Featureஇலக்கியச்சோலை
மூதறிஞர் எஸ்பொவின் நினைவுப் பேருரை!…. இளம்பிறை எம்.ஏ.ரகுமான்.
அனைவருக்கும் வணக்கம்! வாழ்த்துகள்!!
4 .12.2021இல் காலஞ்சென்ற மூத்த எழுத்தாளர் நண்பர் செ. கணேசலிங்கன் அவர்களின் நினைவும் இங்கு மிகமிக அவசியமாகின்றது.
அவரின் திருமணம் 29. 10 .1960இல் கொழும்பில் நடைபெற்றது.அதில் கலந்து கொள்ள மட்டக்களப்பிலிருந்து எஸ்.பொ வந்திருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நண்பர் இளங்கீரன் அவர்கள்.
அப்போது எஸ்பொ அவர்களுக்கு இருபத்தி எட்டு வயது. அவர் காலமானபோது 82 வயது. இடைப்பட்ட 54 ஆண்டுகளில் நைஜீரியாவில் அவர் வாழ்ந்த எட்டு ஆண்டுகள் தவிர மீதிக் காலம் முழுவதும் என்னுடன் நெருங்கி வாழ்ந்தார். அந்த எட்டு ஆண்டுகளில் விடுமுறைக்காக ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும் சென்னை வந்து தங்கி என்னுடன் சில நாள்கள் கழித்த பின்னரே மட்டக்களப்பு செல்வார்.
கொழும்பில் நான் வாழ்ந்த போது என் அச்சகத்தில் அவர் வாழ்ந்தது போல் நான் சென்னை வந்ததும் இங்கும் என் அச்சகத்தில் என்னுடன் தங்கி வாழ்ந்தார். மித்ர வை சில காலம் அவருக்காக நான் நடத்தியபின் அவர் நேரடியாக பொறுப்பேற்று பதிப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். இந்த நெருக்கமும் உறவும் இலக்கியம் தான். இந்த 54 ஆண்டு கால வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு கூட பிணக்கு- பேதம் ஏற்படலாம். ஆனால் எங்களுக்கு எதுவுமே ஏற்படவில்லை.
எங்கள் உறவில் இன்னொரு அதிசயமும் அபூர்வமும் தலைதூக்கி நிற்கின்றது. எஸ் பொ அழுத்தமான மார்க்சியவாதி. நான் வைதீகக் குடும்பத்தில் பிறந்த ஆன்மீகவாதி; அதையே ஓம்புபவன். மலைக்கும் மடுவுக்கும் உள்ள இந்த வித்தியாசத்தில் மயிறு அளவிலும் நாங்கள் பேதம் கொள்ளவில்லை. இங்கு அதுபற்றி விரிவாக பேச இயலாது.
எஸ்பொவுடன் இணைந்த பின்னர் அவருடைய எழுத்து நடையிலும் அழகிலும் வண்ணத்திலும் கவரப்பட்டு அதுவாகவே நானும் மாறினேன்.
இங்கு ஒரு முக்கியமான கருத்தை பதிய வைக்க விரும்புகின்றேன்.
பேராதனை பல்கலையில் இருந்து வெளிவந்து, எழுத்தாளர்களாகப் பரிணமித்த, ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர் எஸ்பொவின் நடையை பின்பற்றினர். அதில் முற்போக்கு எழுத்தாளர் பலர். உதாரணத்திற்கு ஒருவர் பெனடிக்ட் பாலன். இலக்கியம் இவ்வாறுதான் படைக்கப்பட வேண்டும் என்று பின்பற்றினார்களே தவிர இது எஸ்பொவால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழுக்கு புதிதாய் வந்து சேர்ந்த சொல்லாக்கம் என்பதை அறியாதவர்கள்.
ஒரு சொல்லின் விளக்கத்தை விட வேறு ஒரு சொற் பிரயோகம் பொருத்தம் எனில் அதை மாற்றி எஸ்பொ உபயோகப்படுத்துவார். உதாரணத்திற்கு conscios என்பதற்கு பிரக்ஞை என்ற சொல்லை விட சரியான பொருள் தரும் சேதநை என்ற சொல்லை பயன்படுத்தினார். இப்படியே சரியான–பொருத்தமான சொற்கள் கிடைக்கும் போது பழைய சொற்களை நீக்கி விடுவார். இவ்வாறு எஸ்பொ தமிழுக்கு அறிமுகப்படுத்திய சொல்லாக்கங்கள் ஏராளம். அவை ஆராயப்பட்டு தொகுக்கப்பட வேண்டியவை.
