சங்ககால மக்களின் வாழ்க்கை முறை!… பாகம் – 2 …. சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
மருத நில மக்கள்
வயலும் வயல்சார்ந்த இடமும் ஆகிய மருதநிலம் முல்லை நிலத்தை அடுத்து அமைந்திருப்பது. ஆறுகளையும் ஏரிகளையும் அண்டியிருப்பது. அவற்றுடன் குளங்கள், பொய்கைகள் என்று நீர் நிலைகளையும் கொண்டிருப்பது. அதனால் நிலம் செழித்து வளம் கொளிப்பது மருத நிலம். அது மக்கள் நாகரிகமடைவதற்கு வாய்பளித்த நிலம். மனித நாகரிகம் தோன்றியதும், வளர்ந்ததும் நதிக்கரைகளிலும் ஏரிக்கரைகளிலுமே என்பது வரலாறு.
மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள் உழவர் என்றும், களமர் என்றும் அழைக்கப்பட்டார்கள். அங்கே உழவுத் தொழிலுக்கு ஏற்ற நிலங்கள் இருந்தன. நீர் பாய்ச்சும் குளங்கள் இருந்தன. வற்றாத நதி வளங்கள் இருந்தன. அதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நெல் மற்றும் தானியங்களைப் பயிரிடுவதிலும், கரும்புச் செய்கையிலும் ஈடுபட்டார்கள். நதிகளிலும் குளங்களிலும் மீன்பிடித்தார்கள்.
நெல் அரிசிச் சோறு, அவல் என்பன அவர்களது முதன்மையான உணவாயிருந்தன. கோழி இறைச்சி, கோழிப் பொரியல், நண்டுக்கறி என்பனவும் அவர்களது உணவுகளாயிருந்தன. கரும்புச்சாற்றை ஆமை இறைச்சியுடன் கலந்து விருந்து வைப்பார்கள்.
கரும்பிலிருந்து சாறுபிழியும் கருவிகள் அவர்களிடம் இருந்தன. அதற்கான ஆலைகள் இருந்தன. கரும்புச்சாற்றைக் கட்டியாக்கி வெல்லம் தயாரித்தார்கள். உணவோடு வெல்லத்தைக் கலந்து உண்பார்கள்.
மருத நிலத்திலே சிற்றூர்களும், பேரூர்களும் இருந்தன. பெருவீதிகளும் சிறு தெருக்களும் இருந்தன. வீடுகளும், மாடிமனைகளும் இருந்தன. அரசுகளும் அரண்மனைகளும் இருந்தன. அரசர்கள், அமைச்சர்கள், படையினர் என்று முறையான அரசாட்சிகள் நடந்தன. அரசர்களுக்கிடையே உறவு இருந்தது. பகையும் எழுந்தது. போர்களும் நடந்தன.
மருதநில மக்களின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் சொல்கின்றது. பண்டைத்தமிழகத்தில் மருதநில மக்கள் வழிபட்ட தெய்வத்திற்கு வேந்தன் என்றுபெயர். இது அரசன் என்ற கருத்திலோ அல்லது அரசர்களின் தெய்வம் என்ற கருத்திலோ வழிபடப்பட்டிருக்கலாம் என்றும், வேந்தன் என்பது பின்னர் ஆரியர்களின் கடவுளான இந்திரன் என்று மாற்றப்பட்டமைக்கு ஆரியர்களின் வருகையும் பண்பாட்டுக் கலப்பும் காரணம் என்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில், மருதநிலமக்கள் தமது தெய்வமாக இந்திரனை வணங்கினார்கள். ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்தார்கள். அதனால்,பிற்காலத்து உரையாசிரியர்கள் மருதநிலத் தெய்வமான வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று உரைசெய்திருக்கிறார்கள்.
நிலையான வாழ்க்கை முறை, தேவைக்கதிகமான செல்வம், போதியளவு ஓய்வு நேரம் இவையெல்லாம் மருத நிலத்து மக்களுக்கு வாய்க்கப்பெற்றன. அதனால் அறிவை விருத்தி செய்வதற்கான அவகாசம் கிடைத்தது. கலைகளில் மக்கள் ஈடுபட்டார்கள். கட்டிடக் கலை முதல், கவின் கலைகள் வரை தோன்றி வளர்ந்தன.
ஊர்களில் திருவிழாக்கள் நடைபெற்றன. மக்களின் பண்பாடு உயர்வுற்றது. நாகரிகம் சிறப்புற்றது. மருதநிலத்து மக்கள் மகிழ்வாக வாழ்ந்தார்கள். குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்களைவிட, இவர்கள் வசதி நிறைந்தவர்களாகவும், வாழ்க்கை நிலையில் உயர்ந்தவர்களாகவும், நாகரிகம் அடைந்தவர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள்.
நெய்தல் நில மக்கள்
கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நில மக்கள் மீன்பிடிப்பதையும், உப்பு விளைவிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த மணல்பாங்கான நிலம் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாயிருக்கவில்லை.
நெய்தல் நில மக்கள் பரதவர், வலைஞர், திமிலோன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். பெண்கள் பரத்தியர் என்றும், உமட்டியர் என்றும், நுளைமகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
ஆண்கள் கடலில் வெகுதூரம் படகுகளில் சென்று மீன் பிடிப்பார்கள். இரவிலும் கடலுக்குச் செல்வார்கள். பிடித்த மீன்களைப் பெண்கள் வட்டிகளில் சுமந்துசென்று விற்பார்கள். மருத நிலத்து மக்களுக்கு மீன்களைக் கொடுத்து, நெல் மற்றும் தானிய வகைகளைப் பெற்றுக்கொள்வார்கள். மீன்களில் எஞ்சியவற்றை உப்பிட்டு வெயிலில் உலர்த்திக் கருவாடாக ஆக்குவார்கள்.
