கட்டுரைகள்

இலங்கைத் தமிழினப்பிரச்சினை ஏன் இழுபறியில் தொடருகின்றது ..?…. அவதானி.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 74 வருடங்களாகப்போகின்றன. எனினும் இங்கு வாழும் மூவின மக்களும் முழுமையான சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்களா..?

தென்னிலங்கையில் வாழும் சிங்கள இளைஞர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே 1971 ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சி, அதே ஆண்டு இந்திய அரசின் துணையோடு கொடுரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது.

அச்சமயம் இந்தியப் பிரதமராகவிருந்தவர் இந்திரா காந்தி. அவரது தோழியான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்காலத்தில், குறிப்பிட்ட ஆயுதக் கிளர்ச்சிக்குப்பின்னர் 1972 இல் புதிய அரசியல் அமைப்பு வந்தது. அத்துடன் பல்கலைக் கழக பிரவேசத்தில் தரப்படுத்தல் வந்தது. அதே ஆட்சிக்காலத்தில் 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழராய்ச்சி மாநாட்டின்போது தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்தப்பின்னணிகளுடன் வடக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயதங்களை நம்பி களம் புகுந்தனர்.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்குப்பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தனா காலத்தில் 1977 – 1981 – 1983 ஆகிய ஆண்டுகளில் கலவரங்கள் வந்தன. இடையில் யாழ். பொது நூலகமும் எரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித்தலைவராகும் தகுதி ஒரு தமிழருக்கு ( அமிர்தலிங்கம் ) வந்துவிட்டதே என்பதை பொறுக்கமுடியாத சிங்கள கடும்போக்காளர்கள், நாடாளுமன்றில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவந்து, அவரை காலிமுகத்திடலில் கழுவில் ஏற்றவேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இவ்வாறு சிங்கள கடும்போக்காளர்களுக்கு ஜே.ஆரின் அரசு கொம்பு சீவிக்கொண்டிருந்தபோது, வடக்கில் தமிழ் இளைஞர்கள் அரசுக்கும், அரசின் பாதுகாப்பு படையினருக்கும் எதிராக ஆயுதம் ஏந்திப்போராடத் தொடங்கினர்.

இவர்களின் இயக்கங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இந்திய மத்திய

அரசினதும் தமிழக அரசினதும் பூரண ஆசிர்வாதத்துடனேயே இந்தப்பயிற்சிகளை தமிழ் விடுதலை இயக்கங்கள் மேற்கொண்டன.

ஈழ அகதிகளும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பூட்டான் தலைநகர் திம்புவிலும் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் பயனளிக்காமல், 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் உருவானது. அதிலிருந்து கிடைத்த குறைந்த பட்ச தீர்வுதான் வடக்கு – கிழக்கு மாகாண சபை முறைமை.

இறுதியில் அதனையும் சரியாக இயங்கவிடாமல் தடுத்த பெருமையும் மூவினத்தரப்பையும் சாரும்.

இந்தியாவை முழுமையாக நம்பி, ஆயுதங்களை ஒப்படைப்பதாக மானிப்பாய் சுதுமலைக்கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொன்ன விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், இறுதியில் மோதலுக்கே தயாரானார். அவர் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கும் எதிராகவே தொடர்ந்தும் போராடினார். அவரையும் அவரது இயக்கத்தையும் குறிப்பிட்ட இரண்டு நாடுகளும் இணைந்தே 2009 இல் முறியடித்தன.

இதனைத்தான் 1971 இலும் இந்த இரண்டு நாடுகளும் செய்தன.

இவையெல்லாம் நாம் கடந்துவந்த பாதைகள். இந்தப் பாதைகளை மறக்காமல்தான், நாடாளுமன்ற பாதையை நம்பிச் சென்றுகொண்டிருக்கும் எமது தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களும் இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கொண்டு, கடிதம் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு ஒரு குட்டிக்கதையை சொல்லத் தோன்றுகிறது.

ஒரு குடும்பத்தில் கணவன், தனது மனைவியை தொடர்ந்தும் அடித்து துன்புறுத்திக்கொண்டிருந்தான். அவளும் அயல்வீட்டுக்கு கேட்கக்கூடியதாக அழுது கூக்குரலிட்டால். ஒரு கட்டத்தில் கணவனின் அடக்குமுறை பொறுக்கமுடியாமல் அயல் வீட்டில் தஞ்சமடைந்தாள். அந்தவீட்டுக்காரியின் கணவன் இவளுக்காக பரிந்து பேசவந்தான். இறுதியில் நானே உனது வீட்டில் வந்திருந்து உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றான். அவ்வாறே நடந்தது. ஆனால், காலப்போக்கில் அயல்வீட்டானின் சில்மிஷம் அவள் மீது படியவும் அவள் வெகுண்டெழுந்தாள்.

