சிங்கப்பூரில் சிலகாலம்!…. 47 …. (உண்மைக்கதையின்: நிறைவுப் பகுதி) ….. ஏலையா க.முருகதாசன்.
எனக்கும் யோகமலருக்கும் வேலையும் வீடுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.
வீட்டு வேலைகளில் நான் ஏதாவது உதவி செய்யலாம் என்றால் அதற்கும் அவள் விடுவதில்லை.ஒருநாள் நான் குளித்துக் கொண்டிருந்த போது,வாளிக்குள் உடுப்புக்கள் நனையப் போட்டிருப்பதைக் கண்டு நான் அவற்றை எடுத்து சவர்;க்காரம் போட்டு அலம்பி வைச்சுவிட்டு குளித்து முடிஞ்சு வெளியே வந்ததும் அவற்றை மூங்கில் தடியில் கொழுவிக் காய விட்டிட்டு வந்து உடைமாற்றிக் கொண்டிருக்கையில்,குளிக்கப் போன யோகமலர் திரும்பி வந்து „ நீங்க ஏங்க உடுப்புக்களை கழுவிப் போட்டீங்க’ என்றாள்.
„ ஏன் கழுவிப் போட்டா என்ன’ என்று கேட்க,’இல்லைங்க என்னுடைய அண்டர்வேரையும் கழுவிப் போட்டிருக்கீங்க அது எனக்கு ஒரு மாதிரியா இருக்குதுங்க வெட்கமாயிருக்கு’ என்றவளை அணைத்து’ புருசன் பெண்சாதி என்றால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.’உங்கடை அண்டர்வேரைத் தோய்ச்சதிலை எனக்கு சந்தோசந்தான் நீங்கள் எனக்காக வாழுறீங்க’ என்றவுடன் „ அக்காவுக்கும் இப்படித்தான் கெல்ப் பண்ணிவீங்களா’ என்றாள்.
ஓம் என்று தலையாட்ட „அக்கா கொடுத்து வைச்சவங்க, நானுந்தான்’ என்றவள் நெகிழ்ந்த மனதுடன் குளிக்கப் போனாள்.
வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோவிலுக்குப் போவோம்.சனி ஞாயிறுகளில் தியேட்டரில் படம் பார்ப்போம்.சில நாட்களில் சனி ஞாயிறுகளில் தமிழச் சாப்பாட்டுக் கடைகளிலோ,சீனச் சாப்பாட்டு கடைகளிலோ,மலேய்ச் சாப்பாட்டுக் கடைகளிலோ சாப்பிடுவோம்.
படம் பார்க்கப் போகும் நாட்களில் படத்தின் பெயரைக் கேட்டுப் பிடிச்சுக் கொண்டால் லீலாவும் அவளின் சினேகிதியும் எங்களுடன் வருவார்கள்.
லீலாவின் தமிழ்ச் சினேகிதி ஒரு பங்களாதேஸ் இளைஞனைக் காதலித்தாள்.லீலாவைப் போல அவளின் சொந்த இடமும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர்தான்.
அவளின் காதலை அவளின் குடும்பத்தினர் விரும்பவில்லை.அவளின் அண்ணன்மார் அந்த இளைஞன் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்,திருமணம் நடந்தால் பங்களாதேசுக்கு போய்விட வேண்டும் என்பதால் கடுமையாக எதிர்க்க அந்தக் காதல் முறிந்தது.
ஒரு சனிக்கிழமை பின்னேரம் போல லீலாவும் அந்தப் பிள்ளையும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.அந்த பெண்ணின் முகம் வாடியிருப்பதைக் கண்ட யோகமலர்
அதற்கான காரணத்தை விசாரிக்க அந்தப் பெண் தனது காதல் முறிந்த கதையை அழுதபடி சொல்ல யோகமலரின் கண்ணும் கலங்குவதைக் கண்டன்.
