இது சர்ச்சையாக்கப்பட வேண்டிய விடயமல்ல!…. ஏலையா க.முருகதாசன்.
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய புதிய நிர்வாகம் ஆலயத்துக்கள் வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.
அந்த வேண்டுகோள் இதுதான்:-
„ஆலயத்துக்குள் வந்து வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களில் ஆண்கள் அரைக்காற்சட்டையுடன் வருவார்களானால் அவர்கள் ஆலய முன்வாசலில் வைத்து ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்படும் வேட்டியினை கட்டியே வழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும் எனவும், அதே போல் முழங்கால்வரையும் உடை அணிந்திருக்கும் பெண்கள் ஆலய முன்வாசலில் வைத்து ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்படும் துண்டொன்றைக் (வேட்டி) கனுக்கால் வரை மூடிமறைத்துக் கட்டியே வழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும் என்றும், வழிபாட்டினை நிறைவு செய்த பின்பு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் அவ்வேட்டிகளை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டிருக்கின்றது.
ஆலய நிர்வாகத்தின் இந்த அறிவுறுத்தலை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பான்மையோர் வரவேற்றிருக்கும் நிலையில் சிலர் ஆங்காங்கேயும் முகநூல்களிலும் இது ஆரியச் செயல்பாடு தனிமனித உரிமை மீறல் என வாதிடத் தொடங்கியுள்ளனர்.
இன்னும் சிலரோ வழிபாட்டுக்குச் செல்வோர் ஏன் அங்கை இங்கை கண்ணை அலைபாய விடவேண்டும் உடை உடுத்துபவர்கள் தமக்கு விருப்பமான முறையில் உடை உடுத்தலாம் எனவும் வாதிடத் தொடங்கியுள்ளனர்.
இன்று உலகத்தில் ஒரு கருத்தியல் படுவேகமாக பரவி வருகின்றது.அது சனநாயக உரிமை மீறல் தனிமனித உரிமை மீறல் என்பது.
உலகம் எங்கும் சில விடயங்களில் தனமனித உரிமைமீறல்கள் இடம்பெற்றுத்தான் வருகின்றன.
ஆனால் ஆலய வழிபாட்டு விடயங்களில் தனிமனித மன அடக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை எக்கோணத்தில் நின்று பார்த்தாலும் அது உண்மையானதே.
இவ்விடயம் தொடர்பாக முகநூல்களில் பலத்த விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
கட்டுப்பாடுகள் என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்பது இயற்கையின்: விதி.உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியமானது எனினும் வயிறு கொள்ளுமளவுக்குத்தான் உணவை உட்கொள்ள முடியும் என்பதும்,அதிலும்கூட அரைவயிறு உண்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது மருத்துவ ரீதியான கட்டுப்பாட்டைச் சொல்லும் அறிவுறுத்தலாகும்.
குறிப்பாக அதிவிரைவுப் பாதையில் வழித்தடங்கலாக கோடுகளே இடப்பட்டிருக்கும்.இந்தக் கோடுகளை ஒரு கட்டுப்பாட்டு எல்லையாகக் கருதித்தான் வாகனமோட்டிகள் தமது வாகனங்களை ஓட்ட வேண்டும்.நான் எப்படியும் எனது வாகனத்தை ஓட்டுவேன் அது எனது தனிமனித உரிமை என்று சொல்லிக் கொண்டு கோடுகளை துச்சமென மதித்து வேகக் கட்டுப்பாடுகளை மறந்து வாகனத்தை ஓட்டினால் விபத்துக்கள்தான் ஏற்படும்.
மனஅடக்கமும் கட்டுப்பாடும் இல்லையெனில் சமூகச் சிதைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாததாகவிருக்கும்.ஆலய நிர்வாகம் கொண்டுவந்த இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஆரியச் சாயம்பூச சிலர் முயற்சிக்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் ஆரியச் சாயம் பூசுவதும் பிராமண சமூகத்தைக் குறைசொல்வதும் தாம் தூய தமிழர்கள் எனக் காட்டுகின்ற ஒரு போக்காகும்.
இலங்கை வரலாற்றின் பல்வேறு நூல்களை வாசித்தோமானால் இலங்கை மக்கள் கலப்பின மக்கள் எனபது தெளிவாகவே தெரிந்துவிடும்.
தெரிந்து வைத்திருக்கின்ற சரித்திரத்தின் உண்மைத்தன்மையைத் தெரிந்தவர்கள்கூட தன்சார்பு நிலையில் நின்று கொண்டு உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கிறார்கள்.
நல்லூரை தனது ஆட்சி நகரமாகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் மன்னன் என்று நாம் போற்றிச் சொல்லிக் கொண்டிக்கிற சங்கிலிய மன்னன் இந்தியாவின் கலிங்க தேசத்தின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று சரித்திர நூல்கள் சொல்கின்றன(ஆதாரம்:க.திருநாவுக்கரசு எழுதிய இலங்கையில் தமிழ்ப் பண்பாடு என்ற நூல்).
இலங்கை காலத்துக்கு காலம் சேர சோழ பாண்டிய அரசர்களாலும் குறுநிலத் தலைவர்களாலும் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது என்பதை நிராகரித்துவிட முடியாது.
அதற்குப் பின்னரான போர்த்துக்கேச, ஒல்லாந்த,பிரித்தானிய ஆட்சிகளின் போது சமூக நிலை என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முகநூல் வாதத்தில் ஒருவர் ஆரியர்கள்தான் உடைஉடுத்தி ஆலயத்துக்குப் போவார்கள், தமிழர்களின் ஆதிப் பழக்கமே நிர்வாணமாக ஆலயத்துக்குப் போவதுதான் எனப் பதிவிட்டிருந்தார். இது அவரின் முட்டாள்தனமான பதிவா அல்லது அறியாமையா அல்லது வேண்டுமென்றே சீண்டுவதற்காக எழுதினாரா என்பது தெரியவில்லை.
ஆலய நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை வழிபாட்டுக்குச் செல்லும் தமிழர்கள் கடைப்பிடித்தால்தான் அங்கு வரும் சிங்கள பக்தர்கள் உட்பட வெளிநாட்டினரும் கடைப்பிடிப்பார்கள் என்பது மட்டுமல்ல முன்னுதாரணமாகவும் அது இருக்கும்.