தமிழ்க்கட்சிகளிடையே தோன்றும் ஒற்றுமையும் வேற்றுமையும்!… ஊடுருவி.
“ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும். “
இது மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு காலம். அவரது மேற்குறித்த வைரவரிகளை இங்கு நினைவூட்டவேண்டிய தேவை வந்தமைக்கு அண்மையில் இலங்கைத் தலைநகரில் கூடிப்பேசியிருக்கும் தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்புத்தான் பிரதான காரணம்.
இந்தக் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு கால கட்டங்களில் ஒன்றாக இருந்தவர்கள்தான்.
பல்லாண்டுகளுக்கு முன்னர், சமகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாத்தா, புகழ்பெற்ற வழக்கறிஞர் ஜீ. ஜீ. பொன்னம்பலமும் சம்பந்தனின் தந்தையார் இராஜவரோதயமும் தமிழ்க்காங்கிரஸ் கட்சியில்தான் அங்கம் வகித்திருந்தனர்.
அந்தத் தமிழ்க்காங்கிரஸ்தான் பின்னர் பிளவுண்டு தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக்கட்சி உருவானது. பொன்னம்பலத்திற்கு தேர்தலில் சின்னம் சைக்கிள். செல்வநாயகத்தாருக்கு சின்னம் வீடு.
பிற்காலத்தில் காலத்தின் தேவை கருதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் 2010 ஆம் ஆண்டின் பின்னர் – அதாவது நீடித்த முப்பது ஆண்டுகாலப்போர் முடிவுக்கு வந்தபின்னர், உள்வாங்கப்பட்டவர்தான், அதுவரையில் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தவரும் கம்பன் கழக மேடைகளில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தவருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் அழைத்துவரப்பட்டவர்கள்தான் மதியாபரணம் சுமந்திரனும் விக்னேஸ்வரனும்.
கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்தில் பதிவாகாதமையினால், தமிழரசுக்கட்சியின் வீடு சின்னத்திலேயே போட்டியிட்டது. ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரனுக்கு இக்கூட்டமைப்பில் அதிருப்தி தோன்றியதும், அவர் தனி வழிசென்றார். அத்துடன் தேர்தல் காலத்தில், “ வீட்டை விட்டு வெளியேறி புள்ளடி போட வாருங்கள் “ என்று இரட்டை அர்த்தத்திலும் பேசினார்.
ஒருகாலத்தில் அமிர்தலிங்கம் தமிழரசுக்கட்சியிலும், உடுப்பிட்டி மு. சிவசிதம்பரம் தமிழ்க்காங்கிரஸிலும் இருந்தனர். 1970 களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கூட்டரசாங்கம் வந்தபோது, 1972 இல் அமுலுக்கு வந்த புதிய அரசியலமைப்பினால், பிரிந்திருந்த இவர்கள் ஆனந்தசங்கரியுடன் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அமைப்பினை உருவாக்கி, தமது தேர்தல் சின்னமாக உதயசூரியனை அறிவித்தனர்.
அந்தச்சூரியனும் காலப்போக்கில் மங்கி மறைந்தாலும், ஆனந்தசங்கரி தொடர்ந்தும் விடாப்பிடியாக கடிதங்களும் அறிக்கைகளும் வெளியிடும் கட்சியாக அதனை காப்பாற்றிவருகிறார்.
இக்கூட்டணியிலிருந்த அமிர், யோகேஸ்வரன் ஆகியோர் 1989 இல் புலிகளினாலேயே கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பின்னர்தான் புலிகள் இயக்கத்தின் தலைமையினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாகியது.
சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ. பி. ஆர். எல். எஃப், செல்வம் அடைக்கல நாதனின் டெலோ, தருமலிங்கம் சித்தார்த்தனின் புளட் ஆகியனவும் இந்த அமைப்பில் சம்பந்தருடன் இணைந்தன.
2009 ஆம் ஆண்டு புலிகள் மௌனிக்கப்பட்டதனால், இந்த கூட்டமைப்பிலிருந்தவர்கள் தத்தமக்கு சாதகமான பாதைகளை தேர்ந்தெடுத்து தனித் தனி வழிசென்றனர்.
இதற்கிடையில் டெலோ இயக்கமும் பிளவுபட்டு, ஶ்ரீகாந்தாவும், சிவாஜிலிங்கமும் புதிய கட்சியை ஆரம்பித்தனர்.
நீதியரசர் விக்னேஸ்வரனும் வடக்கு மாகாண சபையில் சில வருடங்கள் பெயருக்கு முதல்வராக இருந்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு, தனக்கென ஒரு கட்சியை உருவாக்கி தனிவழிசென்றார்.
