கட்டுரைகள்
இறுதிப் பயணம்!…. சங்கர சுப்பிரமணியன்.
பல ஆண்டுகளுக்கு முன் இறுதிப் பயணம் என்ற சிறுகதையை அக்கினிக்குஞ்சு இணையத்தில் எழுதியிருந்தேன். அக்கதையில் சிறுமாற்றத்துடன் இறுதியில் “பிறக்கும் போதம் அழுகின்றாய் என்ற பாடலையும் இணைத்து என் குரலில் ஒலிப்பதிவு செய்து இலண்டன் ILC வானொலிக்கு அனுப்பி வைத்தேன். அந்த சிறுகதை 7/01/22 அன்று இரவு எட்டு மணியளவில் ILC வானொலியில் ஒலிபரப்பானது.
இந்த ஒலிப்பதிவை இலக்கிய வட்டத்தில் சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு நண்பர் முருகபூபதி அவர்களிடமிருந்து ஒரு நீண்ட மடல் வந்தது. என் கதையைக்கேட்ட அவருக்கு பல சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன. அந்த சிந்தனையின் வெளிப்பாடாய் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன. அதைப்பற்றி என்னிடம் கேட்டிருந்தார். எனக்கு தெரிந்த மட்டில் உள்ள விரங்களை அவருடன் மடலிலேயே பகிர்ந்தேன். என் மடலைப் பார்த்த அவர் இதையே சற்று விரிவாக்கி ஒரு கட்டுரையாக எழுதலாமே என்றார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதோ எனது கட்டுரை. கட்டுரையை தொடங்கும் முன் அந்த கதைபற்றி ஒரு கதைச்சுருக்கம். இந்திரன் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள எழுத்தாளன். அவனொரு சீர்திருத்வாதி. கொள்ளிபோட்டு பிணத்தை எரிப்பதில் அவனுக்கு உடன் பாடில்லை. அதற்கு அவர் வைக்கும் காரணம் ஆண் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளே இல்லாதவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதுதான். அதனால் அவர் இறப்பதற்கு முன் தனக்கு கொள்ளிபோட்டு எரிக்க வேண்டாம் என தன் குடும்பத்தாரிடம் உயிரோடு இருக்கும்போதே சொல்லிவிட்டார். அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் இருந்தும் அவர் இறந்தபின் கொள்ளிபோடாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் மேடையில் இருந்து புதைகுழிக்குள் இறங்கும்போது அவருக்கு பிடித்தமான “பிறக்கும்போதும் அழுகின்றாய் இறக்கும்போதும் அழுகின்றாய் ஒருநாளேனும் கவலியில்லாதல் சிரிக்க மறந்தாய் மானிடனே”என்ற பாடல் காணொலிக்காட்சியாக ஓடுகிறது. அவர் உடல் கீழே இறங்க இறங்க அங்கே இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டவர்களின் மனதில் உயர்ந்து கொண்டே போகிறார் என கதை முடிகிறது. இப்போது சந்தேத்திற்குண்டானவற்றை சற்று அலசுவோம். புதைக்கும் பழக்கமும் எரிக்கும் பழக்கமும் எப்படி தோன்றியிருக்க கூடும் என்பதைப் பார்ப்போம். பண்டைத் தமிழர் ஓரிடத்தில் நிரந்தரமாய் வாழ்ந்து வந்தார்கள். ஒரு இனம் ஓரிடத்தில் நிரந்தரமாக வாழும்போதுதான் அது மறமலர்ச்சியடைந்து அவர்களின் நாகரீகம் தோன்ற ஆரம்பிக்கிறது. அப்படி வாழ்ந்த நாகரீகத்தின் மூலமே அவர்களது பண்பாடு என்ன? அவர்களின் கட்டுமாணம் எப்படி இருந்தது? நீர் மேலாண்மை, உணவு, உற்பத்தி, விவசாயம் போன்றவற்றை ஆராய முடிகிறது. இப்படி நிரந்தரமாக வாழ்ந்த நம்மக்கள் இறந்தவர்களை புதைத்து புதைத்த இடத்தில் கல்லை நட்டு அக்கல்லை வணங்க ஆரம்பித்தார்கள். அந்தவகையில் உருவானதே நடுகல் வழிபாடு. இந்த நடுகல் வழிபாட்டின் நீட்சிதான் சிலையை நட்டு கோவிலைக் கட்டி கடவுளாக வழிபடும் முறையாக மதம் தோன்றியதும் மாற ஆரம்பித்தது. அதைத்தான் சிவவாக்கியரும் நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்று சிலையைப்பற்றி் சொல்லுயிருக்கிறார். அந்த சிலை ஒரு அடையாளமே. மற்றபடி கடவுளும் கடவுள் என்ற