசிக்காது,அது கிடைச்சால் போதும் என்று அங்கலாய்க்கும்’ என்று சொன்னதைக் கேட்ட ஞானம் பொறுமையிழந்தவனாக „ நீங்கள் என்ன அர்த்தத்திலை சொல்றியள் என்று எனக்கும் புரியும், இப்படிக் கதைக்க வேண்டாம் எனக்கும் கதைக்கத் தெரியும்,சரி நான் தெளிவாகவே மூடிமறைக்காமல் சொல்றன் நான் அந்த நடுகைக்காரியை காதலிக்கிறன் என்ன பாடுபட்டும் எவ்வளவு தடைகள் முட்டுக்கட்டைகள் வந்தாலும் அவளைத்தான் கல்யாணம் செய்வன்’
„அவையும் மனுசப் பிறவிதான்,அவைக்கும் எங்களுக்கும் இரத்தம் சிவப்புத்தான், அவைக்கென்ன இரத்தம் நீலநிறமோ.இது என்ரை சொந்தப் பிரச்சினை வாழ்க்கைப் பிரச்சினை இதிலை யாரும் தலையிட வேண்டிய அவசியமுமில்லை,அதிலை எனக்கு விருப்பமுமில்லை….’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஞானத்தை இடைமறித்த தம்பிராசா’ எங்களுக்குப் புரியுது ஏன் நீ எங்களை மதிக்காமல் கதைக்கிறாய் என்று, முந்தி நீ இப்படிக் கதைக்கவே மாட்டாய்,இனசனம் சொந்தங்கள் என்று மதிப்புக் கொடுத்து கதைக்கிறனி,இப்ப அவளவையின்ரை சகவாசம் இப்படிக் கதைக்க வைக்குது,ஏதோ நீ புளியங் கொம்பை பிடிச்சமாதிரியெல்லோ நினைக்கிறாய்’ என்று சொல்ல, „நான் இதைச் சொல்லக்கூடாது கேட்கக்கூடாது என்றுதான் நினைச்சு பேசாமலிருந்தனான், ஆனால் இப்ப ஒன்று கேட்கிறன், நீங்கள் இரண்டு பேரும் கள்ளுக்குடிக்க போன இடத்திலை ஆட்டிறைச்சிக் கறி கள்ளுக்கு உவப்பாயிருக்கும் என்று வாங்கிச் சாப்பிடவில்லையா’
„ அதை ஆர் அங்கை சமைச்சுத் தந்தவை நீங்கள் இப்ப கொஞ்சத்திற்கு முன்னர் வாய்கூசாமல் சொன்ன அந்த இழிசனந்தானே,உங்கடை இரண்டு பேற்றை கதைகாரியம் பிழையென்றதை கண்ட அப்பையாவிற்றை பெண்சாதி பாளைவெட்டிற கத்தியைக் காட்டி இனி இந்தப் பக்கமே வரக்கூடாது என்று சொன்னது எனக்குத் தெரியாது என்று நினைச்சியளோ நீங்கள் இரண்டு பேரும், கேவலம்கெட்ட மனுசங்கள்;, உங்கடை இரண்டு பேற்றை பெண்சாதிமாருக்கும் தெரிஞ்சால் என்ன நடக்கும், நீங்கள்
வெள்ளை வேட்டிக் கள்ளர்கள்;,இன்னொன்றையும் மணியண்ணைக்குச் சொல்றன் இனிமேல் எங்கையாவது விழாக்களில் பொன்னாடைக்காக சாதிகள் இல்லை எல்லா மனுசரும் ஒரே குலந்தான் என்று பேசினியளோ, அந்த இடத்திலை வைச்சு உங்கடை போலிமுகத்தை உரிப்பன், திரும்பவும் சொல்றன் நான் பாறுவைத்தான் கல்யாணம் கட்டுவன், என்ரை அப்பா அம்மா சம்மதிச்சால் அது போதும், அவை சம்மதிக்காவிட்டால் அவையைச் சம்மதிக்க வைப்பன்.முதலிலை உங்கடை முதுகிலை இருக்கிற ஊத்தையை நல்லாய்த் தேங்காய்ப் பொச்சுப் போட்டுக் கழுவுங்கள்,அதுக்குப் பிறகு மற்றவையைப் பற்றிக் கதையுங்கள் „ என்று கோபமாகச் சொன்ன ஞானம் சைக்கிளை எடுத்துக் கொண்டு அம்பனைச் சந்தியிலுள்ள சீனியம்மான் கடையை நோக்கிப் போகிறான்.
