பாதுகாப்புத் தரப்புக்கு பாடம் சொல்லும் பாதுகாவலர்!…. அவதானி.
“ ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது. எளிமையான பணிகளில்கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும்.
ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது.
நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. அவர்கள் சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். “
இவ்வாறு சொல்லியிருப்பவர், இலங்கை தேசத்தின் மேதகு ஜனாதிபதி மாண்புமிகு கோத்தபாய ராஜபக்ஷ.
அண்மையில் தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவ்வாறு கூறினார்.
இலங்கையின் அதிமுக்கிய பாதுகாப்புத் தரப்புக்கு அவர் ஆற்றிய அவ்வுரையில் பொதிந்திருக்கும் உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆயுதப்படைகளுக்கு மற்றும் ஒரு பெயர்தான் பாதுகாப்பு படை. அதாவது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க எத்தகைய தியாகங்களையும் செய்ய முன்வரல் வேண்டும். அதனாலும் அவர்களை இராணுவ வீரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மேதகு ஜனாதிபதியின் கூற்றில் உறைபொருளாகவும் மறைபொருளாகவும் இழையோடியிருக்கும் வரலாற்றையும் நாம் திரும்பிப்பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணி தொடங்கிய ஆயுதக்கிளர்ச்சியின்போது, புனித நகரமான கதிர்காமத்தில் இராணுவத்தைச் சேர்ந்தவர்களினால் கதறக்கதற இழுத்துச்செல்லப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட பிரேமாவதி மனம்பேரி இப்போது நினைவுக்கு வருகிறார்.
இலங்கையில் கோணேஸ்வரி, கிருஷாந்தி உட்பட பல பெண்கள் ஆயுதப்படையினரால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதற்கானவரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாற்றின் முதல் அத்தியாயத்தில் இருப்பவள் கதிர்காமம் பிரேமாவதி மனம்பேரி.
கைதடியில் 1996 செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்டு, செம்மணியில் புதைக்கப்பட்ட கல்லூரி மாணவி செல்வி கிருஷாந்தி குமாரசாமி, அவளது அம்மா இராசம்மா குமாரசாமி என்ற பாடசாலை ஆசிரியை, கிருஷாந்தியின் சகோதரன் பிரணவன், குடும்ப உறவினர் கிருபாமூர்த்தி ஆகியோரும் நினைவுக்கு வருகிறார்கள்.
2000 ஆம் ஆண்டு, நீடித்திருந்த போர்க்காலத்தின்போது தென்மராட்சியில் தமது வீடுகளை விட்டு வெளியேறிய சிலர் தமது வீடுகளை மீளச்சென்று பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களின் வீடுகள் மிருசுவிலில் அமைந்திருந்தன. அவ்வாறு சென்றவர்களை, அங்கிருந்த இராணுவத்தினர் கைதுசெய்தனர். இச்சம்பவம் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நடந்திருப்பதாக அறியப்படுகிறது. அத்துடன் கைதானவர்கள் எட்டுப்பேரும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
இவர்கள் உடுப்பிட்டிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்கள். தாம் விட்டுவந்த உடைமைகளையும் வீடுகளையும் பார்க்கச்சென்றபோது, அங்கே அவர்கள் கண்ட காட்சியினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அரைகுறையாக புதையுண்டிருந்ததை கண்டுவிட்டனர்.
இதுபற்றி, தமது குடும்ப உறவுகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மறுநாள் குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக சென்றவர்களை அங்கிருந்த இராணுவம் பிடித்துக்கொண்டது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பி வந்துள்ளார். ஏனையோர் எட்டுப் பேரும் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். பலத்த காயங்களுடன் தப்பிவந்த
ஒருவர் தமது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் வெளியே தெரிய வந்தது.
அவர் வழங்கிய தகவலினால், படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. முதலில் காணப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை நீதிமன்றத்தினாலும் பொலிஸாரினாலும் இறுதிவரையில் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது.
யார் அந்த இளம் பெண்…? இன்னமும் மர்மம் தொடருகிறது!
2000 ஆம் ஆண்டு நடந்த இந்த படுகொலைச்சம்பவத்தின் தொடர்கதை, விசாரணை என்ற பெயரில் சாவகச்சேரி – அநுராதபுரம் – கொழும்பு என பயணித்து, இறுதியில் மரண தண்டனை தீர்ப்புடன் முடிவடைந்திருந்தது. இந்தத்தீர்ப்பினை உறுதிசெய்வதற்கே 17 ஆண்டுகள் ஓடியிருந்தன.
குறிப்பிட்ட மரணதண்டனைக் கைதி இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனது விசேட அதிகாரங்களை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமையால், மனித உரிமை ஆர்வலர்களிடத்திலும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மன்னிப்பு சபை, மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடத்திலும் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த வரலாற்றுப்பின்னணிகளுடன்தான் அதே ஜனாதிபதியின் மேற்கண்ட உரையை அவதானிக்கவேண்டியிருக்கிறது. அத்துடன் அவர் மேலும் சொன்ன கருத்தையும் கவனிக்கவேண்டியிருக்கிறது.
“ சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும். இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும். பின்னடைவுகள் என்பன ஒரு பயணத்தின் ஒரு பகுதியே ஆகும். அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் ஒருவர் இருக்க வேண்டும். “
ஜனாதிபதி அவர்கள் கூறுவதுபோன்று துணிச்சலான தீர்மானம்தானா, ஒரு மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குவதும் என்றும் கேட்கத்தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள், மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் அப்பாவிப்பொதுமக்களே.
அதிலும் மானபங்கப்படுத்துவதற்கு அவர்களுக்கு தேவைப்பட்டது பெண்கள்தான். அதில் சிங்களம் – தமிழ் என்ற பாகுபாடுகள் இல்லை.
அதனால்தான் பிரேமாவதி மனம்பேரியையும் கிருஷாந்தியையும் கோணேஸ்வரியையும் பற்றி நாம் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
“ ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். “ என்ற ஜனாதிபதியின் கூற்று, சமகாலத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தும் இராணுவத்தினர் சிந்தனையில் ஆழப்புதைய வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணையும் தனது தாயாக, மகளாக, சகோதரியாக, பார்க்கவேண்டும் என்பதையும் இந்த வரிகளிலிருந்து ஜனாதிபதி சொல்வதன் உறைபொருளையும் பாதுகாப்புத் தரப்பு புரிந்துகொள்ளவேண்டும்.
இல்லையேல் சாத்தான் வேதம் ஓதும் செயலுக்குத்தான் இத்தகைய உரைகளை ஒப்பிட முடியும்.
—0—