யோகமலர் என்ன நினைத்தாளோ திடீரென்று’ வாங்க நாங்க எல்லாரும் படம் பார்க்கப் போவம்’ என்று எழுந்தாள்.லீலாவும் அந்தப் பெண்ணும் தயங்க கட்டாயப்படுத்தி நீங்க போய் வெளிக்கிட்டு வாங்க நாங்களும் வெளிக்கிட்டு ரெடியாய் நிக்கிறம்’ என்று சொல்லி அவர்களை அனுப்பிய யோகமலர், அவர்கள் போனதும் „அவங்களைப் பார்க்க பாவமா இருந்துங்க அதுதான் அவங்க அழுகையை டைவேற் பண்ணத்தாங்க படத்துக்கு போவோம்னு சொன்னேங்க,நாங்களே பஸ் செலவு படச் செலவு அப்புறம் எங்கேவது சாப்பிடுவோம் இல்லையா அந்தக் காசு எல்லாத்தையும் அவங்களுக்கும் செலவழிப்போம்ங்க, பாவம்ங்க காதல் தோல்வி வலி கொடுமைங்க’ என்று சொல்லிக் கொண்டே உடைமாற்றிய யோகமலர் எனக்கும் உடுப்பை செலக்ட் செய்து இதைப் போடுங்கள்’என்றாள்.
இருவரும் ஆயத்தமாகி வீட்டைப் பூட்டிவிட்டு கதவடியில் நிற்க,அவர்களும் கதவைத் திறந்து வர எல்லாருமாக லிப்டில் போய் இறங்கினோம்.
பஸ்தரிப்பு நிலையத்திற்கு போகும்வரை அந்தப் பெண் எதுவுமே பேசவில்லை.சோர்ந்த முகத்துடனேயே இருந்தாள்.கேலாங் என்ற இடத்தில் உள்ள தியேட்டரடியில் இறங்கி டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளை போயிருந்தோம்.படம் தொடங்க பத்து நிமிசங்கள் இருந்தன.
ஏனக்கு வலது பக்கத்தில் யோகமலரும் அதற்கடுத்து அந்தப் பெண்ணும் அதற்கடுத்து லீலாவும் இருந்தனர்.அந்தப் பெண்ணின் கைகளை ஆதரவாக யோகமலர் பிடித்துக் கொண்டாள்.
„ நீங்க கொடுத்து வைச்ச அதிர்ஸ்டங்காரிங்க,உங்க கஸ்பெண்ட் சிறீலங்கான்னாக்கூட உங்க பமிலியோட சப்போட்டோட நீங்க லவ் பண்ணியவரையே மறீ பண்ணீட்டிங்க…ஆனா நான்…’ என்று பெருமூச்சுவிட்டவள் அமைதியானாள்.
அவள் சொன்னதைக் கேட்டு நான் சங்கடப்பட்டன்.நான் கல்யாணம் செய்தவன் என்பதும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதும் லீலாவுக்கும் இந்தப் பெண்ணுக்கும் தெரியாதவரை என்மீது மதிப்பு இருக்கும்.தெரிய வந்தால்……
படம் பார்த்து முடிஞ்சதும் மலேய்ச் சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டோம்.பஸ்ஸைவிட்டு இறங்கி எங்கள் கட்டிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தம்.எங்கள் கட்டிடத்துக்கு முன்னால் ஒரு சிறுபுல்வெளி இருந்தது.அதில் சில வாங்குகள் போடப்பட்டிருக்கும்.
அதில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது லீலாவின் சினேகிதி என்னைப் பார்த்து „ மலேசியன் கேர்ளான யோகமலரை மறி பண்ண யப்னாவிலுள்ள உங்க பேரன்ஸ் சம்திச்சாங்களா’ என நான் எதிர்பாராத கேள்வியைக் கேட்க திகைத்த நான்
„காதலுக்கு நாடு மொழி றிலியன் இல்லை „ என்று பதில் சொன்னாலும், அந்தப் பெண்ணின் காதலுக்கு இடையூறாக நின்றவை நாடும் றிலிஜனுந்தான் என நினைச்சுக் கொண்டன்.
நாட்கள் சென்று கொண்டிருந்தன.யோகமலர் அடிக்கடி கருத்தடை மாத்திரைகளைப் பாவிதத்தால்.பீரியட் வராமல் இரண்டு மூன்று நாட்கள் தள்ளிப் போனால் ஒருவிதத்தில் பயமும் இன்னொரு விதத்தில் மகிழ்ச்சியுமடைந்தாள்.
„பீரியட் வரலைங்க பயமாயிருக்குங்க „ என்பவள்,’நான் ஒரு குழந்தையைப் பெத்துக்கவா,நீங்க ஊருக்குப் போனாலும் நான் உங்க பெயரைச் சொல்லி வளர்ப்பேங்க’ என்பாள்.நான் அதற்கு எந்த பதிலுமே சொல்லாது அமைதியாக இருப்பன்.
