கட்டுரைகள்

ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை!…. எங்க நாட்டிலே (நாலு வார நச் தொடர் 3 ) ….. நீங்கள் வரும் வரை காத்திருக்கும் ரயில்!…. . கிறிஸ்டி நல்லரெத்தினம்.

மதியம் பன்னிரண்டு மணியிருக்கும். அந்த எரிக்கும் வெய்யிலில் செம்மணல் நடுவே தக தக என மின்னிக் கொண்டே ஒரு தகரப்பாம்பு போல் நெளிந்து வளைந்து ஒரு பெருமூச்சுடன் டார்வினை வந்தடைந்து அந்த ரயில்!

அதன் வயிற்றின் இரு புறமும் நெற்றியிலும் பதிந்துள்ள The Ghan என்ற கொட்டை எழுத்துக்கள் இது சாதாரண ரெயில் அல்ல என்பதை பறைசாற்றிற்று! ஆம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒட்டக ஓட்டிகள் ஆஸ்திரேலியாவின் பரந்த வடக்கு – தெற்கு நிலப்பரப்பை தங்கள் ஒட்டக மந்தைகளுடன் கடந்து தடம் பதித்த பாதையில் பயணித்ததால் அவர்கள் நினைவாக இந்த சொகுசு ரெயிலுக்கு இந்தப் பெயர்!

வடக்கே டார்வின் நகரில் இல் இருந்து தெற்குக் கரையில் 3,000 கி.மீ தொலைவில் உள்ள அடிலேய்ட் நகர் வரை 44 பெட்டிகளுடன் 348 பயணிகளையும் 55 ஊழியர்களையும் தன்னே அடக்கி நான்கு நாட்கள் பயணிக்கும் ரயில் இது!

சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய வாசிகள் கூட வாழ்வில் ஒரு முறையாவது இதில் பயணிக்க தவம் இருப்பார்கள். இந்த ரயிலில் ‘ஏறினோம் இறங்கினோம்’ என்றில்லாமல் ஒவ்வொரு முக்கிய நகரங்களை அடைந்ததும் அங்கிருந்து சொகுசு பஸ்களில் அழகிய நீர் வீழ்ச்சிகள், பூர்வீக குடிகள் வாழ்ந்த இடங்கள், முதலை பண்ணைகள் என பல இடங்களுக்கு அழைத்துச் செல்வர்கள். நீங்கள் வரும் வரை உங்களுக்காய் The Ghan காத்து நிற்கும்.

சரி, வடக்கு – தெற்காக பயணித்து விட்டோம். கிழக்கு – மேற்கை மறக்கலாமா?

ஆஸ்திரேலியாவின் மேற்கே இந்து மா சமுத்திரத்தையும் கிழக்கே பசிபிக் சமுத்திரத்தையும் இணைத்து 4,352 கி.மீ பயணிக்கும் ரெயில்தான் Indian Pacific ரெயில்.

இந்த இரு ரயில் பயணங்களைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு: https://www.discoveraustralia.com.au/holiday-packages/train/ghan/ எனும் வலைத் தளத்தை தட்டிப் பாருங்கள். இந்தக் காணொளியும் பார்க்க சுவாரசியமானது:

 

என்ன, முதலைப்பண்ணை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு நழுவப்பார்க்கிறேன் என்று நினைத்தீர்களா?

முதலையையும் ஆஸ்திரெலியாவையும் பிரிப்பது முடியாத காரியம். நன்நீர் முதலை, உப்பு நீர் முதலை என வகைப்படுத்தினாலும் இரண்டின் எதன் வாயில் சிக்கினாலும் முடிவு ஒன்றே. இவை ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மாநிலங்களிலும் வடக்கு பிரதேசத்திலும் பரவலாக வாழும். இங்குள்ள குளங்கள், ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கரையை ஒத்த கடல் அகியன அவர்களின் வசிப்பிடம். முதலைகள் ‘பாதுகாக்கப்பட்ட மிருகங்கள்’ பட்டியலில் அடங்குவதால் அனுமதி இன்றி இவற்றை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இங்குள்ள நீர் நிலைகளிலும் கடல் கரைகளிலும் “முதலைகள் கவனம் ” அறிவித்தல் பலகைகளை சகஜமாகக் காணலாம். ஆண் முதலைகள் 3.3 மீட்டர் வரை வளரும். ஆனால் 6 மீற்றர் அரக்கர்களாகவும் வளர்வதுண்டு. இவை நீருக்குள் ஒரு மணி வரை அமிழ்ந்திருந்து தன் இரைக்காக காத்திருக்கும். நீருக்குள் மூழ்கி இருக்கும் போது அதன் கண்களை கண்ணாடி போன்ற இமைகள் மூடியிருப்பதால் அதனூடு தெளிவாக பார்க்க முடியும். தன் கூரிய கேட்கும் திறனாலும் மோப்பத்திறனாலும் மங்கிய வெளிச்சத்திலும் தன் இரையை நாடிக் கண்டு பிடிப்பதில் வல்லவன் இவன்.

