அழகு சிரிக்கின்றது!…. ( சிறுகதை ) ….. எஸ்.ஜெகதீசன்…. (கனடா )
உலக அழகு ராணிப் போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற அபிப்பிராயம் எனது கிராமம் முழுவதும் இருந்ததோ இல்லையோ என்னைக் கண்ட ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் சிரிப்பைத் தரும்.
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.
பல்கலைக் கழகம் புகுந்த முதல் நாளே பட்டம் பெற அதுவே காரணமும் ஆயிற்று.
மயிரிழையில் உயிர் தப்பிய உடுப்புகளை அணிந்த வண்ணம் புதிய மாணவரை எதிர்நோக்கிக் காத்திருந்த கூட்டம் அனிச்சம் பூ அழகி பாடலுடன் எம்மை ‘வெல்கம்மியது’.
விரிவுரைகளுக்காக விரைந்த வேளை அவர்கள் தடுத்தாட் கொண்ட பல பெண்களுள் நானும் ஒருத்தி.
எம்மைப் பற்றி அவர்களுக்கும் தெரியாது. அவர்களைப் பற்றி எமக்கும் தெரியாது.
முகர்ந்தாலே வாடிடும் அனிச்சம் பூ பற்றியும் அவர்களுக்குத் தெரியுமோ தெரியாது.
ஆனால் அனிச்சையாக நுகர்ந்தாலே வாடிவிடுவோம் நாம் என்பது எமக்குத் தெரியும்.
எல்லோருக்கும் உள்ளே பயம் இருந்தாலும் வெளியே பவ்யம் காண்பித்தோம்.
அட! ‘வ்’ என்ற ஒற்றை எழுத்துக்கே இங்கு இவ்வளவு சக்தி எனின் எமக்குள் எவ்வளவு இருக்கும்!
அவர்கள் வெல்வதை விட எம்மை நாமே வெல்வதுதான் மேலானது.
சிவப்பழகே உன்னதம் என்று கருதும் இருட்டு உள்ளங்கள்.
பகிடி வதை செய்யப் போகின்றார்களாம்.
“மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடுக்க முன்.. இப்பொழுது ஒவ்வொருவரும் அழகை மட்டும் மையப்படுத்தி புது மாதிரியாக உங்களை அறிமுகம் செய்ய வேண்டும். நாம் உடனேயே பட்டம் சூட்டுவோம் என்றார்கள்.”
என்னுடைய வாழ்வில் எனக்கு நட்பும் எனது அழகுதான். எதிரியும் எனது அழகுதான். பார்க்க மிகவும் அழகாகன ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள
எடுப்பான பெண் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கேனும் இராது என்ற பகவதி ஆகிய யான் பெற்ற பட்டம் ‘தொடுப்பு!’
நான் எடுப்பு என்றதை அவர்களின் காதுகள் தொடுப்பு என்று கேட்டிருக்குமோ?
வாழ்க்கையில் ஓர் அழகியை கண்டுவிட்டால் 10 நிமிஷம் கண்ணை மூடி யோசித்து அவள் தனக்கு மட்டும் என முடிவெடுக்கும் ஆண்கள் எல்லோருமே பச்சோந்திகள் என்ற சிசிலியாவை பச்சோந்தி ஆக்கினர் அந்த ஆக்கினை பிடித்தவர்கள்.
கெட்ட பழக்கம் செய்வமா? என என்னிலும் அதிக வயது மூத்ததொன்று கேட்ட பொழுது அதற்கு காரணம் எனது அழகே என உணராத பருவத்தில் அன்று நானிருந்தேன் என்றாள் அதிசயா.
ஓ! அதற்காக நாம் சூட்டும் பட்டம் ‘கெட்ட பழக்கம்’ என்றனர்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த குமாரி சும்மா இருந்திருக்கலாம்.
தனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. அதன் பின் கெட்ட பழக்கம் என்று வேறு யாராவது வேறு எதற்காகவாவது சொன்னால் கூட உடம்பின் ஒவ்வொரு பகுதியும் மிச்சமின்றி ஞமஙமக்கும் என்றாள்.
