இலக்கியச்சோலை

2021.01.25 காலமான பன்னூலாசிரியர், எழுத்தாளர், சிரேஷ்ட ஊடக ஆளுமை சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எம். நூருல் ஹக். அவர்களின் மறைவின் ஓராண்டையொட்டி தரும் சிறப்பு தொகுப்பு!

வித்தகர் நூருல் ஹக்” :

இலக்கிய உலகின் முக்கிய விதைகளில் ஒன்றாகிப்போனவர் !

எழுத்தாளன் மரணிக்கிறான். எழுத்துக்கள் மரணிக்க தவறிவிடுகிறது. ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு தவறி விழுந்த பொழுதுகளிலெல்லாம் எழுத்தாளர்கள் தனது ஆளுமைகளினால் அந்த சமூகத்தை அல்லது அந்த நாட்டை மீளெழ செய்துள்ளனர் என்பது வரலாறு. ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஜனநாயக தூண்களில் முக்கிய தூண்களிலொன்றான ஊடகத்தின் பங்கு யாராலும் தவிர்க்கமுடியாது. தேசிய ரீதியாக அதிர்வலைகளை உண்டாக்கிய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பலர் இருக்கிறார். அப்படியான ஒருவர்தான் இன்றைக்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் எம்மை விட்டு பிரிந்த பன்னூலாசிரியர், எழுத்தாளர், சிரேஷ்ட ஊடக ஆளுமை சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எம். நூருல் ஹக்.

உலகுக்கு இருந்த சோகத்தின் அலையில் ஒரு துளியளவிலாவது சாய்ந்தமருதுக்கு கடந்த வருடம் சோகமான வருடமாகவே கடந்து போனது. உமர் முக்தார் என மக்களினால் கொண்டாடப்பட்ட ஊர் தலைமை வை.எம். ஹனீபா முதல் சர்வதேச அளவில் புகழ்பூத்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகர்கள் என பலரை சாய்ந்தமருது கடந்த வருடத்தில் தொடர்ச்சியாக இழந்தது. அந்த வரிசையில் கலாபூஷணம் மருதூர் ஏ மஜீத், கலைமகள் ஹிதாயா, கவிஞர் ஏ. ஆதம்பாவா, வித்தகர் நூருல் ஹக் போன்ற முக்கிய இலக்கிய ஆளுமைகளும் கலை உலகிற்கு மட்டுமின்றி இந்த உலகிற்கும் விடைகொடுத்தனர். அதில் பன்னூலாசிரியர், எழுத்தாளர், சிரேஷ்ட ஊடக ஆளுமை சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எம். நூருல் ஹக் மரணித்து இன்றுடன் ஆண்டுகள் ஒன்று பூர்த்தியாகிறது.

“வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்புதல்” எனும் தலைப்பிட்டு கடந்த 07 01 2021 இல் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தம் பாய்ச்சப்பட்டு ஒரளவு நலத்துடன் 12 01 2021 இல் அல்லாஹ்வின் உதவியால் வீடு திரும்பினேன் அல்ஹம்துலில்லாஹ். என்று பதிவிட்டு எல்லோருக்கும் ஆறுதலளித்த நூருல் ஹக் 2021.01.25 அன்று காலமானார் எனும் செய்தி காட்டுத்தீயாய் பரவி இலக்கிய, ஊடக, எழுத்து துறையினரை மட்டுமின்றி அவரை பற்றியறிந்த பலருக்கும் மீளமுடியா துயரத்தை அந்த பின்னேரம் பரிசளித்திருந்தது. 1964.08.27 இல் பிறந்த அவர் மருதூர் மெய்யொளி, மிஹ்லார், செஞ்சுடர், இலக்கனி எனும் புனை பெயர்கள் கொண்டு கட்டுரை, கவிதை, நூல் விமர்சனம், ஆய்வு, பத்தி எழுத்து, வெளியீடு, நூலாக்கம் போன்றவற்றை செய்திருந்தார்.

