கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 46 ….. (உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்.

யோகமலருடன் ஒன்றாக வேலை செய்யும் மலேய்க்காரி குடுத்த பலகாரத்துடன் நானும் யோகமலரும் வீடு இருந்த கட்டிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தம்.

எங்களுக்கு பத்து மீற்றர் முன்னால் லீலா போய்க் கொண்டிருந்தாள்.எங்களுடைய வீடும் லீலாவின் வீடும் நாலாவது மாடியில் இருந்தது.

நாங்கள் லிப்டடிக்குப் போய்ச்சேர்ந்த போது லிப்டுக்குள் லீலா நிற்பதைக் கண்டோம்.லிப்டின் கதவுகள் மெதுவாக மூடிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் நிற்பதைக் கண்டதும்,லீலா நிறுத்தும் பட்டனை அழுத்தி மூடிய கதவைத் திறக்கச் செய்தாள்.

உள்ளே நாங்கள் இருவரும் சென்றதும்,கதவு மூடிக் கொள்ள புன்சிரிப்புடன் „இப்ப இரண்டரை மணியாகுது லைஞ் சாப்பிடலைத்தானே லஞ்; செய்யப் போறீங்களா’ என்று கேட்க,’இல்லைங்க என்னோட வேலை செய்யிற மலேய்வுமன் இதைக் கொடுத்தாங்க,இது எங்க ரெண்டுபேருக்கும் போதும்ங்க,இது இருக்கத்தக்கதாக எதுக்குங்க இன்னொன்னு செய்யனும்,சாப்பாட்டை வேஸ்ற்பண்ணக்கூடாதுங்க’ என்றவளை பெருமையோடு பார்த்தன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே லிப்ட் நாலாவது மாடியில் நிற்க நாங்கள் மூவருமாக லிப்டைவிட்டு வெளியே வந்து,லீலா தனது வீட்டுக்குப் போக நானும் யோகமலரும் எங்கடை வீட்டுக்குள் வந்து கதவை மூடிக் கொண்டம்.

„நான் ரீ வைச்சு தரேங்க குடிச்சிட்டுப் போய் குளிச்சிட்டு வாங்க,நானும் குளிச்சப்புறம் லஞ்சுக்கு இதைச் சாப்பிடுவம்ங்க,டின்னருக்கு லைற்றா பிறட் சாப்பிடுவோம்ங்க, லஞ்சை முடிச்சிட்டு கீழ கடையில போய் இனிப்பு பிரட் வாங்குவோம்ங்க „என்று கதைச்சுக் கதைச்சு தேத்தண்ணியை போட்டு என்னிடம் தந்தாள்.

தேத்தண்ணியைக் குடிச்சிட்டு, குளிக்கப் போன நான் யோகமலரின் செய்கைகள்பற்றி சிந்திக்கத் தொடங்கினன்.ஜிஇயில் பார்த்த யோகமலருக்கும் இன்று பார்க்கின்ற யோகமலருக்குமிடையில் நிறைய வித்தியாசத்தைக் கண்டன்.உணவை வீணாக்கக்கூடாது என்பதில் யோகமலரின் அக்கறை அவள் வெகு சீக்கரத்தில் குடும்பத்தலைவியாக மாறியதைக் காட்டியது.

ஊரிலை நான் சாப்பிட்டு மிச்சம் வைச்சால் மனைவி எப்பவும் கோபித்துக் கொள்வாள்.சிங்கபபூரில் அதையேதான் யோகமலர் வேறுவிதமாக செய்வதைக்

கண்டன்.

எனது மனைவிக்கும், யோகமலருக்குமிடையில் ஒரு பெரிய ஒற்றுமையிருந்தது.குணத்திலும் ஒரே விதமாக இருந்தார்கள்.

நான் குளித்துவிட்டு வெளியே வந்த போது லீலா யோகமலருடன் கதைதத்துக் கொண்டிருந்தாள்.மேசையில் பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றிருந்தது,அதற்குள் ஏதோ சாப்பாடு இருப்பது தெரிந்தது.

