வாக்குமூலம்!….. ( பகுதி 04 ) …….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (‘ரெலோ’வின்) ஏற்பாட்டில் கடந்த வருடம் (02.11.2021) யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்-புளொட்),. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் எல் எஃப்) ஆகிய வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட கட்சிகளும் (கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் அழைக்கப்படவுமில்லை; பங்குபற்றவுமில்லை), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் கூடிப் ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பித்த ‘இந்தியப் பிரதமருக்கு இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழ்பேசும் மக்களின் விண்ணப்பக் கடித’ விவகாரம் பின்னர் 12.02.2021 அன்று கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியையும் உள்வாங்கிப் பின் 21.02.2021 கூட்டத்தில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் மேலதிகமாகப் பூட்டிக்கொண்டு பயணித்து- இடையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் கழன்றுவிட-இறுதியில் என்ன நடந்திருக்கிறதென்றால் மனோ கணேசனும் (தமிழ் முற்போக்குக் கூட்டணி), ரவூப் ஹக்கீமும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ‘பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல்’ கழன்று விட்டார்கள்.
பல குளறுபடிகள்- குத்துவெட்டுகளுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியால் இறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர், ஈ பி ஆர் எல் எஃப்), என்.ஸ்ரீகாந்தா (தலைவர், தமிழ்த் தேசியக் கட்சி) , செல்வம் அடைக்கலநாதன் (தலைவர், ‘ரெலோ’), த.சித்தார்த்தன் (தலைவர், ‘புளொட்’)ஆகியோர் 06.01.2022 அன்று கையொப்பமிட்டுத் தொடர்ந்து அதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்ட பின்னர் 11.01.2022 அன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பப்படுவதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நேரில் சென்று கையளிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.
இப்போது என்னவென்றால், மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு பூரணப்படுத்தப்படாத இவ்வாவணத்தை – இந்திய பிரதமருக்கு முகவரியிட்ட இந்த ஆவணத்தை அவருக்கு அனுப்ப முதல் சில வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பியவர் யார்? ஊடகங்களுக்குக் கசிய விட்டவர் யார்? என்ற கேள்விப் பூதம் புறப்பட்டுள்ளது. ‘யார் அந்தக் கறுப்புச் செம்மறியாடு’ (Who is the black sheep?) என்ற புலனாய்வு ஒருபுறம்.
மறுபுறத்தில் இந்த ஆவணத்தையும் இன்னும் திருத்தப் போகிறார்களாம். அதாவது தமிழரசுக்கட்சி திருத்தப்போகிறதாம். திருத்திய பின் மீண்டும் சி.வி.விக்னேஸ்வரன், என்.ஸ்ரீகாந்தா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரிடம் சமர்ப்பித்து அவர்களின் கருத்தறிந்த பின்னர் ஆவணம் இறுதிப்படுத்தப்படுமாம்.
இன்னொருபுறம் ஆரம்பத்திலிருந்த ஆவணத்தை நாங்கள் (தமிழரசுக் கட்சி) முற்றாக மாற்றி அமைத்து விட்டோமெனச் சுமந்திரன் அறிக்கையிட அதனை எதிர்த்துத் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடிவேலு பாணியில் சுமந்திரன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டி அறிக்கை விடுத்துள்ளார்.
இவையொரு புறமிருக்க, முன்பிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். ஐத்தான் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ எனப் பெயரை மாற்றி முந்திய சின்னமான ‘பூ’வையும் ‘மீன்’ சின்னத்திற்கு மாற்றித் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராகச் சி.வி.விக்னேஸ்வரனும் செயலாளராகச் சிவசக்தி ஆனந்தனும் பொறுப்பேற்றுக் கடந்த (2020) பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சியையும் (ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர்) அனந்தி சசிதரனையும் (தமிழர் சுயாட்சிக் கழகம்) சேர்த்துக்கொண்டு ‘மீன்’ சின்னத்தில் போட்டியிட்டனர். அப்படியாயின் தேர்தல் திணைக்களத்தின் பட்டியலில் ஈபிஆர்எல்எஃப் என்ற கட்சி இல்லை. அதுதான் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதே. இந்த நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ‘இல்லாத’ கட்சியான ஈபிஆர்எல்எஃப் ஐ எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்து கையெழுத்திட முடியும்?
20.01.2019 அன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரனின் சொந்தக் கட்சியான ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியாயின் சி வி விக்னேஸ்வரன் இப்போது தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரா? அல்லது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரா? இந்த ஆவணத்தில் எந்தக் கட்சியின் சார்பில் மீண்டும் கையெழுத்திடப் போகிறார்? ஒருவர் சமகாலத்தில் இரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தலைவராக இருக்க முடியாதே!