அதென்ன ஞமஙம?
அது உடம்பின் ஓர் உணர்வு. அதனை விபரிக்க இயலாது. புல்லரிக்குது என்பதைப் போல!
அவளது அந்தக் கதை அத்துடன் முடிந்ததோ இல்லையோ அவளுக்கான பட்டப் பெயராக ‘ஞமஙம’ என்பது அந்தக்கணத்திலே ஆரம்பமானது.
தொடவேண்டும் என்ற ஆவலுடன் முன்னும் பின்னும் சுழல வைப்பது அழகு. எப்படி முதலில் தொடவேண்டும் எனச் சொல்லித் தரவா என்று கேட்பது அதைவிட அழகு என்று சொல்லிக் கொண்டே போன தீபிகா அதன் பின் எல்லோருக்குமே சொல்லித் தரவா தீபிகா என்றானாள்.
வித்தியாசமாக கழட்டிவிடுவதே அழகின் பாணி என்ற அனிதா அத்துடன் நிறுத்தவில்லை.
“உலக பேரழகியைத்தான் மனைவி ஆக்கிக் கொள்ள விரும்புகிறோம் என்று ஒவ்வொரு ஆணும் அடம் பிடித்தால் எப்படியிருக்கும்?
இந்த ஏக்கத்துடன் உலாவி வரும் ஆண்களை நான் வலிந்து கழட்டி விடுவேன்.
நீங்கள் ஒத்துக் கொள்ளும் அழகியாக உங்களின் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்புகிறேன் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வீர்களா?
பணம் அதிகரிக்கும் சொத்து, அழகு தேய்மானம் அடையும் சொத்து. செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க முனைவது முட்டாள்தனம்.
வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் அழகுத் தோற்றத்தை மறந்து விட்டு வருடம் தோறும் உயர்ந்துக் கொண்டே போகும் பணம் சம்பாதிக்கும் சமர்த்தியசாலியாக வளருங்கள்.” என்பேன். “பின்பு அவர்கள் ஏன் என்னுடன் ஒட்டுவார்கள்?” என்றாள் அனிதா.
அவர்கள் கோரஸாக அவளை பாதகி துரோகி என்றார்கள். பின்னர் கழட்டி என பட்டமளித்தனர்!
‘பட்டமளிப்பு விழா’ நீண்டு கொண்டே போனது.
“நிராகரிக்க வேண்டியவற்றிக்கு நின்று நிதானித்து பதில் அளிப்பது அல்லது மறுக்க வேண்டியதை ஏற்றுக் கொள்வதுதான் வாழ்க்கையில் பலருக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள் பலவற்றிக்கு அடிப்படை என்ற மேலாண்மைக் கொள்கையை அறியாதிருப்பதுதான் உங்களின் அழகு என்பதா அல்லது பகிடி வதைத் தடை சட்டத்தை அறியாதிருப்பதுதான் உங்களின் அழகு என்பதா” என்று கூட்டத்திலிருந்து அசரீதியானது ஒரு தேவதை.
வீராப்பு பேசிய சூரர்கள் இதனை ஓர் அதிரடித் தாக்குதலாக கருதி சற்று நிலை குலைந்து பம்முவது போல பாசாங்கு செய்தனர்.
“அறிவுதான் அழகு என்பதை அறிந்து கொள்ளாதது எமது அறியாமை.அழகான பெண்ணை அணைத்துக் கொள்ளும் சமூகம் அறிவான பெண்ணை அணைத்து விட முயல்கின்றது என்ற தத்துவம் இதுவரை எமக்கு ஏன் தெரியாமல் போனது.”
என்று ஏதோ எல்லாம் புசத்தினர்!
அதன் பின் ஏனோ அவர்கள் எம்மைச் சீண்டவில்லை.
மௌனித்தனர்.
