இலக்கியச்சோலை

இம்மாதம் 06 ஆம் திகதி ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியானுக்கு எண்பது வயது!…. முருகபூபதி.

தெணியானின் இரண்டு நூல்கள் :

வாசிப்பு அனுபவம்…. முருகபூபதி.

கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய உலகில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்ததினம் இம்மாதம் 06 ஆம் திகதி.

வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.

அவர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை அவரது 80 ஆவது பிறந்த தினத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

‘இன்னும் சொல்லாதவை’

நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள்.

‘இன்னும் சொல்லாதவை’ நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரசியமாகவும் சொல்லவல்லவர்.

தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு

இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

கவியரசு கண்ணதாசன் ஒரு தடவை இப்படிச்சொன்னார்: மரத்தைப்பார். அதில் பூக்கும் மலர்களை, காய் கனிகளைப்பார். ரசிப்பாய். ஆனால், அந்த மரத்தின் வேரைப்பார்க்க முயலாதே. பிறகு, மரமும் இருக்காது உனது ரசனையும் பொய்த்துவிடும். ஒரு படைப்பாளியின் உள் அந்தரங்கம் ரசனைக்குரியதாக இருக்காது என்பதுதான் கவியரசுவின் கருத்து.

வெளிப்படையான மனிதராகவும் தனக்கு சரியெனப்பட்டதை துணிந்து சொல்லும் தன்னம்பிக்கையுடையவராகவும் பல தசாப்தகாலமாக எழுத்துலகில் இயங்கிவரும் தெணியான் தனது வாசகர்களுக்கு சொல்லவேண்டிய கதைகள் நிறையவுள்ளன.

அவர் இந்த நூலில் சொல்லியிருப்பவவை சொற்பம்தான். ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் வாழ்ந்த வடமராட்சியும் மாந்தர்களும் குறிப்பாக பெற்றோர், சுற்றத்தவர் எப்படி வாழ்ந்தனர் என்பதை வாழ்வனுபங்களாக சித்திரிக்கின்றார்.

முகமூடியோடு பிறந்த தெணியான், வளர்ந்து பெரியவனாகியதும், ஐயா (தந்தை) இறந்தபின்னர் நடக்கும் சவண்டி கிரியையின்போது அதனைச்செய்யவந்த ஐயரின் காலில் விழுந்து வணங்கமறுக்கும் ‘முகமூடி’ அணியாத முழுமனிதனாக காட்சி தருகிறார்.

ஒரு படைப்பாளியின் ஆற்றல் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவுவதில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. தெணியான் வாசகனிடத்தில் ஊடுறுவுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வாசகனையும் தன்னோடு அழைத்துச்செல்கிறார். தான் பிறந்து, தவழ்ந்து வளர்ந்து நடமாடிய வடமராட்சியை சுற்றிக்காண்பிக்கின்றார். நாமும் அவர் இன்னும் சொல்லாதவற்றை கேட்டறிவதற்காக அவரைப்பின்தொடருகின்றோம்.

அம்மாக்களின் உழைப்பு பெரிதாகப் பேசப்படுவதில்லை. வேலை…வேலையே வாழ்க்கை என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் கி.ராஜநாராயணன். இங்கே இந்தத்தொடரில் தனது தாயாரின் உழைப்பு பற்றி சிலாகித்து எழுதுகிறார் தெணியான். அம்மாமாருக்கு வீட்டில் கூட்டிப்பெருக்கி சமைப்பது மட்டும் அல்ல வேலை. அதற்கும் அப்பால் அவர்கள் சகிக்கும், சுமக்கும் வேலைகளும் அதிகம்தான்.

ஒரு சண்டியருக்கு பீடி வாங்கிக்கொடுக்கும் வேலையை தெணியான் வெறுப்போடு ஏற்றுக்கொள்கிறார். பீடியை தெணியான் வீடி என்றுதான் குறிப்பிடுகிறார். தனது வெறுப்பை அவர் காண்பிக்கும்

விதம் வேடிக்கையானது. வெறுப்புக்கு கழிவுதான் அவருக்குதவுகிறது. பீடியில் சிறுநீர் கழித்துவிட்டு கொடுக்கிறார்.