எண்ணமும் மனதுக்குள்தான் இருக்கிறது. சில இனமக்கள் உணவுக்காகவும் அவர்களது தொழில்சார்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்களால் நிரந்தரமாக ஓர் இடத்தில் வாழ்பவர்களைப் போல் இறந்தவர்களை அதே இடத்தில் புதைக்கமுடியாது. ஏனென்றால் திரும்ப அதே இடத்திற்கு வந்து புதைத்த இடத்தில் தொழமுடியாது. அவர்கள் எங்கெங்கோ சென்றிருப்பார்கள். ஆதலால் இறந்தவர்களை எரித்து விடுவார்கள். எப்படி போரில் எதிரிகள் துப்பாக்கி சூட்டின்போது மடிந்து போகும் சகபோரளியின் சடலத்தை அங்கேயே விட்டு போய்விடுவார்களோ அதேபோல் புலம் பெயர்ந்து கொண்டே இருப்பவர்களும் தம்மோடு பயணித்தவர்கள் மடியும்போது அவர்களை அங்கேயே எரித்துவிட்டு அவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள். பின் மதங்கள் தோன்றியதும் அவரவர் மதக்கோட்பாட்டின்படி எரிக்கவோ புதைக்கவோ செய்தார்கள். இதில் கோரோணா பாதிப்பால் இறப்பவர்களை எரிக்க வேண்டும் என்று அரசு சொல்லும்போது அதிலுள்ள நியாயத்தையும் மீறும்போது ஏற்படும் பின்விளைவுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இருதரப்பும் பேசி முடிவெடுக்கவேண்டிய ஒன்று. இக்கதையின் வாயிலாக எதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று திரு. முருகபூபதி என்னிடம் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அடக்கமோ தகனமோ இரண்டையும் நான் ஏற்கிறேன். ஏனென்றால் இந்த இரண்டு வழக்கமும் என் குடும்பத்தில் நடந்தேறியுள்ளது. இறந்தபின் உடலை மண் தின்கிறதா அல்லது நெருப்பு தின்கிறதா என்று தெரியவா போகிறது. இக்கதையில் எரியூட்டும் வழக்கையுடைய இந்திரனுக்கு கொள்ளி வைப்பதில் உடன்பாடில்லை. அதற்கு காரணம் இறந்தவர்களுக்கு மகன்தான் எரியூட்ட வேண்டுமாம். அவருக்கு மகன்கள் இருந்தும் அவர் அதை விரும்பவில்லை. ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுடைய மனம் என்னபாடுபடும் என்ற நல்லெண்ணம்தான் சீர்திருத்தவாதியான அவரை இந்த முடிவெடுக்க வைத்தது. கொள்ளி வைப்பதும் எரியூட்டுவதும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டிருப்பதால் ஏற்பட்ட வெறுப்பால் எரியூட்டவே வேண்டாமென்று அடக்கம் செய்ய சொல்லியிருக்கிறார். என் விருப்பத்தையே இந்திரன் வழியாக சொல்லியிருக்கிறேன். இதையே நான் கதையிலும் சொல்லி முடித்திருக்கிறேன். எனக்கு மதச்சடங்கில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் நூற்றுக்கு நூறு பின்பற்றுவதில்லை. என் குடும்பத்தினரிடம் என் கருத்துக்களை திணிப்பதில்லை. திருடனாயப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல் நான் பிள்ளையாரையும் உடைப்பதில்லை பிள்ளையாருக்கு தேங்காயும் உடைப்பதில்லை என்ற நிலைப்பாடுதான் எனக்கு. மதச்சடங்கினால் வீணாக பணம் விரயமாகிறது. செல்வந்தர்கள் இந்த சடங்கிற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். வறுமைக் கோட்டில் வாழ்பவர்களும் நடுத்தரவர்க்கத்தினரும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களைக்கு மட்டுமே தெரியும். எதற்காக யாருடைய நன்மைக்காக இந்த மதச்சடங்குகள் கட்டாயமாக்கப்பட்டு அதில் சிலந்திவலையில் அகப்பட்ட பூச்சிகள்போல் மக்கள் சிக்கித் திண்டாடி தவிக்கிறார்கள். இதை அவரவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும். இக்கட்டுரை மூலம் நண்பர் திரு. முருகபூபதி அவர்களின் சந்தேகங்களையும் கட்டுரையாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். -சங்கர சுப்பிரமணியன்.