இலக்கியச்சோலை

ஒரு எழுத்தாளரின் திரைப்பட பார்வை!… சங்கர சுப்பிரமணியன்.

தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் திரு. ஜெயமோகன் அவர்கள். இவர் ஒரு திரைப்படப் படத்தை பற்றி கருத்தை சொல்லியிருக்கிறார். அனேகமாக வழக்கம்போல் தமிழ்த் திரைப்படம்தான் அவதூறுக்கு ஆளாகும் என்ற என் கூற்று பிழையானது. என் எண்ணத்துக்கு மாறாக வேற்று மொழிப்படத்தை பற்றி கூறியிருந்தார். அப்படம் அண்ணன் தம்பி என்ற பெயரில் 2008ல் வெளிவந்த மலையாளப்படம்.மலையாளப் படங்களில் நல்ல படங்கள் வந்திருக்கின்றன. வருகின்றன.இல்லையென்று சொல்லவில்லை. அதேபோல் எல்லா மொழிகளிலும் நல்லபடங்கள் வந்திருக்கின்றன. வருகின்றன. நான் பெங்களூரில் இருந்தபோது எழுபது என்பதுகளில் மலயாளப்படங்கள் ஒபேரா என்ற ஒரே திரையரங்கில் மட்டும் வரும். அதில் வரும் படங்களின் பெயர்கள் ஒருமாதிரி இருக்கும். அப்படத்தில் வரும் ஓரிரு காட்சிகள் என்று வெளியிட்டு சுவரொட்டியில் விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அந்த படத்தை பார்த்தால் அந்த காட்சிகளுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இருக்காது. கூட்டத்தை இழுக்க அக்காட்சிகளை இணைத்திருப்பார்கள். அதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். இதுவும் மலையாளப் படத்துக்கான ஒரு அளவுகோலாக இருந்தது.மொழிப்பற்றால் தமிழ்ப்படங்களை தரம் தாழ்த்த மனது அனுமதிக்கவில்லை. இன்னொரு காரணம் அந்த மாதிரி படங்களை சுமந்த சுவரொட்டிகளை தமிழப்படங்களுக்காக நான் பார்த்ததில்லை. தவிர எல்லா மொழிகளிலும் எல்லாவிதமான படங்களும் வரும் என்பதோடு வியாபார ரீதியான படங்கள் அதற்கேயுரிய வழிகளில்தான் வரும். வியாபாரத்திற்கே வழியில்லாத படங்களில் அது இருக்காது, தேவையும் படாது.இனி அண்ணன் தம்பி படம் பற்றி அவர் என்ன சொன்னார் என்று பார்ப்போம். இயக்குனர் பேரரசு ஒரு கோடி ரூபாய்க்குள் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்றவர் படத்தைப்பற்றியோ கதையைப் பற்றியோ சொல்லவில்லை என்று ஆரம்பிக்கிறார். மம்மூட்டி இரட்டை வேடம். கோபிகா ஒருஜோடி லட்சுமிராய் இன்னொரு ஜோடி. மம்மூட்டி தோன்றும் முதல் காட்சியை மட்டும் சொல்லிவிடுகிறேன் என்று பொள்ளாச்சி சந்தையில் ஒரு எளிய மனிதரை ரவுடிகள் போட்டு அடிக்கிறார்கள் என்று தொடங்குகிறார். அப்போது மம்மூட்டி லாரியில் வந்து இறங்குகிறார்.ஒருவன் பறந்து வந்து லாரிமேல் விழ லாரிமேல் ஏற்றப்பட்டிருந்த பூக்கூடை அப்படியே கவிழ்ந்து ஸ்லோ மோஷனில் பூக்கள் அவர்மீது கொட்டுகிறது. விளங்குமா நாடு என்கிறார் எழுத்தாளர். இரண்டு வேடத்தில் மம்மூட்டி, இரண்டுக்குமே சவால்கள். இரண்டுபேருமே மாறி மாறி டூப்புடன் சண்டைபோடும்போது ஓவர்லேப் தவறுவது நன்றாகவே தெரிகிறது. குத்துப்பாட்டு, குட்டி ஆசாமிகள் ஹீரோவை புகழ்ந்து பாராட்டும் பஞ்ச் வசனங்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தியேட்டரை விட்டு நானும் மனைவியும் தப்பி ஓடிவந்துவிட்டோம் என்கிறார்.