எனக்கு கவியரசு கண்ணதாசனுடன் – கமல்ஹாசன் நடித்த மகாநதி திரைப்படமும் நினைவுக்கு வருகிறது. “நீ உருப்படமாட்டாய்” என்று சொன்ன பாடசாலை ஆசிரியர் மீதிருந்த வெறுப்பை பிறிதொரு காலத்தில் அந்த பாடசாலைக் கட்டிடத்தில் சிறுநீர் பெய்து காட்டிக்கொண்டார் கண்ணதாசன்.

மகாநதி திரைப்படத்தில் சிறையிலிருக்கும் கமலுக்கு காதலியிடமிருந்து வரும் கடிதத்தின்மீது சிறுநீர்கழித்து தனது வெறுப்பை ஒரு சிறைக்காவலன் காண்பிக்கின்றான். வெறுப்புக்கு சிறுநீர்தான் பதிலடியோ? என்று எண்ணத்தோன்றியது.

இந்த நூல் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கிறது. பிரதேச மொழிவழக்குகள் நிரம்பிய இந்த நூலை தமிழக வாசகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது மொழிவழக்குகள் தங்களுக்கு புரியவில்லை என்று இப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இந்நூல் மற்றுமொரு வரவு.

பொற்சிறையில் வாடும் புனிதர்கள்

யாழ்ப்பாணத்தில் முன்னர் வெளிவந்த எஸ். திருச்செல்வம் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட முரசொலி பத்திரிகையில் 03-08-1987 முதல் 13-09-1987 ஆம் திகதி வரையில் 45 நாட்கள் வெளிவந்ததுதான் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் தொடர்கதை.

இன்று போன்று அன்று நாவல்கள் தனிப்பிரதிகளாக வரவில்லை. முதலில் பத்திரிகைகள் – இதழ்களில் வாரம் – மாதம் என்ற ரீதியில் வந்து பின்னர் நாவல் என்ற மகுடத்தில் நூலாகிவிடும்.

அதனால், தொடர்கதைகள் யாவும் நாவல்களாகிவிடுமா? என்ற விமர்சனமும் இருக்கிறது. தொடர்கதைகளில் ஒரு அத்தியாயம் முடியும்போது ஒரு எதிர்பாராத திகில் திருப்பத்தை எழுத்தாளர் முன்வைப்பார். அடுத்த அத்தியாயத்தை வாசகர் ஆர்வத்துடன் எதிர்நோக்கவேண்டும் என்பதற்காக இந்த உத்தியை முன்னர் பலரும் இந்தத்துறையில் கையாண்டிருக்கிறார்கள்.

நாளாந்தம் இந்தக்கதை வெளியானபோது, வடக்கில் போர்மேகங்கள் சூழ்கொண்டிருந்த காலம். புத்தகமாக வெளியான வருடம் 1989. முரசொலி பத்திரிகையே இதனை வெளியிடுகிறது.

இக்காலத்தில் இந்திய அமைதிப்படை அங்கு நிலைகொண்டிருந்தது. ஆனால், அந்தப்பகைப்புலம் இந்த நாவலில் சித்திரிக்கப்படவில்லை. அப்படியாயின், இந்தக்கதைக்கான கருவைத் தேடும் இதுதொடர்பாக தகவல் திரட்டும் பணியை அதற்கு முன்னரே தெணியான் தொடங்கிவிட்டதாகவே கருதவேண்டும்.

தி. ஜானகிராமனின் மோகமுள், ஜெயகாந்தனின் பிரம்மோபதேசம், பூமணியின் நைவேத்தியம், யூ. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, ஆகிய படைப்புகளை படித்திருக்கிறீர்களா?

மோகமுள், சாவித்திரி, சிறை, தேவராகம், அரங்கேற்றம், மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர் , இது நம்ம ஆளு , வேதம் புதிது, அக்ராஹாரத்தில் கழுதை ஆகிய திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா..?