அவர்கள் பாடாமலே இருந்தது எமக்கு பெரும் பாடாயிருந்தது.
எதிர்பாரதவிதமாக நான் ‘சொல்லித் தரவா’ தீபிகா ‘கெட்ட பழக்கம்’ அதிசயா மூவரும் சிற்றுண்டிச் சாலையில் ஒரே மேசையில் சந்தித்தோம்.
வேறு எதைப் பற்றியும் கதைக்கத் தோன்றவில்லை. பகிடி வதையுடனே நாக்குச் சுழண்டது.
அதென்ன கெட்ட பழக்க கதை!.. சொல்லு சொல்லு. கிட்ட முட்ட அதிசயாவை நச்சரித்தோம்.
எதைச் சொல்ல… எதை விட என ஆரம்பித்தாள் அவள்.
“ஒரு காலத்தில் ‘செக்கச்செவேல்’ என்று இருந்தேனா?
ஊரவர்களுக்கு நான் – சிவப்பி – அழகி – வடிவு என பல பெயர்களில் தெரிந்தேன்.
என்னை முத்தமிடாத ஆண்கள் எவராவது இருக்கிறார்களா?
அல்லது என்னைத் தூக்கிப் ‘பிசைந்தெடுக்காதவர்களாவது’ யாராவது உண்டா?
வாரி அணைத்து மடியில் அமர்த்தியபடியே தமது காரியத்தை முடிக்காதவர் வெகுசிலரே!
அவர்களின் மனசுக்குள்ளே குதூகலம் இருந்திருக்குமோ உடலெல்லாம் உற்சாகம் இருந்திருக்குமோ யாரறிவர்?
அப்பொழுதெல்லாம் நான் ‘கொழு கொழு’ ‘மொழு மொழு’ என்றிருந்தேன்.
அளவுக்குமீறிய ‘சைஸ்’ எவருக்குமே இடையூறாக இருந்ததில்லை.
அது பற்றி் அவர்களுக்கோ எனக்கோ அக்கறையும் இருந்ததில்லை.
கையூட்டல்களாக கிடைத்த இனிப்புகளும் சக்கலேட்டுகளும் என்னை ஊத வைத்தன.
வயது மிக அதிக மூத்ததொன்று கெட்ட பழக்கம் செய்வமா? என வார்த்தைகள் நடுங்க ஒரு நாள் கேட்ட பொழுது அது என்னவென்றே உணராத வயது எனக்கு.
எனினும் கைகளை உதறத் தெரிந்திருந்தது. உள்ளத்தில் உதறல் ஏற்பட்டதும் தெரிந்திருந்தது.
வியர்க்க விறுவிறுக்க ஓடோடிப் போய் அம்மாவின் மடியில் விழுந்து வார்த்தைகள் நடுங்க… கெட்ட பழக்கம் என்றால் என்ன அம்மா? என்றதும் நினைவுக்குத் தெரிந்திருந்தது.
வார்த்தைகள் நடுங்க பதைபதைப்புடன் “மகளே! உனது வாழ் நாளில் என்றுமே நீ தேன் போல இரு! நீயும் கெடக் கூடாது. மற்றவரும் உன்னால் கெடக் கூடாது.” என்று சொன்ன அம்மாவை எதுவுமே புரியாது அப்பாவித்தனமாய் அண்ணாந்து பார்த்ததும் தெரிந்தது.
கெட்ட பழக்கம் என்றால் என்ன என்பது மட்டும் தெரிய வில்லை.
பிற ஆண்களை நானும் தொடக் கூடாது. அவர்கள் என்னைத் தொட விடவும் கூடாது என்பதுதான் கெட்ட பழக்கமாயிருக்கும் என எனக்குள் நானே வரையறுத்துக் கொண்டேன்.
அந்த மூத்ததும் அதன் பின் எமது முற்றத்தை மிதித்ததையும் நான் கண்டதில்லை.
எனது வீட்டார் இது தொடர்பாக அந்த மூத்ததை முற்றுகை இட்டதாகவும் எனக்குத் தெரியவில்லை.
