102 வயது பெண் காந்தியவாதிக்கான பத்மஸ்ரீ விருதை கவுகாத்தியில் வழங்க வேண்டும்; குடும்பத்தினர் கோரிக்கை
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அசாமை சேர்ந்த புகழ்பெற்ற காந்தியவாதியான சகுந்தலா சவுத்ரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
102 வயதான சகுந்தலா, கவுகாத்தியில் உள்ள சரணியா ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். மகாத்மா காந்தி கடைசியாக கடந்த 1946-ம் ஆண்டு கவுகாத்தி சென்றிருந்தபோது இந்த ஆசிரமத்தில்தான் தங்கியிருந்தார்.
தேசத்துக்காக தன்னலமற்ற சேவையை ஆற்றிய சகுந்தலா, மகாத்மா காந்தி மீதான பற்றுதலால் அவர் முன்னெடுத்த பல போராட்டங்களில் பங்கேற்று உள்ளார். குறிப்பாக வினோபா பாவேயுடன் இணைந்து, காந்திய நிறுவனங்களை வழிநடத்தி வந்தார்.
பத்மஸ்ரீ விருது
இதன் மூலம் சிறுமிகள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்டார். இவரது அரிய செயல்களை பாராட்டி பல்வேறு விருதுகள் அவரை தேடி வந்துள்ளன.
அந்த வரிசையில்தான் தற்போது பத்மஸ்ரீயும், சகுந்தலாவின் தன்னலமற்ற தொண்டுக்கு பாராட்டு பத்திரமாக அமைந்திருக்கிறது.
ஆனால் தேசத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ தனக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை சரியாக புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை. வயது முதிர்வின் காரணமாக இந்த கவுரவத்தை முற்றிலுமாக உணர்ந்து கொண்டாட முடியாமல் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
குடும்பத்தினர் வரவேற்பு
எனவே இந்த விருது முன்னரே வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என கூறியுள்ள அவர்கள், எனினும் தாமதமாகவேனும் வழங்கப்படுவதை வரவேற்று உள்ளனர்.
அதேநேரம் விருது பெறுவதை அவர் விரும்பமாட்டார் எனவும், தேசத்துக்கு சேவை புரிவதே தனது நோக்கம் என அவர் கூறி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை அவரிடம் கூறி, உறவினர்களும், நண்பர்களும் மகாத்மா காந்தி வாழ்க என கோஷமிடும்போது சகுந்தலாவின் முகத்தில் மகிழ்ச்சி இழையோடுவதை காண முடிவதாகவும் அவர்கள் கூறினர்.
நேரில் வழங்க வேண்டும்
இந்த நிலையில் 102 வயதாகும் சகுந்தலாவுக்கு டெல்லி சென்று அந்த விருதை பெறும் நிலையில் உடல்நிலை இல்லை.
எனவே கவுகாத்திக்கு நேரடியாக வந்து சரணியா ஆசிரமத்தில் வைத்து அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.