இதற்கிடையில் 11.01.2022 நள்ளிரவு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் புதுடில்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இனி அவர் 18ஆம் திகதிக்குப் பின்னர்தான் கொழும்பு திரும்புவாராம். அதுவரைக்கும் இவ்வாவணத்தில் குத்துவெட்டுகள் நடக்கும்.
இந்நிகழ்வுகளைப் பார்க்கும்போது பழைய தனிப் பாடலொன்று நினைவுக்கு வருகிறது.
“நந்தவனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
ஆரவாரங்கள் எதுவுமில்லாமல் இந்திய அரசின் உயர்மட்டத் தலைவர்களுடனும்- அதிகாரிகளுடனும்-இராஜதந்திரிகளுடனும்- கொள்கை வகுப்பாளர்களுடனும் கையாளப்பட வேண்டியதொரு விடயத்தை அதாவது ‘ஆமை முட்டை இடுவது போல’ அமைதியாகச் செய்ய வேண்டியதொரு காரியத்தை-அரசியற் செயற்பாட்டை இப்படிக் ‘கோழி முட்டையிட்டுக் கொக்கரிப்பது போல’ ஆரவாரம் பண்ணிச் செய்திருப்பது தேர்தல் நலன்கள் சார்ந்ததே தவிர உண்மையில் மக்கள் நலன் சார்ந்ததல்ல. அன்றியும் இப்படியான அரசியல் மதியூகமற்ற செயற்பாடுகள் இத் தமிழ்த்தேசியக்(?) கட்சிகளிடம் உள்ள அரசியல் வங்குரோத்துத் தனத்தையே வெளிக்காட்டுகின்றன. எத்தனை காலம்தான் (இவர்கள் தமிழ் மக்களை) ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?
கட்சிகள் இணைந்த கூட்டுக் கச்சேரிகளுக்கிடையிலே சுமந்திரன் வாசிக்கும் ‘தனியாவர்த்தனம்’ வேறு குழப்பங்களையும் விளைவிக்கிறது.
‘உரிய முறையில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிட்டுவதை இந்தியா உறுதி செய்யுமானால், தமிழர் தாயகத்தில் சீனா உட்பட வேறு எந்த வல்லாதிக்க சக்தியும் கால் ஊன்றாமல் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற உறுதிமொழியை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்’ என்ற ஊடகச் செய்தியைப் (காலைக்கதிர் 29.12.2021, காலைப் பதிப்பு) படித்தபோது விசனம்தான் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிச் சேவையின் ‘நேர்பட பேசு’ என்ற விவாத அரங்கத்தில் ‘இலங்கைத் தமிழர் பகுதிகளில் சீனத் தூதர்: இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?’ என்ற தலைப்பில் 27.12.2021 அன்று நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் கொழும்பிலிருந்து கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே சுமந்திரன் இவ்வாறு கூறியதாக இவ்ஊடகச் செய்தி சொல்லுகிறது.
உண்மையிலேயே சுமந்திரனின் இக்கூற்று ஓர் ‘அதிகப்பிரசங்கித்தனம்’ ஆகும்.
இந்திய அரசின் உயர்மட்டத்தில் ராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியதொரு விடயத்தை இப்படிப் பகிரங்கமாகப் பேசுவது அதிகப்பிரசங்கித்தனமானது. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பார்களே. அது போன்றது.
இவ்வாறானதொரு உறுதிமொழியைப் பகிரங்கமாக வழங்குவதற்குச் சுமந்திரனிடம் என்ன அதிகாரமுண்டு. ஒரு நாட்டின் அரசாங்க தலைவர் தவிரக் குறைந்தபட்சம் ஒரு அமைச்சரினால்கூட வழங்கப்படமுடியாத (அதுவும்கூட இராஜதந்திர ரீதியில் இரகசியமாகக் கையாளப்பட வேண்டிய விவகாரம்) இவ்வாறான பாரதூரமானதொரு உறுதிமொழியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான அதுவும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சுமந்திரன் பகிரங்கமாக வழங்குவதென்பது ‘பகிடி’யாகவேயுள்ளது.
சுமந்திரனின் இக்கூற்று இலங்கைத் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் ரீதியான யதார்த்தமாக இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் இராஜதந்திர அரசியல் அணுகுமுறைகளினூடாகக் கையாள வேண்டிய ஒரு விடயத்தை இப்படிப் பகிரங்கமாகப் பேசுவது பரிகாசத்திற்குரியதாகும்.
