இலக்கியச்சோலை

காலத்தை வென்று வாழும் கலை இலக்கியவாதி அன்புமணி, இரா.நாகலிங்கம்!….. சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

அன்பிற்குரிய இரா. நாகலிங்கம் அண்ணன் அவர்கள் 2014 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, மறைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந் தபோது

தாங்க முடியாத துயரில் தவித்தேன். தான் புனைந்துகொண்ட “அன்புமணி” என்ற பெயருக்கேற்றவாறே எல்லோரிடத்தும் அன்புள்ளவராக வாழ்ந்த பெருமைக்குரியவர் அவர். தமிழ் இலக்கியத்தைத் தன் உயிரினும் மேலாக நேசித்த பெருமகன். தான் எழுதுவதுடன் மட்டுமன்றி, மற்றையோரை எழுத ஊக்குவிப்பதிலும், மற்றையோரின் படைப்புக்களை வெளிக்கொணர்வதிலும் அவர் ஆற்றிய பணிகள் அளவற்றவை, தன்னிகரற்றவை.

அன்புமணி அண்ணன் அவர்கள், மிகச்சிறந்த நிர்வாகி, நேர்மையான அரச அதிகாரி, என்றுமே சோர்வடையாத இலக்கிய ஊழியன், தனித்துவம் மிக்க படைப்பாளி என்னும் எல்லாவகையான சிறப்புக்களுக்கும் மேலாக, மனிதாபிமானம் மேலோங்கி நின்றதோர் உயரிய “மனிதனாக”வும் வாழ்ந்த செம்மல்!

இலங்கையின் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் தடித்த எழுத்துக்களால் நிரப்பப்படும் பல பக்கங்கள் அவருக்குரியதாக இருக்கும். கதை, கட்டுரை, நாடகம், நாவல், விமர்சனம், நேர்காணல் என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்துப் புகழ்பெற்ற எழுத்தாளரகத் திகழ்ந்த அன்புமணி அவர்கள், இளமையிலிருந்தே இதழாசிரியராக இணையற்ற ஈடுபாட்டுடன் வலம் வந்தவர். இப்போதய இதழாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்தவர், பல சிற்றிதழ்களுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இவற்றுடன் மட்டுமன்றி, நாடக நடிகராக, இயக்குனராக, நல்லதொரு கலைஞராகத் தமிழ்க் கலை உலகிலும் பிரகாசித்தவர்.

அன்புமணி அவர்களை எனது அரும்பு மீசைக்காலத்திலிருந்து நான் அறிவேன். என்னையும் அவர் அறிவார். அந்த நாட்களில் மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை பிரதேச ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் வருடா வருடம் நடாத்திவந்த நாடகப் போட்டிகளுக்கு நடுவர்களில் ஒருவராக அன்புமணி அவர்கள் கடமையாற்ற வருவார். களுவாஞ்சிக்குடி இளம் நாடக மன்றம்; நாடகம், நாட்டுப்பாடல் போட்டிகளில் பலதடவைகள் முதற் பரிசுகளைப் பெற்று வந்தது. மன்றத்தின் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தவன் என்றவகையில் அன்புமணி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரது கலை

உள்ளத்தில் எனக்கும் ஓர் இடம் கிடைத்தது. அந்த நட்புறவு இறுதிவரை தொடர்ந்திருந்தது.

1952 இல் கல்வித்திணைக்கத்தில் எழுதுவினைஞராக அரச சேவையில் சேர்ந்த அவர், 1970 களில் மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தில் நிதி உதவியாளராகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டு, இலங்கை நிர்வாக சேவையின் உள்ளார்ந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, இரா.நாகலிங்கம் அவர்கள்

களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட்ட்டக்களப்பு கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபையின் உள்துறை உதவிச் செயலாளர், ஆளுனர் அலுவலகத்தின் சிரேட்ட உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளில் அமர்ந்து மக்கள் பணியாற்றியவர். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றபின்னர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமன் அவர்களின் செயலாளராகக் கடமையாற்றினார்.