வந்தவுடனேயே மலையாள சினிமாவில் எனக்குத் தெரிந்த நாலைந்து முக்கியமானவர்களை அழைத்து என் மனக்குமுறலை கொட்டினேன் என்றார். அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டதும் பரிதாபமாக இருந்தது. நாலைந்து வருடங்களாகவே மலையாள சினிமாவில்அடிமேல் அடி. எந்த தொழில்துறையிலும் இத்தனை தொடர் தோல்விகளும் நஷ்டங்களும் தாங்கக் கூடியவையல்ல. மலயாள சினிமா என்று ஒன்று இன்னும்இருப்பதே சினிமா ஊடகத்திலுள்ள கிளாமரால்தான் என்றார்களாம்.மலையாள சினிமாவின் பரப்பு குறைவு என்பதால் அறுபது பிரதிகளே எடுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் இரண்டாம் ஆட்டத்துக்கு கூட்டம் வராது என்பதுடன் மழைக்காலங்களில் இரவுக்காட்சிகள் கூட்டம் இல்லாமலே ஓடும். வளைகுடா பணத்தால் பெரும்பாலானவர்கள் வீட்டில் ஹோம் தியேட்டர் இருப்பதால் படத்திற்கு வசூல் குறையும். அதனால் குறைவான பட்ஜெட்டில்தான் படம் எடுத்தாக வேண்டும்.மேலும் ஆர்ப்பாட்டமான காட்சியமைப்புக்கள் மலயாள சினிமாவுக்கு கட்டுப்படியாகாது. திரைக்கதை, நடிப்பு இரண்டை மட்டும் நம்பியே படம் எடுக்க வேண்டிய கட்டாயம். இதனாலேயே நல்ல திரைக்கதை நல்ல நடிப்புடன் படங்கள் உருவானது. பட்ஜெட் காரணமாகவே யதார்த்தமாக படமெடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள். கடுமையான தணிக்கையுள்ள நாடுகளில் வணிக சினிமா இல்லாமல் போய் நல்ல சினிமா உருவாவதுபோல் இதைச் சொல்லலாம்.மலையாளத்திலும் மூன்றுவகையான படங்கள் உண்டு. தரமான படங்கள், நடுவாந்தர படங்கள், தரைமட்ட வணிகப்படங்கள் என்று உண்டு. இந்த மூன்றுவகை படங்களிலும் நசீர், ஜெயன், சோமன், மோகன்லால், மம்மூட்டி அனைவரும் நடித்துள்ளார்கள். அங்கே வெற்றிப் படங்கள் எல்லாம் நடுவாந்தர படங்களே. மசாலா படங்கள் தரமற்ற ரசிகர்களுக்காக குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு ஒரு வாரம் ஓடினால் போதும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுபவை. அதாவது அங்கு வணிகப்படம் நல்ல படங்களுக்கு போட்டியே இல்லை.இந்நிலை என்பதுகள் வரை நீடித்தது. அதன் பின்னரே நல்ல திரைக்கதையாளர்கள், நல்ல நடிகர்கள், நல்ல இயக்குநர்கள் தோன்ற நல்ல படங்கள் வர ஆரம்பித்தன. வசூலிலும் மம்மூட்டி, மோகன்லால் படங்கள் சாதனை படைத்தன. தொன்னூறுகளில் மலையாளப்படம் சோதனையை சந்தித்தது. நடுத்தர வர்க்கத்தினர் சட்டென்று திரையரங்குகளுக்கு வருவதை தவிர்த்தனர். இதனால் நடுத்தர படங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இயக்குநர்கள் தொடர் தோல்விக்கு பின் மெல்ல பின் வாங்கினர்.இந்த நெருக்கடியை சமாளிக்க மலையாள சினிமா இரு உத்திகளை பின்பற்றினார்கள். மோகன்லாலும் மம்மூட்டியும் அடிதடியுடன் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி அடித்தட்டு மக்களை அதிகமாக திரையரங்குகளுக்கு வரவழைத்தனர். தியேட்டர்களை நவீனப்படுத்தி நடுத்தர வர்க்கத்தினரை திரையரங்குகளுக்கு வரவழைத்தனர்.