கட்டுரைகள்
அஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை!… (பாகம் 1 ) ….. கிறிஸ்டி நல்லரெத்தினம்.
எங்க நாட்டிலே………
(நாலு வார நச் தொடர் ) அஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை!… தை மாத கோடை வெயிலில் தன் கப்பலை விட்டு கேப்டன் ஆத்தர் பிலிப் அந்த அஸ்திரேலிய கடற்கரை வெண் மணலில் தன் சகாக்களுடன் தடம் பதித்தான். அன்று ஜனவரி 26ம் திகதி 1788. மெதுவாக திரும்பி தான் 252 நாட்கள் பயணித்த அந்த கப்பல்களை சோர்ந்து போன பார்வையால் அவன் கண்கள் அளந்தன. மொத்தம் பதினெரு பாரிய கப்பல்கள் பாய் விரித்து கம்பீரமாக சிட்னி பொட்ணீ குடாவில் நங்கூரமிட்டிருக்கும் காட்சி அவன் முன்னால் உள்ள பாரிய கடமையை அவனுக்கு நினைவூட்டிற்று. தனது முன்னேடியான கேப்டன் ஜேம்ஸ் குக் 1770 இல் இந் நாட்டை இனங்கண்டு இந்த மண்ணில் ஒரு நாட்டை உருவாக்கும் சாத்தியம் பற்றி பேசினான். இப்போது அந்த பாரிய பொறுப்பு இவன் கையில்! பிரித்தானியாவில் இருந்து வந்த இந்த First Fleet எனும் முதல் கடல்படை அமைக்க இருக்கும் ‘கைதிகள் காலனி’ (penal colony) அவன் எண்ணங்களை நிரப்பிற்று. அதே வேளை, அவனின் ஒவ்வொரு அசைவையும் அக்கடற்கரையை ஒத்த மரங்களின் பின்னால் இருந்து சில ஜோடிக் கண்கள் வியப்பும் பீதியும் கொண்டு நோக்கிற்று. திடகாத்திரமான கரிய மேனி, சுருள் முடி., கூரிய கண்கள். அவர்கள் மனத்தில் எழுந்த கேள்விகள் எல்லாம் ஒன்றே : “யார் இந்த வெள்ளை தேவதைகள்? விசித்திரமான ஆடைகள். புரியாத பாஷைகள்…. எமது கடற்கரையில் இவர்களுக்கு என்ன வேலை?”. பிறந்த கேள்விகளுக்கு விடை இல்லை. தங்கள் கைகளில் இருந்து கூரிய ஈட்டிகளை கெட்டியாக பிடித்தபடி அங்கிருந்து பின் வாங்கி அவர்கள் காட்டுடன் கலந்தனர். கப்பல்களில் கேப்டன் ஆத்தர் பிலிப் கொண்டு வந்தது தங்கப் பாளங்களோ வைரங்களோ அல்ல! பிரித்தானியாவின் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்ட 775 கைதிகள்; 193 பெண் கைதிகள் உட்பட! இவர்கள் தங்கள் தண்டனை காலத்தை இங்கு தான் கழிக்கப் போகிறார்கள். இவர்கள் மட்டுமா? மொத்தத்தில் 1480 ஆண், பெண், குழந்தைகள், சில மந்தை மிருகங்கள் குதிரைகள், விதை நெல், கோதுமை பழவகைகள் என ஒரு புதிய சமுதாயமே இந்த புதிய மண்ணில் கால் பதித்து ஒரு புதிய உலகை உருவாக்கும் வேட்கையில் அல்லவா வந்துள்ளனர்! காலம் தாமதிக்காமல் மறு வாரமே கட்டுமான வேலைகள் தொடக்கப்பட்டன. சிறைக்சாலைகள், அதிகாரிகள் குடும்பங்கள் தங்குமிடம், சிறுவருக்கான பாடசாலை, ஆலயம், மருத்துவ நிலயம் என ஒரு புதிய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் எல்லா கட்டிடங்களும் கடும் உழைப்பினால் கைகூடிற்று. விடுப்புப் பார்க்க