சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ….. ( 32 ) ….. சட்டத்தரணி, பாடும்மீன்.ஸ்ரீகந்தராசா.
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற, இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த 140 பிரதிநிதிகள் வெற்றிபெற்றார்கள். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டுத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்மூலம், மொத்தமாக 168 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது. அதற்கு முன்னைய 1965 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளுக்கு முற்றிலும் தலைகீழான வகையில் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே வேளை, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட, அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 18 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.
ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் ஒரு ஆசனத்தைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளைத் தவிரவேறு எந்தக் கட்சிகளும் இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. ஒரேயொரு சுயேச்சை உறுப்பினர் வெற்றிபெற்றிருந்தார். அதனால், பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துக் கிடக்கப்பெற்றது. இலங்கை வரலாற்றில் முதன்முதலாகக் கிடைக்கப்பெற்ற இந்த வாய்ப்பின்மூலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித தலவரானார்.
அதற்கு முன்னைய வருடத்தில்தான், அதாவது 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி, வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தும் அந்ததீர்மானம் எடுக்கப்பட்டுப் பதினான்கு மாதத்தில் நடைபெற்ற தேர்தலில், அந்ததீர்மானத்தை எடுத்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வியத்தகு வெற்றியைப் பெற்றமை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வெறுப்பையும் அதிருப்தியையும் கொடுத்திருக்க வேண்டும்.
அதே வேளை, 1965 இல் ஏற்பட்ட படுதோல்வியினால் செல்வாக்குக் குறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் அமோக வெற்றிகிடைத்தமையால் உண்டான கரைகடந்த மகிழ்ச்சி வெள்ளமும், வரலாறு காணாத தோல்வியைச் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்தமையால் கிளர்ந்தெழுந்த அதிர்ச்சி அலையும் அந்த இரண்டு
கட்சி ஆதரவாளர்களிடையேயும் எதிரும் புதிருமான உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவாக அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்தச் சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு களியாட்ட நிகழ்ச்சியில் எதிர்பாராத பிரச்சினை ஒன்று உருவானது. அந்த நிகழ்ச்சிக்கு சீருடையின்றி வந்திருந்த சில காவலர்கள், நுழைவுச் சீட்டு வாங்காமல் கலந்துகொள்ள முயன்றதால் வன்முறைக்கு ஆளானார்கள். அடுத்தடுத்த நாட்களில், சில பொது மக்கள் காவலர்களால் தாக்கப்படிருக்கிறார்கள். வீதியில் துவிச்சக்கர வண்டிகளில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களைக் காவலர்களை வழிமறித்து விசாரிக்கையில், இளைஞர்கள் காவலர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள். அவற்றின் விளைவுகளாக, கடைகளுக்குத் தீவைப்பு, சந்தைக்கட்டிடத்திற்குத் தீ வைப்பு, உயிரிழப்பு முதலியவை உட்பட யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நிலைமையை அவதானிக்கச் சென்றிருந்த, எதிர்க்கட்சித்தலைவரான அ.அமிர்தலிங்கம் அவர்களும் காவலர் ஒருவரால் தாக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி அவர் 1977 ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பின்னணிகளின் விளைவாக அல்லது தொடராக ஏற்கனவே, கொழும்பிலும், தென்னிலங்கையிலும் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முற்றுமுழுதாகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக உருமாற்றம் பெற்று, அது தமிழ் மக்களைக் குறிவைத்த 1977 ஆவணி அமளி எனப்படும் முதலாவது இனக்கலவரமாக அரங்கேறியது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
யாழ்ப்பாணக் களியாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினையே இனக்கலவரம் உண்டாவதற்குக் காரணம் என்ற வாதம் இப்போதுவரை சிலரால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தீயாகப் பரவிய வன்முறைச் சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகளும், சொத்துக்களும், பலியான உயிர்களும், அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயலோ என்ற சந்தேகத்தை இன்னமும் எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
மருதானையில், நாங்கள் தங்கியிருந்த வீடு இருந்த பகுதியிலும் பதற்ற நிலை அதிகரித்துக்கொண்டே வந்தது. எங்கள் வீட்டுக்காரர், அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர்கள் என்ற காரணத்தாலும், வேறு எங்கும் அவர்களுக்குப் போக்கிடம் இல்லாமையாலும், எதையும் எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க வேண்டிய தவிர்க்கமுடியாத நிலைமையில் அவர்கள் இருந்தார்கள். சுற்றுச் சூழலில் உள்ளோருடனான நீண்டகால உறவு ” பதிஎழு அறியாப் பழங்குடியினராக” நிலைத்து நிற்கும் துணிவை அவர்களுக்குக் கொடுத்தது. ஆனால் நாங்கள், வந்தேறு குடிகள். வடக்கிலும் கிழக்கிலும் வேரையும் விழுதுகளையும் விட்டுவிட்டுத் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்கள். எனவே எங்கள் நோக்கமெல்லாம்
எப்படியாவது, விரைவாக ஊருக்கு உயிரோடு போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.
சில நாட்களில் வெள்ளவத்தையிலும், பம்பலப்பிட்டியிலும் உள்ள கோவில்களிலும், பாடசாலைகளிலும் தமிழ் மக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும், அந்த இடங்கள் இராணுவப் பாதுகாப்புடனான அகதிமுகாம்களாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்தன. அடுத்தநாளே நானும், நண்பர்களும் அங்கு சென்றோம். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் அடைக்கலமாகியிருந்த ஆயிரக் கணக்கான மக்களில் நாங்களும் கலந்தோம்.
இப்படியான அகதிமுகாம் வாழ்க்கை எதிகாலத்தில் இன்னும் வரப்போகின்றது என்றோ, அது நமது சொந்த ஊரிலும் அடிக்கடி நிகழப்போகின்றது என்றோ அப்போது யாரும் நினைத்ததில்லை.