மறைந்த நூருல் ஹக் உலகமே உன்னிப்பாக பார்த்திருந்த இலங்கை முஸ்லிம் அரசியலின் முக்கிய வகிபாகத்தை நிர்ணயித்துக்கொண்டிருந்த சாய்ந்தமருது நகரசபை போராட்டத்தின் நிழலை யார் துரோகிகள்..? என்ற தன்னுடைய புத்தகத்தின் வாயிலாக தோலுரித்து காட்டினார். முஸ்லீம் அரசியலின் இயலாமை, ஈமானிய பேரொளிகள், தீவும் தீர்வுகளும், சிறுபான்மையினர் சில அவதானங்கள், முஸ்லீம் பூர்வீகம் அரசியல், சமூக சிந்தனைத்துவமும், இருப்பும், வலிமார்களும், வஸீலா தேடல்களும், தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் என பல புத்தகங்களை மருதம் வெளியீட்டுப் பணியகம் மற்றும் மருதம் கலை இலக்கிய வட்டம் ஊடாக இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அவை வெறுமனே புத்தகங்களாக இல்லாமல் சாட்சியங்களாக இருப்பதே நூருல் ஹக்கை மரணித்தாலும் நினைவுகளில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஊடகத்துறைக்கும் பெரியளவிலான பங்களிப்புகளை செய்திருந்த நூருல் ஹக் அவர்கள் சோலை, அல்.ஹுதா, பார்வை, உதயம், சங்கமம், இடி, முஸ்லீம் குரல், எழுவான் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் ஆசிரியராக பணி புரிந்தும் இருக்கிறார்.

முக்கிய பல அமைப்புக்களின் கௌரவங்களையும், சிறப்பு விருதுகளையும் பெற்ற நூருல் ஹக் 1996 இல் அபாபீல்கள் வழங்கிய ‘ஹாதிபுல் ஹுதா’ சத்திய எழுத்தாளர் விருதை பெற்றதுடன் 2009 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் 2020 இல் வித்தகர் விருதையும் பெற்றுக்கொண்டார். இலக்கிய, ஊடகத்துறைக்காக எமது நாட்டின் சகல உயரிய விருதுகளையும் பெரும் தகுதியும், திறமையும் கொண்டவராக இருந்தவர் என்பதை அவரை அறிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். நூறுல்ஹக் பற்றிய அவரின் 25 வருட இலக்கிய வாழ்வை சிறப்பிக்கும் நூலக ஒளியின் சிறகுகள் அமைந்திருந்தது.

ஹனுப்பிட்டி கமர்ஜான் பீவியின் கணவரான நூருல் ஹக்; மிஷ்பாஹுல் ஹக், பாத்திமா பர்வின் ஆகிய இரு பிள்ளைகளின் தந்தையாக இருந்து மரணித்துள்ளார். இயல்விளையே தத்துணிவு கொண்ட இலக்கியவாதியாக மிளிர்ந்த மர்ஹூம் நூருல் ஹக் அவர்கள் இறுதிவரை தனது சகோதரி நயீமாவுக்கு குழந்தையாகவே இருந்து மறைந்தார் என்பதில் பல சுவாரஸ்யமான, மகிழ்வான கதைகள் இருக்கிறது. தன் சகோதரனை தனது குழந்தை போன்றே கவனித்து வந்த அவரது சகோதரியின் தியாகம் நூருல் ஹக் எனும் சாதனை மனிதனின் உயர்வில் மறைவாக நிற்கிறது.

