மக்களுக்கு மறதியா..? , மக்களை ஆட்டிப்படைக்கும் தலைவர்களுக்கு மறதியா…? அவதானி.
தென்னிலங்கை அரசியலில் மாற்றம் வரப்போகிறது என்று ஊடகங்களும் கட்சித் தலைவர்களும் பேசிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், பெருந்தொற்றிற்கான கண்ணுக்குத் தெரியாத கிருமி பற்றியும் நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
கொரோனோ வைரஸ், ஒமிக்ரோன் எனவும் டெல்டா எனவும் திரிபடைந்துகொண்டிருப்பதுபோன்று தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவற்றின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களும் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர்களும் அண்மைக்காலங்களில் அறிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத கிருமி திரிபடைந்துகொண்டு வேறு வேறு பெயர்களில் உலாவத் தொடங்கியிருப்பதுபோன்று இந்த அரசியல் தலைவர்களும் தற்போது தமது எண்ணங்களை, கருத்துக்களை நாளுக்கு நாள் மாற்றி, திரிபுபடுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெருந்தொற்றின் தாக்கம்தான் இவர்களை இவ்வாறெல்லாம் பேசவைக்கின்றதோ தெரியவில்லை. ஆனால், இவர்கள் தமக்கு மறதிக்குணம் வந்துவிட்டதா, அல்லது காலம் காலமாக தமது தேர்தல் மேடைப்பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு, ஊடகங்களில் தாம் விடுக்கும் அறிக்கைகளையும் படித்துக்கொண்டிருக்கும் மக்களுக்குத்தான் மறதிக்குணம் வந்துவிட்டதோ என நினைக்கின்றார்களா..?
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்தவரும் இந்தக்கட்சியின் அரசில் இராஜாங்க அமைச்சராகவிருந்தவருமான சுசில் பிரேம் ஜயந்தவின் பதவி பறிக்கப்பட்ட செய்தியை அண்மையில் படித்திருப்போம்.
அவர், அமைச்சினால் தனக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் மீள ஒப்படைத்துவிட்டு, ஒரு ஓட்டோவில் ஏறி வீடுபோய்ச்சேர்ந்தார். ஒருவகையில் அவர் நேர்மையான அரசியல்வாதிதான். ஏனென்றால், கடந்த காலங்களில் பதவி இழந்த பின்னரும் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடு, குளிரூட்டப்பட்ட கார் மற்றும் வசதிகளை துறக்கவிரும்பாத அரசியல்வாதிகளை எமது சமூகம் பார்த்திருக்கிறது.
பதவி பறிக்கப்பட்டபின்னர், சுசில் பிரேம்ஜயந்த சென்ற முதலாவது பொது நிகழ்வு அமரர் பண்டாரநாயக்காவின் 123 ஆவது சிரார்த்த தின வைபவம்.
சந்திரிகா தனது, தந்தை, தாய் மற்றும் தனது கணவர் விஜயகுமாரணதுங்கவிற்குப் பின்னரும் கட்டி வளர்த்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக விளங்கிய மைத்திரிபால சிறிசேன 2015 இல் நடந்த அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இவரது வெற்றிக்கு பக்கபலமாக ரணில் விக்கிரமசிங்கா, சஜித் பிரேமதாச, சந்திரிக்கா, ஃபீல்ட் மார்ஷல் சரத்ஃபொன்சேக்கா மாத்திரம் அல்ல, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் விளங்கின.
2015 அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் யார் எதிரணியினரின் பொதுவேட்பாளர் என்பதும் தெரியாதிருந்த வேளையில், அப்பொழுது அந்த அதிபர் பதவிக்கு போட்டியிடவிருந்த மகிந்த ராஜபக்க்ஷவுடன் ஒரு இராப்போசன விருந்தில் முட்டை அப்பம் சாப்பிட்டுவிட்டுச் சென்றவர்தான் இந்த மைத்திரி.
2015 இல் இதே மைத்திரியின் தலைமையிலான நல்லாட்சிக்காலத்தில் ( ? ) நடந்த சம்பவங்களை அறிவோம். அன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கிளர்ந்தெழுந்தவர்கள் பின்னர் என்னவாகிப்போனார்கள்..? என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அவ்வாறு மறக்க நேர்ந்தாலும் பழைய ஊடகங்களை எடுத்துப்பார்த்தால் அனைத்தும் தெரியவரும்.