இப்போது, அவள் தனது கணவனுக்கு எதிராகவும் அயல்வீட்டானுக்கு எதிராகவும் பேராடவேண்டிய தேவை வந்தது. இதனால், அவளது

குழந்தை பெரும் துன்பமடைந்தது. அந்தக் குழந்தைக்காகவாவது தான் உயிர் வாழவேண்டும் என்று அந்த ஊரையும் வெளியூரையும் சேர்ந்தவர்களிடமெல்லாம் முறையிட்டு அழுதாள்.

எனினும் அவளுக்கோ, அவளது குழந்தைக்கோ நிரந்தரமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. விவாகரத்தின் மூலம் விடுதலை அடையவும் அவள் விரும்பினாள். ஆனால், அயலாரும் ஊரவரும் குடும்பம் பிரியக்கூடாது. தனியே குழந்தையை வளர்க்க சிரமப்படுவாய் என்றனர்.

அவளும் தீவிரமான யோசனைக்குப்பின்னர், தானும் தனது கணவனும்தானே தமது குழந்தையின் நல்வாழ்வுக்குப் பொறுப்புக்கூறல் வேண்டும் என்பதை தனது கணவனிடம் சொல்லி, சமாதானமாக வாழத்தயாராவோம் என்றாள்.

இறுதியில் சாட்சிக்காரரிடம் செல்லாமல் சண்டைக்காரனுடனேயே பேசத்தலைப்பட்டாள்.

இந்தக்கதையை வெறுமனே ஒரு குடும்பத்தில் நேர்ந்த சம்பங்கள் என்று மாத்திரம் பார்க்காமல், எங்கள் இலங்கை தேசத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் தேசிய இனப்பிரச்சினையுடனும் சற்று ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகும் இலங்கை, பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்துள்ளதா..? சுற்றிலும் கடல், எனினும் வெளிநாட்டிலிருந்துதான் டின் மீன் இறக்குமதியாகிறது.

விவசாய மன்னர்களை கண்ட தேசம், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது. தென்னை செழித்து வாழ்ந்த நாட்டிற்கு தேங்காயும், தேங்காய் எண்ணெயும் வெளியிலிருந்து தருவிக்கவேண்டிய சூழல் உருவாகிவருகிறது.

ஒரு காலத்தில் உலக சந்தையில் உயர்ந்த இடத்திலிருந்த இலங்கைத் தேயிலைக்கு இன்று என்ன நடந்திருக்கிறது.

இந்தப் பொருளாதார பின்னடைவுகளுக்கு பிரதானமாகவிருந்தது இலங்கையில் நீடித்திருந்த இனப்பிரச்சினைதான் என்பது தெளிவானது.

இந்தப்பின்னணிகளுடன் எமது தமிழ்த்தலைவர்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலும் பாத யாத்திரை மேற்கொண்டு போராட்டம் நடத்தியதோடு நில்லாமல், கடலிலும் படகுச்சவாரி போராட்டம் நடத்தினர்.

பின்னர் தலைவர்கள் ஒன்றுகூடி இந்தியப்பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் இழுபறிப்பட்டனர். இறுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளித்தனர்.

இவ்வேளையில், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேசுவதற்கு தயாராகியிருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கிவிட்டன.

பல மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இளம் அரசியல்வாதி சாணக்கியனின் பேச்சாற்றலை, அருகே அமைந்திருந்த அறையிலிருந்து உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தமது உதவியாளர் மூலமாக அவரை அழைத்து பேசியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அச்சமயம் அவர், “ உங்கள் பிரச்சினை எதுவாகவிருந்தாலும் என்னுடன் வந்து பேசலாம் “ என்றும் சொன்னார். அவ்வாறே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடன் அவர் கடந்த ஆண்டு நடத்தவிருந்த பேச்சுவார்த்தை இறுதிநேரத்தில் நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்த்தலைவர்கள் இழுபறி தலை சுமைக்குப்பின்னர் இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்கு தயாராகியிருக்கும் வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடன் பேசுவதற்கு ஜனாதிபதி தயாராகியிருக்கிறார்.

இது, “ நாம் தொட்டிலையும் ஆட்டுவோம். அதில் உறங்கும் குழந்தையையும் கிள்ளிவிடுவோம் “ என்ற கூற்றுக்கு ஒப்பீடான செயல்தானா..? எனவும் யோசிக்க வைக்கிறது.

இதுவரை காலமும் அண்டை நாட்டு சமாதானத் தூதுவர்களும் குத்திக்குத்திப்பார்த்து நெல் அரிசியாகவில்லை. மீண்டும் நெல்லையும் அறுவடை செய்து, குத்தத் தொடங்கியிருக்கும் எமது தமிழ்த் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்..? என்பதை வழக்கம்போன்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.