மேலும், சுமந்திரன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் ஏற்பாட்டில் இணையவழியில் 12.01.2022 அன்று நடைபெற்ற ‘அயலகத் தமிழர் நாள்’ நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போது, எமது (இலங்கைத் தமிழர்கள்) அரசியல் உரிமைகளுக்கான முயற்சிகளில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இணைந்தும் செயற்படுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை விளித்துக் கூறியுள்ளார்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது ஒரு சம்பிரதாய பூர்வமான வாழ்த்துரையாக இருக்கலாம். ஆனால் இலங்கையின் அரசியல் களநிலையில் இவ்வாழ்த்துரைகூட ஓர் ‘அதிகப்பிரசங்கித்தனம்’தான். தமிழ்த்தேசிய அரசியலை(?)க் கண்டு ஏற்கெனவே வெருண்டும் வெறுத்தும்போயுள்ள இலங்கையின் சிங்களச் சமூகத்தை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலத் ‘தூண்டி’ விடுகிற அல்லது ‘நோண்டி’ விடுகிற ஒரு செயற்பாடுதான் இது.
இவ்வாறாகச் சுமந்திரன் செயற்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பிளவுபடாத- பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடுகிறோம் என வாய்ப்பாடு போலக் கூறிக் கொண்டிருப்பது வெறுமனே வார்த்தை ஜாலங்கள்தானே?
சுமந்திரனைப் பொறுத்தவரை தனது கூற்றுகளின் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாது எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு தான் ஒரு ‘அரசியல் மதியூகி’ என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்ப ஆசைப்படுகிறார் போலும். அதற்குக் ‘காலைக்கதிர்’ ஊடகமும் பக்கப்பாட்டுப் பாடுவதாகவே படுகிறது.
தமிழரசுக் கட்சிக் காலத்திலிருந்தே தமிழர்தரப்பு அரசியலென்பது மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய செயலாகவே இருந்து வருகிறது. சுமந்திரனும் அவ்வாறானதொரு அரசியலையே தொடர விரும்புகிறார் போலும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவிதமான அறிவுறுத்தல்களோ-கட்டுப்பாடுகளோ இன்றித் தன்னிச்சையாகவும்-தான்தோன்றித்தனமாகவும் -தன்முனைப்புடனும்-அதிகப்பிரசங்கித்தனமாகமும் செயற்படுமளவுக்குச் சுமந்திரனைத் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை குறிப்பாக இரா. சம்பந்தன் நெடுங் கயிற்றில் உலாவ விட்டுள்ளாரா? அல்லது மூப்புக் காரணமாக செயற்திறனற்றவராகிவிட்டாரா?
அதிகாரப்பகிர்வு விடயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவுவதற்கு இப்படிப் பகிரங்கமாக நிபந்தனை விதிப்பது அல்லது உறுதிமொழி வழங்குவது இராஜதந்திர ரீதியாக அறிவுபூர்வமானதா?
மேலும், சுமந்திரன் மேற்படி ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிச் சேவையின் நேர்காணலில் மேற்படி உறுதிமொழிக் கூற்றினை அமெரிக்க உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளதாகவும் அதனையே இந்திய இராஜதந்திரிகளிடமும் கூறியுள்ளதாகவும் பெருமைப்பட்டிருக்கிறார். தன்னைப் பற்றியதொரு பெரிதான கற்பனைப் பிம்பத்தை வைத்துக்கொண்டுதான் இவ்வாறான அரசியல் பித்தலாட்டக் கூற்றுகளை அவர் வெளிப்படுத்துகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான கூற்றுகள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் எவ்வாறான பேராபத்துக்களை விளைவிக்கும் என்பதை அறியாத அரசியல் பாலகனாக சுமந்திரன் இருப்பது தமிழர் தலைவிதி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பெயர்ப் பலகையை மாட்டிக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன்தானும் கலந்தாலோசனை செய்யாமல் சுமந்திரன் இவ்வாறு தன்முனைப்போடும்-தன்னிச்சையாகவும் செயற்படுவது தமிழர் தரப்பு அரசியலுக்குப் பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.
சுமந்திரன் அமெரிக்காவுக்கு ஆலோசனை கூறுவதையும் இந்தியா என்ன செய்ய வேண்டுமென்ற நிபந்தனை விதிப்பதையும் தவிர்த்துக்கொண்டு, கடந்த நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவேன் என்று தான் கூறிய கூற்றை இப்போதாவது கடைப்பிடிப்பாராயின் அதுவே தமிழ் மக்களுக்கு அவர் செய்யும் நல்ல காரியமாகும்.