இலக்கியச்சோலை
எழுத்தாளர்கள் சமூக விஞ்ஞானிகளாக மாறி அநீதிகள், ஒடுக்கு முறைகள் இனக் குரோதங்களுக்கு எதிராக எழுதவேண்டும் : எஸ். எம். சபீஸ் உரை.
ஒருகாலம் இருந்தது தமிழ் துறையில் இளமானி, முதுமாணி, கலாநிதி பட்டம் பெற்றவர்கள்தான் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவர்கள் தான் எழுதவேண்டுமென இருந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. கணித விஞ்ஞான துறைகளில் உள்ளவர்களிடம் ஒரு மரத்தைப்பற்றி கேட்டால்; அதன் வேர் இவ்வளவு ஆழத்தில் உள்ளது, இதன் இலைகளினால் இந்தளவு உணவுகிடைக்கின்றது என எழுதிய காலம் மாறி, ‘வானுயர்ந்த மரம்’ என எழுதும் முறை இன்று தோற்றம் பெற்றுள்ளது. வனம் மின்னிதழின் ஆணி வேர்களும் அத்துறையை சார்ந்தவர்கள்தான் என்பது இதற்கு இன்னும் வலுச்சேர்கின்றது என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ்தெரிவித்தார்.
வனம் மின்னிதழின் முதலாம் வருட பூர்த்தியை முன்னிட்டு எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஒருங்கே சந்திக்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் நடைபெற்றபோது அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்கள் அங்கு தொடர்ந்து பேசுகையில், தொடர்ந்த செயல், தொடர்ந்த சிந்தனை, படிப்பு என்று கூறலாம். இது எழுத்தாளர்களிடமே அதிகம் காணப்படுகின்றது. ஒவ்வொரு சொல்லையும் வடிவமைபதற்கு எவ்வளவு நேரங்களை சிந்தனையில் கழிக்கவேண்டும் என்பது அவர்களுக்கே புரியும். அது மாத்திரமல்லாமல் பிறருடையை வலியை தன்னுடைய வலியாக மாற்றுகின்றவனே எழுத்தாளன்.
நாம் வாழுகின்ற சூழல் அங்கு வாழுகின்ற மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுதுபடுத்துவதே இலக்கியம் என நாங்கள் நம்புகின்றோம். அதனைச் சிறப்பாக செயற்படுத்துகின்ற இலக்கியவாதிகளும் இங்கே இருப்பதனால் நாங்கள் இங்கே வேண்டி நிற்பது ஒன்றே ஒன்றுதான். அதாவது நீங்கள் சமூக விஞ்ஞானிகளாக மாறவேண்டும். சமூகத்தில் நடைபெறும் அநீதிகள் ஒடுக்குமுறைகள் இனக் குரோதங்கள், அடக்கியாள நினைக்கும் சக்திகளுக்கு எதிராக எழுதவேண்டும். தனி மனிதர்கள் அல்லது சமூகம் அனுபவிக்கும் வலியை நாட்டின் வலியாக மாற்றியமைக்க வேண்டும். அவைகள் முறையாக ஆவணப்படுத்தப்படல் வேண்டும். தொழில்நுட்ப மாற்றதுக்கேற்ப நாம் மாறியே ஆகவேண்டும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்க மறுக்கின்றவர்கள் பின்னர் ஐந்து வருடங்களின் அத்தொழில்நுட்ப வளர்ச்சி முறையின்றி இயங்க முடியாதவர்களாக மாறிவிடுகின்றனர். வனம் மின்னிதழ் தனது வாசகர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தின்மூலம் தமது ஆக்கங்களை வழங்குவது இங்கு சிறப்பம்சமாகும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், விரிவுரையாளர்கள், படைப்பாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நூருல் ஹுதா உமர்.