கட்டுரைகள்

சர்வதேச சமூகம் சர்வரோக நிவாரணியா…?…. அவதானி.

இலங்கை, இந்து சமுத்திரத்தின் நடுவே துலங்கும் அழகிய முத்து. இந்த முத்தை சிறைப்பிடிக்க முதலில் போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், இவர்களுக்குப்பின்னர் பிரித்தானியரும் வந்து, அதனை சுரண்டக் கூடியளவுக்கு சுரண்டிவிட்டுச்சென்றுவிட்டாலும், இந்த முத்து இன்றளவும் சர்வதேசத்தின் அழகிய காட்சிப் பொருளாகத்தான் இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த கட்சி அரசியல் ஆட்சியாளர்களும் தமது பங்கிற்கு சுரண்டத்தான் செய்தனர். முடியாதவிடத்து வெளிநாட்டு கடன்களைப்பெற்று, சுரண்டிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தனர்.

இலங்கையில் வாழ்ந்த மூவின மக்களையும் சமமாக நடத்தாமல் பெரும்பான்மை இனத்தவர் பேசும் மொழிக்கும் அவர்கள் பின்பற்றிய மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் , ஏனைய இரண்டு சிறுபான்மை இனத்தையும் ( இரண்டும் தமிழ் பேசும் இனங்கள் ) இரண்டாம் பட்சமாக்கும் அரசியலமைப்புகளை காலத்துக் காலம் உருவாக்கியதனால், தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து அது இன விடுதலைப் போராட்டமாகவும் வெடித்தது.

அந்தப்போராட்டத்தையும் சில சர்வதேச நாடுகளின் துணையுடன் முறியடித்துவிட்டு, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியையும் இன்றைய அரசு ஒரு பௌத்த தேரர் தலைமையில் உருவாக்கியிருக்கிறது.

இதுவரை காலமும், “ எமது பிரச்சினையை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வோம் “ என்று கூறிவந்திருக்கும் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களைப் பின்பற்றி, அண்மையில் கத்தோலிக்கப் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் தங்கள் பிரச்சினையை , குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல் படுகொலைச்சம்பவத்தை, நீதி கோரி சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லப்போவதாக கூறியுள்ளார்.

யார் இந்த சர்வதேச சமூகம்..? அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, பர்மா, ரஷ்யா, சீனா, ஜப்பான், மற்றும் மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளா..?

இந்த நாடுகளில் எத்தனை இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கின்றன…? இலங்கையில் தோன்றிய இனவிடுதலைப்போரை முறியடிப்பதற்கு இவற்றில் எத்தனை நாடுகள் இலங்கை அரசுகளுக்கு ஆயுத உதவி மற்றும் படை உதவிகளை வழங்கின.

போர் முடிந்த பின்னர், தத்தம் தேவை கருதி இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இவற்றில் சில நாடுகளின் தூதுவர்களும் இராஜ தந்திரிகளும் வெளிநாட்டு அமைச்சர்களும், செயலாளர்களும் காலத்திற்கு காலம் வந்தவண்ணமே இருக்கின்றனர்.

அவர்களுடன் தேநீர் விருந்துகளில் உரையாடும் தமிழ்த்தலைவர்கள், இதுவரையில் பேசியது என்ன..? அவர்களும் சர்வதேச சமூகத்தைச்சேர்ந்தவர்கள்தானே..? இன்னமும் அவர்களிடம் தலைவர் சம்பந்தன் இதுபற்றிப் பேசாமல்தானா, மீண்டும் மீண்டும் சர்வதேச சமூகத்திடம் பேசப்போகின்றோம் எனச்சொல்கிறார்.

புரியவில்லையே…?

இனிவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரையில், “ இந்த சர்வதேச சமூகத்திடம் சொல்லியிருக்கின்றோம். அவர்கள் எமது பிரச்சினையை கவனிப்பார்கள் “ என்று மீண்டும் அவர் சொல்லத் தொடங்கியிருக்கிறாரா..? என்று பார்த்தால், ஆண்டகை மல்கம் ரஞ்சித்தும் அவரது பாதையையே பின்பற்றித் தொடர்ந்து வந்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதி விசாரணையில் சர்வதேச சமூகத்திடம் முறையிடப்போவதாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

பிறந்துள்ள 2022 ஆண்டில் , ஏப்ரல் மாதம் வந்தால், குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகிவிடும். பலர் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் தலைமறைவாக தப்பி ஓடிவிட்டதாகவும் அரசின் புலனாய்வுப்பிரிவு தொடர்ந்தும் சொல்லி வருகிறது. முன்னைய நாடாளுமன்றத்தினாலும் இதனை விசாரிக்க ஒரு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இவ்வாறு காலம் இழுத்தடிக்கப்பட்டதேயன்றி, இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அவர்களின் வணக்கத்திற்குரிய பிதாவாக கருதப்படும் ஆண்டகையும் அரசுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் பிரயோகித்துவிட்டு , தற்போது சர்வதேச சமூகத்திடம் முறையிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிடத்திலும் சுட்டிக்காண்பித்து நீதி கோரவிருப்பதாகவும் இலங்கை அரசும் பொலிஸாரும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொடர்ந்தும் நாடகம்

ஆடிக்கொண்டிருப்பதாகவும், அண்மையில் தென்னிலங்கை தேவாலயம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இலங்கை தமிழினத்தின் பிரச்சினைக்கு நீதி கண்டு பிடிக்க எமது தமிழ்த் தலைவர்கள் சர்வதேச சமூகத்திடம் முறையிடவிருப்பதுபோன்று ஆண்டகை அவர்களும் அதே சர்வதேச சமூகத்திடம்தான் செல்லவிருக்கிறார்.