வந்த பூர்வீக குடிமக்களும் விலங்கிட்டு கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லாம் அன்று விதைத்த அந்த நம்பிக்கை வித்து ஒரு விருட்சமாய் வளர்ந்து அஸ்திரேலியா எனும் ஒரு பெரும் தேசமாய் வார்ந்து இன்று வந்தாரை வாழ வைக்கும் நாடாக மிளிரும் என எண்ணினோமா? இவர்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிய சரித்திர பின்னணிதான் என்ன? 1700 களில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி பரவத் தொடங்கி யந்திரமயமாக்குதலின் எச்சங்களாக அனேக தொழிலாளிகள் வேலை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய காலம் அது. திருட்டும் மற்ற சட்டவிரோத செயல்களும் மலிந்து பிரித்தானியாவின் சிறைகள் நிரம்பி வழிந்தன. அமேரிக்காவின் 1776 சுதந்திர பிரகடனத்தின் பின் பிரித்தானிய சிறை கைதிகளை அங்குள்ள கைதிகள் காலனிகளுக்கும் அனுப்ப முடியாத நிலமை. இதற்கு தீர்வுதான் என்ன? பிரித்தானிய அரசுக்கு உதித்தது ஒரு எண்ணம் : தமது சாம்ராஜ்ஜியத்தை மேலும் விரிவடைய செய்யவும் கைதிகளின் செறிவை குறைக்கவும் இவர்களை கப்பலேற்றி ஒரு புதிய உலகை அமைக்க தொலைதூரத்திற்கு அனுப்பினால் என்ன? இத்திட்டத்தின் உதயம்தான் இந்த புதிய பூமி! ஆனால் இந்தப் பூமி இவர்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லவே இல்லை! இக் கண்டத்தின் பூர்வீக குடிமக்கள், கப்பலில் வந்து இறங்கிய இந்த வெள்ளை விசித்திர மனிதர்களை வியப்புடன் நோக்கினார்கள். இம்மண்ணின் மைந்தர்கள் அஸ்திரேலியாவை 40, 000 முதல் 60.000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தடைந்தார்கள் என ஆராட்சிகள் கூறுகின்றன. இவர்கள் ஒரு காட்டுவாசி வாழ்க்கையை வாழ்ந்து ஆன்மீக மற்றும் ஆடல், பாடல் கலை மரபுகள் பலவற்றை நிறுவினர். கடல் சூழ்ந்த கண்டத்திற்கு இவர்கள் எங்கிருந்து வந்திருக்கலாம் என அனேக ஆய்வுகள் ஊகிக்கின்றன. இவர்களின் முகவெட்டு மற்றும் உடல் வாகு போன்றவை தென் ஆசிய மக்களை ஒத்து இருப்பதால் இவர்கள் அப்பிரதேசங்களில் இருந்து குடிநகர்ந்து இருக்கலாம் என்பதும் ஒரு சாராரின் கருத்து. பல மில்லியன் வருடங்களுக்கு முன் கண்டங்கள் இணைந்து அருகருகே இருந்ததால் இது சாத்தியமாய் இருந்திருக்கலாம். கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஓவியக்கலையில் வல்லவர்கள். மூதாதையர்கள் தங்கள் “கனவுக்கதைகளை ‘ கற்குகைகளில் ஓவியமாக வரைந்து வைத்தார்கள். மேலும் இவர்களுக்கே உரித்தான வண்ண புள்ளிக் கோலங்களில் வரையும் ஒவியங்களுக்கு உலக ஓவியச் சந்தைகளில் இன்றும் மவுசு அதிகம். 1788 இல் ஐரோப்பியர் கால்பதித்த நாட்களில் இந்த மண்ணின் மைந்தர்களின் ஜனத்தொகை 750,000 ஆக இருந்திருக்கும். 