இது ஒருபுறமிருக்கட்டும், சமகாலத்தில் பதவியிலிருக்கும் பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சியை பதவியில் அமர்த்துவதற்காக அவர்களுடன் இணைந்திருந்த பங்காளிகளான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, நிமால் லாண்சா முதலான அரசியல்வாதிகள், அன்று என்ன பேசினார்கள், இன்று என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மறந்துவிடத்தயாரில்லை.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அங்கத்துவத்தையும் பறித்து தேசியப்பட்டியல் ஊடாக வந்து நிதியமைச்சராகியிருக்கும் பஸில் ராஜபக்ஷ , “ அரசுடன் இருப்பவர்கள் இருக்கலாம். விலகிச்செல்லவிருப்பவர்கள் விலகிவிடலாம் “ என்று பேசத்தொடங்கியுள்ளார்.
இதேவேளை விரைவில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சி உதயமாகும் என்று மைத்திரிபால சிறிசேன ஆரூடம் கூறத்தொடங்கிவிட்டார்.
அதற்கு அவர் கூறும் விளக்கம்: 1977 பொதுத்தேர்தலில் தமது கட்சி எட்டு ஆசனங்களை பெற்றதாம். தற்போது 14 ஆசனங்களுடன் நாடாளுமன்றில் இருக்கிறதாம். இந்த முன்னேற்றத்தை உதாரணமாக தமது கட்சி ஆதரவாளர்கள் ஏற்கவேண்டுமாம்.
இவர் இப்படியெல்லாம் பேசுவார் என்று தெரிந்துதானோ, என்னவோ ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் பதவிக்கு வந்தபின்னர், இவருக்கு குறைந்த பட்சம் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிகூட வழங்கவில்லை.
இந்த அமளிகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, “ இந்த அரசுக்கு முடிவுகட்டி புதுயுகம் நோக்கி பயணிப்போம் “ என்று சூளுரைக்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த தேர்தலில் தனது ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் படுதோல்விகண்ட ரணில் விக்கிரமசிங்காவும் தனது பங்கிற்கு ஏதாவது சொல்லத் தொடங்கியுள்ளார்.
இவரும் மைத்திரியும், இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு முறையாக இயங்கியிருந்தால், இன்று இவ்வாறெல்லாம் இவர்கள் பேசநேர்ந்திருக்குமா..?
அந்த நல்லாட்சியின் சூத்திரதாரிகளான ரணில், மைத்திரி, சஜித், சந்திரிக்கா ஆகியோர் இன்று தனித்தனியாக ஒவ்வொரு முனையிலும் நிற்கின்றனர்.
ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் நாம் சுமார் 39 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் நிறைவேற்று அதிபர் பதவிக்காலத்தில் நடந்த சம்பவங்களை திரும்பிப் பார்க்கலாம்.
1983 கலவரத்தையடுத்து அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது சார்பில் இராஜதந்திரி ஜி. பார்த்தசாரதியை இலங்கை அரசுடன் பேசுவதற்கு அனுப்பினார்.
அவர், நெருக்கடிகளை தணிப்பதற்காக ஒரு தீர்வு யோசனையை முன்வைத்தார். அதனை இணைப்பு சி. (Annex C ) என்பார்கள். இந்த யோசனை நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்போது அரசு சார்பு யூ. என். பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகப்
பேசலாம், வாக்களிக்கலாம் என்று கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தது. அதற்கு ஜே.ஆரும் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.
விவாதம் வந்தபோது, சிங்கள கடும்போக்காளரும் களனி தொகுதி எம். பி. யும். விஞ்ஞானக் கைத்தொழில் அமைச்சருமான சிறில் மத்தியூ அந்த இணைப்பையும் அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
மறுநாள் அவரது பதவியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜே. ஆர். பறித்தார். துணை அமைச்சர் டென்ஸில் பெர்ணான்டோ அந்தப் பதவிக்கு நியமனமானார்.
அதுபோன்று இராஜங்க அமைச்சர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் கோத்தபாய, தினேஷ் குணவர்தனா மூலம் நிரப்பிவிட்டார்.
நாட்டில் எதிர்நோக்கப்படும் பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாதிருக்கும் அரசு, அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் அரசை தக்கவைத்துக்கொள்ளப்பார்க்கிறது.
தலையணை , தலையணையாகத்தான் இருக்கும் அதன் உறைகள்தான் மாறிக்கொண்டிருக்கும்.
இந்தப்பின்னணிகளுடன், மைத்திரி, சஜித், ரணில் ஆகியோரின் அண்மைக்கால பேச்சுக்களை அவதானிக்கலாம்.
இவற்றை கவனிக்கும் மக்களுக்கு மறதிக்குணம் இல்லை என்பதை இந்த அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா..?
—0—