இவற்றைப்படித்தவர்களும், பார்த்தவர்களும் தங்கள் மனத்திரையில் தங்கள் அனுபவத்தின் ஊடாக ஒரு சித்திரம் வரைவார்கள். பிராமணர் சமூகத்திலிருந்த கட்டுப்பாடுகள், பண்பாட்டுக்கோலங்கள், ஆசாரமான வாழ்க்கை முதலானவற்றை மாத்திரம் வைத்துக்கொண்டு அவர்களை மேட்டுக்குடியினர் என்று நாம் கருதிவிடமுடியாது.

அடிநிலை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இவர்களும் வேறு ஒரு ரூபத்தில் எதிர்கொள்கின்றார்கள் என்பதையும், பெரும்பாலான, எழுத்தாளர்கள் பார்க்கத்தவறிய பக்கத்தையும் இலக்கியத்தில் பதிவுசெய்துள்ளார் தெணியான்.

தெணியான் வேறு ஒரு சமூகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு அந்நியப்பட்ட பிராமண சமூகம் பற்றி அவரால் எப்படி எழுதமுடிந்தது? இங்குதான் மற்றும் ஒரு சுவாரஸ்யமான முன்கதைச்சுருக்கத்தை நாம் அறிகின்றோம்.

ஈழத்து எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பா. ரத்னசபாபதி அய்யர் இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்தவர். அவர் பிராமண சமூகத்தில் பிறந்திருந்தாலும், புரோகிதர் வேலை தெரிந்திருந்தாலும் ஒரு தபால் அதிபராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்று தற்பொழுது லண்டனில் இருக்கிறார்.

இவருக்கு இலங்கைவாழ் பிராமணர் சமூகத்தின் கதைகள் பல தெரியும். ஆனால், அவரால் அந்தக்கதைகளை எழுதவிடாமல் தடுத்த மறைமுக சக்தி எது?

எனினும், அவர் தந்திருக்கும் பல அரியதகவல்களின் பின்னணியில் இந்த நாவலை தெணியான் படைத்துள்ளார். 1983 வன்செயல்களையடுத்து ஊருக்கு வந்துசேர்ந்த ரத்னசபாபதி அய்யரும் தெணியானும் வடமராட்சியில் சந்திக்கிறார்கள். அய்யர் தங்கள் சமூகத்தின் கதைளை சொல்கிறார். தெணியான் மேலும் தரவுகளை திரட்டுகிறார். மூத்த எழுத்தாளர் கே. டானியலும் இதுவிடயத்தில் உதவுகிறார்.

முதலில் தெணியான் இரண்டு சிறுகதைகளை எழுதி பத்திரிகை , இதழ்களுக்கு அனுப்பியும் ஓராண்டு காலமாக அவை வெளிவரவில்லை. மீண்டும் எழுதி மல்லிகைக்கு அனுப்புகின்றார். அக்கதைகளை பிரசுரிப்பதில் மல்லிகைக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

பின்னர் நாவல் எழுதுகிறார். அத்தியாயங்களை பிரித்து தொடர்கதையாக்குகிறார்.

எஸ். திருச்செல்வம் ஆசிரியராக இருந்த முரசொலி வெளியிடுகிறது.

இக்கதை முரசொலியில் வெளிவந்த காலப்பகுதியின் அரசியல் பின்னணி குறித்து இந்த நாவல் பேசவில்லை. இரண்டுபெரிய இராணுவத்தினதும் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்த வடமராட்சியின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ஆனாலும், இதில் இராணுவங்களினதும் இயக்கங்களினதும் நடவடிக்கைகள் வரவேயில்லை.

தி. ஜானகிராமனின் மோகமுள், இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் பின்புலத்தை கொண்டிருந்தாலும், ஒரு முதிர் கன்னியின் உணர்வுகளையே பிரதிபலித்தது.