500 வகையான பழங்குடியினர் இக் கண்டத்தில் தங்கள் சொந்த மொழி பேசி வாழ்ந்தனர் என்பது ஒரு சிறப்பு. பழங்குடியினருக்கும் விசித்திர மனிதருக்கு மான உறவு நாளடைவில் முறுகலாக மாறி பல எதிர்ப்புகளுக்கு வித்திட்டது. அந்நாட்கள் இந்த அப்பாவி குடியினருக்கு இருண்ட நாட்களே. அடக்குமுறையும் அறிமுகப்படுத்தப்பட்ட சின்ன அம்மை போன்ற நோய்களும் இவர்கள் எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. எந்த ஒரு தேசத்தின் உதயத்திலும் எழும் பிரவச வேதனையின் ஓலத்தில் அந்நாட்டின் பூர்வீக குடிகளின் முனுகல்கள் மெளனமாக மடிந்து போவது ஒரு நியதி அல்லவா? இன்றும் பல பழங்குடி அமைப்புகள் 26 ஜனவரி 1788 ஐ “படையெடுப்பு நாள்” ஆக கணித்து “அஸ்திரேலியா நாளை” புறக்கணித்து வருகின்றன. சரி, மீண்டும் சரித்திரத்திற்கு வருவோமா? 1788க்கும் 1868க்கும் இடையில் 165,000 கைதிகள் அஸ்திரேலியாவிற்கு அனுப்பப்ட்டு கைதிகளின் நகர்வு 1868 இல் முடிவுக்கு வந்தது. சிறைத் தண்டணையை பூர்த்தி செய்த கைதிகள் சாதாரண பிரஜைகளாக வாழம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் வாழ்ந்த காலனிகள் இன்றும் தஸ்மேனியா போர்ட் ஆத்தர், சிட்னி ஜட் பார்க் பரக்ஸ் போன்ற UNESCO பாதுகாப்பு மையங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் இந்நாட்டுக்கு விஜயம் செய்தால் நிச்சயம் அருங்காட்சியகங்கள் மட்டுமல்லாது இந்த இடங்களையும் பார்த்தே ஆக வேண்டும். மாஜி கைதிகள் மட்டும் இம் மண்ணை நிரப்பவில்லை. 1793 முதல் free settlers என அழைக்கப்பட்ட ‘தூய பிரஜைகள்’ பிரித்தானியாவில் இருந்து இங்கு வரத் தொடங்கினர். இவர்கள் இங்கு வாழ்வை தொடங்குவதற்கான எல்லா வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. சிறு துளிகளாக ஆரம்பித்த இவர்கள் வரவு ஒரு பெரு வெள்ளைமாக 1850 இல் பெருக்கெடுக்க காரணமானது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான்! ஆம், உங்கள் ஊகம் சரிதான்! விக்டோரியா மானிலத்தில் உள்ள பென்டிகோ, பலராட் நகரங்களில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விடுவார்களா இவர்கள்….. தங்க வேட்டை ஆரம்பம்! என்ன?…. உங்களை ஒரு சரித்திர வகுப்பபில் உட்கார வைத்து விட்டேனோ? ஒரு தேசத்தின் ஆத்மாவை புரிந்து கொள்ள அதன் உதயத்தையும் அந்த பிரவச வேதனையில் எழுதப்பட்ட வேதனை வரிகளையும் நாம் மறு விஜயம் செய்துதானே ஆகவேண்டும்? அஸ்திரேலியாவின் மாநிலங்களையும் ஆட்சி முறையையும் சுவாரசியமான சுற்றுலாக்கள் பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாமே! (தொடரும்)
வரலாற்றில் வாழ்வார் கிறிஸ்டி நல்லரெத்தினம்.வாழ்த்துகின்றேன்!