என்னைக் கண்டதும் எழுந்த லீலா நாளைக்கு சந்திப்போம் என்று சொல்லிவிட்டுப் போக’அவங்க ஆட்டிறைச்சிக் கறியோட சோறு கொடுத்திட்டுப் போறாங்க, எதுக்கு உங்களுக்கு கஸ்டம்னு கேட்டன், நாங்க புதுசா வந்திருப்பதாகச் சொல்லிக் கொடுத்தாங்க, சரிங்க நான் குளிச்சிட்டு வறேன்’என்று குளிக்கப் போனதும், சோபாதிட்டில் தலையை வைச்சு சோபாவில் படுத்தபடியே ரிவியை போட்டன்,அதில் மலேய்ப் படமொன்று நடந்து கொண்டிருந்தது,அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் என்னையறியாமலே நித்திரையாகிவிட,துடையில் தட்டுவதை உணர்ந்த அலுப்புடன் கண்களைத் திறக்க „ஏங்க தூங்கிட்டீங்களா ரொம்ப ரயேர்ட்டா இருக்கா, முதல்ல சாப்பிடுவம் அப்புறம் ரயேர்ட் போக தூங்கலாம் எழுந்திருங்க „ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் யோகமலர்.

அவளைப் பார்த்தன் தலைமுழுகி நன்றாக தலைமயிர் ஈரத்தை துடைச்சு நெற்றியிலும் உச்சிநெற்றியிலும் குங்குமப்பொட்டு இட்டிருந்தாள்.அவள் மனைவியாக மட்டுமல்ல ஒரு குடும்பத்தலைவியாக,ஒரு தாய்க்குரிய தன்மையுடன் காணப்பட்டாள்.

லீலா குடுத்திருந்த சோற்றையும் ஆட்டிறைச்சிக் கறியையும் சாப்பிட்ட போது அதன் உருசி எங்கடை ஊர் சமையலாக இருப்பதைக் கண்ட நான் „ அவா யாழ்ப்பாணத்து முறையில சமைச்சிருக்கா „என்ற நான் „ஒருவேளை தாயிடமிருந்து பழகியிருக்கலாம் „ என்று சொல்ல,’ ஆமாங்க ரேஸ்ற் வித்தியாசமா நன்றா இருக்குங்க’என்றாள் யோகமலர்.

இருவரும் சாப்பிட்டு முடிஞ்சதும் படுக்கையறைக்குள் போய் படுத்தோம்.வேலை செய்த களைப்பும் உருசியான சாப்பாடும் என எல்லாம் சேர்த்து நித்திரை கண்ணைச் சுழற்றியது.

யோகமலர் எனது மார்பில் தலைவைச்சதுதான் தெரியும், நான் நித்திரையாகிவிட்டேன்.நான் கண்முழிச்ச போது அறை இருட்டாக இருந்தது.

கனநேரம் நித்திரையாகிவிட்டோமோ என நினைத்து எழும்ப முயற்சிக்க எனது மார்பிலிருந்து தலையை எடுக்காமலே’ இன்னும் கொஞ்ச நேரம் படுப்பம்ங்க, படுங்க „ என்றாள் யோகமலர்.

நான் மீண்டும் நித்திரையானேன்.மீண்டும் எவ்வளவு நேரம் நித்திரையானேன் என்று தெரியாது.மின்சார வெளிச்சம் தெரிவது போல உணர்ந்த நான் கண்ணை முழித்த போது யோகமலர் தேத்தண்ணிக் கோப்பையுடன் கட்டிலில் உட்கார்ந்து „ எழும்புங்க எழும்பி ரீ குடியுங்க „ என்றவள் நான் அவளிடமிருந்து தேத்தண்ணியை வாங்கிக் குடிக்கும் வரை காத்திருந்து, நான் குடிக்கத் தொடங்கியதும் தானும் குடிக்கத் தொடங்கினாள்.

„ ஏன் நான் குடிக்கும்வரை காத்திருந்து நான் குடிக்கத் தொடங்கியதும் குடிக்கிறீர்கள், உங்களுக்கு குடிக்க வேண்டும் என்று தோன்றினால் குடிக்க வேண்டியதுதானே,உங்களுக்குப் பசித்தால் நீங்கள் எனக்காகக் காத்திருக்காமல் சாப்பிட வேண்டும் „என்று சொல்ல,தலையைக் குனிந்து படுக்கையைப் பார்த்தபடியே „ நான் உங்களுக்காக இப்படித்தான் உயிர் போகும் வரை இருப்பேன்’ என்றாள், அழுகையை அடக்க சொண்டைக் கடித்தபடியே.

அவளை அப்படியே என்னோட இழுத்து அணைத்துக் கொண்டேன்.தேத்தண்ணியை இருவரும் குடிச்சு முடிச்சதும் „ கொஞ்சநேரம் கீழை போய் நடந்து போட்டு வருவோமா „ என்று கேட்க அவளும் „நானும் அதைத்தான் யோசிச்சேனுங்க அதோடை பிஸ்கட்டும் பிரட்டும் வாங்கனும்ங்க’என்றாள்.