கண்ட இடத்தில் முட்டாவிடினும் முறாய்க்காமலாவது இருந்திருப்பார்களா என்றும் தோன்றவில்லை.
அடுத்தவர் எவருக்குமே இக்கதை தெரியாதவாறு மூடி மறைத்தனர் எனது வீட்டார்.
அனைவருக்குமே அக்கதை பரவியதாக மனதளவில் வெருண்டது மூத்தது.
அதன் பிறகு மூத்தது சாதுவானது. மூச்சுக் காற்று கூட எவரையும் தீண்டாமல் வாழ்ந்து மறைந்தது.
வாழ்க்கையில் எந்த விடயமும் சொல்லிக் கொண்டு வருவதுமில்லை.
எதையும் சொல்லிக் கொடுக்காமல் போவதுமில்லை.
‘காணாததைக் கண்டால்’ பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ அறிவிக்க வேண்டும் என்பதுவே அந்த அறியாப் பருவத்தில் நான் அறிந்த பாடம்.
சிறுவர் துஷ்பிரயோகம் தீர வேண்டும் எனின் உடனடியாகவே முறையீடு செய்ய கற்பிக்க வேண்டும் என்பதனை பெற்றோர்கள் கடைப் பிடிக்க வேண்டும்.
எனது அம்மாவின் தேன் தத்துவம் அப்பொழுது புரியாவிடினும் இப்பொழுது புரிந்தது.
நானும் கெடவில்லை. என்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கவில்லை. அப்படித்தான் என் வாழ்க்கையில் இதுவரை நடந்து வருகிறது”
அதிசயா தனது கதையை முடித்தாள்.
சொல்லித் தரவா தீபிகா என்னத்தைச் சொல்லிக் கொடுத்தாய் என்றோம் நாம் இருவரும் கோரஸாக!
நல்லதோ கெட்டதோ கதை கேட்கும் ஆவல் யாரை விட்டது.
“எனது பதின் வயதொன்றில் எனது பாடசாலை வாழ்வு அயலூரில் ஆரம்பித்தது.
சிறிது காலம் நானும் எனது துவிச்சக்கர வண்டியும் ஒழுங்கைளிலும் ஒழுங்காகப் பயணித்தோம்.
விரு என்றால் என்னவென்று அறியாமலே..விருவறியும் பருவம் எனக்கு வந்தது.
நாளுக்கு நாள் நான் கடக்கும் இளவட்டங்களின் தொகை சந்திக்குச்சந்தி கூடியது.
என்னைக் காதலுடன் பார்த்தவர்களை விட காமத்துடன் பார்த்தவர்களின் எண்ணிக்கை எகிறியது.
அவர்களை இனம் காணும் அறிவை இயற்கை எனக்கு ஊட்டியது.
இதென்னடா..வாள் முனைகளில் தேன் கசியுது என்ற விசித்திரமான யோசனை வரும்.
எனக்கு உதவி செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்க அவர்களால் எனது சைக்கிளின் காற்று அடிக்கடி வெளி நடப்புச் செய்தது.
நாளாக நாளாக அவர்கள் ஒவ்வொருவரதும் உதவும் மனப்பான்மையால் மூச்சு முட்டியது.
அவர்களிடம் எனது அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.
கொஞ்சம் நெளிபவர்களிடம் சிரித்தவாறே..என்ன விருப்பமா .. நீங்கள் முதலில் தொடவேண்டும் என்பேன்.
ஆஹா! மீன் வலையில் சிக்கி விட்டது என அவர்கள் மனதில் புளகிதம் அடைவதாக ஓர் உணர்வு எனக்குள் ஏற்படும்.
கண்கள் பனிக்க எவருமே அப்பொழுது என்னைப் பார்த்ததாக நினைவு என்னிடமில்லை.
கண்கள் அகலவிரிந்து பிரகாசமடைந்ததையே பல தடவை அவதானித்திருப்பேன்.