ஜெனீவாவுக்கு தமிழர் பிரச்சினை தொடர்பாக ஒத்த தீர்மானம் எடுக்கமுடியாத கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுமந்திரனும் ஏட்டிக்குப்போட்டியாக அறிக்கை சமர் புரிந்தனர்.
தற்போது, இந்த முரண்பாடுகளின் மொத்த உருவமான தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையும் இணைத்துக்கொண்டு தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்பட்டுள்ளன என்ற தோற்றப்பாட்டை கொழும்பில் உருவாக்கியுள்ளன.
குறிப்பிட்ட தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள், இந்த சந்திப்பில், இதர தமிழ்க்கட்சிகளையும் அவற்றின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கும் தலைவர்களையும் கண்டுகொள்ளவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன், ரிஷார்ட் பதியூதீன், இ.தொ. கா. ஜீவன் தொண்டமான் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோரையும் இச்சந்திப்பில் இணைத்துக்கொள்ளவில்லை.
இவர்களும் தமிழ்பேசும் அரசியல் தலைவர்கள்தான்.
அதனால்தான், தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கொழும்பில் நடந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்புகின்றது.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறைமையை அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்காக திடீரென ஏற்படுத்தப்பட்ட ஒன்றுகூடல் சந்திப்புத்தானா இது..?
எது எப்படி இருந்தாலும், தமிழ்ப்பேசும் சிறுபான்மைக்கட்சிகளை காலத்துக்காலம் இவ்வாறு ஒன்றிணைப்பது பேரினவாதம் பேசும் சிங்கள அரசியல்கட்சிகள்தான் என்பது மிகவும் தெளிவானது.
1972 வரையில் பிரிந்து நின்று ஏட்டிக்குப்போட்டியாக தேர்தல் மேடைகளில் திட்டித்தீர்த்த ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸும், செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சியும் ஶ்ரீமா காலத்தில் கொல்வின் ஆர் டீ. சில்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயக சோஷலிஸ குடியரசின் புதிய அரசியலமைப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி கைதான அமிர்தலிங்கம், ஆனந்தசங்கரியை விடுவிப்பதற்காக ட்ரயல் அட்பார் நீதிமன்ற விசாரணைகளில் ஒன்றுபட்டதை நினைத்துப்பார்க்கவேண்டும்.
அப்போது ஜீ. ஜீ. பொன்னம்பலமும் அமிர்தலிங்கமும் தேர்தலில் தோல்வி கண்டு தத்தம் வீடுகளில்தான் இருந்தனர்.
காலமும் பொது எதிரியும் அவர்களை ஒன்று சேர்த்துவிட்டிருந்தது. அந்த ஒற்றுமையாவது நீடித்திருந்ததா..?
ஜீ. ஜீ. யின் மகன் குமார் பொன்னம்பலமும், அமிர்தலிங்கமும் ஏட்டிக்குப்போட்டியாக வரிந்து கட்டினார்கள். இருவரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
குமாரின் மகன் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் சம்பந்தரும் ஆனந்தசங்கரியுமாவது ஓரணியில் ஒற்றுமைப்பட்டார்களா…?
நீதியரசர் விக்னேஸ்வரனும், அவரது மாணவர் மதியாபரணம் சுமந்திரனுமாவது கருத்தொற்றுமை கொண்டிருந்தனரா..?
இந்தப்பின்னணிகளுடன் தனிவழிசென்றவர்கள், இப்பொழுது ரவூப் ஹக்கீமையும் மனோ கணேசனையும் அழைத்துக்கொண்டு ஒற்றுமை பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.
ஆம், ஒற்றுமைப்படவேண்டியதுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுதான். சந்தேகம் இல்லை.
ரவூப்ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிதா மகர் அஷ்ரப் அவர்களும் அதில் இணைந்திருந்த மசூர் மௌலானாவும் ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியின் முக்கிய அங்கத்தவர்கள்தான் என்பதையும் வரலாற்றின் ஏடுகள் பதிவுசெய்துள்ளன.
மசூர் மௌலானா தமிழரசுக்கட்சியின் சார்பில் கல்முனைத்தொகுதியில் முன்னர் போட்டியிட்டவர்தான் !.
அந்த ஒற்றுமைக்கு பின்னர் நேர்ந்த கதி என்ன..?
தமிழ்ப்பேசும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் ஒன்றுபடல்வேண்டும். இம்மக்களின் அடிப்படை உரிமைகளை ஏற்று மதிக்கின்ற சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் புரிந்துணர்வு மிக்க உறவு உருவாக வேண்டும்.
அப்போதுதான் இந்த ஒற்றுமை பலன் தரும். இல்லையேல் தேர்தல் காலத்தேவைக்காக இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையாதாகத்தான் இதுபோன்ற சந்திப்புகள் அமையும் என்பதே அனுமானமாகும்.
—0—