வாக்குமூலம்!…. (பகுதி 01) ….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
வாக்குமூலம் -01
‘அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும்போது 13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.’ (12.12.2021 ‘காலைக்கதிர்’ தலைப்புச் செய்தி).
இக்கூற்றிலேயுள்ள நாங்கள் என்றால் யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? அல்லது தமிழரசுக் கட்சியா? அல்லது தானும் தன்னுடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சட்டத்தரணி கனகஈஸ்வரன், திருமதி.நிர்மலா சந்திரஹாசன், சாணக்கியன் பா.உ. மற்றும் உலகத் தமிழர் பேரவைப் (GTF- GLOBAL TAMIL FORUM) பிரதிநிதிகளுமா? அல்லது தானும் சாணக்கியனுமா?
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் 1989 ஜூலை 29 இல் கைச்சாத்திடப்பெற்று முப்பத்தியிரண்டு ஆண்டுகளைக் கடந்தும்கூட அதன் வாயிலாகக் கொண்டுவரப்பெற்ற இலங்கை அரசியலமைப்பின் 13வது அரசியல் சட்டத் திருத்தமே இன்னும் முழுமையாகவும்- அர்த்தமுள்ள விதத்திலும்- அரசியல் விருப்பத்துடனும் இலங்கை அரசாங்கங்களினால் அமுல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பில் இருக்கும்போது, 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது என்று சுமந்திரன் சொல்வது எத்தகைய தீர்வைக் குறிக்கிறது? அதனை எவ்வாறு அடையப் போகிறார்? என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன.
மறுபுறம் 13ஐ அமுல்படுத்த ஒன்று கூடுகிறோம் என்று சுமந்திரன் சுட்டுவது ஒன்றுகூடலை ஒழுங்கு செய்த ‘ரெலோ’வை மட்டுமா? தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் தற்போது எஞ்சியிருக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில் தான் சார்ந்த தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய இரு கட்சிகளுமான ‘ரெலோ’வையும் ‘புளொட்’டையும் சேர்த்தா? அல்லது தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் (?) கட்சிகளையா?
மேலும், சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ள ஒன்றுகூடல் 12.12.2021 அன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. அந்த ஒன்றுகூடலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளாரே? (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பெற்ற அரசியல் கட்சியல்ல) ஒன்றுகூடலுக்கு இரா.சம்பந்தன்தானே தலைமை தாங்கியிருந்தார். அப்படியாயின் சுமந்திரனைச் சம்பந்தன் கழற்றிவிட்டுவிட்டாரா?
‘ரெலோ’ ஒழுங்கு செய்த இந்த ஒன்றுகூடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா பங்குபற்றவில்லை. அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. அப்படியாயின் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமையும் ஏற்ற இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவராகக் கலந்துகொண்டாரா? அல்லது தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான அவர் தமிழரசுக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டாரா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத்தான் அவர் கலந்துகொண்டிருந்தாரென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றாக இருந்துகொண்டே இவ் ஒன்றுகூடலைத் தனித்தே ஒழுங்கு செய்த ‘ரெலோ’ தன்னிச்சையாகச் செயற்படுகின்றதா? அதை அவர் அனுமதித்து ஏற்றுக்கொண்டுள்ளாரா?
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் ஒன்று கூடல் என வர்ணிக்கப்படும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனினதும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினதும் வகிபாகம் என்ன?
முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் (உதாரணமாக ரிஷாட்பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளும் (உதாரணமாக ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) வடக்கு கிழக்கில் செயற்படும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் (உதாரணமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி) ஏன் இவ் ஒன்றுகூடலில் தவிர்க்கப்பட்டன? அப்படியாயின் இவ் ஒன்றுகூடலை முழு அளவிலான தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றுகூடல் எனக் கருதலாகுமா?
இந்த ஒன்றுகூடலை இன்னொரு கோணத்தில் நோக்கும்போது இவ் ஒன்றுகூடல் தற்போது ஆட்சியிலுள்ள ‘பொது ஜன பெரமுன’ அரசாங்கத்திற்கு எதிரான சிறுபான்மையினக் கட்சிகளின் ஒன்றுகூடலா? அதாவது எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் யு.என்.பி.க்கு ஆதரவான சிறுபான்மையினக் கட்சிகளின் ஒன்று கூடலா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.
எப்போதுமே தனிக்காட்டு ராஜாவாக வலம்வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) இவ் ஒன்றுகூடலில் பங்கேற்கவில்லை.
மொத்தத்தில் இவ் ஒன்றுகூடல் முரண்பாடுகளின் சங்கமமாகவும்- சிக்கெடுக்கமுடியாத இடியப்பச் சிக்கலாகவுமே தோன்றுகிறது.
இப்படியான முரண்பாடுகளுடனும் சிக்கல்களுடனும் தன்னை வெளிகாட்டியுள்ள இவ் ஒன்றுகூடல் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்தில் உருப்படியாக ஏதும் செய்யமுடியுமா? ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகத்தான் இவ் ஒன்றுகூடல்போய் முடியுமா?
இத்தகைய எண்ணற்ற கேள்விகளுக்கு மத்தியில் இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது. தமிழ் மக்களையும்- தமிழ் பேசும் மக்களையும் இதுவரை தனித்தனியாக ஏமாற்றி வந்த இக் கட்சிகள் இனி அது சரிப்பட்டுவராது என்பதால், இனிமேல் கூட்டுச் சேர்ந்து ஏமாற்றும் முயற்சியா இந்த ஒன்றுகூடல்? எதிர்காலத்தில் வரப்போகின்ற தேர்தல்களில் வாக்குச் சேகரிப்பதற்கான அரசியல் சித்து விளையாட்டா இது? எதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் அவதானமாக இருப்போம். எம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்ட அனுபவங்களை நிறையக் கொண்டுள்ள நாம் எதனையும் எச்சரிக்கையுடனும் அறிவுபூர்வமாகவும் நோக்கத்தலைப்படுவோம். ….
தொடரும்.