சைக்கிளும் நானும்!…. (பகுதி: 3)…… எலையா க.முருகதாசன்
(முக்கிய குறிப்பு: சைக்கிளோடு தொடரும் நட்பை விபரிக்கும் கட்டுரைதான் இது.சைக்கிள் எங்கையெல்லாம் என்னைக் கூட்டிச் சென்றது என்பதை எழுதும் போது கள்ளுக் கதையும் இடம்பெறுகிறதே தவிர இது குடிப்பதை ஊக்கப்படுத்தும் கட்டுரை அல்ல.எனது அனுபவத்தை யதார்த்தமாக எழுதிய கட்டுரை இது)
கள்ளு ஒரு மூலிகை என்பது உண்மை மட்டுமல்ல காம விருத்திக்கான பாணம் என்பதும் நூறுவீத உண்மைதான்.
இதிலை என்ன விசயமென்றால் கள் என்றாலே சண்டைக்குரியது என்று ஒரு தவறான கருத்தும் உண்டு.கள்ளுக் குடிப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
பஞ்சமகாபாதகம் எதுவென்றால் என்னைப் பொறுத்தவரை எமக்கு உணவாக ஆடு மாடு கோழி உட்டபட உணவாகக்கூடிய அத்தனை உயிர்களையும் கொன்று அவற்றின் ஊனை உணவாக உண்ணுகிறோமே அதுதான் மிகக் கொடுமையான பஞ்சமகாபாதகம்.
மதுரசத்தை உற்பத்தி செய்து தயாரிக்கின்ற மதுவைவிட கள்ளுச் சிறந்ததே.கள்ளுக் குடிப்பது ஒரு மன மகிழ்ச்சிக்கு, ஒரு எழுச்சிக்கு.ஒவ்வொரு மனிதனும் தனது ஒழுக்கத்தை தானேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லாவற்றக்கும் பொருந்தும்.அளவாக கள்ளுக்குடித்து உடல்நலத்தைப் பேணி யாரையுமே மனம் நோக வைக்காமலும் இருக்க முடியும்,வாழவும் முடியும்.
ஒழுக்கம் கள்ளிலை இல்லை அவரவர் மனதில் இருக்கின்றது.மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாது என்று சொல்லப்படுகிற பலர் வெளிவேசம் போடுபவர்களாகவும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
சரி,சைக்கிள் எதுக்கெதுக்கெல்லாம் உதவியது என்பதற்கு இனி வருகிறன்.
கணைச்சூட்டுக்கு கள்ளு நல்லதென்று பரியாரி சொல்ல அதை அம்மா அப்புவின் உதவியுடன் வாங்கித் தந்து குடிக்கத் தரும்போதெல்லாம் சொல்லாத புத்திமதிகளே இல்லை.அக்கம்பக்கத்துக்கு தெரியக்கூடாதென்பதில் அம்மாவும் அப்புவும் கவனமாகவே இருந்தார்கள். கொஞ்சத் தசையாவது உடம்பில் வைக்கட்டும் என்பதே அப்புவின் அம்மாவின் கவலையாகவிருந்தது.
கள்ளைவிட பால் வாங்கி அதில் கள்ளுவிட்டு தயிராக்கி சோறு சாப்பிடும் போதெல்லாம் சோற்றுக்குள் தயிரைப் போட்டுப் பிசைந்து சாப்பிடச் சொல்வதும்,தயிரை மோராக்கி குடிக்கத் தருவதும் அம்மாவின் அன்றாட வேலையாகவிருந்தது.
எனக்கு நெருப்புக் காய்ச்சல் வந்து மூளாய் ஆஸ்பத்திரியில் அம்மா வைச்சிருந்து பாரத்தவர்.காய்ச்சலுக்குப் பிறகுதான் நான் கணைச்சூட்டுக்காரனானேன்.
பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதெல்லாம் முதல் இரவு கள்ளுக்குடித்த நினைவு வந்து சினேகிதப் பொடியங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் „வாய்தடுமாறித்தன்னும் கள்ளு விசயத்தை பொடியங்களிட்டைப் பறைஞ்சிடாதை „என்று அம்மா எச்சரித்திருந்தார்.
என்னோடை மூன்று பொடியங்கள் நல்ல சினேகிதமாய் இருந்தவை.இதைவிட தூரச்சினேகிதம் என்று ஓரிருவர் இருந்தனர்.
பொடியங்கள் மத்தியில் வீராப்புக் கதை பேசுவது இயல்பான ஒன்றுதானே.கீரிமலைக்குப் போய் கேணியிலும் கடலிலும் குளிப்பது, நீந்துவது கள்ளியும் நாகதாளியும் வளர்ந்து நிற்கின்ற விழிசிட்டிக் காட்டில் பட்டம் விடுவது பற்றியெல்லாம் பொடியங்களுக்குச் சொல்லுவன்.
அவையும் தங்கடை கதைகளைச் சொல்லுவினம்.ஒருநாள் நான் வாய்தடுமாறி கதையோடு கதையாய் „நான் கள்ளுக் குடிச்சுப் பார்த்தனான்’ என்று சொல்லிப் போட்டு „ஐயையோ வாய்தடுமாறிச் சொல்லிப் போட்டேனே „ என்று நினைச்சு முழிசுக் கொண்டிருக்க,’பூ இது ஒரு விசயமா நாங்களும் சில நாட்களில் களவாக குடிக்கிறனாங்கள் „ என்று கிட்டிய நண்பர்கள் சொல்ல, தூரத்து நண்பர்களில் இரண்டு இளவாலைப் பொடியங்கள்’ உது என்ன பெரிய விசயமோ, சனிக்கிழமைகளில் கீரிமலைக்கு குளிக்கப் போறமெண்டு வீட்:டிலை சொல்லிப் போட்டு கூவிலுக்குப் போய்க் கள்ளுக் குடிச்சிட்டு குளிக்கப் போறனாங்கள் என்று சொன்னார்கள்.
அவை இரண்டு பேரும் கிறிஸ்ரியன் பொடியங்கள்.அதிலை ஒருத்தன் டொக்டராகி இப்ப இலண்டனில் இருக்கிறான்.படிப்பு முடிஞ்ச நான் இரண்டரை வருடங்கள் பெரியம்மா வீடு, அக்கா வீடு தங்கச்சி வீடு என்று கொச்சிக்கடையிலும் சிலாபத்திலுமாக இருந்தன்.
நீர்கொழும்பில் புக்கீப்பிங், ஆங்கில ரைப்றைற்றிங் சிங்களம் படித்தது என இருந்த போது சிலாபப் பக்கமாக போகும் வீதியின் மேற்குப் புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையைத் தாண்டியே மகாஓயா ஆற்றில் குளிக்கப் போவேன்.
அது தென்னங்கள்ளுக்கடை.எந்த நேரமும் கள்ளுப்பிரியர்கள் அங்கை அலைமோதிக் கொண்டிருப்பார்கள்.இதைவிட கள்ளுக்கு உவப்பாக றால், நண்;டு, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, எருமைமாட்டு இறைச்சி,அவித்த மரவள்ளிக் கிழங்கு இன்னும் என்னவெல்லாமோ அவித்தும் பொரித்தும் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
அவற்றைப் பார்க்கும் போது வாங்கிச் சாப்பிட வேணும் என்று ஆசை வரும்.ஒரு நாள் பெரியம்மாவிடம் அந்த உணவு வகைகளைப் பற்றிச் சொல்லி வாங்கிச் சாப்பிட வேண்டும் போலத் தோன்றுகின்றது என்று சொன்ன போது பெரியம்மா
„கள்ளுக்கடைப் பக்கம் திரும்பியும் பார்கக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
இதைவிட மாமாவும் அண்ணையும் பெரியம்மா வீட்டிலிருந்தே கொழும்புக்கு வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார்கள்.அதனால் பல அடுக்கு கண்காணிப்பு வலயத்தில் நான் இருந்தேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் காதல் ஏற்பட்டு தனிமையில் சந்திப்பதும்,களவாக படம் பார்ப்பதும் மகாஓயா ஆற்றில் அவளும் நானும் குளிப்பதுமான கதை ஒரு நீண்ட கதை அதை இந்தக் கதைக்குள் கலக்க விரும்பவில்லை.