ஆனால் இரண்டாயிரத்தில் மீண்டும் நெருக்கடியை மலையாள சினிமா சந்தித்தது. நகரத்து உயர்தர திரையரங்குகளை தமிழ், இந்தி, மற்றும் ஆங்கில திரைப்படங்கள் கைப்பற்றின. மெல்ல மெல்ல கிராமத்து திரையரங்குகளையும் தமிழ்ப் படங்கள் கைப்பற்றின. மோகன்லால்,  மம்மூட்டி படங்களுக்கு பழகிய ரசிகர்கள் அடுத்தகட்ட ரசனைக்கு இறங்கிச் சென்றனர். அவர்களுக்கு நவீன படமாக்கல் உத்திகள் தேவைப்பட்டன. ஆகவே இன்று கேரளாவில் தமிழ்ப் படங்களே விரும்பப் படுகின்றன.கேரளா முழுக்க தமிழ் வணிகப் படங்களே வெற்றிகரமாக ஓடுகின்றன. அந்நியன் கேரளாவில் நூற்றைம்பது திரையரங்களில் வெளியாகி ஒரு உச்சகட்ட மலையாளப் படத்தைவிட நான்கு மடங்கு வசூல் செய்தது. மணிச்சித்ரதாழ் வசூல் செய்ததைவிட சந்திரமுகி பலமடங்கு வசூல் செய்திருக்கிறது. சிவாஜி, பில்லா, தசாவதாரம் போன்ற படங்கள் பெரிய அறுவடையே செய்துள்ளது. குருவி போன்ற தோல்விப் படங்கள்கூட கேரளாவில் வெற்றிப் படங்கள்.கேரளத்து இளைய தலைமுறை மலையாளப் படங்களை தவிர்க்கின்றனர். அவர்களின் ரசனை தமிழ் ஹைடெக் படங்களிலேயே இருக்கிறது. அவர்களை தம்பக்கம் இழுக்கவே தமிழ்ப் படங்களை மலையாளத்தில் எடுக்க ஆரம்பித்தனர். இப்படங்கள் மலையாளப் படங்களைவிட மூன்று நான்கு மடங்கு பொருட்செலவில் எடுக்கப் படுகின்றன. பாடல்களும் சண்டைக்காட்சிகளும் பலவாரங்கள் படமாக்கப்படுவதுடன் அதிகம் ஊதியம் பெறும் நிபுணர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். சண்டை போடுவதும் குத்துப்பாட்டும் அல்ல தமிழ்சினிமா. அவை அவ்வளவும் தொழில் நுட்பதேர்ச்சி. இதை மலையாளப் படம் கனவுகூட காணமுடியாது.முப்பதுநாள் படப்பிடிப்பு பத்து நாள் மற்றவேலை என்றால்தான் மலையாளப் படத்துக்கு கட்டுப்படியாகும். இரண்டு நாட்களில் பாட்டு ஒருநாள் சண்டை என்று உள்ளூர் ஆட்களை வைத்து எடுக்கும் படம் எப்படி இருக்கும்?ஜெயமோகனிடம் பேசிய நண்பர்கள் சொன்னதாவது மலையாளத்தில் நடிகர்கள் இயக்குநர்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. பெரும்பாலானவர்கள் முப்பது நாற்பது படங்கள் எடுத்து கால் நூற்றாண்டு காலமாக திரையுலகில் இருக்கிறார்கள். இனி அவர்களிடம் புதிதாக எதிர்பார்க்க முடியாது. தமிழில் புதியவர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முகம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை முழுமையாகவே மாறிவிடுகிறது. கேரளாவில் அப்படியில்லை.