கட்டுரைகள்

வாக்குமூலம்!…. ( பகுதி 05 ) …. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

02.11.2021 அன்று யாழ்ப்பாணத்தில் ‘ரெலோ’வின் ஏற்பாட்டில் தொடக்கி வைக்கப்பட்ட ‘இந்தியப் பிரதமருக்குத் தமிழர் தரப்பு கடிதம் அனுப்பும் விவகாரம்’ வழமையாகத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே நடைபெறும்- குளறுபடிகள்- குத்து வெட்டுகள்- சேறடிப்புகள்- விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழரசுக்கட்சியின் கைக்கு மாறிஇறுதியாக ‘மலையைக் கல்லி எலியைப்  பிடித்தது போல’ 18-01-2022 அன்று  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சென்ற- மாவை சேனாதிராசா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்) மற்றும் எம்.ஏ.சுமந்திரன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்), குருசாமி சுரேந்திரன் (ரெலோவின் ஊடகப் பேச்சாளர்) அடங்கிய குழுவினரால் -இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் ஆவணமொன்று கையளிக்கப்பட்டு ஒருவாறு ஒப்பேறியிருக்கிறது.

தமிழ் ஊடகங்களால் ‘உருப்பெருக்கி’க் காட்டப்பெற்ற அளவுக்கு விடயம் பிரமாதமானதல்ல. இதில் சம்பந்தப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள்(?) தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தந்திரோபாயமானதொரு தேர்தல் ‘துருப்புச்சீட்டு’த்தான் இது.

1987 ஜூலை 27 அன்றுக் கொழும்பில் வைத்து முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்தான ‘இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம்’ சர்வதேச சட்ட வலிமை கொண்டது. அவ்வொப்பந்தம் இலங்கை அரசாங்கங்களால் அரசியல் விருப்பத்துடன் அர்த்தமுள்ள விதத்தில் முழுமையாக இன்றுவரை அமுல் செய்யப்படவில்லையென்பது வேறு விடயம். இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல்செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான தார்மீகப்பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

ஆனால், இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமைக்கு இலங்கை அரசாங்கங்களையும் இந்தியாவையும் முழுமையாகக் குற்றஞ்சாட்டவும் முடியாது.

இப்போது தமிழர் தரப்பினால் (தமிழரசுக் கட்சியினால்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கப்படுவதற்காக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதம்-ஆவணம் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாகக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அல்லது அதனை ஓரங்கட்டிவிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அலகொன்றினையே கோரி நிற்கிறது. இக்கோரிக்கை நியாயமானதாகக் கூட இருக்கலாம். தமிழர் தரப்பைப் பொறுத்தவரை படிப்பதற்கும் கேட்பதற்கும் மகிழ்ச்சியாகவிருக்கிறது. ஆனால் நடைமுறை அரசியல் யதார்த்தத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில் காலவரையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாண அதிகாரப் பகிர்வு அலகிற்கான அடிப்படையை இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் வழங்கியிருந்தது. ‘சமஸ்டி’ என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லாவிட்டாலும்கூட அதுசமஸ்டிக் குணாம்சங்களை- கூறுகளைக் கொண்டிருந்ததாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்கூட ‘சமஸ்டி’ என்கின்ற சொற்பிரயோகம் இல்லை. ஆனால் அது ‘சமஸ்டி’க் குணாம்சங்களைக் கொண்டதாகும். பாத்திரமொன்றின் தோற்றத்தை விட- அதன் அழகை விட அப்பாத்திரத்தினுள் அடங்கியுள்ள உள்ளீடுதான் முக்கியமானது.

ஆனால் தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுத்து, இவ்வொப்பந்தத்தைக் கசப்பாக ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நின்று, இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராகவும்-இவ்வொப்பந்தத்தை அமுல் செய்ய வந்த இந்திய அமைதிகாக்கும் படையை (I.P.K.F.- INDIAN PEACE KEEPING FORCE) எதிர்த்தும்-இந்தியா இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் 1988இல் நிறுவப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்தமாகாண அரசை- அதிகாரப் பகிர்வு அலகை எதிர்த்தும் யுத்தம் புரிந்துவிட்டு (இந்த வரலாற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை) எல்லாம் ஆடி- அடங்கிய பின் இப்போது ‘நல்ல பிள்ளை’யாகி இந்தியாவிடம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்திற்குமப்பால் சென்று தீர்வை நாடுவது- கோருவது அரசியல் ரீதியாக அறிவுபூர்வமானதல்ல என்பது மட்டுமல்ல அது நகைப்புக்கிடமானதுமாகும்.

புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிய ‘ரெலோ’வுக்கு அதற்கான தார்மீகப் பலம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அப்பால், பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக அமுல் நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்குமொரு முயற்சியாக ‘ரெலோ’ ஆரம்பித்த இந்த விடயம் அரசியல் ரீதியாகச் சரியானதாகும். ஆனால் தமிழரசுக் கட்சி அதனைத் திசைதிருப்பிக் குழப்பிவிட்டது.

‘பதின்மூன்றுக்கு அப்பால்’ என்ற விடயம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு விடயத்தில் இந்தியாவை மறைமுகமாக அப்பால் போகச் செய்கின்ற விளைவைத்தரக்கூடியது. இது தமிழர் தரப்புக்கு ஆபத்தானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) அதனோடு இணைந்த ஏனைய தமிழ்த் தேசியக்கட்சிகளும் (?) தற்போது எடுத்துள்ள ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு அப்பால்’ என்ற நிலைப்பாடு தமிழர்களுடைய பிரச்சினைகளிலிருந்து இந்தியாவைத் தள்ளிவைப்பதற்குச் சமமாகும்.

இலங்கை அரசாங்கங்கள் (அது எந்தக் கட்சி அரசாங்கமாகவிருந்தாலும் சரி) பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தைத்தானும் முழுமையாகஅமுல் செய்வதை இன்றுவரை இழுத்தடிப்புச்செய்யும் நிலையில்- அதற்கு எதிர்மறையாகக்கூட இயங்கும் நிலையில், பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு அப்பால் சென்று இந்தியா ஒரு நிலைப்பாட்டையெடுக்குமென எண்ணுவதும் எதிர்பார்ப்பதும் அரசியல் மதியீனமாகும்.

மேலும், தந்தை செல்வாவின் அகிம்சை வழிவந்த கட்சியெனத் தம்மை வெளிப்படுத்தும் தமிழரசுக்கட்சி (அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணி இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) புலிகள் இந்தியாவை எதிர்த்துப் போரிட்ட காலத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு இப்போது இந்தியாவை அழைப்பதில் நேர்மையுமில்லை; அதற்கான நியாயமுமில்லை.

எப்போது இலங்கைத் தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கத்திற்கெதிராக (இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன்) யுத்தம் புரியத்தொடங்கியதோ- அதுபோல் எப்போது இலங்கைத் தமிழர் தரப்பு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் அப்பால்’ என்ற நிலைப்பாட்டை எடுத்ததோ அன்றிலிருந்தே இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தத்தில் தளர்வு ஏற்படத் தொடங்கிற்று.

மட்டுமல்ல இந்தியப் பிரதமருக்கு முகவரியிடப்பட்ட கடிதம் அவருக்கு முறையாக அனுப்பப்பெற்றுச் சேருமுன்னரே அது இலங்கையிலுள்ள சில மேற்குலக நாடுகளின் தூதரகங்களுக்கும் சில ஊடகங்களுக்கும் கசிந்துள்ளமை எதிர்மறை விளைவுகளையே தரக்கூடியது. தமிழரசுக்கட்சியின் ஆளுமையும்-நிர்வாகக் கட்டமைப்புத்திறனும்- இராஜதந்திர அறிவும் இவ்விடயத்தில் வெளிபடவில்லை. இது வெறுமனே ‘ஏட்டுச் சுரைக்காய்’தான்.

மொத்தத்தில் இன்றுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் (எனக் குறிசுடப்பட்டுள்ள)யாவும் கையாலாகாத்தனமுடையனவே. இவை காலாவதியாகிவிட்டன. இவற்றின் செயற்பாடுகள் எதுவுமே தமிழர்களுக்கு  எதிர்காலத்தில் எந்த நன்மைகளையும் கொண்டுவரப் போவதில்லை. இப்போது இந்திய தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தினாலும்- ஆவணத்தினாலும் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

எனவே. இலங்கைத் தமிழர்கள் இதற்கு மாற்று வழியாகக் கடந்த வருடம் 09.04.2021 அன்றுகொழும்பில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில், அகில இலங்கை தமிழர் மகாசபை, தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கூடி உருவாக்கியுள்ள ‘அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தை’த் தமிழ் மக்களின் அங்கீகரிக்கப் பெற்றதோர் அமைப்பாகக் கட்டியெழுப்பத் தமிழ் மக்கள் சங்கற்பம் கொள்ளவேண்டும். இத்தகையதொரு அமைப்பையே இந்திய அரசாங்கங்களும்- இலங்கை அரசாங்கங்களும்- சிங்களச் சிவில் சமூகமும்-சர்வதேச சமூகமும் நம்பி ஏற்றுக் கொள்ளும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.