இந்தக் காலப் பகுதியில் எனது அம்மா நோய்வாய்ப்பட்டு கொழும்பு ஆஸ்பத்திரியில் காலமானார்,இறுதிக் கிரியைகள் நீர்கொழும்பில் நடந்தது.
சில மாதங்களின் பின்னர் நான் ஊருக்கு திரும்பி அப்புவுடன் இருந்தேன்.அப்புவுடன் இருந்த காலத்தில் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுகையில் கள்ளு விற்கும் தனி வீடுகளைக் கண்டால் பொயிலைக் காம்பை வாயில் போட்டு சப்புபவன் அது கிடைக்காமல் போனால் எவ்வளவு அந்தரப்படுவானோ,மூக்குப்பொடி போடுபவனுக்கு மூக்கப் பொடி முடிஞ்சு போனால் மூக்கு நுனுநுனுக்க எப்படி அந்தரப்படுவானோ அது போல கணைச்சூட்டுக்கு குடிச்ச கள்ளின் மகிழ்ச்சி என்னில் தாண்டவமாட பயந்து பயந்து வீடுகளில் கள்ளு விக்கிற இடத்தை கண்டுபிடிச்சு யாராவது பார்க்கினமா என்று அங்கையும் இங்கையும் பார்த்து சைக்கிளை விட்டிறங்கி,சைக்கிளோடு உள்ளே போய் கள்ளுத் தருவாரா தரமாட்டாரா என்று தயக்கத்துடன் கேட்டு வாங்கி இருந்தது பாதி இருக்காதது பாதியாக அவசரம் அவசரமாக வாங்கிக் குடித்துவிட்டு வீடு வருகையில் அயலட்டைச் சனங்கள் „துலைக்கோ போட்டு வாறாய்’ என்று கேட்க கேளாத மாதிரி வீட்டை வந்து சேருவதும் மிகக் கஸ்டப்பட்டு கள்ளுக் குடித்ததை அப்புக்கு மறைச்சு பின் ஒரு மாதத்திற்கு அந்த எண்ணமே வராதமாதிரி பயம் பிடிச்சாட்டும்.
அப்புவும் ஒருவருட காலத்துக்குள் காலமாக அண்ணையும் அண்ணியும் பிள்ளைகளும் என்னோடு வந்திருந்தனர்.யாழ்ப்பாணத்தில் வேலை செய்த அண்ணைக்கு மட்டக்களப்பு கச்சேரிக்கு மாற்றலாக அவர் குடும்பத்தோடு அங்கு போய்விட நான் தனியாளாக வசிக்கத் தொடங்கினேன்.
சைக்கிள்தான் எனது உற்ற துணைவன்.யாழ்ப்பாணத்திற்கு படம் பார்க்கப் போவது, நல்லூர்த் திருவிழாவிற்கு போவது, சன்னதிக் கோவிலுக்குப் போவது,மச்சாளின் கடைசி மகனுடன் கிளிநொச்சிக்கு போவதுதான் இலக்கு எனத் திட்டமிட்டு பதினைஞ்சு சதம் மட்டுமே கைச்செலவுக்கு கொண்டு போனதால் பரந்தனுடன் திரும்பியது என சைக்கிளின் உறவு நகமும் சதையும் போல இருந்தது.அப்பொழுதுதான் உணர்ந்தேன் இரும்புக்கும் இதயம் இருக்குது போல என்று.
ஏனென்றால் களவாக கள்ளுக்குடிக்க என்னைக் கூட்டிக் கொண்டு போனாலும் சைக்கிள் என்னை ஒரு போதும் காட்டிக் கொடுக்கவேயில்லை.
அம்பனைக் கலைப்பெருமன்றம் ஆரம்பித்து நாடகங்கள் நடிக்கத் தொடங்கி நாடகப் போட்டிகளில் பங்குபற்றி ஆங்காங்கே ஊர்களில் நாடகங்கள் மேடையேற்றப்பட்ட போது சைக்கிளின் உதவி இரட்டிப்பாகியது.
நாடகம் நடைபெற்ற அடுத்தநாள் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு நாடகம் நடைபெற்ற இலகையின் ஒழுங்கைகள் வழியாக ஏதோ அலுவல் இருப்பது போல,எதையுமே கவனிக்காத மாதிரி பாவனை செய்து கொண்டு சைக்கிளில் வருகையில் பொதுக் கிணறுகளில் தண்ணி அள்ளிக் கொண்டும் குளித்துக் கொண்டு நிற்பவர்களும் வீட்டுப் படலையடியில் நிற்பவர்களும் „ ஏய் அங்கை பாரடி அவர்தான்ரி நேற்றுப் போட்ட நாடகத்தில் கதாநாயகனாக நடிச்சவர்’ என்று என்னைக் காட்டிச் சொல்லும் போது அதைக் கேட்டும் கேளாத மாதிரி ஒரு குதூகல மனநிலையுடன்,காண்டிலைப் பிடிச்சு ஓடிக் கொண்டிருந்த நான் குனிஞ்சு பிறேக் காண்டிலைப் பிடிச்சு ஓடுவன்.
இப்படியாக காலம் ஓடிக் கொண்டிருக்கையில் அச்சுவேலியில் இருக்கும் மாமா மாமி வீட்டுக்கு மாதத்தில் இரண்டு தடவையாவது சைக்கிளில் போய் வருவன்.அதற்கு இன்னொரு காரணம் மாமாவின் மகளைப் பார்ப்பதற்குந்தான்.
எந்த நேரம் போனாலும் பொழுபடுவதற்கு முன்பு வீட்டுக்கு வந்தவிடுவன். போகும் போது வசாவிளான் சந்தியை நோக்கிப் போகையில் பலாலி எயர்போர்ட் ஓடுபாதை பக்கம் உள்ள வீடுகளை திரும்பிப் பார்க்க மாட்டன்.
ஆனால் வீடு நோக்கி திரும்பி வருகையில் கண்கள் வடக்குப் பக்கம் திரும்பும்.அங்கை உள்ள வீடுகளுக்கு முன்னால் ஒரு சிறிய மேசையில் கள் நிரப்பிய போத்தலை வைத்திருப்பார்கள்,கள்ளு இங்கு கிடைக்கும் எனபதற்காக.
கள்ளுப் போத்தலைக் கண்ட நான்,ஒரு நாள் மெதுவாக சைக்கிளாலை விட்டிறங்கி சைக்கிளை உருட்டிக் கொண்டு எட்டுத் திசையும் பார்த்தபடி படலையத் திறந்து உள்ளை போன நான் அங்கை கள்ளுக் குடித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டதும் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி திடுக்கிட்டுத் திரும்ப, அவர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு பயப்படாதை வா என்றார்.
என்னை மறைவிலை இருக்கச் சொன்னவர் கள்ளுக் கொடுக்கிறவரிடம் நல்லதாய்க் கொடுக்கச் சொன்னார்.நான் அவரைப் பார்ப்பதும் கூச்சத்துடன் குடிப்பதுமாக குடித்துக் கொண்டிருக்க „ இதுக்கேன் பயப்படுகிறாய் நீ சின்னப் பிளளையே கலியாண வயசாச்சுது, இதைத் தினம் குடிச்சுப் பழகக்கூடாது பயப்படாதை மாமிக்குச் சொல்லமாட்டன் என்றார்.
அவர் மாமியின் ஒன்றுவிட்ட தம்பியார்.வசாவிளான் தபால் கந்தோரில் பியோனாக வேலை செய்கிறவர்.அவர் என்னிடம் எங்கை போட்டு வாறன் என்று கேட்டார்,மாமி வீட்டை போட்டு வாறன் என்றன்.அவர் கொஞ்சம் வெறியில் இருந்ததால் ஓ…மச்சாளைத் தரிசித்துவிட்டு வாறியோ’ என்று சிரித்தார்.
குடிச்சு முடிஞ்சு காசைக் கொடுக்கப் போக அவர் கள்ளு விற்றவருக்கு கண்ணைக் காட்ட அவர் காசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அவரிடம் சொல்லிப் போட்டு வந்தாலும் அவர் மாமிக்கு சொல்வாரா சொல்ல மாட்டாரா என்பது புரியாமல் தத்தளித்தன்.
அதற்குப் பிறகு மாமி வீட்டுக்கு போய்விட்டு வருகிற நாட்களில் வசாவிளான் கள்ளாசையை நிறுத்திவிட்டன்.நான் எப்பொழுதும் குழுவாகத் திரிய மாட்டன்.
இப்படி சைக்கிள் பல இடங்களுக்கு கொண்டு திரிந்தது.கொஞ்ச நாளைக்குப் பிறகு அக்கா பிள்ளைகளோடு எங்கள் வீட்டில் வந்து இருந்தார்.
அவர் இருக்கும் போதும் சைக்கிளில் கீரிமலைக்கு குளிக்கப் போவது,படம் பார்க்கப் போவது எனத் திரிந்தாலும் அந்த கணைச்சூட்டு மருந்தாசையை கட்டுப்படுத்தி வைச்சிருந்தன்.
ஒருநாள் மல்லாகம் கோர்ட்டுக்கு போகும் வீதி வழியாக அளவெட்டி நோக்கி ஊர்சுற்றி வருகையில் ஒரு இடத்தில் தாகசாந்தி இடத்தைக் கணடதும் மனம் இழுக்க அக்காவை நினைச்சு மனம் பயம் கொள்ள அக்காவைச் சமாளிக்கலாம் என்ற எண்;ணத்துடன் பனையின் அமுத பானத்தைப் பருகிவிட்டு வீடு வந்து சேர்ந்து முற்றத்தில் சைக்கிளை நிறுத்த, விறாந்தையில் நின்று அக்கா எனது முகத்தை கூர்ந்து பார்த்தபடி „ எங்கை இவ்வளவு நேரமும் போட்டு வாறாய் „ என்று கேட்க,’ சும்மா உலாத்தினான்’ என்று சொல்லிக் கொண்டே படியேறி சேர்ட்டைக் கழற்றி வைத்தவிட்டு பிறகும் படியால் இறங்கி கொடியில் கிடந்த துவாயை எடுத்துக் கொண்டு குளிக்கப் போகும் வரை அக்கா என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் என்பதைக் கடைக்கண்ணால் பார்த்தேன்.
குளித்துவிட்டு சாப்பிடும் போது என்னருகில் வந்த அக்கா’அப்பு மாதிரியும் குஞ்சியப்பு மாதிரியும் பழகிப் போடாதை „ என்று சொன்னதும் எனக்குச் சுளீர் என்றது.
அக்கா இருக்கும் வரையும் பனைஅமுதத்தின் மீது இருந்த ஆசையை அடக்கி வைச்சிருந்தன்.அவர்கள் போனபின் கிடட்டத்தட்ட நான்கு வருடங்கள் மீண்டும் தனியனாக இருந்தேன்.
அப்பொழுது மாதத்தில் இரண்டு மூன்றுமுறை கணைச்சூட்டுக்கு மருந்தானது எனக்கு மகிழ்ச்சி தந்தது.அதற்குப் பிறகு கல்யாணம் பிள்ளைகள் பிறந்தன.ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோம்.
ஜேர்மனியில் ஒரு உதவி அமைப்பு பலருக்கு சைக்கிள் கொடுத்து உதவியதில் எனக்கும் பழைய சைக்கிள் ஒன்று கிடைத்தது.
எமது நகரத்தின் மூலைமுடுக்கெல்லாம் சைக்கிளில் திரிந்தேன்.மனைவிக்கும் ஒரு சைக்கிள் கிடைத்தது.பிள்ளைகளுக்கு கட்டுக்காசில் சைக்கிள் வாங்கினோம்.கடைகளுக்குப் போவது காய்கறி வாங்கச் சந்தைக்குப் பொவது என எல்லாவற்றிற்கும் சைக்கிளே உதவியது.
1989 ஆண்டு புதுச்சைக்கிளை வாங்கினேன். அது உதரிப் பாகங்களாக வந்தடைய அதைப் பூட்டி வெள்ளோட்டம் போன்று வீதியால் அதை ஓடிக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த காருக்கு வழிவிடுவதற்காக வீதியோரத்து திட்டில் சைக்கிளை ஏற்ற சைக்கிளோடு நான் விழ இடுப்பு அருகில் உள்ள எலும்பு உடைந்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டு தகடு பூட்டப்பட்டது.
எனது அவதானக் குறைவால் தொடை எழும்பில் பாதிப்பேற்பட்டு மீண்டும் 2000 ஆண்டு சத்திரசிகிச்சை செய்து தகடு வைத்தார்கள்.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 32 வருடங்களாக சைக்கிள் ஓடும் எண்ணம் ஏற்படவில்லை.மனைவி அதை விரும்பவுமில்லை.மகளின் வீட்டுக் போகும் பொழுது அவளின் சைக்கிளை எடுத்து ஒடத் தொடங்கினன்.மனைவியைச் சமாளித்தும் மகளின் சப்போட்டிலும் மீண்டம் சைக்கிள ஓடத் தொடங்கினன்.
32 வருடங்களுக்குப் பிறகு சைக்கிளை ஓடிய போது சைக்கிள் தளம்பத்தான் செய்தது.ஒருமாதிரி துணிவை வரவழைத்து ஓடத் தொடங்கினன் .
எனது ஆர்வத்தைப் பார்த்து மகள் ஒரு சைக்கிளை வாங்கித் தந்தாள்.ஒரு நாள் சைக்கிளை வேகமாக இறக்கமான வீதியில் ஓடிக் கொண்டு வரும் போது, வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்ட காரின் கதவை காரிலிருந்தவர் திறக்க பின்னால் கார்களும் வர பின்சில்லு பிறேக் என்று நினைத்து முன்சில்லு பிறேக்கைப் பிடிக்க சைக்கிளோடு விழுந்து விரல்கள் மடங்கி உரசி இரத்தம் வடிய எழுந்து சத்திரசிகிச்சை செய்த காலை ஊன்றி வைத்து அது ஒழுங்காக இருக்கிறது என நிம்மதியடைந்து இரத்தம் ஒழுகிய விரல்களை மெதுவாக லேஞ்சியால் மூடிமறைத்து கொண்டு வீட்டுக்கு வந்து பிளாஸ்ரர் போட்டன்.மனைவிக்கு பிளாஸ்ரர் போட்டது தெரியக்கூடாது என்பதற்காக அந்தக் கையை பொக்கற்றுக்குள் வைச்சுக் கொண்டு திரிஞ்சன்.
இரவு மகள் குடும்பம் ,மகன் குடும்பம் இன்னும் இரண்டு நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் போது மனைவி ஏன் இடைக்கையால் சாப்பிடுகிகிறீர்கள் என்று கேட்க, மகன் வலது கை விரல்களில் ஒட்டியிருந்த பிளாஸ்ரர்களைப் பார்க்க „ அது சும்மா சின்ன விழுகைதான் „ எனச் சமாளித்தன்.ஆனால் அதனை யாருமே நம்பவில்லை.
இத்தனைக்கு பிறகும் இப்பவும் சைக்கிளை விட முடியவில்லை…..