கதைகள்

நடுகைக்காரி!…. 32 …. ( நாவல் ) …… ஏலையா க.முருகதாசன்.

கொண்டக்கரர் மணியத்தைக் கண்டதும் ஞானத்தின் முகம் மாற கொண்டக்ரர் மணியத்தையே பார்த்தபடி அவரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஞானத்தின் முகத்தில் தெரிந்த கோபத்தையும் வெறுப்பையும் கண்டவன் அதைக் கவனிக்காதது போல விலகிச் செல்ல முயற்சிக்கையில்’ அண்ணை நில்லுங்கோ உங்களோடை கொஞ்சும் கதைக்க வேணும் „ என்று சொல்லிக் கொண்டே அவனருகில் செல்கிறான்.

இன்று முழுக்க ஞானம் அடக்கி வைச்சிருந்த கோபம் வெளிக் கிளம்ப’ அண்ணை யாழ்ப்பாணம் பஸ்ஸ்ராண்டிலை நீங்கள் கதைச்ச கதைக்கு அங்கையே நான் காரமாய் பதில் சொல்லியிருப்பன்,ஆனால் அவைக்கு முன்னாலை உங்களை மரியாதை கெடுத்தக்கூடாது என்றுதான் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தனான் அவையைப் பார்த்து சினி மணக்கிறவை என்று வாய்கூசாமல் சொல்றியளே, அங்கை வைச்சுச் சொன்னதைத்தான் இங்கையும் சொல்றன் நீங்களும் இரண்டு நாளைக்கு குளிக்காமல் இருந்தால் உங்களிலும் சினி மணக்கும்,அவை மாதிரி ஆட்களை ஏமாத்தி அதுகளின்ரை காணியை வாங்கி குடியிருந்து கொண்டு என்னவெல்லாம் கதைக்கிறியள்’ என்ற ஞானத்தின் கோபமான பதிலைக் கேட்ட கொண்டக்ரர் மணியம்,’ஓகோ இப்ப அந்தப் பெட்டையின்ரை உருசியிலை உன்ரை சொந்தக்காரன் என்னையே எதிர்த்துப் பேசத் தொடங்கிட்டியோ, நீ முந்தின ஞானம் இல்லை அவளவை மருந்து போட்டிட்டாளவை, இனி அவள் உன்னை மயக்கி …காட்டி வயித்திலை வாங்குவள் அதை வைச்சே உன்னைக் கட்டுவாள் எங்கடை ஆட்களுக்கு அவமானத்தை தேடித்தராமல் விடமாட்டாய் போல’ என்று கொண்டக்ரர் மணியமும் கோபத்தில் சொல்ல, மணியம் சொன்ன …. அதைக் காட்டி என்ற சொல் ஞானத்தை கோபத்தின் உச்சிக்கே கொண்டு போக’ அண்ணை இதுக்கு மேலை ஒரு வார்த்தையும் கதைக்கக் கூடாது, அதென்ன காட்டி… இனிக் கதைச்சியள் என்றால் வீண் பிரச்சினை வரும், வயதுக்கு மூத்தவர் என்றதாலை பேசாமல் இருக்கிறன்’ என்றவனுக்கு’ இல்லாட்டி என்னடா செய்வாய், நாங்கள் வெளிக்கிட்டம் என்றால் அவையின்ரை வீடுகளை கொழுத்தி இரத்தக் களரி ஏற்படுத்துவம் „ என்று கொண்டக்ரர் மணியம் குரலை உயர்த்திச் சொல்ல,ஞானமும் கொண்டக்ரர் மணியமும் சண்டை பிடிக்கப் போகிறார்கள் என்பதைக் கவனிச்ச கடைக்கார சிவானந்தமும் கடையிலை நின்றவர்களும் ஓடி வந்து,இணர்டு பேரும் பேசாமல் இருங்கள், ஞானம் நீ வீட்டை போ, மணியம் நீங்களும் போங்கள் ஒன்றுக்குள்ளை ஒன்று கொழுவிக் கொண்டு நிக்கிறியள்’ என்று சொல்லி

ஞானத்தையும் கொண்டக்ரர் மணியத்தையும் சிவானந்தம் அனுப்பி வைச்சுவிட்டு கடையடிக்குத் திரும்புகிறார்.

