உக்ரேன் மீது படையெடுப்பது தவறான கணக்கு’ – ரஷ்ய அதிபரிடம் பிரிட்டிஷ் பிரதமர்
உக்ரேன் மீது படையெடுப்பது ‘துயரமான, தவறான கணக்காகக்’ கருதப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் (Vladimir Putin) தொலைபேசியில் உரையாடியபோது அவர் அவ்வாறு கூறினார்.
அந்த உரையாடலில் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அக்கறைகளுக்கு நேட்டோ கூட்டணி பதிலளிக்க விருப்பம் தெரிவிக்காததை அந்நாட்டு அரசாங்கம் சுட்டியது.
இருப்பினும் உக்ரேனுடனான எல்லைப் பகுதியில் ரஷ்யாவின் சினமூட்டும் நடவடிக்கைகள் குறித்துத் திரு. ஜான்சன் கவலை தெரிவித்தார்.
அந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வுகாண இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
உள்நாட்டு நிகழ்வுகளால் தமது கவனம் திசை திரும்பவில்லை என்றும், உக்ரேன்-ரஷ்யா பிரச்சினையில் கவனம் செலுத்த முடியும் என்றும் திரு. ஜான்சன் சொன்னார்.
அடுத்த வாரம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் அங்கு செல்கிறார்.