2014இல் ஜனவரி மாதம் மூன்று நாள்கள் கோவையில் ஒரு மாநாடு நடந்தது. அனைத்துலகக் கருத்தரங்காக, கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கட்டுரைகள் “தாயகம் கடந்த தமிழ்” என்னும் பெயரில் எழுத்தாளர் மாலன் அவர்களால் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அதில் “தாயகம் பெயர்தல் வாழ்வும் வலியும்” என்ற தலைப்பில் எஸ் பொ இவ்வாறு பேசினார். “அயலக இலக்கியம் என்றும் புகலிட இலக்கியம் என்றும் புலம்பெயர்வு இலக்கியம் என்றும் பலவாறாக அழைக்க முற்பட்டனர். இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடலை நான் அறிமுகப்படுத்தினேன். இன்று அதுவே பரவலாக தமிழ் இலக்கிய உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என்று அவர் பேசும்போது தெளிவுபடுத்தினார்.
இன்றைய தமிழக அரசு வெளிநாட்டில் வாழும் தமிழருக்கான நலத்திட்டங்கள் உருவாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புலம்பெயர்ந்தோர் என்ற பெயரில் அந்த அமைப்பை உருவாக்கி அறிவித்தது இச்சொல்லுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
1962இல் நடைபெற்ற சாஹிரா மாநாட்டின் பின்னர் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக முற்போக்காளர் என்மீதும் எஸ்பொ மீதும் போர் தொடுத்தனர். இந்தப் போரில் வெல்ல இளம்பிறை மாசி கை எமக்கு உதவியதோடு வீரகேசரி தினகரனும் கைகொடுத்தன. அப்போது தினகரன் ஆசிரியராக இருந்த சிவகுருநாதன் அவர்களின் பங்கு அளப்பெரியது; போற்றத்தக்கது. இலக்கியத்திற்கான போராட்டம் மட்டுமல்ல சமூக அக்கறையுடன் கூடிய பெரும் போராட்டத்திலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினோம்.
இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் தடை செய்ய வேண்டும் என்ற முற்போக்கு கோஷம் தீவிரமடைந்தது. அதை எதிர்த்து அரசு நிலையிலும் போராடினோம். அப்போராட்டத்தின் விளக்கமாகவே எஸ் பொ அறிக்கை என்ற நூலும் வெளியிடப்பட்டது.அரசும் இறுதியில் எஙகள் கோரிக்கையை ஏற்றதால் வெற்றி கண்டோம்.
மேலும் தமிழ்நாட்டு பத்திரிகைகள் இலக்கியவாதிகள ஈழத்து எழுத்தாளர்களை துடக்கு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் போராட்டத்தில் இளம்பிறை காலத்தில் பேராசிரியர் இர.ந. வீரப்பனார் அவர்களும் மித்ர காலத்தில் மலேசிய சை பீர் அவர்களும் எம்முடன் கைகோர்த்தனர்.
ஆரம்ப காலத்தில் எல்லோரும் எதிர்க்கும் பொழுது டில்லியில் இருந்த பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களும் ஷாலினி அம்மையார் அவர்களும் எங்களை மதித்து ஊக்குவித்து கௌரவித்தனர்.
இந்த வரலாறுகள் அநேகருக்கு தெரியாது என்பதற்காகவே இம்மாபெரும் விவாத அரங்கில் இதை அரங்கேற்றினேன். இன்னும் பல போராட்டங்கள் விரிவஞ்சி விபரிப்பதைத் தவிர்க்கின்றேன். எஸ்பொ வகைக்கு ஒன்றாக வண்ணத்திற்கு ஒன்றாக இலக்கியத்தை ரசித்து ருசித்து வெளிப்படுத்தியவர். அவருடன் பகைமை பாராட்டிய பலர் அவர் சென்னையில் வாழ்ந்த போது சமரசம் செய்து கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர். உதாரணத்திற்கு சுஜாதா ஜெயகாந்தன் பிரபஞ்சன் வெங்கட் சுவாமிநாதன் போன்றோர் மித்ர வுக்கு நேரில் வந்து அளவளாவினர்.
இலக்கியத்தின் பல்துறைகளிலும் இன்றுவரை எவரும் செய்யாத இமாலய சாதனைகளைச் செய்தவர் எஸ்பொ என்பதைத் துணிவுடன் இ.ங்கு அழுத்திச் சொல்ல விரும்புகின்றேன்.
இறுதியாக, .கல்விக்கும் சமயத்திற்கும் அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலாநந்தர் போன்று இலக்கியத்திற்கும் கல்விக்கும் அருந்தொண்டாற்றிய எஸ் பொவையும் கிழக்கு மாகாணத்தின் இரு கண்களாக போற்றிப் புகழப்பட வேண்டும் என்று வேண்டி விரும்பி விடைபெறுகிறேன்.
வணக்கம்.
இளம்பிறை எம்.ஏ.ரகுமான்.