கட்டுரைகள்

புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் அரசியல் கூச்சல்களும்!…. ஏலையா க.முருகதாசன்.

ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகள் நீண்டநெடுங்காலமாக இழுபறி நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது சுலபமாக தமிழர் தம்நிலையறிந்து அதனைக் கையாள்வதை தவிர்த்து,இல்லாத ஒன்றுக்காகவும் வலிந்து ஒரு பிரச்சினையை இழுத்து வைத்துக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகின்றது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயராத போது இருந்த அரசியல் களநிலவரத்துக்கும் இப்பொழுதுள்ள சமகால ஈழத்தமிழரின் அரசியல் அணுகுமுறைக்குமிடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் தம்மை அறிவாளிகள் எனவும், அரசியல் ஞானிகள் எனவும் தம்மைத் தாமே அளந்து கொண்ட அளவு கோல் எனத் தீர்மானித்த நிலையில் அதன் வெளிப்பாடாகத்தான் அண்மை நாட்களில் கனடா நாட்டுக்கு வந்த இலங்கை நாடாளுமன்ற தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அவரை வாடா போடா என நாகரீகமற்ற முறையில் பேசி புலிக்கொடியையும் வைத்துக் கொண்டு தம்மீதே எச்சில் உமிழ்ந்த செயலாகும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பிய நாடுகள் தொட்டு அவுஸ்திரேலியா கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தும் இவர்களில் பெரும்பான்மையானோர் அந்தந்த நாடுகளில் உள்ள அரச இயந்திரம் மேற்கொள்கின்ற அரசியல் நாகரீகத்தை அறியாதவர்களாக இருப்பது ஒரு பரிதாபத்துக்குரிய வெட்கக் கேடான செயலாகும்.

ஒரு எதிரியாக இருந்தாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பொறுமையாக கேட்டுப் பின்னர் அவன் சொல்வதில் தமக்கு ஒப்பில்லதவற்றுக்கு தமது கருத்தைச் சொல்வதே கலந்துரையாடுவதன் அடிப்படை நாகரீகமாகும்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது அதனை தர்க்கரீதியாக வெளிப்படுத்தலுமே அறிவார்ந்த செயலாகும்.

சண்டித்தனம் அநாகரீகமானது,ஏற்புடையதுமல்ல.இந்தச் சண்டித்தனத்தை புலம்பெயர் தமிழர்கள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் அதற்கு யார் முன்னோடியாக இருந்தார்கள் என்பதை எமது அரசியல் உரிமையை வென்றெடுக்கவென தமிழ் அரசியல்வாதிகளால் முன்னெடுனக்கப்பட்ட காலத்திலிருந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் அரசிய் வழிப் பாதையைக் கவனித்தோமானால் இந்தச் சண்டித்தனத்தை போராளிக் குழுக்களிடமிருந்து குறிப்பாக புலிகளிடமிருந்து கற்றிருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகிறது.

ஈழத்தமிழரின் அரசியல் சார்ந்த விடயத்தில், அதில் காலத்துக்கு காலம் அதைக் கையாண்டவர்கள் பற்றிப் பேசும் போதோ எழுதும் போதோ எக்காரணம் கொண்டும் ஒரு சாராரை குற்றமற்றவர்களாக மேன்மைப் படுத்தி வெளிப்படுத்துதல் எழுத்தறம் ஆகாது.

ஈழத்தமிழரின் உரிமைப் பிரச்சினையில் காணப்பட்ட முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல் இறுக்கியவர்கள் யாரென்றால் அவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே.

