கட்டுரைகள்

உலக புற்றுநோய் தினம்!…. ஜெ.ஜெயசூர்யா, இராமநாதபுரம்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் நோக்கமே, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான். ஏனெனில் புற்றுநோய் பற்றிய சரியான விழிப்புணர்விருப்பவர்களால் மட்டுமே தங்களை புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதையே இன்று நாமும் செய்ய உள்ளோம்.

புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் அறிந்து கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே:

* உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிப்பிற்கு உள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உடலில் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல்களின் பிரிதலே புற்றுநோயாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி கட்டிகளை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.

* இந்தியாவில் 23 சதவிகித மக்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்க வழக்கங்களாலும், 8 சதவிகித மக்கள் பரம்பரையாக வரக்கூடிய மரபியல் காரணங்களாலும், 70 சதவிகித மக்கள் எவ்வித தவறான பழக்கங்கள் இல்லாதவர்களாக இருப்பினும் முறை தவறிய உணவு முறைகளால் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு தரவு.

* புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கார்சினோஜென்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிகளவு புகைப்பிடித்தல், வெற்றிலை மற்றும் புகையிலை மெல்லுதல் போன்றவை இயற்பியல் காரணமாக இருந்து நுரையீரல், வாய்க்குழி, தொண்டை மற்றும் குரல்வளை புற்றுநோயை உண்டாக்குகின்றன.

* கஃபைன், நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றை எறிப்பதால் ஏற்படும் மாசு, பூச்சிக் கொல்லிகள், நிக்கல், சாயங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியன வேதியியல் காரணிகளாக அமைந்து புற்றுநோயைத் தூண்டுகின்றன.

* எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், யு.வி கதிர்கள் போன்ற கதிரியக்கங்கள் டி.என்.ஏ.வை பாதித்து புற்றுநோயை உண்டாக்கும் கதிரியக்கங்கள் ஆகும். புற்றுநோயை உண்டாக்கும் உயிரியல் காரணிகளான வைரஸ்கள் ஆன்கோஜெனிக் வைரஸ்கள் எனப்படும்.

* ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்பப்பைவாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை பலருக்கும் இருப்பதால் இவை மட்டுமே நாம் பொதுவாக அறிந்திருக்கும் புற்றுநோய்களாகும். ஆனால் இதைத்தவிர 400 வகைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வகை செல்களில் அவை உருவாகின்றன என்பதைப் பொருத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு தோல், நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயை கார்சினோமா என்கிறோம். சுமார் 85 சதவிகித புற்றுநோய்கள் இவ்வகையை சேர்ந்தவையாகும். இணைப்பு மற்றும் தசைத்திசுக்களில் உருவாகும் புற்றுநோய் சார்கோமா எனப்படுகிறது. புற்றுநோயில் ஒரு சதவிகிதம் இவ்வகையை சார்ந்ததாகவே இருக்கிறது. ரத்தப் புற்றுநோய் லியூக்கேமியா என அழைக்கப்படுகிறது. பொதுவாக காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* பெண்களை விட ஆண்களே அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். காரணம் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. புகையிலையில் உள்ள நிக்கோடின் எனும் போதைப்பொருள் புகைப்பிடிப்பவரை பாதிப்பது மட்டுமில்லாமல் அப்புகையினை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் புற்றுநோயினை உண்டாக்குகிறது. இதனாலேயே பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அது சரிவர கடைப்பிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

* பெண்களிடம் அதிக அளவில் காணப்படும் புற்றுநோய்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்றுநோயாகும். இந்தியாவில் 28 இல் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மேலும் மார்பக புற்றுநோய் திருமணமாகாதவர்களையும் கருப்பைவாய் புற்றுநோய் திருமணமானவர்களையும் அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

* பெண்கள் இதுபோன்ற புற்றுநோய்கள் குறித்து மூன்று மாத இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்வதற்கே தயக்கம் காட்டுவதாகவும் அதனாலேயே அவர்களுக்கு மருத்துவ சிக்கல் அதிகரித்து, உயிர் அபாயம் ஏற்படுவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேமோகிராம் (மார்பில் செய்யப்படும் ஊடுகதிர்ப் படச்சோதனை) மூலம் 0.5 செ.மீ. அளவுள்ள புற்று நோயினையும் ஆரம்பகாலத்திலேயே எளிதில் கண்டறிந்து குணப்படுத்த இயலும் என்பதால் பெண்கள் தயக்கதை விட்டு, முன்னெச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

* வளரும் தலைமுறையினை பொருத்தவரை உணவுமுறைகள் மாற்றி அமைக்கப்படுவதால் குடற்புண்(அல்சர்) போன்ற வியாதிகள் அவர்களிடம் சாதாரணமாகவே காணப்படுகின்றன. இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விடும்பட்சத்தில் அவை 15 முதல் 20 சதவிகிதம் புற்றுநோயாக உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.

* 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களாக இருந்தால் 35 வயதுக்கு மேற்பட்டோர் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தொடுவதாலோ அவரை நாம் கவனித்துக் கொள்வதாலோ, அவர்களின் பொருட்களை பயன்படுத்துவதாலோ மற்றவர்களுக்கு பரவாது. ஆனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். உதாரணமாக கர்பப்பைவாய் புற்றுநோயை உண்டாக்க கூடிய பாப்பிலோமா வைரஸ், உடலுறவு மூலமாக பரவும். கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கடிய ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ்கள் ரத்தத்தின் மூலம் பரவும். சாதாரண தலைவலி,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வரும் அறிகுறிகள் போல புற்றுநோயின் அறிகுறிகள் வெளியே தெரியக்கூடியவையாக இருக்காது.

* பலரிடமும் புற்றுநோய் வந்து விட்டால் மரணம் தான் தீர்ப்பு என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.இது முற்றிலும் தவறான கருத்தாகும். புற்றுநோயை சரியான நேரத்தில் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடைவதுடன் ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்று பலரும் நிரூபித்துள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாமையும், ஆரம்ப கால அறிகுறிகளை அலட்சியம் செய்வதும் பலரும் உயிரிழக்க காரணமாகி விடுகின்றன.

இதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் நாள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலக அளவில் உலகப் புற்றுநோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்காமல் நேசிப்போம். ஏனெனில் நோய் என்பது உடலில் தான், மனதில் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். ஒரு புற்றுநோய் நோயாளிக்கு, மருத்துவ சிகிச்சை எந்தளவுக்கு முக்கியமோ அதேயளவுக்கு உடனிருப்போரின் அரவணைப்பும் மன வலிமையும் தேவை. அதை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வழக்கம், நம் எல்லோருக்கும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.