அன்புமணி அவர்கள், ம.தெ.எ.பற்று உதவி அரசாங்க அதிபராக, களுவாஞ்சிக்குடி அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் அந்தப்பகுதி மக்களுக்குச் செய்த சேவைகள் அளப்பரியவை. பெரும்பாலும் அதிகார தோரணையுள்ள அதிகாரிகளையே கண்டு பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு, அன்பாகப் பேசி, மனிதாபிமனத்துடன் பிரச்சினைகளை அணுகி உதவிசெய்யும் ஓர் அதிகாரியின் செயற்பாடு நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால் அன்புமணி அண்ணனை அந்தப்பிரதேச மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணமின்றித் தேங்கிக்கிடந்த கோப்புக்கள் பல அசுர வேகத்தில் நகரத் தொடங்கின. இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில், எத்தனையோ வகையான இடர்ப்பாடுகளுக்கும், அசெளகரியங்களுக்கும் மத்தியிலும் அவர் தனது அரசபணியினை மிகவும் ஆளுமையுடன் ஆற்றி, மக்கள் மனதில் மாமலையாக உயர்ந்து நின்றார்.

என்னை ஒரு நூலாசிரியராக ஆக்கிய பெருமை அண்ணன் அன்புமணி அவர்களுக்கே உரியது. கொழும்பில் நான் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது, களுவாஞ்சிக்குடியில் உதவி அரசாங்க அதிபராக இருந்த அவர் ஓருநாள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, எனது நாடகங்களை நூலாக்க விரும்புவதாகவும், அவற்றைத் தன்னிடம் தரும்படியும் கேட்டார். அதன்பின்னர் அவரே என் வீடுக்குச் சென்று, என் மனைவியிடம் எனது நாடகப் பிரதிகளைப் பெற்று, நடிப்பதற்காக எழுதப்பட்டிருந்த அந்த நாடகங்களில் நூலாக்கத் தகுந்தவையெனக்கருதிய ஆறு நாடகங்களை, ம.தெ.எ.பற்று கலசாரப் பேரவையின் சார்பில் “சந்ததிச் சுவடுகள்” என்ற பெயரில் நூலாக்கம் செய்து, 1988 ஆம் ஆண்டு வெளியீட்டுவிழாவும் நடாத்தினார். நான் பிறப்பதற்கு முன்னரே, 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ என்னும் மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிப்புகழ்பெற்றிருந்த அண்ணன்

அன்புமணி அவர்கள், எனது நாடகங்களை நூலுருவாக்கியமை எனது பாக்கியம் என்றே கருதுகிறேன். இதனைப்போல எத்தனையோ நூல்கள் வெளிவரக் காரணவானாக இருந்து பலரை எழுத்துலகுக்கு அவர் இழுத்துக்கொண்டுவந்து அறிமுகமாக்கியிருக்கிறார்.

1991 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர், கடிதங்களும், தொலைபேசியும் தொடர்ந்து எங்கள் உறவைப் பேணிவந்தன. ஒவ்வொரு தடவையும் ஊருக்கு நான் வந்தபோது எங்கிருந்தாலும் அவரைச் சென்று பார்த்தேன், கதைத்தேன், பல விடயங்களை பரிமாறி மகிழ்ந்தோம். கடந்த 2010 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு நூல்நிலைய மண்டபத்தில், எனது நூல் வெளியீட்டை அவராகவே ஒழுங்கு செய்து, மிகவும்சிறப்பாக நடாத்தி என்னைப் பெருமைப்படுத்தினார்.

அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 2013 இல்

அவசரமானதொரு பயணத்தில் வந்து சில நாட்களே தங்கிநின்றபோதும், நண்பர் ஓ.கே. குணநாதனுடன் ஆரையம்பதிக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்கூட, அவரது விபத்துப்பற்றித் தெரியாத நிலையில், ஓர் இலக்கிய விழா விடயமாக அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அப்போது அவர் பேசமுடியாத நிலையில் இருந்ததை அவரது சகோதரிமூலம் அறிந்து, சில நாட்களின் பின்னர் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறினேன். ஆனால், இனி எப்போதுமே அவரக் காணமுடியாமலும், கதைக்க முடியாமலும் போய்விடும் என்று அப்போது நான் நினைத்ததில்லை.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி என்னும் அழகிய கிராமத்தில், 1935 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் திகதி, வைரமுத்து இராசையா – பொன்னர் தங்கப்பிள்ளை தம்பதிகளின் மகனாகப் பிறந்த நாகலிங்கம் அவர்கள் தனது பதின்ம வயதுகளிலேயே கலை, இலக்கிய முயற்சிகளில் கால் பதித்தவர். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் பிரபல்யமாகிக்கொண்டிருந்த அவரின் முதலாவது ஆக்கமே இலக்கிய உலகில் அவரைப் பளிச்சென அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்திருக்கிறது.

இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இந்தியப்பத்திரிகைகளில் பிரசுரமாவதென்பது மிகவும் அரிதாக இருந்த அந்தக்காலத்தில், 1954 ஆம் ஆண்டு, ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பிலான அவரது முதலாவது படைப்பே இந்தியப்பத்திரிகையான கல்கி இதழில் பிரசுரமானது என்றால் அன்புமணி அண்ணனின் இலக்கிய ஆற்றலை என்னென்பது?

500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதிக் குவித்திருக்கும் கிழக்கிலங்கையின் மாபெரும் இலக்கியவாதியான அன்புமணி அவர்களின் ஆக்கங்கள், இலங்கை இந்தியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும்

வெளிவந்துள்ளன. அவரின் பல நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. “நமது பாதை” என்ற பெயரிலான அவரது நாடகம், 1967 ஆம் ஆண்டு மூன்று மாதங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.

1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை ” மலர்” என்ற பெயரில் அவர் வெளியிட்டுவந்த இலக்கிய சஞ்சிகை இலங்கை இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக விளங்கியிருக்கிறது. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்களின் “செங்கதிர்” இதழின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறைசெலுத்தியிருக்கின்றார்.

அன்புமணி அவர்கள் தமது படைப்புக்களை, இல்லத்தரசி (சிறுகதை) 1980, ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989, வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992, ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995, தமிழ் இலக்கிய ஆய்வு, எட்டுத் தொகை பத்துப்பாட்டு அறிமுக நூல் 2007, பதினெண் கீழ்கணக்கு அறிமுக நூல் 2007 ஆகிய தலைப்புக்களில் ஏழு நூல்களாக வெளியிட்டுள்ளார். நூலுருப் பெறாத ஆக்கங்கள் இன்னும் பல உள்ளன என்று தெரியவருகிறது.

அவர், தனது அன்பு வெளியீட்டகத்தின் மூலம் பிற எழுத்தாளர்களின்

பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

மாகோன் வரலாறு – தங்கேஸ்வரி, குளக்கோட்டன் தரிசனம் – தங்கேஸ்வரி

நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,

மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ், வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ், நீறுபூத்த நெருப்பு (நாடகங்கள்) – ஆரையூர் இளவல், செல்லத்தம்பி என்பவை அவற்றில் சிலவாகும்.

இந்து சமய விவகார அமைச்சின், தமிழ்மணி விருது(1992), வட – கிழக்கு மாகாண ஆளுனர் விருது(2001), இலங்கை அரசின், கலாபூஷணம் விருது (2002), மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவையின் ‘இலக்கியச்சுடர் விருது ‘(2003) ,காத்தான்குடி சமாதானப்பேரவையின் ‘சமாதானக்காவலர்’ விருது, சிந்தனைவட்டம் வழங்கிய ‘பல்கலை வித்தகர்’

பட்டம் (2008) இவ்வாறு தேசீய அளவிலும், பிரதேச மட்டத்திலும் பல்வேறுவிருதுகள் அவரை அடைந்து சிறப்புப் பெற்றன.

அன்புமணி இரா. நாகலிங்கம் அவர்களது மறைவினால், தமிழையும், தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் நேசித்த, உள்ளத்தால் உயர்ந்ததொரு மனிதனை, தமிழ்க்கலையையும், தமிழ் இலக்கியத்தையும் தனது இரு கண்களாகப் பேணிய ஒப்பற்ற இலக்கிய வாதியை, உலகத்தமிழ் இலக்கிய உலகம் – குறிப்பாக இலங்கைத் தமிழ்க்கலை, இலக்கிய உலகமும் சிறப்பாக மட்டக்களப்புத் தமிழகமும் – இழந்து நிற்கின்றன. அவரின் இடத்தினை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.

அன்புமணி அண்ணனின் பெயரும், புகழும் காலங்களைக் கடந்து வாழும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.