காந்தியின் கதை!…. எஸ்.கிருஸ்ணமூர்த்தி.
அன்று பயங்கர வெக்கை வேலையால் வந்த களை வேறு மெல்பேண் காலநிi யைத் திட்டியபடி, சில் என்ற ஒரு பியர் குடித்தால் உடம்புக்கு சுகமாக இருக்கும் என நினைத்த படி குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தேன். தொலைபேசி சிணுங்கியது. யார் இப்போது எனநினைத்தபடி கலண்டரைப்பார்த்தேன் வியாழக்கிழமை, ‘ஓ யேமனியில் இருந்து ஞானிதான் எடுக்கிறான்”என்றபடி தொலைபேசியை எடுத்தேன். வணக்கம் ஞானி, என்று கூறிமுடிக்க முன்னர், பதில் வணக்கம் சொல்லாமல் காந்தியைத் தெரியுமா எனக் கேட்டான்.
“என்ன உலகத்துக்கே அகிம்சை போதித்துவிட்டு தனது நாட்டுக்கு போதிக்க மறந்தவரைத் தெரியாதா?” என்றேன். மண்ணாங்கட்டி என்றான். நானோ அவசரக் குடுக்கை :அப்ப, இந்திராகாந்தி, ராஜுவ் காந்தி, சஞ்சாய் காந்தி, மேனககாந்தி, சோனியாகாந்தி,ராகுல்காந்தி, பியங்காகாந்தி என்று அடுக்கினபடி இருந்தேன். “ஓ பிரியங்கான்ரை பிள்ளை, பேரப்பிள்ளை என்று சொல்லு,. ஊரிலை இருக்கிற காந்தியை ஞபாகமிருக்கா?”என்றான். இந்த முறை நான் மிகக் கவனமாக “கறுவல்காந்தி, நெடுவல்காந்தி, சிவலைக்காந்தி என எண்ணத்தொடங்கினே;. திரும்பவும் மண்ணாக்கட்டி என்ற வார்த்தை முழுமையாக விழ முன்னரே சரி நீயே விளக்கமாக சொல்லித் தொலை என்றேன்
சல்லிக் காந்தி என்றான்.
காந்தியின் உண்மையான பெயர் பலருக்குத் தெரியாது எனக்கும் எனது நண்பர்களுக்கும் மறக்க முடியாத சம்பவம் ஒன்று பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் நடந்தது.ஒரு முறை பள்ளியில் இல்ல விளையாட்டுப் போட்டியிருந்தது. அப்போது நான்கு இல்லங்கள் இருந்தன. அவைக்கு நான்கு பெயர்களும், நான்கு வண்ணங்களும் இருந்தன. மஞ்சல் கலர் இல்லத்தில் நானும் காந்தியும் இருந்தனான்கள். காந்தியின உண்மையான பெயர் மணிவண்ணன். காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆறடி உயரமும் கருங்கல் போன்ற வைரம் பாய்ந்த்த உடல் அமைப்பைக் கொண்டிருதான். பள்ளிக்கு ஆடிக்கு ஒருக்கா அமவாசைக்கு ஒருக்கா என வருவான். வாத்திமாரும் அவன் வந்தால் என்ன வராட்டால் என்பது போல கணக்கெடுப்பதில்லை. படிப்பில் சீறோவாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டியென்று வந்தால் இவன்தான் ஹீறோ. ஆனால் இவன்தானே ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லையே, எங்கள் இல்ல ஆசிரியராக இருதவர் சன்நிதி வாத்தியார். அவர் தமது இல்லத்தை வெல்ல வைக்க என்ன தில்லு முல்லும் செய்யக் கூடியவர். அவர் எனக்கு காந்தி கண்டுபிடிக்கும் பெறுப்பைக் கொடுத்தார். எனக்குத் துணையாக தான் உயிரா நேசித்த தனது சைக்கிளைக்யே கொடுத்தார். நானும் அந்தச் சைக்கிளும் காடு, மேடு, தோட்டம் துரவு பனம்
தோப்பு, தென்னம் தோப்பு திரிந்து காந்தியைக் கண்டுபிடித்து கூட்டி வருவோன்.
உண்மையில் சன்நிதி வாத்தி அரசியல் வாதியாக வந்திருக்க வேண்டியவர். தமிழ் சனத்தின் நல்ல காலமோ கெட்ட காலமோ ஆசிரியராக வந்திட்டார். விளையாட்டுப் போட்டியை வெல்ல வைக்க ஆள் மாறாட்டம் செய்வார். சன்நிதி வாத்தியின் நல்ல காலம் எங்கள் இல்லத்தில் இன்னொரு மணிவண்ணன் இருக்கிதான். அவனுடைய பெயரிலும் காந்தி என்ற இந்த மணிவண்ணன் பங்கு பற்றி வெற்றிகளை குவிப்பான். இந்த விசயம் வெளியே தெரிய வர எங்கள் விளையாட்டு இல்லத்திற்கு கள்ள இல்லம் என்ற பெயரும் கிடைத்தது.
இப்படியான காலகட்டத்தில்தான் ஸ்கைப் என்றொரு விண்கலம் பூமியை நோக்கி வருகிறது. விழப்போகுது என்ற செய்தி ஊரெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டபோது, உலகம் அழியப்போகுது அதுக்கிடையில் வடிவாகச் சாப்பட்டு சந்தோசமாக சாகோணும் என்றபடி தான் வளர்த்த கோழி, ஆடுகளை எல்லாம் கறியாக்கி சந்தோசமாக சாப்பிட்டான். ஸ்கைப் எங்கேயோ ஒரு கடலில் விழுந்ததை அறிந்து கொஞ்சக்காலம் ஸ்கைப்பை திட்டித் தீர்த்தான்.