“விடிவெள்ளி” பத்திரிகை ஆரம்பித்த காலங்களில் தனது எழுத்துக்களால் அப்பத்திரிகையை “மிஹ்ழார்” எனும் புனைபெயரில் தூக்கி நிறுத்தியவர். அவரிடம் எனக்குப் பிடித்ததே, தான் கொண்ட கருத்தில் நிலைத்தூன்றி நிற்கும் அந்தத் திடமான நிலைப்பாடுதான். “தம்பி, நான் எழுதுற கட்டுரையில் சில பகுதிகளை வெட்டுவதாக இருந்தால் நான் இனி எழுத மாட்டேன்” எனக் கூறும் அந்த வித்துவச் செருக்கு (இந்த வார்த்தைப் பிரயோகம் தவறில்லை என நினைக்கிறேன்) அவரிடம் நான் அந்நாட்களில் அதிகம் இரசித்தது. அது – ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய பண்பாக நான் நினைப்பது. ஆயிரம் சிந்தனைகளைச் சுமந்து நின்ற ஆர்ப்பரிப்பில்லாத மனிதர் என அவரது மரணசெய்தியறிந்த இர்ஹாம் சேகுதாவூத் தனது இரங்கல் செய்தியில் உணர்வுபூர்வமாக தெரிவித்திருந்தார். இப்படியான தனது எழுத்துக்களில் விட்டுக்கொடுப்புகளோ அல்லது நெகிழ்வு தன்மைகளோ கொண்டவராக அவர் இறுதிவரை இருந்ததில்லை.

“நல்ல நாமங்கள் மனிதர்களைத் தீர்மானிக்கின்றன” அந்தவகையில் “உண்மையின் பேரொளி என்ற பெயரைக் கொண்ட ‘நூறுல் ஹக் ‘அதுவாகவே வாழ்ந்து மரணித்திருக்கின்றார். அவரது அறிவும் ,எழுத்தும் எல்லை கடந்தவை . ஊடகத்துறை, அரசியல், ஆன்மீகம், விமர்சனம்,வரலாறு, கலை, இலக்கியம் என பல பரிமாணங்களை தன் எழுத்துக்களில் உருவாக்கியவர். நூறுல் ஹக்கை எந்த வட்டத்திற்குள் உள்ளடக்குவது ?என்பது யாருக்கும் இன்னும் புரியவில்லை. அந்தளவு எல்லாத் துறைகளிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தவர். அவரிடம் பழைய மற்றும் புதிய நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், என பல ஆயிரக்கணக்கானவை இருந்தது. அவரது முழு அறையிலும் அவர் தூங்கும் 5 அடி நீளமும், இரண்டரையடி அகலமும் கொண்ட இடத்தை தவிர ஏனைய எல்லா இடங்களிலும் புத்தகங்களினால் நிரம்பியிருக்கும். தகவல் சேகரிப்பு. அறிவுரையாடல். விவாதம் என பல துறைகளில் அவர் தன்னை ஆளுமையாளனாக கட்டமைத்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரது ஆழமான ஆன்மீக புரிதல் அற்புதமான பல விடயங்களை புதிய கோணத்தில் வெளிக்கொண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில் நூறுல் ஹக்ஹினால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் அவரது பரந்து விரிந்த அறிவையும். சமூகப் பற்றையும் வெளிக்காட்டும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்து பற்றி நடுநிலையான பல எழுத்துக்களை  அவர் முன்வைத்திருந்தார். அந்தவகையில் அவரது இழப்பு இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஊடகத்துறையில் சிறிய காலம் பயணித்தாலே சலிப்புத்தட்டும் காலங்களிலும் இளமையுடன் முன்னோக்கி பயணித்து வாழ்வையே ஊடக, இலக்கிய துறையுடன் சேர்ந்து அர்ப்பணித்த இலக்கிய பெருமை எம்.எம்.எம். நூருல் ஹக்கின் பிரிவு பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோருடனும் முகத்துக்கு நேரே தன்னுடைய வாதங்களை முன்வைக்கும் சிரேஷ்ட ஊடக ஜாம்பவான் எம்.எம்.எம். நூருல் ஹக் யாருக்காகவும் தன்னுடைய கருத்துக்களில் மற்றும் எழுத்துக்களில் விட்டுக் கொடுத்ததில்லை. அச்சப்படாமல் துணிந்து நின்று கருத்து சொன்ன அந்த பத்திரிகைக்காரனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். ஊடக நிறுவனங்களுடனும் ஆசிரிய பீடங்களுடனும் எப்படி அவர் நெருங்கிய உறவை கொண்டிருந்தாரோ அதே போன்றே ஊடக நண்பர்களுடனும் உறவு வைத்திருந்தார். தட்டிக்கொடுத்து இளம் ஊடகவியலாளர்களின் தேவையை எப்போதும் உணர்ந்து பேசிய அவர் சமவெளி இணையத்தளத்தினு டாக அந்த தேவையை பூர்த்திசெய்ய முயற்சிகளையும் செய்திருந்தார். எந்நேரமும் பத்திரிகைகளுடன் உலாவிய அந்த பேனாக்காரர் சமூகத்தின் அவலங்களை முகத்திரையின்றி வெளிச்சம் போட்டு காட்டியவர் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