ஏவ்வாறு ஈழத்தில் புலிகளின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் விமர்சனம் செய்பவர்களையும் துரோகிகள் என்று பட்டம் சூட்டியும் பயமுறுத்தியும் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

ஐரோப்பாவில் சில குறிப்பிட்ட நாடுகளில் வாழ்ந்த தமிழ்மக்களில் பலர் போராட்டத்திற்கு பங்களிப்பு கொடுக்கவில்லையென்பதற்காக, அவர்கள் இயக்கிய தமிழ்ப்பாடசாலைகளில் அவர்களின் தமிழ்க் கல்வி மறுக்கப்பட்டது மட்டுமன்றி தேர்வு காலங்களில் சம்பந்தப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லையென்பதில் தொடங்கி, பங்களிப்புச் செய்யாத பிள்ளைகள் கலை நிகழ்வுகளில் இறுதி நேரத்தில் அவர்களை மேடையேறாமல் தடுக்கப்பட்டதை அந்ததந்த பெற்றோர்களும் பிள்ளைகளும் மறக்கமாட்டார்கள் என்பதும் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வின் ஒரு பதிவாகும்.

அடுத்த நாள் ஒரு பிள்ளை நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் முதல் நாள் இரவு அந்தப் பிள்ளையை மேடையேற்ற முடியாது என சொல்லுகின்ற மிக மோசமான போக்கு எதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது என்பதை உணர வேண்டும்.இது ஒரு அடவாடித்தனம் என்றே சொல்லலாம்.

அந்தந்த நகரங்களில் உள்ள தமிழர்கள் தாம் விரும்பிய நேரங்களில் கலை விழாக்களை நடத்துவதை நிறுத்தச் செய்வது,பங்களிப்புச் செய்யாத பிள்ளைகளின் அரங்கேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது,நடன வகுப்புகளிலிருந்து நீக்குவது புலம்பெயர் நாடுகளின் புலிச் செயல்பாட்டாளர்களை விமர்சிப்பவர்களை கண்டிப்பவர்களை பரம விரோதிகளாக பார்ப்பது போன்றவற்றின் ஒரு சிறு உதாரணமே கனடாவில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக புலிச்செயற்பாட்டாளர்கள் அவரைப் பேசவிடாமல் தடுத்த செயலாகும்.

????????????????????????????????????

இங்கேயே இப்பவே இவர்கள் இப்படியென்றால் நாளைக்கு தமிழீழம் கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று மக்கள் அதிருப்தியுடன் கதைப்பது மட்டுமல்ல அந்த எண்ணம் தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றுது.

புலிகள் எப்படி தாம் தேர்ந்தெடுத்த பாதை இலங்கையில் உள்ள அரசியல் நிலவரங்களுக்கு உகந்ததா இல்லையா என்பதையோ ஆயுதவழி போர் நீளுகையில் வேறு நாடுகளின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்படுமா என்பது புலிகளால் யோசிக்கப்பட்டிருந்தாலும்,வேறு நாடுகளின் ஆதரவைப்பெற வேண்டுமென்றால்,அவர்கள் தமது நலன் நோக்கி ஆயுதப் போர் வழியாளர்களிடமிருந்து நிரந்தரமான ஆதரவுக்கு அமைவாக அவர்களிடம் வற்றாத பொருளாதார அலகு உண்டா என்பதை உதவவரும் வெளிநாடுகள் எதிர்பார்ப்பார்கள் என்பதை புலிகள் யோசிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.புலிகளால் அவர்களுக்கு எவ்வாறு உதவமுடியும் என்பதை அக்கோணத்தில் ஏன் சிந்திக்கவில்லையென்பதற்கு அவர்களிடம் தூர நோக்கு பஞ்சம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது.

குருவி தலையில் பனங்காயை தூக்கி வைப்பது போல,ஈழத்தமிழரின் தலைகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைகளிலும் ஆயுதவழி போருக்குரிய அனைத்தையும் வைத்த போது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களே தவறான வழித் தேர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிவிட்டோமோ என சரியாகத் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் தேசிய இனங்கள்தான் என்ற போதிலும்,சிங்களவர்கள் சனத்தொகையில் தமிழர்களைவிட அதிகமானவர்கள் என்பதை எப்பொழுது கவனிக்காது கருத்தில் கொள்ளாது அலட்சியமாக மெத்தனப் போக்கில் அறவழி அரசியல்வாதிகளும் சரி பின்னர் ஆயுதவழி அரசியலாளரும் சரி இருந்தமை பல்முனைத்தூரச் சிந்தனையற்று பயணித்தமை தவறு என்பதை காலம் உணர்த்தியுள்ளது.