கடையடியில் நின்ற இருவரில் ஒருவர் சிவானந்தத்திடம்’ சுப்பையற்றை கடைசிக்கும் மணியத்துக்கும் என்ன பிரச்சினை „ என்று கேட்க,சிவானந்தம் „ ஒரு புதுப் பெட்டை ஒண்டு இப்ப அம்பனைத் தோட்ட வேலைக்கு வந்து போய்க்

கொண்டிருக்கு பார்க்க வடிவான பெட்டைதான் அந்தப் பெட்டைக்கும் ஞானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுப் போச்சு, நான் நினைக்கிறன் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினம் போல…..’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ ஏதோ பொடியன் அதுக்கு ஆசைப்படுகிறானாக்கும், அவனுக்கும் முறுக்கேறிக் கொண்டிருக்கிற வயசுதானே, சேறு கண்ட இடத்திலை விளக்கி தண்ணி கண்ட இடத்திலை கழுவப் போறானாக்கும் கழுவட்டுமே„ என்று குதர்க்கமான சிரிப்புடன் அவர் சொல்ல’ ச்சாச்சாய் ஞானத்தை அப்படிச் சொல்ல முடியாது அவன் நேர்மையான பொடியன்,அவன் நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறவன்,தத்துவப் புத்தகங்கள் ஒன்றும் விடாமல் வாசிக்கிறவன், எங்களாலை உருட்டிப் பிரட்டிப் பதில் சொல்ல முடியாதளவிற்கு கேள்விகள் கேட்கிறவன்….’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் „ அப்ப ஞானம் என்ன அந்தப் பெட்டையைச் செய்யப் போறானாமே „ என்று பொறுக்க முடியாத ஆவலில் கேட்க,’ நான் அறிஞ்சவரைக்கும் ஞானம் அந்தப் பெட்டையைத்தான் செய்வான் போல, என்னமோ இது பெரிய அடிபாட்டிலைதான் போய் முடியும் „ என்று சொல்லி முடிக்கிறார்.

சிவானந்தத்திடம் கதை கேட்டவர் சாதாரண ஆள் இல்லை.அவை சொல்ற கதையை இவைக்கும் இவை சொல்ற கதையை அவைக்கும் சொல்றதிலை விண்ணாதி விண்ணண்.

அவருக்கு றேடியோ சிலோன் என்ற காரணப் பெயரும் உண்டு.புதினத்துக்குரியவர்களின் சொந்தக்காரர் பக்கத்து ஊரிலை இருந்தார்களென்றால்கூட அந்தந்த ஊர்களுக்கு ஏதோ அலுவலாக வந்ததாகவும், வந்த இடத்தில் சும்மா உங்களையும் பார்த்திட்டுப் போக வந்தனான் என்று சொல்லி சொந்தங்களுக்குள் பிரச்சினையை உருவாக்குவதில் றேடியோ சிலோன் நாரதரின் நேரடி வாரிசு.

கொண்டக்ரர் மணியத்தோடு சண்டை பிடிச்ச கோபம் ஞானத்திடம் அப்பிடியே தணியாமல் இருந்தது.

வீட்டுக்குப் போனவன் தகப்பனும் தாயாரும் விறாந்தையிலிருந்து கதைச்சுக் கொண்டிருந்ததைக் கண்டதும் தனது முகத்திலிருக்கும் மாற்றத்தை காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக,தலையைக் குனிந்தவாறே,’ அம்மா கொஞ்சக் கதைப் புத்தகங்கள் வாங்கினான், நல்ல கதையள் இருக்கு அப்பாவும் நீங்களும் வாசியுங்கள் „என்று சொல்லிக் குடுக்கிறான்.

