கதம்பம்

மனைவியின் சம்மதம் இன்றி கணவர் கட்டாய உறவு கொள்வது கிரிமினல் குற்றம் ஆகுமா?

மனைவியின் சம்மதம் இன்றி கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஆர்.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், டி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், இதையொட்டி ஒரு துணைக்கேள்வியை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் எழுப்பினார். அவர், ‘‘குடும்ப வன்முறையின் வரையறை குறித்த குடும்ப வன்முறைச்சட்டத்தின் பிரிவு 3 மற்றும் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 375 ஆகியவற்றை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?’’ என்று கேட்டார்.
அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்து கூறியதாவது:-
இந்த நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிப்பதும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என்று கண்டிப்பதும் இந்த மேலான சபையில் நல்லதல்ல.
தற்போது நீதித்துறையின் பரிசீலனையில் உள்ள ஒரு விஷயத்தை விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை விதி எண்.47 அனுமதிக்காது.
மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களை பாதுகாப்பதே மத்திய அரசின் முயற்சி ஆகும்.
தற்போது நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ‘ஹெல்ப் லைன்’கள் (இலவச தொலைபேசி சேவை) செயல்பட்டு வருகின்றன. அவை 66 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி உள்ளன. தவிரவும், 703 ‘ஒன் ஸ்டாப்’ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி இருக்கின்றன.
நமது நாட்டில் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவரின் முன்னுரிமை ஆகும். ஆனால் நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறையானது என கருதுவது நல்லதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினாய் விஸ்வம், ‘‘ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த பிரச்சினையில் அரசு தரவுகளை சேகரித்து சபையில் விரைவில் சமர்ப்பிக்க முடியுமா?’’ என்று கேட்டார்.
அதற்கு மந்திரி ஸ்மிரிதி இரானி, ‘‘இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது. எனவே விரிவாக கூற முடியாது. ஆனாலும், மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெறும். ஆனால் இந்த சபையில் மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு பரிந்துரை செய்ய முடியாது’’ என்று பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி, ‘‘வலுக்கட்டாயமாக கணவன், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதை தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாக அரசு அறிவிக்க ஆதரவாக உள்ளதா அல்லது அதை குற்றம் ஆக்குவதால் திருமணம் என்ற அமைப்பு முடிவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மந்திரி ஸ்மிரிதி இரானி, ‘‘இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் விரிவாக கூற முடியாது என்றபோதிலும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இது சட்ட கமிஷனின் 172-வது அறிக்கையிலும், 2013-ம் ஆண்டில் உள்துறை தொடர்பான நிலைக்குழு துறையிலும் பிரதிபலித்துள்ளது’’ என்று கூறினார்.
இவ்வாறு இந்த விவகாரத்தில் சூடான விவாதம் நடந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.