அச்சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான இந்தியப்பிரதமரிடம், அவர் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய பாதிப்புகளை காண வந்தவிடத்திலும் சொன்னவர்தான் ஆண்டகை.

அதே பிரதமருக்குத்தான் தலைவர் சம்பந்தன் தலைமையில் அண்மையில் இனப்பிரச்சினைக்கு நீதி கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.

இது இவ்விதமிருக்க, தற்போது சம்பந்தன், “ ராஜபக்ஷகளிடத்தில் இனியும் நீதி நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது, உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டை கோரும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுதான் ஒரே வழி “ என்று கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின் இதுவரையில் அவர் செய்திருப்பது என்ன..? என்ற கேள்வி எழுகின்றது.

இந்தியப்பிரதமர் மோடிக்கு நீண்ட அறிக்கையை கொடுத்துவிட்டு, மீண்டும் வேதாளம் புளிய மரத்தில் ஏறியதுபோன்று பழைய பல்லவியை பாடத் தொடங்கியிருக்கிறார்.

இவர்கள் குறிப்பிடும் சர்வதேச சமூகம் வாழும் நாடுகளிலும் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனோ பெருந்தொற்றை முறியடிக்க முடியாமல் இந்த நாடுகள் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன.

“ இந்திய இலங்கை உடன்படிக்கையும் தமிழ்பேசும் மக்களின் ஆட்சி அதிகாரப்பகிர்விற்கான அரசியல் அபிலாஷைகளும் “ என்ற தலைப்பினைத் தாங்கிக்கொண்டுதான் இந்தியப்பிரதமருக்கு எமது தமிழ்த்தலைவர்கள் சிலர் இணைந்து கடிதம் அனுப்பினர். அதனை அவதானித்திருக்கும் எமது தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பார்த்தவற்றில் ஒரு சிலவற்றையும் இங்கு பட்டியலிடுவது பொருத்தம்.

1957 இல் பண்டா – செல்வா உடன்பாடு

1965 இல் டட்லி – செல்வா உடன்பாடு

1985 இல் திம்பு பேச்சுவார்த்தை

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம்

இதனையடுத்து பிரேமதாச – அன்டன் பாலசிங்கம் சந்திப்பு

வடக்கு – கிழக்கு மாகாண சபை செயல் இழப்பு.

ரணில் – விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தம்

நோர்வே சொல்கெயிம் மேற்கொண்ட சமாதான முயற்சி.

சந்திரிக்கா அறிமுகப்படுத்திய தீர்வுப்பொதி.

வடக்கும் கிழக்கும் பிரிந்து தனித்தனியான மாகாண சபை முறைமை.

இறுதியில் அவை இரண்டு செயல் இழந்தமை.

தற்போதைய ஜனாதிபதி அறிமுகப்படுத்தும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி.

இவ்வளவும் நடந்திருக்கும்போது, மீண்டும் சம்பந்தன், சர்வதேச சமூகத்தை கையில் எடுத்துள்ளார்.

அதனால் ஏதும் நன்மை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆண்டகை அவர்களும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நாடவிருக்கிறார் போலும்.

இவற்றையெல்லாம் கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் ராஜபக்ஷக்கள் தமது பிரதிநிதி மிலிந்த மொரகொட மூலம் “ இலங்கையும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படவேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் விருப்பம் “ என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு செவ்வி வழங்கச்செய்துள்ளனர்.

இதேவேளை, இதே காலப்பகுதியில் ( சில தினங்களுக்கு முன்னர் ) இலங்கை வந்த பிரித்தானியாவின் பொதுநலவாய விவகாரங்களுக்கும் ( கொமன் வெல்த் ) ஐ. நா. விவகாரங்களுக்கும் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், இலங்கையில் மனிதவுரிமைகள் பேணப்படுவதாக சொல்லியிருக்கிறார் என்று இலங்கை அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

ஆனால், பிரித்தானியாவுக்கு திரும்பிச் சென்ற அந்த அமைச்சர், தான் அவ்வாறு கூறவில்லை என்று தமது ருவிட்டரில் பதிவிட்டிருக்கும் செய்தியும் வெளியாகியிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் இலங்கையில் சடுகுடு விளையாட்டுத்தான் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிறது.

இவற்றை அவதானிக்கும் ஶ்ரீமான் பொதுஜனனன்தான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரல்வேண்டும் !

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.