கதம்பம்

மகன் சென்ற இடத்திற்கே செல்கிறோம்’- கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், தந்தை தற்கொலை…!

களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் மேக்கவிளையை சேர்ந்தவர் சகாயம் (வயது60). இவர் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். கடந்த 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் 2 முறை தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தார். மேலும், கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு சுகந்தி (58) என்ற மனைவியும், டிபுரோகிலி என்ற மகனும் இருந்தனர். மகன் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு அங்கேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த ஒரு விபத்தில் மகன் டிபுரோகிலி மரணம் அடைந்தார். மகனின் மரண செய்தியை கேட்டு சகாயமும் அவரது மனைவியும் நிலைகுலைந்து போனார்கள்.

அதன்பின்பு நாட்கள் பல கடந்தும் அவர்களால் சோகத்தில் இருந்து மீள முடியவில்லை. இதனால், இருவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சகாயம் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர் எந்த தொழிலிலும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கணவன்-மனைவி இருவரும் மகனின் கல்லறையில் மனமுடைந்து அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். ஆனாலும், மகனை மறக்க முடியாமல் இருவரும் சோகத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சகாயத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே விளக்குகளும் எரியவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று சகாயத்தின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் முன்பக்க கதவு திறந்து செல்லும் நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ஒரு அறையில் சகாயமும், அவரது மனைவி சுகந்தியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணங்களை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வீட்டை சோதனையிட்ட போது சகாயமும், அவரது மனைவியும் சாவதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ‘எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் செல்ல மகனை இழந்த வேதனையை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மகன் சென்ற இடத்திற்கே செல்கிறோம்’ என எழுதி இருவரும் கையெழுத்து போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மகன் இறந்த சோகத்தில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.