கதைகள்

நவீன வேதாளம்!….. சங்கர சுப்பிரமணியன்.

மதுரையில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் பரமசிவன் சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். நான்கு பிள்ளைகள் இருந்தும் நல்ல சிவபக்தரான அவருக்கு கடைசி காலத்தில் காப்பகம்தான் சரணாலயம் ஆனது. மகள் உள்நாட்டிலும் மூன்று மகன்களும் வெளிநாட்டிலும் இருப்பதால் காப்பகத்தை சரண் அடைந்தார். சரி, மகன்கள்தான் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் மகள் உள்நாட்டில்தானே இருக்கிறாள் மகள் வீட்டில் இருக்கலாமே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.ஆனால் உங்களுக்கும் எனக்கும் புரிந்ததுஅவருக்கும் அவரது மகன்களுக்கும் தெரியாதா என்ன? எல்லாம் புரியும், மகள் வீட்டில் இருந்தால் கௌரவக் குறைவாம். அதுவே முதியோர் இல்லத்தில் இருந்தால் கௌரவமாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நியாயம். அவர் நன்றாக வாழ்ந்து அனுபவித்தவர். அதனால் எழுபது வயதைத் தாண்டிய அவருக்கு எதிலும் விருப்பமில்லை.உயர்தர காப்பகம் என்பதால் அங்கு உணவும் உயர்தரம் தான். சைவ மற்றும் அசைவ உணவுகளை வகைவகையாக கொடுப்பார்கள்.பரமசிவம் அசைவ உணவு உண்பவர் என்றாலும் அசைவம் வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டார். சைவ உணவையும் எளிமையான உணவாகவே உண்டார். பொதுவாக தயிர்சாதம் ரசம் சாதம் போன்ற உணவுகளையே உண்டார். இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு எளிய உணவைக் கொடுப்பது காப்பக உரிமையாளரின் மனசாட்சியை உறுத்த,“ஐயா எளிய உணவைக் கொடுப்பதால் பணம் குறைவாக வசூலிக்க முடியாது. அதிகபணம் வாங்கிக் கொண்டு எளிமையான உணவைக் கொடுப்பதால் எனக்கு நரகம்தான் கிடைக்கும்” என்றார் காப்பகத்தார்.“அப்படியொன்றும் நடக்காது. நீங்கள் அப்படி கொடுக்கவில்லையே, நான்தானே கேட்டுவாங்கி சாப்பிடுகிறேன்” என்றார் பரமசிவன்.ஒருதடவை அல்ல பலதடவை காப்பகத்தார் வற்புறுத்தியும் அவர் மறுக்க பலதடவை எனக்கு நரகம்தான் கிடைக்கும் என்றார். அதை இட்சிணி தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்ல அதுவே சித்திரகுப்தர் கணக்கு புத்தகத்திலும் பதிவாகிவிட்டது. அந்த காப்பகத்தாரும் சில ஆண்டுகளில் இறக்கிறார். இறந்தவர் நரகம் செல்கிறார். வந்த இடம் நரகம் என்று தெரிந்ததும் போர்க்கொடி தூக்கி போராடினார். இச்செய்தி எமராஜா காதுக்கு எட்ட அவர் காப்பகத்தாரை அழைத்து,“என்னய்யா இது? நரகத்துக்கு வந்தும் போராட்டமா?” என்றார்.“எமராஜா! பூமியில்தான் கணக்கு வழக்கில் ஊழல் என்றால் சரியாக கணக்கு எழுதும் சித்திரகுப்பனிடம்கூட இந்த அநீதியா?”“அப்படி என்ன குறைகண்டாய்?”“மறந்தும் ஒரு தவறும் செய்யாத எனக்கு நரகமா? வேண்டுமானால் என் கணக்கை மறு பரிசீலனை பண்ணுங்கள்” என்று வேண்டினார் காப்பகத்தார்.அவசரமாக ஒரு கமிட்டி சித்திரகுப்தன் கமிட்டி என்ற பெயரில்  ஏற்பாடு செய்யப்பட்டு இட்சிணி தேவதையின் தலையீடு கண்டு பிடிக்கப்பட்டது. உடனே எமராஜா நடந்த குழப்பத்தை சிவபெருமான் கவனத்துக்கு எடுத்துச்செல்ல சிவபெருமான் குறிப்பிட்ட இட்சிணி தேவதையை அழைத்துக் கண்டித்தார். உனக்கு கொடுத்த சலுகையை கண்மூடித்தனமாக பயன்படுத்த கூடாதெனக்கூறி எத்தனை நாள் காப்பகத்தார் நரகத்தில் இருந்தாரோ அத்தனை நாள் நீ நரகத்தில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கினார்.இட்சிணி தேவதை சரி பிரபு என்றது. உடனே சிவபெருமான் சரி நீ போகலாம் என்றவர் சித்திரகுப்தனை அழைத்து யார் என்ன சொன்னாலும் சரிபார்க்காமல் கணக்கு எழுதிவிடுவாயா? உன் தவறை உணர திருக்குறளில் “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்” என்ற குறளை ஆயிரம் தடவை எழதிக்கொண்டு வா என கட்டளையிட்டார்.இதனைத் தொடரந்து காப்பகத்தார் சொர்க்கம் செல்ல அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அவரைப்பற்றிய செய்தி சொர்க்கத்தில் பரவிவிட பூமியிலிருந்து சொர்க்கம் சென்றவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நரகம் எப்படி இருந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.அதற்கு காப்பகத்தார் நான் நரகத்தின் வாசலில் தான் நின்றிருந்தேன். அதற்குள் போராடி இங்கு வந்துவிட்டேன். உள்ளே போயிருந்தால் சங்கர் படத்தில் வந்ததுபோல் இருந்ததா என அறித்திருப்பேன் என்றார். அப்பதிலைக் கேட்டு சொர்க்கம் வந்தும் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையில் மற்றவர்கள் விரக்தியடைந்தனர். என்று வேதாளம் கதையைச் சொல்லி விக்ரமாதித்தனிடம் பதிலைக் கேட்டது.அதற்கு பதில் சொன்ன விக்ரமாதித்தன்இந்த இட்சினி தேவதை எதற்கு? பூமியில் மக்கள் என்ன சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என சொல்லலாமா? சித்திர குப்தனும் கண்ணைமூடிக்கொண்டு இட்சிணி தேவதை சொல்வதை எல்லாம் எடுத்துக்கொண்டு கணக்கு எழுதலாமா? இதையெல்லாம் கண்காணிக்க ஒருவரை பணியில் அமர்த்தக் கூடாதா? போனது போகட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாக மொத்தத்தில் சிஸ்டம் சரியில்லை ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று பதில் சொல்ல போதும்டா சாமி என்று பறந்து போய் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.