இலங்கையில் மொழி ரீதியாக சிங்கள மொழியும் தமிழ்மொழியும்,சமய ரீதியாக புத்தசமயம், சைவம்(இந்து)சமயம்,கிறீஸ்தவ சமயம், இஸ்லாமிய சமயம் இன்னும் முஸ்லீம்கள் தனி அலகாகவும் இருக்கின்ற, மொழி ரீதியாக மட்டுமல்ல சமய ரீதியாகவும் இலங்கை மக்கள் தமக்குள் அவ்வுணர்வையும் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறியமையும், சிங்கள தமிழ்மக்களுக்கிடையில் அன்னியோன்னிய உறவை பிளவுபடச் செய்த இருபக்க அரசியலாளர்களை தோற்றுவிக்க வழிவகுத்தது எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இன்னொரு நாடு அது அயல் நாடாகவிருந்தாலும் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் வண்ணமும், நாடுகளின் உளவுப்பிரிவினர் இலங்கைக்குள் ஊடுருவி இருவின மக்களையும் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்களாவென ஒவ்வொரு விநாடிப் பொழுதும் கண்காணிப்புடன் இருக்கத்தக்கதாக இலங்கை தனக்கான பாதுகாப்பினை பலபடுத்த தவறியமையும் இலங்கைக்குள் இனக்கலவரங்களும் இனமுரண்பாடுகளும் தோன்றக் காரணமாகிவிட்டன.

தமிழர்களுக்கு பாடம்படிப்பிக்க வேண்டுமென்பகதற்காக சிங்கள அரசியல்வாதிகள் தமக்குச் சார்பான நாடுகளுடன் நட்புக் கொள்வதும் அதே போல சிங்கள அரசை பயமுறுத்த வேண்டுமென்பதற்காக இந்திய அரசுடன் அடிக்கடி தமிழ்த்தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்துவதும், தமிழக அரசியல்வாதிகளின் விட்டேனா பார் என்ற வீராவேச பேச்சுக்களில் மயங்கிப் போய் தமிழக அரசியல்வாதிகள் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்று முட்டாள்தனமாக நம்பியமையுமே தமிழர்களின் அவல நிலைக்கும் காரணமாகும்.

இதைவிட போர் நடந்த காலங்களிலும், அதற்குப் பின்னரும் புலம்பெயர் தமிழர்களில் அறிவுஜீவிகள் என நினைத்துக் கொண்டவர்கள் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் அரசியலில் கலாநிதிப் பட்டங்கள் பெற்றவர்கள் போல இலங்கைத் தமிழர்களை வழிநடத்த முயற்சித்தமைதான் இரு இனங்களுக்கிடையில் அதிகளவு விரிசலை ஏற்படுத்தியது எனலாம்.

இல்லாத ஒரு பிரச்சினையை இருப்பதாக காட்டி அதனைப் பூதாகரமாக வளர்த்துவிட்டதன் பலனே தமிழர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பாகும்.அரசியல் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் ஒரு போதும் சிங்களவர்களின் குணாம்சங்களையோ அவர்களின் மனதில் என்ன இருக்கின்றது

என்பதையோ,அவர்களின் சனத்தொகை விகிதம் இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையோ உணர்ந்ததாக இல்லை.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் தம்மைத் தாமே புத்திசாலிகள் என புளகாங்கிதம் கொள்வதற்காக „தம்மிடம் உருப்படியான தீர்வுகள் இருக்கின்றன, அதனைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன் „ எனவும் சிலர் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.