பாவேந்தல் பாலமுனை பாறூக் இலக்கியப் பொன் விழா!
பாலமுனை மர்ஹூம் எம்.சீ.அமீர் மண்டபத்தில் இன்று!
கிழக்கு மாகாணத்தில் வாழும் இலக்கியவாதிகளுள் பாவேந்தல் பாலமுனை பாறூக்கும் ஒருவராவார். 1970 களில் முனைப்புப் பெற்றிருந்த ஈழத்துப் படைப்பாளிகளில் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம் எழுத்தாளர் வட்டத்துள் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர்.
கவிதை, குறுங் காவியங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், கவியரங்குக் கவிதைகள் என பரந்து செல்லும் இலக்கியப் பரப்பின் சொந்தக்காரரான பாறூக் 1954.01.01 பாலமுனையில் பிறந்ததோடு, 1977 இல் அரச வங்கிச் சேவையில் இணைந்து பல பதவி உயர்வுகளையும் பெற்றுக்கொண்டார். இவர் வங்கிச் சேவையிலிருந்து 2013 ஒய்வு பெறும் போது பிரதி முகாமையாளராக பதவி வகித்தார்.
1968 இல் கவிதைத் துறைக்குள் கால்பதித்த இவரது ‘பதம்’ எனும் முதலாவது கவிதைத் தொகுதி 1987 இலும் இரண்டாவது தொகுப்பான ‘சந்தனப் பொய்கை’யினை 2009 இலும் வெளியிட்டு கவிதைத் துறைக்கான தமது பங்களிப்பில் தடம்பதித்தார். இவரது மூன்றாவது வெளியீடான ‘கொந்தளிப்பு’ குறுங் காவியம் 2010 இல் வெளியானது. ஆழிப்பேரலை அனர்த்தத்தில் நிர்க்கதியானோரின் கவலைகளை பின்னோக்கு உத்தியின் ஊடாக அசைபோடுவதே கொந்தளிப்பாகும். இந்நூலுக்கு அரச சாகித்திய மண்டலச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கதாகும்.
அதேநேரம் இவரது நாலாவது வெளியீடு 2011 இல் ‘தோட்டுப்பாய் மூத்தம்மா’ என்ற தலைப்பில் குறுங்காவியமாகவும் இவரது 5 ஆவது படைப்பான ‘எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு’ எனும் குறுங்காவியம் 2012 இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாகவும் வெளியானது. இந்நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்களாக மக்களை நிர்க்கதியாக்கிய போர்ச்சூழலை மனக்கண்முன் கொண்டு வருவதே இக்காவியமாகும்.
‘வலைக்குள் மலர்ந்த வனப்பு’ ஆறாவது வெளியீடாக 2017 இல் வெளிவந்ததுடன் 7 ஆவது வெளியீடான ‘பாலமுனை பாறூக்கின் மூன்று காவியங்கள்’ 2020 இல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு பாறூக்கின் எட்டாவது படைப்பான ‘மீளப் பறக்கும் நங்கணங்கள்’ வெளிவந்தது.
கால தொடரியின் அசைவியலுக்கேற்ப எழுதி வந்த பாலமுனை பாறூக்கின் இலக்கியப் பணியினை கௌரவிக்கும் நோக்கில் மருதமுனை முதல் பொத்துவில் வரையிலான இளம் மற்றும் மூத்த படைப்பாளிகளை உள்ளடக்கிய எழுத்தாளர் வட்டத்தின் முன்னெடுப்பில் ‘பாவேந்தல் பாலமுனை பாறூக் இலக்கியப் பொன் விழா’ நிகழ்வுகள் இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பாலமுனை மர்ஹூம் எம்.சீ.அமீர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுத்தீன் ஆகியோர் முன்னிலை அதிதிகளாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழி நுட்பபீட பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறுகிறது
இந்நிகழ்வில் பாவேந்தலுக்கான பொன் விழாக் கௌரவங்களுடன் விழா நினைவு மலரான ‘பாவேந்தல் பொன்னேடு’ வெளியீட்டு வைக்கப்படுகிறது. நூல் மீதான வெளியீட் டுரையினை எழுத்தாளர், விமர்சகர் எம்.அப்துல் றஸாக் நிகழ்த்தவுள்ளார். ‘மூன்று நவீன காவியங்கள்’ மற்றும் ‘மீளப்பறக்கும் நங்களங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வும் இடம்பெறவுள்ளன. இவைகளுக்கான உரைகளை முறையே கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசாவும் தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும் நிகழ்த்தவுள்ளனர். இவ்விழாவின் அறிமுக உரையினையும் வரவேற்புரையினையும் விழாக் குழுத்தலைவரும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவருமான ஜெஸ்மி எம்.மூஸாவும் சிறப்புரையினை சட்டத்தரணி ஏ.எம்.எம்.அன்சிலும் ஆற்றவுள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பாவேந்தல் பாலமுனை பாறூக்கினால் நடத்தப்பட்ட கவியரங்குகளில் பங்கேற்ற கவிஞர்களுக்கான கௌரவமும் இந்நிகழ்வின் போது இடம்பெறவுள்ளன.
பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழாக் குழுவினருடன் பாலமுனை மக்களும் ஒன்றிணைந்து அரங்கேற்றும் இந்நிகழ்வில் பிரதேச அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்கள், இலக்கியவாதிகள், ஊர்ப் பிரபலங்கள் மற்றும் பாவேந்தலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
கிழக்கு மாகாண கலாசார மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் வித்தகர் விருது (2014), இலங்கை அரசின் உயர் இலக்கிய விருதான கலாபூஷணம்(2019) உள்ளிட்ட விருதுகள் பலவற்றின் சொந்தக்காரரான பாலமுனை பாறூக்கின் குறுங்காவியங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் கே.சேகர் என்பவரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளமை பாறூக் சர்வதேச தேடலுக்குள்ளான படைப்பாளி என்பதற்கான சான்று எனலாம்.
ஜெஸ்மி எம்.மூஸா…
(விழாக் குழுத் தலைவர்.
பாவேந்தல் பாலமுனை பாறூக் இலக்கியப் பொன்விழா)