 

அது சரி, இத்தனை ஆபத்தான மாஸ்டரை அருகில் சென்று பார்க்க ஆசையா?

அதற்காகத்தான் இருக்கவே இருக்கிறது தனியார் முதலைப் பண்ணைகள். இங்கு முதலைகளுக்கு சாகசமாய் உணவூட்டுவதையும், அதன் முட்டைகளில் இருந்து முதலைக்குஞ்சுகள் பிறப்பதையும் விஞ்ஞான ரீதியான விளக்கங்களுடன் பார்க்கலாம். வியாபார ரீதியாக நடத்தப்படும் இப்பண்ணைகள் பதனிட்ட முதலைத் தோல், முதலை இறைச்சி ஆகியவற்றை சந்தைப்படுத்துகின்றன.

 

முதலைகளுடனும் மற்ற ஆபத்தான மிருகங்களுடன் நெருங்கிப் பழகிய இரு சாகசக்காரர்களைப் பற்றி இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். ஒருவர் மல்கம் டக்ளஸ் (Malcolm Douglas) மற்றவர் ஸ்டீப் ஏர்வின் (Steve Irwin). மல்கம் சாதாரணமாய் மனிதர்கள் நடமாட முடியாத ஆஸ்திரேலியாவின் சதுப்பு நீர் நிலைகளிலும் நிலப்பரப்புகளிலும் தனியாகச் சென்று பூர்வீக குடிகளுடன் ஒன்றாகக் கலந்து அருமையான ஆவணப் படங்களை எடுத்து உலகுக்கு வழங்கினார்.

இவருக்கு துணையாகச் செல்லும் ‘டிங்கோ’ இனத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலிய காட்டு நாயின் சாகசங்கள் சுவாரசியமானவை.

 

ஸ்டீப் ஒரு ‘முதலை ஜல்லிக்கட்டு’ வீரன்! எந்தப் பெரிய முதலையையும் அதன் முதுகில் பாய்ந்து ஏறி அடக்கி கட்டிப் போட்டு விடுவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி மரணித்தது ஒரு சோகமே!

இவர்களின் சாகசங்களை கீழே உள்ள YouTube இணைப்புகளில் கண்டு களிக்கலாம்.

Malcolm Douglas

 

Steve Irwin

 

இதுவரை காடுகளில் அலைந்து போதும்.

கொஞ்சம் திரும்பி நகரங்களுக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவின் கல்வி முறைகளை சிறிது பார்ப்போமே.

 

ஆஸ்திரலியாவின் கல்வி முறை நான்கு கட்டங்களாக வகுக்கப்பட்டு (குழந்தைப் பருவ கல்வி, ஆரம்பப் பருவ கல்வி, இடைநிலை கல்வி, மூன்றாம் நிலை கல்வி) நிர்வகிக்கப்படுகிறது. தனித்தனி மாநிலங்களும், பிரதேசங்களும் தங்கள் தங்கள் கல்வி வளங்களை நிதி தொடங்கி தரப்படுதல் வரை பொறுப்பேற்று வெற்றிகரமாக நிர்வகிக்கின்றன.

மத்திய அரசும் தன் வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் கல்விக்கு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும்.

2019 கணிப்புப் படி இங்குள்ள மொத்த 10,584 பாடசாலைகளில் 7,092 அரசாங்க பாடசாலைகள் அடங்கும். மிகுதி பாடசாலைகளின் பெரும் சதவிதம் கத்தோலிக்க பாடசாலைகள் ஆகும்.

 

1995 இல் அறிமுகப்படுத்தப்டட்ட தேசிய தகுதி கட்டமைப்பின் கீழ் அனைத்து மாநிலங்களும் மற்ற மாநிலங்களின் கல்வி பெறுபேறுகளை மதித்து பல்கலைக்கழகங்களிலும் மற்ற கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் செய்யும். உதாரணமாக விக்ரோரியா மாநில உயர்தர பரீட்சை பெறுபெறுகளுடன் ஒரு மாணவன் தஸ்மேனிய பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற முடியும்.

 

புலம் பெயர்ந்த குடும்பங்களில் இருந்து கல்வி கற்கும் மாணவர்கள் ஆஸ்திரேலிய மாணவர்களுடன் சமமாக அல்லது அதற்கு ஒரு படி மேலே சென்று சாதனைகள் புரிவது இங்கு சர்வசாதாரணமே! விசேடமாக சீன,

இந்திய, இலங்கை, மலேசிய மாணவர்கள் இப் பட்டியலில் அடங்குவர். பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் இவர்களின் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் பத்திரிகைகளை அலங்கரிப்பதை காணலாம்! புலம் பெயர்ந்த நம்மவர்கள் தம் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்காய் பல தியாகங்களைச் செய்து அவை நன்கே நிறைவேற கடினமாய் உழைப்பதை இங்கு காணலாம்.

