எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!
2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் அம்பையின் “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்ற சிறுகதை நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1973ல் ராஜம் கிருஷ்ணன், 1984ல் லட்சுமி திரிபுரசுந்தரி, 2005ல் திலகவதி ஆகியோரைத் தொடர்ந்து, அம்பை இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் ஆவார்.
சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அம்பை தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான எழுத்தாளராகவும், 1960களில் இருந்தே தொடர்ந்து எழுதியும் வருகிறார்.கோவையில் 1944-ல் பிறந்த அம்பை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தனது இளங்கலைப் படிப்பையும், பெங்களூருவில் தன்னுடைய முதுகலைப் படிப்பையும் முடித்தார். பிறகு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைந்து முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். படிப்பை முடித்தவர் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பயணிக்க ஆரம்பித்தார்.
தனது எழுத்துலக பயணத்தின் மூலம், ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘சக்கர நாற்காலி’, ‘பயணப்படாத பாதைகள்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை அம்பை வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் காத்திரமான பெண்ணிய எழுத்துகளாக அனைவராலும் வாசிக்கப்படுகின்றன. சிறுகதைகள் மற்றும் புனைவுகளை அம்பை எனும் புனை பெயரிலும், கட்டுரைகளை சி.எஸ்.லட்சுமி என்கிற இயற் பெயரிலுமாக எழுதி வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே பெண்கள் ஆய்வுத் துறையில் சுயாதீன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுகிறார். ‘SPARROW’ (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பினை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.
மத்திய அரசால் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விருது குறித்து ஊடகங்களிடம் பேசியவர், ‘சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, வாசிப்பு குறைந்துள்ளது என்பதைத் தாண்டி தற்போது வாசிப்பு முறை மாறியுள்ளது’ எனவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாகித்ய அகாடமிவிருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மதிப்பிற்குரிய இந்த விருதுடன், பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயும், பட்டயமும் வழங்கப்படும்.