அடுத்த நிமிசமே வேண்டாம்ங்க ..நாளைக்குச் சரியாயிடும்ங்க’ என்பாள்.ஓய்வு நேரங்களில நானும் அவளும் பார்க்குக்கு போவம்.போகும் போது அவளை லிப்ஸ்ரிக் பூசி கண்ணுக்கு மைபூசி அழகுபடுத்தி வருமாறு சொல்வன்,’ எனக்கு அதிலை விருப்பமில்லைங்க உங்களுக்காக செய்கிறன் „ எனத் தன்னை அலங்காரம் செய்வாள்,’பார்க்கிலை மூட் மாறி லிப்ஸ்ரிக்கை அழி’என்று சொல்லாதீங்க என்று வெட்கத்துடன் சொல்வாள்.
வீட்டிலை ரெலிபோன் இணைப்பை ஏற்படுத்தியவுடன் அக்கா பிள்ளைகளுடன் பேச முடியுமா என்று கேட்டாள்.எங்களுடைய வீட்டுக்கு ரெலிபோன் வசதி இல்லை என்று சொன்னதும் அவள் கவலையடைந்தாள்.
தொலைபேசியில் தாய்தகப்பனுடனம் அண்ணன் அண்ணிமாருடன் இடைக்கிடை பேசியவள் பிறகு எப்பவாவது ஒருமுறை மட்டுந்தான் பேசினாள்.நான் கேட்ட போது என்னால என் மனைவி பிள்ளைகளுடன் பேசமுடியாத போது தானும் தனது அப்பா அம்மா அண்ணன்மார் அண்ணிமாருடன் பேச மனம் சங்கடப்படுகிறது என்றாள்.
வீட்டிலை இருந்து வரும் கடிதங்களை அவள் பிரித்துப் பார்ப்பதே இல்லை.என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பாள்.இல்லாதுவிட்டால் நான் கொடுத்தாள் மட்டுமே வாசிப்பாள்.
முhதாமாதம் எங்கள் வீட்டுக்கு காசு அனுப்புவதில் அவள் அக்கறையாக இருப்பாள்.வீட்டிலிருந்து வந்த கடிதத்துடன் என்னுடைய இரண்டு மைத்துனிமாரும் தனியாக எனக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார்கள்.அதில் தங்களுக்கும் கம்பாயம் தைத்து அனுப்புங்கள் என்று எழுதியிருந்தார்கள்.
கடிதத்தை வாசித்த யோகமலர் உடனடியாகவே ஜிஇயில் வேலை செய்து கொண்டிருந்த ஜோகூர்பாருவில் இருந்து வரும் தோழிகளுக்கு ரெலிபோன் செய்து சொல்ல, அவர்கள் உடனடியாகவே தைப்பிச்சுக் கொண்டு,ஒரு சனிக்கிழமை மூன்று கம்பாயங்களை வீட்டிலை கொண்டு வந்து தந்து சனிக்கிழமை இரவு தங்கிவிட்டுப் போனார்கள்.
அடுத்த நாள் திங்கட்கிழமை வேலை முடிந்து வந்ததும்,வீட்டுக்கு போய் அவசரம் அவசரமாக மூன்று கம்பாயங்களையும் பார்சலாக்கி என்னையும் கூட்டிக் கொண்டு போய் தபால்கந்தோரில் அனுப்பியதன் பின்பே அவள் நிம்மதியடைந்தாள்.
காலம் நகர்ந்து கொண்டிருந்தது.மனைவி பிளளைகளின் நினைப்பிலும் யோகமலரின் உடல்உள அரவணைப்பிலுமாக இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தன்.
எனது வேலை அனுமதி முடிய இன்னும் ஒரு மாதகாலமே இருந்தது.ஒரு நாள் வேலை செய்து கொண்டிருந்த போது எனது பகுதிப் பொறுப்பாளர் நான் வேலை செய்து கொண்டிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டே தசான் கம் பாஸ்ட் என்றார்.
என்ன என்பது போல அவரைத் திகைப்புடன் பார்த்தவாறு வெளியே வர எனது கைகளை பிடித்துக் கொண்டு யோகமலர் வேலை செய்யும் இடத்துக்கு கூட்டிக் கொண்டு போனார்.