அவரது நெருங்கிய இலக்கிய நண்பர் கவிஞர், சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) எழுதிய துளி அல்லது துகள் கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற போது அந்த அரங்கத்தை எம்.எம்.எம். நூருல் ஹக் அரங்கு என்று பெயர்வைத்து அவரது இலக்கிய செயற்பாடுகளுக்கான கௌரவத்தை ஏற்பட்டு குழுவினர் வழங்கினர். அவரது நல்ல மனத்துடனான உறவின் அடையாளமாக பல முக்கிய அமைப்புக்கள் அவருக்கான இரங்கல் நிகழ்ச்சிகளையும் நடத்தியதை இங்கு அடிக்கோடிட்டு காட்டவேண்டிய தேவையுள்ளது. வாழும் போது கவனிப்பாரற்று போனவர் மரணித்த பின்னர் உலகமே கொண்டாடிய மகாகவி பாரதியார் போலவே வித்தகர் நூருல் ஹக்கின் நிலையும் இருந்ததுதான் கசப்பான உண்மை. இது அவருக்கு மட்டுமல்ல அதிகமான கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளுக்கு நடக்கிறது.

பிரயத்தனம் கூடியவர், விட்டுக்கொடுக்காதவர், பிடிவாதம் நிறைந்தவர், ஊடகத்தை இயன்றளவு பயன்படுத்தியவர், முஸ்லிம் அரசியலின் இயலாமையை தோலுரித்தவர், பன்னூலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், என அவரின் அடையாளங்கள் இன்னும் பரந்ததது. அவரது எழுத்துக்களும், விவாதங்களும் சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளை யாராலும் நிறுத்த முடியாது. அவர் எழுதிய புத்தகங்களை ஆய்வுக்குட்படுத்தினால் நிறைய கலாநிதிகள், பேராசிரியர்கள் உருவாகுவார்கள் என்பது வெளிப்படை உண்மை. இப்படியான ஆளுமை மிகுந்த எழுத்தாளர் நூருல் ஹக் மரணித்து ஆண்டுகள் ஒன்று இன்றுடன் கடந்துள்ளது.

ஈழத்து கவிதைகள், ஈழத்து எழுத்துக்கள் என்று கூறப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இலக்கியங்களில் நூருல் ஹக்கின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. உலகை மட்டுமின்றி இலங்கையையும் வெகுவாக ஆட்டிப்படைத்து கொண்டிருந்த கொரோனா காலத்திலும் அவரது மரண செய்தி கேட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முக்கிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆளுமைகள் நேரில் சென்று தனது துக்கங்களை தெரிவித்திருந்தமை பணமில்லா நூருல் ஹக்கின் மனம் விரிந்திருந்தமையை காட்டியது. அவரின் தாக்கம் நிறைந்த எழுத்துக்களும், புத்தகங்களும் இருக்கும் வரை நூருல் ஹக் மக்கள் மனதில் வாழ்வார்.

நூருல் ஹுதா உமர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.