கோபமாக அவை இவ்வளவு காலமும் மூடிமறைச்சு வைச்ச கதையை ஞானம் வெளிக் கொணர்ந்ததை நினைச்சு மளாரடிச்சப் போய் இருந்த மணியமும் தம்பிராசாவும், அந்தப் படபடப்பை குறைப்பதற்காக சாராயப் போத்தலை எடுத்து தங்கள் தங்கள் கிளாஸ்களில் ஊற்றி குடிக்கத் தொடங்குகின்றனர்.
ஞானம் தம்பிராசாவுடனும் மணியத்துடனும் கதைச்ச கோபம் நீங்காமல் அம்பனைச் சந்தியடிக்குப் போக மதகில் இருந்த இளங்கோவன்,சண்முகராசா, புண்ணியமூர்த்தி ஞானத்தைக் கண்டு எழும்பி வர நான்கு பேருமாக சீனியம்மான் தேத்தண்ணிக் கடைக்குள் போகின்றனர்.
நாலுபேருக்கும் நன்னாரித் தேத்தண்ணிக்கு ஓடர் பண்ணின ஞானம் வழமைக்கு மாறாக இறுகிய முகத்துடன் அமைதியாக இருக்கிறான்.
எப்பொழுதுமே முசுப்பாத்திவிட்டு கலகலப்பாகக் கதைச்சு இருக்கிற இடமே அதிரும்படி சிரிப்பவன் இன்று அமைதியாக இருப்பதைக் கண்ட நண்பர்கள் மூவரில் புண்ணியமூர்த்தி’ ஞானம் என்ன முகமே சரியில்லாமல் இறுகிக் போய்க் கிடக்குது, ஏன் என்ன நடந்தது’ என்று கேட்க,சில விநாடிகள் அமைதியாக இருந்த ஞானம்’வர்ற வழியிலை தம்பிராசா அண்ணையையும் மணியம் அண்ணையையும் கண்டனான்,அவைதான் எனக்குக் கோபம் வருறமாதிரி கதைச்சவை, அவைக்கேன் என்ரை சொந்த விசயத்திலை தேவையில்லாத கதை….’ ஏன்று அமைதியாக இருக்க, சீனியம்மான் நால்வருக்கும் தேத்தண்ணியைக் கொண்டுவந்து வைக்க,அம்மான் ஆளுக்கு இரண்டு
வடைகளைக் கொண்டு வந்து வையுங்கள் „ எனச் சொல்ல, ஞானம் தேத்தண்ணிக்கும் வடையளுக்கும் நான்தான் காசு குடுப்பன் நீதான் நெடுக வாங்கித் தாறாய்,அது ஒரு மாதிரி இருக்கு’ என்று சண்முகராசா சொல்ல,’ம் ..சரி’ என்கிறான் ஞானம்.
„ஞானம் நீ இப்பிடி இருக்க மாட்டியே, அவை என்ன சொன்னவை’என்று புண்ணியமூர்த்தி கேட்க, „அவை என்னத்தைக் கேட்கிறது பாறுவின்ரை விசயத்தைத்தான்’ என்று சொல்ல,’இளங்கோவன் ஏதோ சொல்லவென்று வாயை உன்ன,புண்ணியமூர்த்தி மெதுவாக அவனின் துடையில் கிள்ள, இளங்கோவன் சொல்ல வந்ததை சொல்லாமல் விடுகிறான்.
ஞானம் வருவதற்கு முன்னர் அம்பனைச் சந்தி மதகிலிருந்து ஞானம் பாறுவைக் கல்யாணம் செய்யப் போவதைப் பற்றிக் கதைச்ச நால்வரும் ஞானம் சொல்ற மாதிரி பாறுவின்ரை ஆட்களும் மனுசர்தான் அவைக்கும் மற்றவைக்கும் ஒரு வித்தியாசமில்லைத்தானே என்று கதைச்சாலும் இது ஒரு சாதரண பிரச்சினை இல்லை என்பதையும் கதைச்சிருந்தார்கள்.
„ஞானம் நீ அவையின்ரை கதையைக் கேட்டு மண்டையைப் போட்டுக் குழப்பாதை உனக்கு நாளைக்கு தெல்லிப்பழை பலநோக்கக் கூட்டுறுவுச் சங்கத்திலை இன்ரவியூ இருக்குதல்ல அதைப்பற்றி யோசி,தலைவர் முருகையா மாஸ்ரர் கிறுக்குத்தனமாயும் கேள்வி கேட்பார் கவனமாயிரு’ என்கிறான் சண்முகராசா.
அதிகம் பேசாமல் அமைதியாக தேத்தண்ணிiயும் குடிச்சு வடையையும் சாப்பிட்ட ஞானம்’ இண்டைக்கு பாறுவை பொம்பளை பார்க்க ஆரோ வருகினமாம்’ என்று பாறு சொன்னவள் அதுதான் ஒரே யோசனையாக இருக்குத என்கிறான் ஞானம்.
(தொடரும்)