கட்டுரைகள்
கதிரவன் கதிர்மறைவுக்குப்பின் வேறொரு மறைவா?…. சங்கர சுப்பிரமணியன்.
சூரிய கதிர்மறைவு எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அதை சூரிய கிரகணம் என்று சொன்னால்தான் சட்டெனப் புரியும். எப்படி மகிழுந்து என்பதை தமிழில் கார் என்று சுத்த தமிழில் சொல்கிறோமோ அப்படித்தான் இதுவும். இதை வேண்டுமென்றே சிலர் சொல்வதுபோல் தமிழர் எவரும் சொல்லவில்லை. வேற்றுமொழியினர் வந்ததால் ஏற்பட்ட தாக்கம். உலகமொழியில் எல்லாவற்றிலும் இந்த தாக்கம் உள்ளது. இது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
நாளைக்கு காரில் டெபனிட்டா வருவேன் என்பதை தமிங்கிலம் என்று சொல்பவர்கள் பெரியவங்கள் காலில் சாஷ்டாங்கமா விழுந்து நமஷ்காரம் பண்ணினா ஜன்மத்துக்கும் புண்ணியம் என்று பேசும்போது காது கேளாதவர்கள் மாதிரி இருப்பார்கள். இவை இரண்டுமே தவறுதான். ஒன்று தமிங்கலம் என்றால் மற்றொன்று தமிஸ்கிருதம் அல்லவா? தப்பென்றால் இரண்டும் தப்புதானே? இரண்டையும் ஒழிப்போம் என்று ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்களே? சூரியகிரகணம் போல் எத்தனையோ சொற்களை உலகில்வாழ் தமிழர் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கதையை இதோடு விட்டு நம் சொந்தக் கதைக்கு வருவோம். கதிரவன் கதிர்மறைவென்பது விஞ்ஞான முறைப்படி நடக்கும் நிகழ்வு என்பதை அறிவியல் மூலம் அறிவோம். இதற்கும் மேலாக கதிரவனுக்குப்பின் மறைவில் அறிவியலுக்கு புறம்பாக எவ்வளவோ சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்றிரண்டு நம்மில் பலருக்கு தெரியும். அவைகளில் சிலவற்றை சொல்கிறேன். கதிரவன் உதிக்கிறான் எழுகிறான். அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன். குந்திக்கு கர்ணன் என்ற குழந்தையை மகாபாரதத்தில் கொடுத்தவன் போன்றவைகள். ஆனால் நான் இதுவரை அறிந்திராததை படித்தறிந்து என் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டேன். இதோ உங்களுக்குப் பயன் படுமா? என்று பாருங்களேன். தேவசிற்பி விஸ்வகரமா என்பவரைப்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர்தான் தேவலோகத்தில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு வடிவமைத்து வசிப்பிடம் கட்டிக் கொடுக்கும் பில்டிங் காண்ட்ராக்டர். எல்லா கடவுள்களுக்கும் கட்டிடம் கட்டிக் கொடுப்பாரா என்பது தெரியாது. இப்படிப்பட்ட விஸ்வகர்மாவுக்கு ஒருமகள் இருந்திருக்கிறாள். நான் சிறுவனாக இருந்தபோது என் தாத்தா நாமெல்லாம் விஸ்வகர்மாவின் வம்சாவழிகள் அதனால் பூணூல் போடவேண்டும்மென உபநயனம் செய்துவைத்தார். ஆனால் அவர் விஸ்வகர்மாவுக்கு மகள் இருந்த கதையெல்லாம் சொல்லவில்லை. விஸ்வகர்மா தன் மகளை சூரியனுக்கு திருமணம் செய்து வைத்தாராம். ஆனால் அவர்மகளால் சூரியனோடு இணையவில்லையாம். காரணம் சூரியனின் வெப்பம் அவளை கணவனருகில் நெருங்க விடவில்லையாம். என்ன செய்வதென்று அறியாமல் திண்டாட்டத்தில் இருந்தவளுக்கு ஒரு எண்ணம் பிறந்தது. அது தனக்கு பதிலாக தனது தோழியை விஸ்வகர்மாவிடம் அனுப்பி வைப்பது. என்ன இது தேவலோகத்தில் ஒழுக்கம் என்பதெல்லாம் கிடையாதா என்று கொஞ்சநேரம் எண்ணினேன். அப்புறம் இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்று அமைதியானேன். விஸ்வகர்மாவின் மகள் எண்ணியபடி தோழியும் சூரியனிடம் செல்ல அவளுக்கு சூரியனின் வெப்பம் எவ்வித பாதிப்புக்கும் கொடுக்கவில்லை. சூரியக் கடவுளுக்கு மனைவிக்கும் மற்றவளுக்கும் வேறுபாடு தெரியவில்லையா என்று கேள்விக்கணையை என்நோக்கி நீங்கள் எறிவது எனக்குப் புரியாமலில்லை. புரிகிறது அதனால்தான் அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். எப்படியோ சூரியனின் மூலம் தோழி இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள். இரண்டு குழந்தைகளைப் பெற்றபின் சூரியனுக்கு உண்மை தெரிகிறது. உடனே மாமனார் விஸ்வகர்மாவிடம் சென்று நியாயம் கேட்கிறார். உடனே விஸ்வகர்மாவும் மகளை அழைத்து விசாரிக்க, உண்மையறிந்த விஸ்வகர்மா மகளுக்கு உதவ முன்வருகிறார். சூரியனின் ஒருபாகத்தை வெட்டி சிவனுக்கு வலிமைவாய்ந்த சூலாயுதத்தை தயாரித்து வழங்கினார். இன்னொரு பாகத்தை வெட்டி விஷ்ணுவுக்கு வலிமைவாய்ந்த சக்கராதயுத்தை செய்து கொடுத்தார். இப்படி சூரியனை வெட்டியது தெரியாமல் என்னைப்போன்றோர் பொது அறிவின்றி வெட்டியாய் இருந்திருக்கிறோம். தெரிந்தால் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்? சொல்லவந்ததை விட்டு சொக்கப்பட்டி செல்வதே எனக்கு வாடிக்கையாய் போய்விட்டது. அப்படி சூரியனை வெட்டியபின்தான் சூரியனின் வெப்பம் குறைந்ததாம். அது சரி சூரியனையே வெட்டி ஆயுதம் செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய தொழிற்சாலையையா வைத்திருப்பார்? எந்த கருவியை வைத்து சூரியனை வெட்டியிருப்பார்? ஆனால் சூரியன் நம் பார்வைக்கு வட்டமாகத்தானே தெரிகிறான். ஒருபுறம் பழனி முருகனின் நவபாசான சிலையை சேதம் செய்ததைப்போல் சூரியனின் பின்புறம்மோ முன்புறமோ வெட்டி எடுத்திருப்பாரோ? அதனால் தான் வட்டமகவே தெரிகிறதோ? இதை எப்படி நம்புவது என்று எண்ணியபடி இருந்தபோது சூரியனை பாம்பு விழுங்குவதாக கதை சொல்லும்போது வெட்ட முடியாதா என்ன? என்ற எண்ணம் எனக்கு கை கொடுத்தது. -சங்கர சுப்பிரமணியன்.