ஒரு பாடசாலையின் தரம் அதன் ஆசிரியர்கள் மட்டும் இன்றி அதன் மாணவர்களின் தரத்தையும் பறைசாற்றுகின்றது என்பது ஒரு சாராரின் கருத்து . தரமான மாணவர்களின் சவாலான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆசிரியர்கள் தம் தரத்தை உயர்த்தியே ஆகவேண்டும் அல்லவா?

 

அனேகமாக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. அப்படியெனில் மாணவர்கள் எவ்வாறு கல்விக்கான செலவை சமாளிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் HECS எனும் உயர் கல்வி கடன் திட்டம் மூலம் ஆஸ்திரேலிய பிரஜைகள் மட்டும் தங்கள் கல்வித் தேவைகளுக்காக கடனை பெற முடியும். நீங்கள் கல்வியை முடித்து வேலையில் சேர்ந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட சம்பள எல்லையை அடைந்ததும் அரசே கடன் தவணையை உங்கள் மாதச் சம்பளத்தில் இருந்து கிள்ளிக் கொள்ளும். உங்கள் வரி கோப்பு எண்ணை வைத்து உங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதில் வரித்திணைக்களத்தினர் மன்னர்கள்!

 

ஆஸ்திரேலியாவின் உயர்ந்த கல்வித் தரம், மாணவர் பாதுகாப்பு, ஆசியாவிற்கு அருகில் அமைந்துள்ளமை, நாணய ஸ்திரம், சிறந்த போக்குவரத்து போன்றவற்றை மனதில் கொண்டு அனேக சர்வதேச மாணவர்கள் இங்கு கல்வி கற்க விரும்புகின்றனர். இவர்கள் 2019 ஆண்டில் மட்டும் $ 37.6 பில்லியன்களை ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு வழங்கினார்கள் என்றால் நம்புவீர்களா? இங்குள்ள முன்னணி பல்கலைக்கழங்களின் 35% சதவீத மாணவர்கள் சர்வதேச மாணவர்களே. முதலாவது இடத்தில் 28% மாணவர்கள் சீனாவில் இருந்தும் 15% மாணவர்கள் இந்தியாவில் இருந்தும் வருகை தந்துள்ளனர். எனினும் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட ஆஸ்திரேலிய – சீன அரசியல் முறுகல்களால் சீன மாணவர்களின் வருகை பாதிக்கப்படலாம்.

சர்வதேச மாணவர்களுக்கான

பாடக் கட்டணம் உள்ளூர் மாணவர்களின் கட்டணத்தின் இரட்டிப்பு ஆனதால் இவர்களை பல்கலைக்கழகங்கள் கை நீட்டி வரவேற்பதில் ஆச்சரியம் இல்லையே!

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லது பல பாடசாலைகளிலும் சர்வதேச மாணவர்கள் சேர்ந்து கல்வி பயில்கின்றார்கள்.

ஆனால் 2020 இல் கொரோனா பாதிப்பால் இவர்களின் வரவு வெகுவாக குறைந்ததின் நிமித்தம் பல்கலைக்கழகங்கள் துவண்டு போய் ஆட்குறைப்பை எதிர்நோக்கியுள்ளன.

அது மட்டுமல்லாது இந்த வரட்சியால் மாணவர்கள் தங்குமிட வசதிகள் உள்ள வீடுகளின் வாடகை சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு நெளிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 

சர்வதேச மாணவர்களுக்கான மேலதிக விபரங்களை கீழே உள்ள அரச வலைத்தளத்தில் காணலாம்:

https://www.studyinaustralia.gov.au/

 

அட, இத்தனை தலைப்புக்களை இத்தடவை தொட்டுவிட்டோம்! மகிழ்ச்சிதானே?

அடுத்த வாரம் எதிர்கால ஆஸ்திரேலியா எதிர்நோக்கும் சவால்களையும் அதன் சாதனைகளையும் பார்ப்போமா? மறக்கவில்லை; நிச்சயம் கோயில் விஜயமும் உண்டு.

Loading

2 Comments

  1. திரு.கிறிஸ்டி நல்லரத்தினம் அவர்களுடைய ஆஸ்திரேலியா தேசம் வளர்ந்த கதையை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன்.நன்றாக இருக்கிறது.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
    ஏலையா க.முருகதாசன்

    1. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
      அன்புடன்
      கிறிஸ்டி நல்லரெத்தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.