இலக்கியச்சோலை
மறைந்த மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் நினைவேந்தலும், அவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவும்!
மறைந்த பன்னூலாசிரியரும், நாடறிந்த இலக்கியவாதியுமான கல்விமான் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களின் முதலாவது நினைவேந்தலும், அவர் எழுதிய “ஈழத்து முஸ்லிம் புலவர்களின் பள்ளு (பிரபந்த) இலக்கியம்” நூல் வெளியீட்டு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (26) இலக்கிய செயற்பாட்டாளர் நவாஸ் செளபியின் தலைமையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இப் புத்தக வெளியீட்டு விழாவின் முதல் பிரதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு மருதூர் ஏ மஜீட் அவர்களின் புதல்வரும் ஆசிரியருமான றிஸ்வி மஜீட்டினால் வழங்கி வைக்கப்பட்டது. புத்தகத்தின் ஏனைய பிரதிகளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிசார், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எழுத்தாளர் ஏ.எம் பறக்கத்துல்லாஹ், எம்.எச்.எச் நபார், உட்பட கலந்து கொண்டிருந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நூலானது மறைந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் எழுதிய 20வது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.