அத்தை புனிதத்திற்கு அண்ணன் மகள் ஜமுனாவை தனது வீட்டு மருமகளாக்கவேண்டும் என்ற எண்ணம். ஜமுனாவுக்கோ, தொடர்ந்து படித்து – இசைத்துறையில் முன்னேறவேண்டும் என்ற ஆசை. எதற்காக அத்தை வீட்டை புகுந்த வீடாக்குவதற்கு அவள் மறுக்கிறாள்? அங்கே சென்றால் தனது தாயைப்போன்று கோயிலுக்கு பொங்கல், வடை, மோதம் முதலான நைவேத்தியங்கள் செய்யவேண்டிவரும்.

சமையல்கட்டுக்குள் சிறைப்பட அவள் தயாரில்லை. தந்தையாருக்கு கோயிலில் கிடைக்கும் சொற்ப வருமானமும் திவச வீடுகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு , காய்கறிகளையும் நம்பியிருக்கும் குடும்பத்தின் மகள். படிக்கும்போது அவள் ஆசைப்பட்ட சிங்கப்பூர் வண்ணக்குடையைக்கூட தந்தையால் வாங்கிக்கொடுக்கமுடியவில்லை.

ஒரு திவசவீட்டில் அவருக்கு கிடைக்கும் அந்த வண்ணக்குடையை மகள் ஜமுனாவிடம் தந்து, அவளை மகிழ்ச்சியடைய வைக்கிறார் தந்தை. ஆனால், அந்த அற்ப மகிழ்ச்சிக்கும் அற்பாயுள்தான். பாடசாலையில் மற்றும் ஒரு வசதி படைத்த சகமாணவி அந்தக்குடை தங்கள் வீட்டில்நடந்த திவசத்தினால்தான் அவளுக்கு கிடைத்தது எனச்சொல்லும்போது ஜமுனா உடைந்துபோகிறாள்.

இந்தக்காட்சியை தெணியான் சித்திரிக்கும்போது இவ்வாறு அந்தப்பாத்திரத்தின் ஊடாக சொல்கிறார்.

அந்த வரிகளுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கிறது. கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள வரும் அடிநிலை மக்கள், மேல்சாதியினர் வந்து கிணற்றுக்கட்டில் ஏறிநின்று தண்ணீர் வார்க்கும் வரையில் காத்திருக்கும் காட்சியை அந்தணர் வீட்டுப்பிள்ளை ஜமுனா பார்க்கிறாள்.

அந்த வரிகள்: கிணற்றுத்தண்ணீருக்கு தவமிருந்து பெற்றால் அது தானம்! திவசம் செய்யப்போய் கிடைத்த குடை தர்மம்!

வகுப்புச்சிநேகிதி மாலதியுடன் பருத்தித்துறை சந்தையில் பலாப்பழம் வாங்கி உண்டதற்காக அவளை வீட்டில் அடித்து கண்டிக்கின்றார் தந்தை!

பலாப்பழம் உண்டதல்ல குற்றம்! அடிநிலை சமூகத்தைச்சேர்ந்த மாணவியுடன் சேர்ந்து சாப்பிட்டதுதான் பெரும் குற்றம். வடமராட்சியில் பிரபலமான இந்து மகளிர் கல்லூரியின் பூர்வீக வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் அய்யர்களுக்காக உருவான பாடசாலைதான் இன்று வடஇந்து என்ற பெயருடன் திகழ்கிறது.

அந்த வரலாறை அத்தை புனிதத்திடமிருந்தே கேட்டுத்தெரிந்துகொள்கிறாள் ஜமுனா. பஞ்சமர் என்ற அடிநிலை மக்களுக்கு கோயில் புரோகிதர்கள் சோதிடம் கணிப்பதும் மகா குற்றம் என்பது மணியகாரர்களான கோயில் முதலாளிகளின் எழுதப்படாத சட்டம். அத்துடன்பல எழுதாத சட்டங்களை கோயில் நிருவாகமும் பிராமணர் சமூகமும் தயாரித்துவைத்திருக்கிறது.

கோயில் அய்யரின் மனைவி இறந்துவிட்டால், அவர் பிரதிஷ்டா பூஷணம். தாரமிழந்தவர் கோயிலிலே கொடியேற்ற இயலாது! கும்பாபிஷேகம் செய்யமுடியாது, மந்திரம் ஓதி ஒரு திருமணத்தையும் நடத்த முடியாது! இந்நிலையில் அவரது வாழ்க்கையின் பொருளாதார பாதுகாப்பு கேள்விக்குரியதாகின்றது.