தேத்தண்ணியைக் குடிச்சு முடிச்சதும் இருவருமாக கடைகளைச் சுற்றிப் பார்ப்போம் என வீட்டிலிருந்து லிப்டடிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு பெண் லீலாவின் வீட்டிலிருந்து வருவதைக் கண்டம்.

எம்மைப் பார்த்துப் புன்னகைத்த அவள் „ குட் ஈவினிங்’ என்று சொல்ல நாங்களும் சொன்னோம்.லிப்டுக்குள் மூவரும் ஏறியதும் „ நீங்கள் இரண்டு பேரும் முன் வீட்டிலை இருக்கிறதாக லீலா சொன்னாள், இப்பு கடைக்குப் போறீங்களா’ என்று அந்தப் பெண் கேட்க,’ம்…கடைக்குந்தான் கொஞ்சம் நடக்கவுந்தான் „ என்றாள் யோகமலர்.

லிப்ட் கீழை வந்ததும் லிப்டைவிட்டு வெளியே வந்ததும் அந்தப் பெண் வேறொரு திசையில் செல்ல,நானும் யோகமலரும் கடைகள் இருக்கும் திசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தம்.

நடந்து கொண்டே தற்செயலாகத் திரும்பிப் பார்த்தன் அந்தப் பெண் யாரோ ஒரு ஆணுடன் கைகோர்த்தபடி நடந்து கொண்டிருந்தாள்.’ஆமா இந்தப் பெண்ணுக்கு ஈவினிங் சிப்ட் என்றுதானெ லீலா சொன்னாங்க…ஆனா..இவங்க…என்று யோகமலர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே’விடுங்க நமக்கென்ன „ என்று நான் சொல்ல „ஆமாங்க நீங்க சொல்வதும் சரிதாங்க’ என்றாள்.

கடைகளை ஒவ்வொன்றாக நுழைஞ்சு பாரத்த நாங்கள் ஒரு கடையில் பிஸ்கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது மலிபன் பிஸ்கடடு;களை பார்த்தவுடன்’இங்கை பாருங்க இது சிறீலங்கா பிஸ்கட்டுகள்,நல்ல குவாலிட்டியானதும் ரேஸ்ற்றானதும் „ என்று சொல்ல,’அப்படியா அதை வாங்குவோம்ங்க, உங்க ஊர் பிஸ்கட் எப்படி இருக்குன்னு பார்க்கனும் „ என்றவள் மலிபன் பிஸ்கட்டுகளையும் வேறு சில பிஸ்கட்டுகளையும் பிரட் பைக்கற் ஒன்றை எடுக்க அதற்கான காசை நான் குடுக்க, „இனி வீட்டை போவம்ங்க’என்றவளிடம், நான் எதுவுமே சொல்லாமல் போய்க் கொண்டிருந்தன்.

அவளின் அண்ணண்கள், அண்ணிமார் குடுத்த ஐயாயிரம் சிங்கப்பூர் டொலரை என்னிடமே குடுத்திருந்தாள்.இது எனது மனதை உறுத்த’ உங்களுடைய

வீட்டிலிருந்து வந்த பணத்தை நீங்கள்தானே வைச்சிருக்க வேணும்,நான் அதை வைச்சிருந்து சிலவழிக்கிறது மனதுக்கு கஸ்டமாயிருக்குது என்று சொல்ல’ என்னங்க நீங்க என்னுடைய பணம்னு பிரிச்சுப் பார்க்கிறீங்க, உங்களவிட எனக்கு எதுவும் பெரிசில்லீங்க, நீங்க எனக்கு கிடைச்ச வரம்ங்;க என்று அவள் சொன்னது இன்னும் என்னை அது உறுத்தியது.

நான் கல்யாணம் செய்யாதவனாக இருந்திருந்தால் அவள் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம், ஆனால் கல்யாணம் செய்து மனைவி மூன்று பிள்ளைகளிருக்கும் என்னை அவள் வரம் என்று சொல்லியது எனக்கு என்னமோ போலிருந்தது.

வீட்டுக்கு வந்த நாங்கள் மலேய்க்காரி குடுத்த பலகாரத்தைச் சாப்பிட்டு தேத்தண்ணியையும் குடிச்சிட்டு நித்திரை கொண்டம்.

காலையில் நேரத்தோடு எழுவதும் வேலைக்குப் போவதும்,வேலையாலை வந்து சமைத்துச் சாப்பிடுவதுமாக நாட்கள் மாதங்களாகி ஓடிக் கொண்டிருந்தது.சமைப்பதற்கு நான் உதவி செய்வதை அவள் விரும்பியதில்லை.நான் வற்புறுத்தித்தான் உதவி செய்து கொண்டிருந்தன்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.