கேரளாவில் ஒல்லியான இளம் நடிகரே கிடையாது. எல்லோருமே வயதாகி குண்டாக தொப்பையுடன் இருக்கிறார்கள். புதியவர்கள் நுழையவே முடியாது. அங்கு நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என குழுவாக ஐந்து குழுக்கள் இருக்கின்றன. இந்த குழுக்களைத் தாண்டி வேறு பட முயற்சிகளைச்செய்ய எவருக்கும் அமைப்பு பலமும் இல்லை. திராணியும் இல்லை. இதனால்தான் மலையாளப் படங்களின் கூறும் முறையும் காட்சி அமைப்பும் பழகிப்போனதாகவே இருக்கிறது. நவீனப் படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அவை மிகவும் சலிப்பூட்டுகின்றன.பல காட்சிகளில் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக காமிரா அசையாமல் நிற்கிறது. நடிகர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே வசனம் பேசுவார்கள். தமிழில் பருத்திவீரன் போன்ற படங்களில் ஒரு சிறு காட்சியில் கூட காமிரா இருபதுக்கும் மேற்பட்ட தடவை சுழலும். மன்மதன் படத்தில் “என்னாசை மைதிலியே” என்ற பாடலுக்கு மட்டும் முன்னூறு படத்துளிகள் (ஷாட்) எடுக்கப்பட்டன.உலக சந்தைகளை வென்று தமிழ் சினிமா பெரும் வணிக சாமராஜ்யமாக ஆகிக் கொண்டிருக்கிறது. கோடிகள் புரள்கின்றன. சினிமாவில் பணம் என்பது தொழில் நுட்பம் தொழில் நுட்பம் என்பது பணம். ஹாலிவுட் சினிமா ஐரோப்பிய சினிமாவை சாப்பிட்டதுபோல கோலிவுட் சினமா மலையாள சினிமாவை இல்லாது செய்து விடலாம். அவ்வப்போது வரும் ஆர்ட் படங்களாக மலையாள சினிமா சுருங்கி விடலாம். அல்லது சட்டென்று புதிய கருக்களும் புதிய கூறுமுறையுமாக புதிய தலைமுறை பொங்கி வரலாம்.இப்படி மலையாள சினிமாவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்அவருக்குத் தெரிந்த மலையாள சினமாவில் நாலைந்து முக்கியமானவர்களுடன் கலந்து அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளார். இங்கு நான் எழதியிருப்பது ஓரளவு தொகுத்து வழங்கியதுதான். அவர் இன்னும் அதிகப்படியான புள்ளி விவரங்களுடன் விவரித்திருக்கிறார்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா? அதனால் தான் தமிழ் சினிமாவில் குறைகள் இருப்பினும் தமிழ் சினிமாவைகுறைகூற மனம் வரவில்லை. தமிழிலும் அறம், கர்ணன், ஜெய்பீம் போன்ற படங்கள் நிறைய உள்ளன. மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. “முத்தத்து முல்லைக்கு மனமில்ல” என்பதே அது. தன் வீட்டு வாசலிலுள்ள முல்லை மலரின் மனம் தெரியாது என்பதுதான் தமிழில் பொருள். நம்மிடமும் நல்ல திரைப்படங்கள் உள்ளன என்ற கண்ணோட்டத்தில் அனுகினால் தமிழில் உள்ள நல்ல படங்கள் நமக்கு புலப்படும்.ஒவ்வொரு தேசிய இனமும் வாழும் சூழல் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சார்ந்தும் வியாபார நோக்குடனுமே திரைப்படங்களை தயாரிக்கின்றன. மராத்தி படத்தையும் குஜராத்தி படத்தையும் ஒப்பிட்டாலோ மேற்கு வங்க படத்தையும் அஸ்ஸாமிய படத்தையும் ஒப்பிட்டாலோ தெலுங்கு படத்தையும் ஒடியா படத்தையும் ஒப்பிட்டாலோ நிச்சயமாக வேற்றுமைகள் இருக்கும். அவரவர்க்கு அவரவர்கள் சூழலில் அவர்கள் படம் சிறந்த படமாகும். குறைகள் எல்லா இடத்திலும் உள்ளன.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.