அதனால், மனைவியை இழந்தவர் காலம் தாழ்த்தாமல் ஒரு பிராமணப்பெண்ணை வயது வித்தியாசம் பார்க்காமலும் அவசியம் திருமணம் செய்யவேண்டும்.

இந்த இடத்தில், எனக்கு பரதனின் இயக்கத்தில் பலவருடங்களுக்கு முன்னர் மேனகா நடித்த சாவித்திரி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சமகால பிரபல நட்சத்திரம் கீர்த்தி சுரேஷின் தாயார்தான் மேனகா.

அந்த சாவித்திரி பாத்திரத்தின் பரிதாபகரமான முடிவை தற்கொலையாக சித்திரித்த பரதன், அதற்கு பாவசங்கீர்தனமாக மற்றும் ஒரு படத்தை எடுத்தார். அதுதான் ஶ்ரீதேவி – அரவிந்தசாமி நடித்த தேவராகம்!

பருவ வயதிலிருக்கும் பிராமண யுவதி காயத்திரியை முதியவர் ஒருவருக்கு மணமுடித்துவைக்க ஒரு குடும்பம் தயாராகின்றது. இவ்விடத்தில் இளம் தலைமுறை அதனை எதிர்த்துபோராடுகின்றது.

எவ்வாறு அந்த சமூகத்திலும் பெண்கள் அடிநிலையில்தான் இருக்கின்றனர் என்பதையும் சித்திரிப்பு விவரணம் வாயிலாக தெணியான் வாசகர்களின் சிந்தனையுள் ஊடுறுவுகிறார்.

” பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால், பெருங்கிழவன் காதல் கொள்ள பெண்கேட்கிறான்!” என்று ஒரு கவிஞரின் வரிகளை தெணியான் எழுதுகின்றார். அந்தக்கவிஞர் யார்? என்பதை அவர் எழுதவில்லை. கோயில் மணியகாரனும் சிங்கப்பூரில் சம்பாதித்துவந்து, ஊரில் வட்டிக்கு பணம் கொடுப்பவனும் இந்த நாவலின் வில்லன்களாக வரும் மேட்டுக்குடியின் பிரதிநிதிகள்.

அவர்களுக்கு சேவகம் செய்யும் அய்யர்மார் மேல் சாதியினராக கருதப்பட்டாலும் ஒருவகையில் அடிமை வாழ்வையே தொடருகின்றனர்.

அவர்கள்தான் பொற்சிறையில் வாடும் புனிதர்கள். மணியகாரனும் சிங்கப்பூரானும் நிதானமாக இருக்கும்போது அவர்களை “அய்யா” என அழைக்கிறார்கள். கோபம் வந்தால், ” என்ன அய்யர்” என்று ஏளனப்படுத்துகிறார்கள்.

நாமும் ஒருவரை கோபிக்கும்போது ” என்ன மிஸ்டர்?” என்று கேட்போமில்லையா? ” மிஸ்டர்” நல்ல சொல்தான். ஆனால், அது சொல்லப்படும் இடம் சூழல் மாறுபடுகிறது.

நாவல் 16 அத்தியாயத்துடன் நிறைவுக்கு வருகிறது.

இறுதியில் ஒருவர் வருகிறார். இந்த நாவலை எழுதுவதற்கு தூண்டுகோளாக இருந்தவரின் பெயரிலேயே அந்தப்பாத்திரம் சிருட்டிக்கப்படுகிறது. அவர்தான் ரத்தினசபாபதி அய்யர்.

இந்தப்பாத்திரம் கோயில் கும்பாபிஷேகத்தின் இறுதியில் பத்ததி வாசிப்பதற்கு வருகிறது. அவரை இருநூறு ரூபா சம்பளம் பேசி அழைத்துவருகிறான் அய்யரின் மகன் பாலன்.