அங்கை யோகமலர் ஒரு வாங்கில் மயங்கிக் கிடந்தாள்.எனக்குத் தலைசுற்றியது.நிதானித்துக் கொண்டு அவளருகில் சென்று அவளின் கைகளைப் பிடிக்க மெதுவாக கண்களைத் திறந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிய மெல்லிய குரலில் „பயப்படாதீங்க கவலைப்படாதீங்க’ என்றாள்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.இதற்கிடையில் அம்புலன்சும் வரவே அவளை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேர்க்ஸ் மனேஜர் பொப் லீ என்னுடைய மனநிலை அறிந்து ராக்சி பிடித்து யோகமலரைக் கொண்டு போன ஆஸ்பத்திரிக்கு என்னையும் அனுப்பி வைச்சார்.
அம்புலன்ஸ் போய்ச்சேர ராக்சியும் போய்ச் சேர்ந்தது.ஸ்ரெச்சரில் படுக்க வைச்சு கூட்டிக் கொண்டு போக அவளோடு நானும் போனன்.
டொக்ரர்கள் அவளைப் பரிசோதித்த பின் ஆஸ்பத்திரியில் அவள் நிற்க வேண்டும் என்று சொன்னார்கள்.எனக்குப் பகீர் என்றது.
கணவன் என்ற ரீதியல் எனது விபரங்களை கேட்டு எழுதினார்கள், கையொப்பமும் வாங்கினார்கள்.
அறையொன்றில் அவளைத் தங்க வைச்சார்கள்.அவளுடனேயே அவளின் கைகளைப் பிடித்தவாறு இருந்தன்.அவள் என்னைக் கவலையுடன் பார்த்தாள்.’இவ்வளவு நாளும் உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை போதுமுங்க, இனி நான் கண்ணை மூடினாலும் சந்தோசமுங்க’ என்றாள்.
இரவாகிய போது „இனி நீங்கள் போங்கள் நாளைக்கு வேலைக்கப்புறம் வாங்க’ என்றவள் தனியா எப்படி தூங்குவீங்க’ என்றவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவளிடம் விடைபெற்று வீட்டை போக மனமில்லாமல் போனன்;.சோபாவில் சுருண்டு படுத்திருந்தன்.கதவைத் தட்டும் சத்தம் கேட்டு திறந்த போது, லீலாவும்
அவள் தோழியும் உள்ளே வந்தவர்கள் கையில் கொண்டு வந்த பிளாஸ்ரிக் பெட்டியை மேசையில் வைச்சவர்கள்’கவலைப்படாதீங்க,இதைச் சாப்பிடுங்க யோகி இரண்டு நாளில வந்திடுவா,அவோடை பேரன்சுக்கு மெசேஜ் கொடுத்தீங்களா’ என்று கேட்ட லீலாவிடம் ,எப்படிச் சொல்வதென்று தெரியவில்லையென்று நான் அழ,’அழாதீங்க அவங்க ரெலிபோன் நம்பரைத் தாங்க நான் சொல்றன் என்று என்னிடமிருந்து நம்பரை வாங்கியவள் ரெலிபோன் செய்து யோகமலரின் நிலைமையச் சொன்னாள்.
அவர்கள் பதட்டப்படுவதும் ஆரவாரப்படுவதும் எனக்கு மெதுவாகக் கேட்டது.லீலா என்னிடம் ரெலிபோனைத் தர மறுமுனையில் கவலைப்படாதீங்க, யோகிக்கு சுகமாயிடும் நீங்க யோசிக்காம இருங்க என்று யோகமலரின் மூத்த அண்ணி ஆறுதல்படுத்தினாள்.நாங்க யாராவது நாளைக்கு வருவம் என்று சொல்லி ரெலிபோனை வைத்தாள்.
லீலாவும் தோழியும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு போய்விட்டார்கள்.எனக்கு நித்திரையே வரவில்லை.யோகமலருக்கு என்ன நோயோ தெரியாது என மனம் எண்ணாததையெல்லாம் எண்ணியது.
அடுத்த நூள் வேலைக்குப் போக மனமில்லாமல் வேலைக்கப் போய் இயந்திரமாய் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து வேகம் வேகமாக வெளிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனன்.