கடற்கரை நிலத்திலே பாத்திகட்டி, கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவித்தார்கள். வண்டிகளில் உப்பை ஏற்றிச் சென்று அண்டை ஊர்களிலே விற்பார்கள்.
இந்த மக்கள் வாழும் குடிசை வீடகளுக்கு முன்னால் எப்போதும் மீன் பிடிக்கும் வலைகளும், தூண்டில்களும் கிடக்கும். அரிசிக்கூழ், மீன் என்பன இவர்களது உணவாக இருந்தன. இவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். சுறா மீனின் எலும்பை நிலத்திலே நட்டுவைத்து, அதில் கடவுள் வந்து அமர்வதாக நம்பி வழிபட்டார்கள்.
நெய்தல் நிலத் தெய்வம் வருணன் என்று தொல்காப்பியம் குறித்துரைக்கின்றது
சில கடற்கரைகளில் துறைமுகங்கள் அமைந்திருந்தன. பிறநாடுகளில்இருந்து வணிகக் கப்பல்கள் வந்து போவதால் பண்டமாற்று வணிகம் மட்டுமன்றிக் காசுக்குப் பொருட்களை விற்றலும் வாங்கலும் கூட நடைபெற்றன. பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினால் ஆன காசுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
பேரசர்களின் பெருநிலப்பரப்பிற்குள் அமைந்த நெய்தல் நிலங்களும் இருந்தன. சிற்றரசர்களால் ஆளப்பட்டவையும் இருந்தன.
துறைமுகங்கள் அமைந்திருந்த கடற்கரைகளை அண்மித்த இடங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் (நெய்தல் நிலத்தின்) ஏனைய இடங்களில் வாழ்ந்தவர்களைவிட சற்று உயர்வாக இருந்தாலும்கூட, நெய்தல் நில மக்களின் வாழ்க்கை நிலை மருதநில மக்களுடையதைப் போல வளம் பெற்றதாக அமைந்திருக்கவில்லை. வாழ்வாதாரத்திற்காக, நாளாந்தம் கடலுக்குச் செல்வதிலும், கடுமையாக உழைப்பதிலும் ஈடுபட்டே ஆகவேண்டிய நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள்.
பாலை நிலத்து மக்கள்
பாலைநிலம் என்று தனியொரு நிலம் பண்டைத் தமிழகத்தில் இருந்ததில்லை என்பது அறிஞர் கூற்று. வரட்சியான வெறும் மணல் நிலங்களெல்லாம் பாலை நிலங்களென்று சொல்லப்படுவதில்லை. நால்வகை நிலங்களில் ஒன்று போதிய மழையின்றிப் போனதால், பருவமழை பொய்த்ததால்
வளம் குறைந்து பாழ்பட்டு வறண்டுவிட்டால் அந்நிலம் பாலை எனப்படுகின்றது. பாறைகள் உடைந்து, கற்களாகச் சிதைந்து, சிறுசிறு துகள்களாகிக் கிடக்கும் நிலமும், நீரின்றி நெடுங்காலம் வரண்டு பயிர்கள் வளரவொண்ணா வெறும் மணல் திட்டுக்களாய் இயல்பிழந்து கிடக்கும் நிலமுமே பாலை நிலமாகும். பாலை நிலம், அந்த நிலத்திற்கு உகந்தனவாக உண்டாகி வளர்ந்துநிற்கும் சில தாவரங்களையும் கொண்டிருக்கும்.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
என்று சிலப்பதிகாரத்தில் காடுகாண்காதையில் (64 – 66) சொல்லப்படுகின்றது.
குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். முல்லைக்குத் தெய்வம் திருமால். மருதத்திற்கு வேந்தன். நெய்தலுக்கு வருணன். இவ்வாறுதான் தொல்காப்பியம் கூறுகின்றது.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”
(தொல்காப்பியம் பொருளதிகாரம், அகத்திணையியல்: 5ஆம் நூற்பா (இல: 951)
பாலை நிலத்திற்குத் தெய்வம் இல்லை. ஏனெனில் பாலை என்பது தனியொரு வகை நிலம் அல்ல. எனவே, எந்த நிலம் பாலை நிலமாகியதோ அந்த நிலத்திற்கு உரிய தெய்வமே அந்தப் பாலை நிலத்திற்கும் தெய்வமாகும்.
ஆயினும், பாலை நிலமக்கள் நடுகற்களை வழிபட்பார்கள் என்பதற்கும், ஆட்டுக்குட்டியைப் பலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கும் சங்க இரக்கியங்களில் சான்றுகள் உள்ளன. ஆனால்
பிற்காலத்தில் பாலை நிலத்து மக்கள், கொற்றவை (காளி) யைத் தெய்வமாகக் கற்பித்து வழிபட்டனர். அது வழக்கமாகத் தொடர்ந்து, இலக்கியங்களில் இடம்பெற்று, வரலாறாக நிலைத்து விட்டது.
பாலை நிலத்தில் வாழும் மக்கள் மறவர் என்றும் எயினர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் வலிமைமிக்க உடலும், அச்சமற்ற உள்ளமும் கொண்டவர்களாக இருந்தார்கள். வேட்டையாடுதலையும், வழிப்பறி செய்தலையும் தொழிலாகக் கொண்ட பாலை நில மக்கள் தமக்கு உதவியாக நாய்களை வளர்த்தார்கள்.
(தொடரும்)
சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.