ஆனால், அலுவல் முடிந்ததும் ஐம்பது ரூபாவை நீட்டி அவரை அனுப்புகின்றான். மணியகாரன். சொன்னவாறு உரிய ஊதியம் கிடைக்காத பத்ததி வாசித்த ரத்னசபாபதி அய்யர், அந்த ஐம்பது ரூபாவை பேரம் பேசி அழைத்துவந்த பாலனிடமே கொடுத்துவிட்டு திரும்புகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாலன் நியாயம் கேட்கச்சென்று மணியகாரனுடன் மோதுகின்றான். அந்த சர்ச்சையில் குறுக்கிடும் ஆசார சீலரான அய்யரும் மணியகாரனால் தாக்கப்படுகிறார்.

அந்த பிராமண சமூகத்தினர் விழிப்படைகின்றனர். அந்த ஊரைவிட்டு வெளியேறுகின்றனர். கோயில் புரோகிதர் வேலையை உதறிவிட்டு சில்லறைக்கடை நடத்தத் தொடங்கி, அதுவரை வாழ்ந்த வாழ்விலிருந்து திசை திரும்புகின்றனர்.

அந்தச்சமூகத்து அய்யர் இளைஞர்கள் அய்ரோப்பாவையும் கனடாவையும் நோக்கி தொழில் தேடி புலம் பெயர்கின்றனர்.

அந்தப்பொற்சிறையிலிருந்து அவர்கள் விடுதலையான கதையைத்தான் ஜமுனா எழுதிமுடிக்கிறாள் என்பதை வாசகர்கள் இறுதியில்தான் தெரிந்துகொள்கின்றனர்.

ஆனால், அவள் ஜமுனா அல்ல. பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் வாணி. அவள் தனது குடும்பத்தின் கதையை எழுதும்போது தன்னை ஜமுனாவாக மாற்றிக்கொண்டாள். தெணியான் எழுதத்தொடங்கிய காலத்தில் கற்பனா வாதக்கதைகளை முற்போக்காளர்கள் புறக்கணித்திருந்தனர். சோஷலிஸ யதார்த்தப்பார்வையுள்ள கதைகளையே முற்போக்கு விமர்சகர்களும் வரவேற்றனர்.

இந்நாவலின் முடிவில் கோயில் புரோகிதர்கள் ஒன்றிணைந்து தங்களது உரிமைகளுக்காக ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர்.

மணியகாரன் அள்ளிவீசிய சுடு சொற்கள் அந்த சமூகத்தின் தன்மானத்தை வெகுண்டெழவைக்கிறது. அதுவரையில் அடங்கியிருந்த அவர்களின் குரல் போர்க்குரலாக மாறுகிறது.

இறுதியாக சில வார்த்தைகள்: “இந்த நாவலை தெணியான், எழுதி முடித்ததும் தனது நண்பர்கள் தங்கவடிவேல் மாஸ்டர், பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி சுப்பிரமணிய அய்யர், டானியல்

ஆகியோரிடத்திலும் காண்பித்துவிட்டுதான் முரசொலியில் தொடராக வெளியிடுவதற்கு முன்வந்துள்ளார்.

முரசொலியில் வாசித்திருக்கும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் ஸ்தாபகர் வ. ராசையா மாஸ்டர் தெணியானுக்கு எழுதிய நீண்ட வாசகர் கடிதமும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய குறிப்புகளும் இந்த நாவலை மேன்மைப்படுத்துகின்றன.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாவல் வெளிவந்திருந்தாலும், எமது தமிழ் சமூகத்தில் இன்னமும் மாற்றங்கள் நேர்ந்துவிடவில்லை. அய்யர்கள் இன்று ஆசிரியர்களாக அதிபர்களாக, மருத்துவர்களாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, வர்த்தகர்களாக, ஏன் இரணுவத்தளபதிகளாகவும் பணி தொடருகின்றனர். சாதி அமைப்பும் பொருளாதார ஏற்றதாழ்வும் சமூக அந்தஸ்தை தீர்மானிக்கின்றன. பொற்சிறையில் வாடிய புனிதர்களும் இதுவிடயத்தில் தப்ப முடியவில்லை.

 

—0—

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.