அறைக்குள்ளை யோகமலரின் மூத்த அண்ணியும் தாயும் நின்றிருந்தார்கள்.மூத்த அண்ணியை நான் முன்பு சந்தித்திருக்கிறன்.தாயாரை அன்றுதான் முதன்முதலாக கண்டன்.என்னைக் கண்டதும் தாயார் எனது கைகளைப் பிடித்து குலுங்கி அழுதார்.
ஏன்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை.அமைதியாக நின்றன்.என் நிலையை உணர்ந்து தாயும் மூத்த அண்ணியும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
யோகமலர் எனது கைகளைப் பிடித்துக் கொண்டு „ நைற் நல்லாத் தூங்கினீங்களா, என்ன சாப்பிட்டீங்க’ என்று கேட்டாள்.லீலாவும் அவளின் தோழியும் சாப்பாடு கொண்டு வந்து தந்ததைச் சொன்னன்.
இரவாக நானும் யோகமலரின் தாயாரும் மூத்த அண்ணியும் என்னோடை எனது அறைக்கு வந்தார்கள்.
என்னை ஆறுதல்படுத்திய அவர்கள்.அடுப்படிக்குள் போய் சமைப்பது தெரிந்தது.இரவுச் சாப்பாடாக சோறும் சாம்பாரும் வைச்சு கட்டாயப்படுத்தி சாப்பிடத் தந்தார்கள்.
லீலாவும் தோழியும் வந்திருந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.எனது நிலையை உணர்ந்த மூத்த அண்ணி „நீங்க போய்த் தூங்குங்க, நானும் அத்தையும் மற்ற றூமில தூங்குவோம்ங்க’ என்று சொல்ல நானும் எழுந்து போயப் படுத்தன்.
அவர்கள் கதைத்துக் கொண்டிருப்பது எனது காதில் விழுந்தது.யோகமலரின் தாயார்’ இன்னைக்குத்தான் யோகியின் கணவரைப் பார்த்தன், நல்ல மாப்பிள அவளுக்கு கிடைச்சிருக்கு’ என்று அவர் சொல்வதைக் கேட்ட நான் என் வாழ்ககையில் போடப்பட்ட முடிச்சுகளை நினைத்துக் கொண்டன்.
அடுத்தநாள் காலை நான் வேலைக்குப் போக அவர்கள் யோகமலரைப் பார்க்கப் போனார்கள்.வேலை முடிஞ்சு பார்க்கப் போனேன்.
தன்னை என்னோடு அணைத்து வைத்திருக்கும்படி கேட்டாள் எனது மனம் படபடத்தது.அணைத்து வைத்திருந்தன்.கண்களை மூடியவள் திறக்கவே இல்லை.நிரந்தரமாக மூடிவிட்டாள்.
அதிகளவு கருத்தடை மாத்திரைகளே அவளின் நிலைமைக்கு காரணம் என மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஆஸ்பத்திரி என்பதால் அடக்க முடியாத அழுகையை எல்லாரும் அடங்கிக் கொண்டோம்.ஒரு திரைப்படம் போல எல்லாம் நடந்து முடிந்தது.அவளை ஜோகூர்பாருக்கு கொண்டு போனார்கள்.நானும் லீலாவும் அவளின் தோழியும் போய் வந்தோம்.
என்னிடம் யாருமே கோபித்துக் கொள்ளவும் இல்லை வற்புறுத்தவும் இல்லை.
அவளில்லா வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. ஆனால் இருந்துதான் ஆக வேண்டும் என இருந்தன்.
வேலைத்தளத்தில் எல்லோரும் என்னை அனுதாபத்துடன் பார்த்தார்கள்.ஒரு மாதத்திற்கு பின்னால் ஊருக்கு புறப்படும் போது மட்டும் யோகமலரின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் அறிவித்தன்.
விமான நிலையத்திற்கு என்னை வழியனுப்ப யோகமலரின் மூத்த அண்ணனும் அவரின் மனைவியும் வந்திருந்தனர்.லீலாவும் அவளின் தோழியும் வந்திருந்தனர்.
மூத்த அண்ணரும் அவரின் மனைவியும் எனது கைகளைப் பிடிக்கையில் கண்கலங்கி நின்றனர்.
மௌனமே வார்த்தைகளாகின.சிங்கப்பூருக்கு வந்து விரும்பியும் விரும்பாமலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் புறப்பட்டன்.