அதன் பின்னர் சிறிது காலம் ஊரில் காணவில்லை. திரும்பவும் ஊருக்கு வரும் போது புறோக்கர் காந்தியாக வாந்தான்.வெங்காயம், மிளகாய்புறோக்கர்,மாட்டெரு, ஆட்டெருப் புறோக்கர் கல்யாணப் புறோக்கரைத் தவிர எல்லாப் புறோக்கர்த் தொழில்களைச்; செய்தான்.
நாட்டுப் பிரச்சனை அந்தத் தொழிலுக்கும் ஆப்பு வைத்தது. இந்தியன் ஆமி வந்த தொடக்க காலத்தில் இயக்கக் கட்டுபாடும், பொலிஸ் கட்டுப்பாடும் இல்லாததாலே கசிப்புக்காச்சி விற்றான். வருமானம் அதிகரிக்க மாடு அழித்தும் விற்பனை செய்தான்.
இந்த விசயம் இந்தியன் ஆமின்ரை காதுக்கும் எட்டியது. கசிப்பு விற்றதை சீரியசாக இந்தியன் ஆமி எடுக்கவில்லை. மாட்டைக் கொல்கிறான், அதுவும் காந்தியின் பேரைக் கொண்டவன் என அறிந்ததும் இந்தியன் ஆமி சினம் கொண்டது. வரலாற்றிலேயே இந்தியன் ஆமியால் தேடப்பட் முதல் நபர் காந்திதான். காந்தி இந்தியன் ஆமியின் கண்ணுக்கு தெரியாமல் உச்சிக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இந்தியன் ஆமி காந்தியின் வீட்டைச் சுற்றி மறைவாக ஒளித்திருந்தார்கள். இது தெரியாமல் காந்தி சைக்கிளில் வீட்டுக்கு வந்தான்.
இந்தியன் ஆமி அவனை சுற்றி வளைத்தது. உடனே கைகளைத் தூக்கி சரண்டர் ஆன காந்தி. நான் காந்தியில்லை சத்தியம் செய்தான். அவர்கள் நம்ப மறுத்த போது சட்டைப் பையில் கையை விட்டு தனது அடையாள அட்டையைக் காட்டினான். இந்தியன் ஆமி சந்தேகம் நீங்கி அவனை
விட்டதும். காந்தி அவர்களைப் பார்த்து சொன்னான். ‘ஐயா, நானும் அவனைத்தான் தேடுறன். பிடிசசால் எனக்கும் சொல்லுங்கோ என்ரை காசை சுத்திட்டான். நானும் இரண்டு சாத்துச் சாத்தோணும்.
0 0 0 0 0 0
என்ன சத்தத்தைக் காணோம் என்ற ஞானியின் குரல். காந்தியின் நினைவுக்கு முற்றுப் புள்ளியிட்டது.
‘சரி சொல்லு’ என்றேன்.
‘காந்தி இப்போது பிரபல சாத்திரி’ என்றான்.
நான் வாய் விட்டுச் சிரித்தேன். ;
‘சிரிக்காதே’ என்றான்.
‘சொல்லு’ என்றேன்.
‘நான் போன மாதம் ஊருக்குப் போய் வந்தது உனக்குத்தெரியும்தானே. அப்போ நானும் அவனிடம் சாத்திரம் கேட்டேன். காந்தி சொல்கிறான். வருகிற ஆவணிக்கு நீ உன் குடுப்பத்தை விட்டுப் பிரிவாய் என்கிறான். ஆவணிக்கு இன்னமும் இரண்டு மாதம் இருக்கிறது. பார்ப்பம், நானா அவனா என்று.’
‘நீ இப்பவும் சாத்திரத்தை நம்புகிறாயா?, எதுக்கும் ஆவணிக்கு ஊருக்குப் போகிறேன். காந்தியையும் சந்திக்கிறேன். எனச் சொல்லி விட்டு தொலை பேசியைத் துண்டித்தேன்.
சில நாட்கள் கழிந்தன. நானும் ஊருக்குப் போகிற அலுவல், வேலை என மூழ்கி விட்டேன்.
ஒரு நாள் வேலையாலை வரும்போது மனைவி வாசலில் எனக்காக காத்திருந்தாள். அப்படி ஒரு போதும் காத்திருப்பதில்லை. நான் காரை விட்டு இறங்க முன்னரே மனைவி ஓடி வந்து ‘ஞானி மாரடைப்பால் இறந்து விட்டான்’;. என்றாள். நான் காருக்குள்ளோ சிலையாக இருந்தேன்.
நான் ஊருக்கு வெளிக்கிடும் நாளும் வந்தது. ஊருக்குப் போன உனனேயே காந்தியைச் சந்தித்து சாத்திரம் கேட்க வேணும் எனத் தீர்மானித்தேன்.
ஊரும் வந்து சேந்தாச்சு. இரவாகிவிட்டதால் மறுநாள் காலை காந்தியைப் போய் சந்திப்போம் என்ற எண்ணத்தில் நித்திரைக்குப் போனேன்.
பிரயாணக் களைப்பாலை நல்லாகத் துங்கிவிட்டேன். மறு நாள் காலை பறை மேளச் சத்தம் என்னை எழுப்பியது. எழுந்து, பல் விளக்கிய படி வாசலுக்கு வாந்தேன். றோட்டாலே தெரிந்த ஒருவர் போய்க் கொண்டிருந்தார். அவரிடம் “என்ன மேளச் சத்தம் கேட்கிறது?’ எனக் கேட்டேன்.
அவர் “காந்தி இராத்திரி மாரடைப்பு வந்து இறந்து விட்டான்” என்றார்.
0 0 0 0 0