புத்தகங்களை வாங்கிக் கொண்டே „ ஞானம் எத்தனை மணிக்குச் சாப்பிடப் போகிறாய், சொன்னால் அதற்குத்தக்கதாக புட்டவிக்கலாம்’ என்று கேட்க, „ படம் பார்த்த பிறகு ஒரே தலையிடியாய் இருக்குதம்மா, முகத்தைக் கழுவிக் கும்பிட்டிட்டு கொஞ்ச நேரம் படுக்கப் போறன்,எட்டு மணிக்கு நான் சாப்பிடுறன்,நீங்கள் அவிச்சு வையுங்கள் நான் எழும்பிச் சாப்பிடுறன், அப்பாவும் நீங்களும் நான் சாப்பிடும் வரை காத்திருக்காமல் சாப்பிடுங்கோ’ என்று சொல்லிக் கொண்டே அறைக்குள்

போனவன் லோங்சையும் சேர்ட்டையும் கழற்றி வைச்சுவிட்டு சாரத்துடன் கிணத்தடியை நோக்கிப் போகிறான்.

முகத்தைக் கழுவினால் போதும் என்று போனவன் வியர்வையால் உடம்பும் கமக்கட்டும் மணக்கவே குளிக்கத் தொடங்கினான்.

ஞானம் குளிக்கும் சத்ததைக் கேட்ட தகப்பன் „ செல்வம் ஒரு நாளைக்கு எத்தனைதரந்தான் குளிப்பான், நெடுகக் குளிக்கிறதும் உடம்புக்குக்கூடாது’ என்று தகப்பன் சொல்ல,’ படத்துக்குப் போனவன் யாழ்ப்பாணத்திலை அங்கை இங்கை அலைஞ்சிருப்பான் அதுதான் குளிக்கிறான் போலை, அவன்ரை குணம் தெரியுந்தானே, உடம்பு வியர்;த்தால், கமக்கட்டு மணந்தாலே போய்க் கழுவுறவன் இல்லாட்டிக் குளிப்பான் வாய் மசமசக்குது என்று சொல்லி வேப்பங்குச்சி இல்லாட்டி பூவரசம் குஞ்சியாவது முறிச்சு கண்ட நேரமெல்லாம் பல்லு மினுக்கிறவன், சரியாய் இவன் என்ரை அப்பு மாதிரி,அப்புவும் இரவிலை மழைபெய்தாலும்கூட மழை பெய்யப் பெய்யக் குளிக்கிறவர்,அம்மா சொல்லுவா கொப்பரைத் திருத்தேலாது என்று, அப்பு இரவிலை படுக்கப் போகேக்கை வேப்பங்குச்சியாலை பல்லு மினுக்காமல் படுக்க மாட்டாரே,சரி நான் அடுப்படி அலுவலைப் பார்க்கிறன் என்று அடுப்படியடிக்குப் ஞானத்தின் தாய் போக’ உங்களுக்கு உங்கடை அப்புவைப் பற்றி ஒரு நாளைக்கு ஒருதரமாவது சொல்லாட்டில் பொச்சம் அடங்காது „ என்று ஞானம் வேண்டுமென்றே மனைவியைக் கோபப்பட வைச்சுப் பார்க்க வேண்டும் என்று சிரிச்சுக் கொண்டே சொல்ல, „ உங்களுக்கு எங்கடை சொந்த பந்தங்களைச் சொன்னால் பொறுக்கேலாதே, எரிச்சல் பிடிச்ச மனுசன் என்று செல்லக் கோபத்துடன் சொல்லிக் கொண்டு போனவள் , போன வேகத்திலேயே இந்தாங்க இதைக் கெதியிலை குடிச்சு முடியுங்கோ,ஞானம் குளிச்சிட்டுவர அரை மணித்தியாலமாவது செல்லும் அவன் வரமுந்தி குடியுங்கோ’என்று சொல்லிக் கொண்டு சாக்குப் பைக்குள் போத்தலில் இருக்கும் கள்ளையும் ஒரு கோப்பையையும் கொண்டு வந்து வைக்கிறாள்.

தான் இடைக்கிடை உடம்பு சுகத்துக்கு கள்ளுக் குடிக்கிறது ஞானத்துக்கு தெரியுமென்றாலும் பிள்ளையளுக்கு முன்னால் குடிப்பது மரியாதையாக இருக்காது என்பதை ஞானத்தின் தந்தை உணர்ந்தவர் என்பதால், மடக்கு மடக்கு என்று குடித்தவர் போத்தலையும் கேப்பையையும் சாக்குப் பையையும் கொண்டு போய் அடுப்படிக்குள் வைச்சுவிட்டு விறாந்தையிலிருந்து ஞானம் கொண்டு வந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார்.

