கவிதைகள்
தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர்!…. ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம்
பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
தையெனவே எண்ணி தான்மகிழ்ந்து நிற்போம்
தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
தைப்பொங்கல் வாழ்வில் தனிதிருப்பம் அளிக்கும்
உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும்
பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
சூழ்ந்திருந்து சுவையாய் சுவைக்கும்படி வைக்கும்
பட்டாசு மத்தாப்பு வாங்குவென வுரைக்கும்
பட்சணங்கள் செய்து பகிரவென்றும் பகரும்
புத்தாடை உடுத்துவென புத்தூக்கம் கொடுக்கும்
புத்தரிசி கொண்டுமே பொங்குவெனச் சொல்லும்
முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்ற வைக்கும்
மூத்தோரின் கால்தொட்டு பணியும்படி வுரைக்கும்
அத்தையொடு மாமாவின் ஆசியையும் பெற்று
அணைத்துமே பொங்குவென அதுவுரைத்து நிற்கும்
புதுப்பானை எடுத்துப் பொங்கிலிடச் செய்யும்
பொங்கிவரும் பால்பார்க்க சுற்றிநிற்கச் சொல்லும்
பருப்போடு பச்சரிசி பானையிட வைக்கும்
பக்குவமாய் சர்க்கரையும் சேர்த்துவிடச் செய்யும்
பொங்கிவரும் பால்பார்த்து பூரிப்பு அடைவோம்
மங்கலங்கள் வாழ்வென்றும் நிறைகவென நினைப்போம்
சங்கடங்கள் சாம்பலாய் ஆகவென எண்ணி
சகலருமே இறைவனிடன் தான்வேண்டி நிற்போம்
அறமுடைய அரசாட்சி அமைந்துவிட வேண்டும்
ஆன்மீகம் அகமதிலே அமர்ந்துவிட வேண்டும்
அறநினைப்பு அகமதிலே எழுந்துவிட வேண்டும்
அனைத்துக்கும் பொங்கல் வழிசமைக்க வேண்டும்
மாநிலத்தை வதைத்தெடுக்கும் மாநோயகல வேண்டும்
மனமார அனைவருமே அதைநினைக்க வேண்டும்
மனவமைதி மனமகிழ்வு மனநிறைவு பெருக
மனமுருகி அனைவருமே வேண்டிடுவோம் வாரீர்
பாலாக இருப்போம் சர்க்கரையாய் இருப்போம்
பக்குவமாய் யாவருக்கும் சுவைகொடுத்து நிற்போம்
தேனாக இருப்போம் சேர்கவென அணைப்போம்
தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா.