வாக்குமூலம்!…. (பகுதி 02) ….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
வாக்குமூலம்!…. (பகுதி 02)
சென்ற பத்தியில் (வாக்குமூலம்-01) ‘ரெலோ’வின் ஏற்பாட்டில் 12.12.2021 அன்று கொழும்பில் கூடிய ‘தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம்’ பற்றிப் பிரஸ்த்தாபித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 21.12.2021 அன்று கொழும்பில் இக்கூட்டம் கூடியுள்ளது.
சென்ற தடவை கூட்டத்திற்குத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அழைக்கப்படவில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் அவர் அழைக்கப்பட்டிருந்தும் தான் அழைக்கப்படவில்லையென்றும், அக்கூட்டம் பற்றித் தனக்குத் தெரியாதென்றும், மாவை சேனாதிராசா நாடகமாடிய ‘குட்டு’ 21.12.2021 கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. சென்ற (12.12.2021) கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் இக்கூட்டத்தில் (21.12.2021) கலந்து கொண்டுள்ளனர். சென்ற கூட்டத்திற்கு அழைக்கப்படாத ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, அக் கட்சியின் சார்பில் அமீர்அலி கலந்து கொண்டிருக்கிறார். ‘புளொட்’ சார்பில் சித்தார்த்தன் கலந்துகொள்ளாமல் அதன் சார்பில் ஆர்.ராகவன் கலந்துகொண்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் (அதன் தலைவர் ராவூப் ஹகீமுடன்) அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்கள் சென்ற கூட்டத்திலும் கலந்து கொண்டவர்களே. ‘ரெலோ’ ஏற்பாடு செய்த கூட்டத்திற்குச் சென்ற தடவைபோல் இரா.சம்பந்தனே இம்முறையும் தலைமை தாங்கியுள்ளார்.
தமிழ்பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கடிதமொன்றை – ஆவணமொன்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்புவது தொடர்பாக ‘ரெலோ’வினால் கூட்டப்பெற்ற இக்கூட்டத்தைக் ‘கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி கொண்ட’ கதையாக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன் கைக்குள் எடுத்துவிட்டார். அதாவது தமிழரசுக்கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் – மேலாதிக்கத்துக்குள் எடுத்துவிட்டது.
ஏனெனில், 21.12.2021 கூட்டத்தில் ‘ரெலோ’வினால் கையளிக்கப்பட்ட இரண்டு பக்க நகல் ஆவணம் தமிழரசுக் கட்சியினால் நிராகரிக்கப்பட்டு தமிழரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட எட்டுப் பக்க நகல் ஆவணம்தான் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பாவம் ‘ரெலோ’. ‘ரெலோ’ தயாரித்த ஆவணத்திலுள்ள ஓரிரு பந்திகள் உத்தேச ஆவணத்தில் சேர்க்கப்படுமாம்.
இப்போது, இந்த ஆவணத்தை (அதில் என்ன இருக்கப் போகிறதென்று எதுவும் தெளிவில்லை.) சுமந்திரன், மனோ கணேசன், நிசாம் காரியப்பர், செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன், சிறீகாந்தா, மாவை சேனாதிராசா ஆகியோர் இணைந்து தயாரிப்பதாகத் (வெட்டிக் குத்திக் கொண்டிருப்பதாகத்) தகவல். இத்த கவலை அறிந்தபோது ‘எண்ணெய்ச் சீலையை நாய்கள் பிய்த்த’ கதைதான் என் நினைவுக்கு வந்தது.
இவ்வாவணத்தின் இறுதி வடிவம் எவ்வாறு அமையும்? இது எதிர்பார்ப்பது போல் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுமா? எப்போது அனுப்பப்படும்? அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கெனவே லண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre -TIC) கடந்த ஒக்டோபர் மாதம் (05.10.2021) இந்தியப் பிரதமருக்குச் சமர்ப்பணமொன்றைச் செய்துள்ளதென்பதும் கவனிக்கத்தக்கது. அது கேள்வியில் உள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதனிலும் குறிப்பாக அதன் தலைமைக் கட்சியாக இருந்து ‘தர்பார்’ நடாத்தும் தமிழரசுக் கட்சிக்குத் தமது போலித் தமிழ்த் தேசிய அரசியலை இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்களிடையே தொடர்ந்து சந்தைப்படுத்தி எதிர்காலத் தேர்தல்களில் வாக்குச்சேகரிப்பதற்கான – சரிந்து போயுள்ள தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியைத் தூக்கி நிறுத்திச் சரிக்கட்டுவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் ‘சமஸ்டி’ – பின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் (தமிழீழம்) – மீண்டும் ‘சமஸ்டி’- சென்ற நல்லாட்சி அரசாங்க காலத்தில் (சமஸ்டியை உள்ளே மறைத்து வைக்கப்பட்ட) புதிய அரசியலமைப்பு, இப்படிக் கடந்த காலத்தின் எல்லாத் தேர்தல் ‘துருப்பு’ச் சீட்டுகளையும் பயன்படுத்தி அவை பொய்யாய்ப் பழங்கதையாய்ப்போய்ப் பழசாகிய பின்பு இப்போது புதிய துருப்புச்சீட்டொன்று தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தேவையாகவுள்ளது. அதுதான் ‘ரெலோ’ (கறையான்) புற்றெடுக்க இப்போது தமிழரசுக் கட்சியிடம் (கருநாகத்திடம்) கை மாறியுள்ள ‘இந்திய பிரதமருக்குக் கடிதம்’ அனுப்பும் விவகாரம். அண்மையில் சுமந்திரன் குழுவினர் மேற்கொண்ட அமெரிக்கப் பயணமும் இவ்விடயத்தில் ‘ஊக்கி’ (Catalyst)யாகத் தொழிற்படுகிறது. அதுவும் இது போன்றதொரு ‘துருப்புச்சீட்டு’த்தான்.
இதனைவிட இன்னொரு நகைச்சுவையான விடயம் என்னவெனில் கூட்டம் நடைபெற்ற பின்பு 22.12.2021 அன்று தமிழ் ஊடகங்களிடம் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போது, தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்துத் தமிழ் பேசும் கட்சிகளும் ஓரணியில் பயணிக்க வேண்டும். அது எனது நீண்ட நாள் ஆசை என்றிருக்கிறார்.
அப்படியொரு நீண்ட நாள் ஆசை அவருக்கிருந்திருந்தால் குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டின் பின்னராவது சகல தமிழ் (பேசும்) கட்சிகளையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இணையுமாறு இதய சுத்தியோடு அழைப்பு விடுத்து (அதில் சில கட்சிகள் இணைய முன்வந்திருக்காவிட்டால் அது வேறு விடயம்) எல்லோரையும் இணைத்த ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கூட்டணியாகப் (கட்சியாகப்) பதிவு செய்து, அதற்கென்றொரு பொதுச் சின்னமொன்றைப் பெற்றிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்கெனவே பங்காளிக் கட்சிகளாக இணைந்திருந்த (சில) கட்சிகளை வெளியேற்றி விட்டு அல்லது ஓரங்கட்டி வெளியேற வைத்துவிட்டு தற்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளாக எஞ்சியுள்ள ‘ரெலோ’ மற்றும் ‘புளொட்’ உடன் ஓடும் புளியம்பழமும் போன்ற வழுவழுப்பான உறவையும் வைத்துக் கொண்டு (இவ் இரு கட்சிகளும் எப்போது வெளியேறுமோ தெரியாது) விரும்பினால் தமிழரசுக்கட்சியுடன் ஒத்துப் போங்கள் இல்லாவிட்டால் வெளியேறிவிடுங்கள் என்கிற மாதிரி நடந்துகொண்டு, இரா.சம்பந்தன் அவர்கள் இப்போது ஓரணியில் பயணிக்க வேண்டுமென்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமனாகும். எல்லோரையும் அணைத்துப்போகின்ற ஆளுமை அவரிடம் இல்லையென்றாகிவிட்டது. கடந்த சில காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இயங்குவதற்கு நல்லெண்ணத்துடன் தாமாகவே முன்வந்த கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகளையும் இரா.சம்பந்தன் உதாசீனப்படுத்தியதுண்டு. மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்த பல அரசியல் செயற்பாட்டாளர்களையும் – போராளிகளையும் – துறைசார் நிபுணர்களையும் வேண்டுமென்றே புறமொதுக்கிவிட்டுத் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுடன் எதுவித சம்பந்தம் இல்லாமலிருந்த-தானும் தன் குடும்பமும் தொழிலும் அல்லது உத்தியோகமும் எனக் காலத்தையோட்டிய சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களைக் கட்சிக்குள் இழுத்து வந்து, முக்கியப்படுத்தி, அவர்களிடம் அதிகாரங்களையும் கையளித்து, அதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலைச் சீர்கேட்டையச் செய்து சந்தி சிரிக்க வைத்துவிட்டு இப்போது ஓரணி பற்றிப் பிரஸ்தாபிப்பது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும்.
தமிழரசுக் கட்சியும் அது தலைமை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ‘காலாவதி’யாகிப் போனவையாகும்.
இப்போது தமிழர்கள் அவாவி நிற்பதும் தமிழர்களுக்கு அவசியமானதும் தமிழ் பேசும் அரசியற் கட்சிகள் இணைந்த (சந்தர்ப்பவாத) ஓரணியை அல்ல. உண்மையில் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு அவசியமானது யாதெனில், கிழக்கு மாகாணத் தமிழர்களும் வடக்கு மாகாணத் தமிழர்களும் புரிந்துணர்வோடு தத்தம் சமூக- பொருளாதார-அரசியல் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு தனித் தேசிய இனக் குழுமமாக இயங்கும் சமகாலத்தில் இலங்கையின் ஏனைய தேசிய இனக் குழுமங்களுடன் நல்லுறவோடு இயங்கக்கூடியதொரு ‘மாற்று அரசியல் அணி’யேயாகும்.