குளிச்சுவிட்டு வந்த ஞானம், தகப்பன் கள்ளுக்குடித்திருக்கிறார் என்பதை மெலிதாக வந்த கள்ளு வாடையிலிருந்து தெரிந்து கொண்ட போதும் எதுவுமே பேசாது அறைக்குள் போய் படுக்கிறான்.

அவனால் நித்திரை கொள்ள முடியவில்லை.படம் பார்த்த சந்தோசத்தையும் புத்தகங்கள் வாங்கின சந்தோசத்தையும் அவனால் அனுபவிக்க முடியவில்லை.

கொண்டக்ரர் மணியம் யாழ்ப்பாணம் பஸ்ஸ்ராண்டில் வைச்சு தனத்தை, பூரணியை, பாறுவைக் கேவலமாக கதைச்சதையும் சிவானந்தம் கடையடியில் வைச்சுக் கதைச்சதையும் நினைச்சு நினைச்சு பொருமிக் கொண்டிருந்தவனின் மனதில் பாறு மனைவியாக உட்கார்ந்து கொண்டதை உணர்ந்தான்.உலகமே எதிர்த்தாலும் பாறுதான் என்னுடைய மனைவி என திடமாக முடிவெடுத்தான்.

ஏவ்வளவு நேரம் நித்திரை கொண்டானோ தெரியாது,ஞானத்தின் தாய் அவனுடைய முதுகில் தட்டி „எழும்பு ஞானம் எட்டு மணியாச்சு, கொப்பாவும் சாப்பிடாமல் உனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் „ என்று சொல்ல எழுந்தவன் தாயாருடன் அடுப்படிக்குப் போக தகப்பனும் விறாந்தையைவிட்டு எழுந்து அடுப்படிக்குள் வருகிறார்.

தாய் தகப்பன் ஞானம் என மூவரும் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தகப்பன்’ எப்படிப் படம் எந்தத் தியேட்டரில் பார்த்தனி’ என்று கேட்க, „பரவாயில்லையப்பா வின்ஸரிலை பார்த்தனான்,வின்ஸர் புதுசா நல்லாய் காற்றோட்டமாய் கட்டியிருக்கினம் „ என்று சொன்னவன் ,’அம்மா குழல் புட்டுக்கு விளைமீன் குழம்பும்,சின்ன வெங்காயமும் சின்னட்டி இறால்களும் போட்டுப் பொரிச்சதும் நல்லாயிருக்கம்மா’ என்றவன்,தன்னோடு ஒரு சினேகிதன் போல பேசிப் பழகும் அப்பாவுக்கும், பார்த்துப் பார்த்து உருசியாக சமைச்சுக் குடுத்தும் ,தன்னிடம் ஆயிரம் பிழையிருந்தாலும் எவருக்கும் விட்டுக் குடுக்காமல் ராங்கியாக கதைக்கும் அம்மாவுக்கும் எப்படி பாறுவைக் காதலிப்பதையும் அவளைத்தான் கல்யாணம் செய்யப் போகிறன் என்பதையும் சொல்லப் போகிறன் „எனக் கலங்கியவன் தனது கண்கள் கலங்குவதைக் கவனித்து மெதுவாக கையால் துடைதச்சபடியே தலையைக் குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தாயையும் தகப்பனையும் நிமிர்ந்து பார்க்க தைரியமற்றவனாக சாப்பிட்டக் கொண்டிருந்தவன்’ என்னதான் அப்பாவும் அம்மாவும் சாதி பார்க்காத முற்போக்கனாவர்களாக இருந்தாலும்,பாறுவைக் கட்ட விடுவார்களோ …..என அவனுக்குள் பல எண்ணங்கள் வந்து போய்க் கொண்டிருக்க,’ திங்கட்கிழமை உனக்கு தெல்லிப்பழை யூனியனிலை இன்ரர்வியூ இருக்குதல்ல, போறாய்தானே’ எனத் தகப்பன் கேட்க,போறனப்பா „ என்று ஞானம் பதில் சொல்ல’ அட்வான்ஸ் லெவலிலை இவ்வளவு மாக்ஸ் எடுத்து யூனிவேர்சிட்டிக்கு போற சான்ஸ் கிடைச்சும் போகமாட்டன் என்று அடம்பிடிச்சுக் கொண்டு நிக்கிறாய்’ என்று தாய் கவலைப்பட,’இப்ப எதுக்கு அதைக் கதைக்கிறியள்,சிலநேரம் பெண்சாதி வந்ததுக்குப் பிறகுகூட அவளின் சப்போர்ட்டோடைகூட அவன் போகலாந்தானே’ எனத் தகப்பன் யதார்த்தமாகச் சொல்ல தகப்பனை நிமிர்ந்து ஒருமுறை பார்த்தவனின் மனதில் பாறு வந்து போகிறாள்.

