கட்டுரைகள்

வாக்குமூலம்!….. ( பகுதி 03 ) …….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

‘ரெலோ’ வின் அழைப்பிலும் -ஏற்பாட்டிலும் கொழும்பு, ‘குளோபல் டவர்’ இல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம், 21ஆம் திகதிகளில் கூடிய ‘தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின்’ கூட்டங்களைத் தொடர்ந்து, இத் தமிழ் பேசும் கட்சிகளால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படும் கடிதம் – ஆவணம் டிசம்பர் 29ஆம் திகதி கட்சித் தலைவர்களால் கையெழுத்திடப்படுமென ‘ரெலோ’ வின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அது நடைபெறவில்லை. அது நடைபெற மாட்டாது என்பது சாதாரண அரசியல் மாணவனும் முன்னமே புரிந்து கொண்ட விடயம்தான்.

‘இடையில், தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய அரசிடம் கடிதமொன்றைக் கையளிக்க முற்படுகின்றன. அந்தக் கடிதத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறி, வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் துணை போகக் கூடாது என முஸ்லிம் கட்சிகளிடம் முன்னாள் நல்லாட்சிக்கால அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியிருந்தார். (காலைக்கதிர் 28.12.2021-காலை பதிப்பு) எனவும் செய்தி வெளிவந்தது.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லையென்பது தெரிந்த விடயமே. இதனைத் தெரிந்து கொண்டும் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று அவர்களையும் வில்லங்கமாக இணைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியும் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் செய்ய முற்படுவது நடைமுறைக்குப் பொருந்தாததாகும்.(கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண சபைக்கு இரா. சம்பந்தன் அவர்கள் வடக்குக் கிழக்கு இணைப்பிற்காகப் புரிந்துணர்வுடன் கூடிய நல்லெண்ண அடிப்படையில் முஸ்லிம் ஒருவரை (ஹாபீர் நசீர் அஹமட்டை) முதலமைச்சராக்கிய, தமிழர்களின் காதில் பூச் சுற்றிய கதை இங்கு நினைவுகூரத்தக்கது).

இலங்கை அரசியல் வரலாற்றில் ரி.பி.ஜாயா மற்றும் ராசிக் பரீத் காலத்திலிருந்தே எம்.எச்.எம். அஷ்ரப் உட்பட தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வரை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவரும் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று முஸ்லிம்களையும் தமிழர்களோடு இணைத்து ஒரு தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்துவதை ஒருபோதும் விரும்பியதேயில்லை. வடக்கு கிழக்கு இணைந்த ஒற்றை மொழிவாரி மாநிலத்திற்கு அவர்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை

அன்றியும், போர்க்குற்ற விசாரணை-போரினால் பாதிக்கப்பட்டோருக்கான நிலைமாறுகால நீதி மற்றும் நிவாரணம்-காணாமல்போனவர்கள் விவகாரம்-அரசியல் கைதிகளின் விடுதலை-வடகிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னம்- உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை-அரசு அனுசரணையுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்- இன்னும் முற்றுப் பெறாமல் இருக்கும் மீள்குடியேற்றப் பிரச்சினை-வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு லட்சம் விதவைகளின் மறுவாழ்வுப் பிரச்சினை- யுத்தகாலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் அழிக்கப்பட்ட கிராமியப் பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்பும் சவால்-வறுமை

காரணமாகத் தமிழ் விதவைகள் மற்றும் இளம் யுவதிகள் எதிர்நோக்கும் கலாசாரச் சீரழிவு உட்பட பெண்ணிலைவாதச் சமூகப் பிரச்சனைகள்- யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து சுமார் பதினைந்து லட்சம் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதால் வடக்கு கிழக்கில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் – இலங்கை திரும்பாமல் இந்தியாவில் இன்னும் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் என அனுமார் வால் போல நீண்டு செல்லும் இன்னோரன்ன பிரச்சினைகளெதுவும் ஒப்பீட்டளவில் முஸ்லிம்களுக்கில்லை. எனவே வடக்குக் கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளையும் முஸ்லிம்களுடைய சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளையும் தமிழ் பேசும் மக்கள் என்ற கோதாவில் பொதுமைப்படுத்த முடியாது.

இது ஒருபுறமிருக்க, 31.12.2021 அன்று மாலை கொழும்பில் இரா. சம்பந்தன் வீட்டில் கூடிய தமிழ் பேசும் கட்சித் தலைவர்கள், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணமொன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்தனர் என்று செய்தி வெளியாகியது. (காலைக்கதிர் 01.01.2022 காலைப் பதிப்பு)

இதனைத் தொடர்ந்து இவ்வருடம் 1 ஆம் திகதி காலை இந்தப் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் வேலை கட்சித் தலைவர்களினால் கொழும்பில் சுமந்திரன் வீட்டில் நடந்தேறியது.

இறுதியில் என்ன நடந்திருக்கிறதென்றால் சுமந்திரன் முன்னின்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் தமிழ் முற்போக்குக் கட்சித் தலைவர் மனோ கணேசனுடனும் இணைந்து தயாரித்த இந்த ஆவணத்தை 02 ஆம் திகதி இரவு இணைய வழியில் சந்தித்த தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நிராகரித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் இதுதான்.

‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று குறி சுட்டுக் கொண்டு வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒத்துப்போகும் தேவை மனோ கணேசனுக்கு உண்டு. அப்போதுதான் வடக்கு கிழக்கிற்கு வெளியே குறிப்பாகக் கொழும்பில் வதியும் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்கும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) மனோ கணேசனைத் தங்களோடு இழுத்துச்செல்ல முனைவது ஏனெனில் வடக்கு கிழக்கில் குறிப்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வதியும் மலையகத் தமிழர்களின் வாக்குகளைத் தாம் எடுத்துக் கொள்ளலாமென்ற எண்ணம். மறுதலையாக மனோகணேசன், தேசிய பட்டியல் ஆசனத்துக்குத் தேவையான வாக்குகளைப் பொறுக்குவதற்காக வடக்கு கிழக்கில் வதியும் மலையகத் தமிழர்களின் வாக்குகளைக் குறிவைத்து மனோகணேசனைத் தலைவராகக் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கிற்கு வெளியே மலையகத்திலோ அல்லது குறிப்பாகக் கொழும்பு மாவட்டத்திலோ போட்டியிடுவதைத் தமிழர் முற்போக்குக் கூட்டணி விரும்பவில்லை.இந்தப் பரஸ்பர ஆதாயங்களுக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனோ கணேசனும் ஒத்துப் போகிறார்கள்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை 2018 ஏப்ரல் 21ஆம் திகதி ஷஃரான் குழுவினரால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளின் பின்னர் முஸ்லிம்கள் என்ற அடையாளத்தைத் தனித்து நின்று பேணி அரசியல் செய்ய முடியாத நிலையும் வழமைபோல் ஆட்சியிலிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணைந்து அதன் மூலம் தங்களுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் சரியோ பிழையோ இலங்கையில் உருவாகிவிட்டது. அதனை ஈடுசெய்யத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன்(?) தொற்றிக் கொண்டுதான் தங்கள் அரசியல் பயணத்தைத் தந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவை முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவதும் தமிழ் மக்களின் நலன்களைக் குறிப்பாகக் கிழக்குத் தமிழர்களின் நலன்களை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தாரை வார்ப்பதும்தானே தமிழரசுக் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே செய்துவரும் அரசியல்.

‘ரெலோ’வுக்குத் தேவைப்பட்டதென்னவெனில், தமிழரசுக் கட்சி அல்லது தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒன்றைத் தான் செய்து பேர் வாங்க வேண்டுமென்பது.

தமிழரசுக் கட்சியின் திட்டமென்னவெனில், ‘தலையிருக்க (தமிழரசுக் கட்சி) வால் (ரெலோ) ஆடுவதா? என்றெண்ணி இம் முயற்சி தங்களது தீர்மானத்தின்படி நிறைவேறினால் வெற்றிக்கனியைத் தாம் மட்டுமே புசிப்பது அல்லாவிட்டால் இம்முயற்சியைத் தவிடுபொடியாக்கி ‘ரெலோ’ வின் காலைவாரி அக்கட்சியையும் அக்கட்சியோடு சேர்ந்தோடும் ஏனைய தமிழ்க் கட்சிகளையும் குறிப்பாக ‘புளொட்’ டையும் (சித்தார்த்தனையும்) செல்வாக்கிழக்கச் செய்வது. இந்த அரசியல் சூதாட்டத்தில் வழமைபோல் தமிழரசுக் கட்சிதான் வெற்றியீட்டியுள்ளது.

சுரேஸ்பிரேமச்சந்திரன் அணி – சி.வி. விக்னேஸ்வரன் அணி- சிறிகாந்தா அணியினரின் நோக்கம் தமிழ் பேசும் கட்சிகளின் ஒற்றுமைக்குக் குறுக்கே நின்றோமென்று கெட்ட பெயர் வாங்காமல் ஓடும் புளியம் பழமும் போலப் பட்டும் படாமலும் எதிர்காலத்தில் தமது வாக்குகளைப் பாதிக்காத வகையில் இம்முயற்சியில் பங்குபற்றுவது. அதனை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இம்முயற்சியில் தலைகாட்டாமல் தனிக்காட்டு ராஜாவாக வலம்வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நோக்கம் என்னவெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘தமிழீழ’த் தாகத்தில் பிடிவாதமாய் இருந்ததுபோலத் தானும் இன்னொரு பிரபாகரன் போல் ‘இரண்டு தேசம் ; ஒரு நாடு’ கொள்கையில் உறுதியாக விட்டுக்கொடுப்பில்லாமல் இருப்பதாகக் காட்டிப் புலி ஆதரவுப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதும் (நிதி உட்பட) அதனை வைத்துத் தமிழர்களை உசுப்பேற்றித் தேர்தல்களில் வடக்கு-கிழக்கில் வாக்கு வேட்டையாடுவதுமாகும். சரித்திரத்தில் இரண்டாவது தமிழ்த் தேசியத் தலைவராகப் பேர் வாங்க வேண்டுமென்பதே அவரது ஆசை போலும்.

‘ரெலோ’வினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையில் ஒற்றை ஆட்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் சதித்திட்டம் என்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று மறுபெயர் சூட்டித் தான் தற்போது வைத்திருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ‘சமஸ்டி’ யை எதிர்த்து ஒற்றையாட்சியை ஆதரித்த கட்சிதானே.

‘ரெலோ’ கூட்டிய இத் ‘தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின்’ கூட்டமும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுத்தான். அது நீண்ட நாள் நின்று பிடிக்காது.

இவர்கள் எல்லோருமே மக்களைக் குழப்புகிறார்கள். வடக்குக் கிழக்குத் தமிழர்கள் செல்லும் திசை தெரியாது தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இக்கட்டத்திலாவது யதார்த்தத்தை உணர்ந்து இப் போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் புறமொதுக்கி மக்களுக்காக மட்டுமே அரசியல் செய்யும் மாற்று அணியொன்றினைக் கட்டியெழுப்பத் தலைப்பட வேண்டும்.

தொடரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.