இரண்டுவாரகால அகதி முகாம் வாழ்க்கை இன்னும் ஓர் உலகத்தின் அனுபவத்தை எனக்குத் தந்தது. இனக்கலவரம் தமிழர்கள் எல்லோரையும் ஒன்றாகவே அடையாளப் படுத்தியது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையோ, பதவியால், கல்வியால், அல்லது பணத்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதையோ இனக்கலவரம் வேறு படுத்தவில்லை. ஆனால் உயிருக்குப் பயந்து அகதிமுகாமில் தஞ்சம் அடைந்த தமிழர்களில் சிலர், அங்கேயும் அப்போதும், வருணப் பாகுபாடுகளைப் பேணினார்கள். மாவட்ட வேறுபாடுகளைக் காட்டினார்கள். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குள் ஊர்வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டு உலவித்திரிந்தார்கள்.
அகதிகளுக்கான தற்காலிக முகாம்கள், பம்பலப்பிட்டியிலும் வெள்ளவத்தையிலும் மட்டுமன்றி கொட்டாஞ்சேனை, இரத்மலானை முதலிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அத்தகைய முகாம்களில் இருந்த தமிழர்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்தது. வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சொந்த இடமாகக் கொண்டிராதவர்களும், அந்த மாகாணங்களைத் தமது பூர்வீகமாகக் கொண்டிருந்தும் இப்போது அங்கு சென்று தங்குவதற்குச் சொந்த வீடு இல்லாதவர்களும் நிர்க்கதியாக இருந்தார்கள். அவர்களிலும் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லத் தயாரானார்கள். இந்தநிலையில்
அகதிமுகாம்களில் இருந்த தமிழ் மக்கள் அனைவரையும் வடக்குக்கும் கிழக்கிற்கும் அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது.
புகையிரதங்கள் மூலம் பயணம் செய்வதற்கு முதலில் மக்கள் விரும்பவில்லை. ஊருக்குச் செல்லும் வழியில் தாக்கப்படலாம் என்ற பயம் இருந்தது. புகையிரதம் தரித்து நிற்கும் நிலையங்களிலும் தாக்கப்படலாம்,
தடுத்து நிறுத்தியும் தாக்குதல் செய்யப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவியிருந்தது. அதனால், விமானங்கள் மூலம் அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்பிலிருந்த எல்லா முகாம்களிலும் தங்கியிருந்த மகளில் பெரும்பகுதியினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. முதலில் யாழ்ப்பாணத்திற்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு விமானங்கள் சென்றன.
பின்னர் புகையிரதத்திலும் யாழ்ப்பாணத்திற்கு மக்கள் அனுப்பப்பட்டார்கள். மூன்று, நான்கு நாட்களாக அவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு மக்களை அனுப்பிக்கொண்டிருந்தபோது, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். ஆனால், மட்டக்களப்பிற்கு ஒரேயொரு புகையிரதம் திருகோணமலை இணைப்புடன் விடப்பட்டாலே போதும் என்ற அளவிற்கே அந்த இரண்டு மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகளின் தொகை இருந்தது. அதனால், இந்த நிலைமையை விளக்கிக்கூறி அந்த மக்களின் விசனத்தைப் போக்கும் முயற்சிகளில் நாங்கள் சிலர் ஈடுபட்டோம்.
அவ்வாறு, மூன்று வாரங்கள் அகதிமுகாமில் தங்கியிருந்து
பின்னர், இராணுவ பாதுகாப்புடன் புகைவண்டியில் மட்டக்களப்பிற்குச் சென்றோம். அங்கே புகையிரத நிலையத்தில், அப்போதைய மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த டிக்ஸன் நிலவீர அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர் எம். அந்தோனிமுத்து அவர்களும் எங்களை வரவேற்று, நலம் விசாரித்து, அவரவர் ஊர்களுக்குப் பஸ்வண்டியில் அனுப்பிவைத்தார்கள்.
ஊரில் தனிப்பட்டவர்களின் வீடுகளில் தொலைபேசி இல்லாத காலம் அது!
செல்லிடத் தொலைபேசி (மொபைல்) என்பது உலகிலேயே இல்லாத காலம். அதனால் தனது ஒரேயொரு பிள்ளையான, என்னைப்பற்றிய செய்திகள் எதையும் அறிந்துகொள்ள முடியாமல் அம்மா, தாங்கமுடியாத
துக்கத்தில் மிகவும் துடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
நான் வந்து சேர்ந்ததும் அழுதுகொண்டே என்னைக் கட்டிப் பிடித்து இறுக அணைத்தபோது அந்த அணைப்பில் இருந்த இறுக்கம் எனக்கு வலிக்கும் அளவுக்கு இருந்தது. அதுவரை அம்மாவுக்கு இருந்த பயம்கலந்த சோகக்கலக்கத்தை அது எனக்கு உணர்த்தியது.
அதுவரை அங்கும் இங்கும் ஓடியோடிச் சென்று, அவர்கள் இவர்கள் என்று எவரெவரிடமோவெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதையும், உண்ணாமல் உறங்காமல் அலமந்து திரிந்து அம்மா பட்ட வேதனையையும் உறவினர்கள் என்னிடம் கூறியபோது, அவர்கள் சொல்வதையெல்லாம் முழுவதுமாகக் கேட்கும் திராணியற்றவனாக என் தொண்டையை அடைத்த சோகத்துடனும், பார்வையை மறைத்த கண்ணீருடனும் அம்மாவை என் மடியில் கிடத்தித் தடவிக்கொண்டிருந்தேன். இப்போது அதை நினைத்து எழுதும்போதும் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியவில்லை.
(நினைவுகள் தொடரும்)