„ அது சரி நீ தனியாகவே படம் பார்க்கப் போனனி’ என்று தாயார் கேட்க அவனுக்கு திக்கென்றது,அதைக் காட்டிக் கொள்ளாமல் „சண்முகராஜாவும் இளங்கோவனும் என்னோடை வாறன் எண்டவை பிறகு ஏனோ தெரியாது வராமல் விட்டிட்டினம்’

என்று முழப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல தலையைக் குனிஞ்சு கொண்டே பொய் சொன்னான்.

மூவரும் சாப்பிட்டு முடிஞ்சதும் ஞானம் நித்திரை கொள்ளப் போக,தாயும் தகப்பனும் வெற்றிலை பாக்கைச் சப்பியபடி விறாந்தையில் உட்கார்ந்து ஞானம் கொண்டு வந்து குடுத்திருந்த கதைப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர்.

„மெய்யேப்பா இப்ப கொஞ்சநாளா ஞானம் எங்களோடை நிமிர்ந்து கதைக்கிறான் இல்லை, இவனுக்குள்ளை ஏதோ மாற்றம் நடக்குதப்பா’ என்று சொல்ல’ இளந்தாரி வயசிலை அப்பிடி இப்பிடித்தானிருப்பினம் அதைவிடு „ எனத் தகப்பன் சொல்வதும் ஞானத்தின் காதில் கேட்கிறது.

நடுகைக்காரி பாறுவிடம் ஞானத்திற்கு ஒரு விருப்பம் இருப்பதை தாயும் தகப்பனும் அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்தார்கள்.ஆனால் அதைப்பற்றி எதுவும் ஞானத்திடம் கேட்கவில்லை. பாறுவுக்கு ரியூசன் சொல்லிக் குடுக்கப் போவதை பலமுறை ஞானம் தாயும் தகப்பனுக்கும் சொல்லியிருந்தான்.அதையும் தாயும் தகப்பனும் நினைச்சுக் கொண்டனர்.

அடுத்த நாள் காலமை பத்து மணிபோல சீனியம்மான் கடையிலை நன்னாரித் தேத்தண்ணி குடிக்கவென்று போய்க் கொண்டிருந்தவன் இண்டைக்கு பாறுவை பொம்பிளை பார்க்க வாறணெண்டு பாறு கவலையுடன் சொன்னவள்.அதாலை அவளையும் பார்க்கப் போக முடியாது என்றெண்ணிக் கொண்டு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவனை „ ஞானம் இங்கை ஒருக்கா வந்திட்டுப் போ’ என்று குரல் வர சைக்கிளை நிற்பாட்டித் திரும்பிப் பார்க்க,தம்பிராசா தனது வீட்டுக் கேற்றடியில் நின்று கைகாட்டிக் கொண்டிருந்தார்.

சைக்கிளைத் திருப்பி தம்பிராசாவின் கேற்றடிக்குப் போக,கேற்று மதிலோடு கொண்டக்ரர் மணியம் நிற்பதைக் காண்கிறான்.

கேற்றடிக்கு வந்த ஞானத்தை „வா உள்ளை உன்னோடை கொஞ்சம் கதைக்க வேணும் „ என்று சொல்லிக் கொண்டே தம்பிராசா போக ஞானம் சைக்கிளை உருட்டியபடி அவரின் பின்னால் போக, கனநாளைக்குப் பிறகு அப்பதான் ஞானத்தைப் பார்ப்பதுபோல கொண்டக்ரர் மணியம் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.