அவர்கள் சுதாகரிக்க முன்பாக என்ன சம்மதமா? என்பேன்.
‘என்ன? ’ என்பார்கள் சிந்தை சிதைந்தவர்கள்.
நீங்கள் முதலில் தொடவேண்டும் என மீண்டும் சொல்வேன்.
இதென்ன! ‘முத்திய கேஸா’ என்று கூட சிலர் வாய்விட்டே கேட்டும் இருக்கின்றார்கள்.
வேகமாக என்னை நெருங்குவார்கள்.
நான் பின் வாங்குவேன்.
நான் ‘பிகு’ செய்வதாக எண்ணுவார்கள்.
நீங்கள் ஒரு சரியான ‘ஆம்பிளை’ என நிருபிப்பீர்களா என்பேன்.
நெருங்கியவர்கள் – நொருங்குவார்கள். மிரள்வார்கள்.
“நீங்கள் முதலில் தொடவேண்டும். ஆனால் என்னை அல்ல. ஏதாவது ஒரு துறையில் உச்சம் தொட வேண்டும். அது கல்வியாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். வேலையாக இருக்கலாம். அல்லது பொதுச் சேவையாக இருக்கலாம். உங்களால் முடியுமா? ” என்பேன்.
ஒரு கணம் தாமதிப்பார்கள்.
சுருக்கமாகச் சொன்னாலும் சுருக் என சொல்லுறாளே…யாருடா இவ? என யோசிப்பார்களோ!
“முடியும்” என்பார்கள்.
“காத்திருப்பேன்” என்பேன்.
அவர்களில் பலர் சவாலை சாதனை ஆக்கினர்.
சாதனை உச்சமானது. அழகு துச்சமானது.
அவர்களும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என வாழ்ந்தனர். அதனால் அபிப்பிராயம் கேட்க வேறு ஆளே அவசியப்படவில்லை.
என்னைத் தீண்டாத அவர்கள்தான் இன்று வரை எனது உற்ற நண்பர்கள். உயர்ந்த பாதுகாப்பு அரண்கள்.”
ஏதோ கதவை தட்டி அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைவது போல எனது முறை என்னைத் தட்டியது.
எனது கதை பழங்கதைதான். அதைத்தான் புதுசாக சொல்லப் போகின்றேன்.
அழகானவள் என்றால் தொடுப்புடன் தொடர்புள்ளவள் என்ற தப்பபிப்பிராயம் பலரிடம் உண்டு.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன் பெறுமதியை உணர்த்திவிட்டே கடக்கும் அழகு எத்தனை பேரை எத்தனை படுத்தியிருக்கும்?
தொடுப்பு என்ற ஒத்தைச் சொல்லை கேட்டதுமே மனதுள் “ஞமஙம” தோன்றுகின்றதா?
எனின் அதை வாழ்நாள் முழுக்கச் சுமப்பவர்கள் மனது என்ன பாடுபடும்!
யாராவது சொல்வதை நம்பி அவர்கள் அப்படித்தான் என்று முடிவு செய்யாதீர்கள். அப்படிச் செய்வதாக இருந்தால் உங்களுக்கு மூளை எதற்கு? என்று கூட எவரையாவது கண்டால் கேட்கத் தோன்றும்.
ஒருவர் நல்லவரா இல்லையா என்பது பழகும் மனதில் இருக்கிறது.
உங்கள் மனதை கெட்டதாக வைத்துக் கொண்டு அடுத்தவரை கெட்டவராக கணிக்காதீர்கள்.
நமது நினைப்பு நன்றாக இருந்தால், நாமும் நன்றாக இருக்கலாம். நம்மை சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்கலாம். அவ்வளவு ஏன் ? நம் பார்வையில் படுபவர்கள் எல்லோருமே நல்ல நிலைக்கு உயரலாம்.
“பாடசாலை செல்லும் பாதையில் தினமும் தலையில் மொட்டாக்குடன் காலையிலும் மாலையிலும் தெருவோரமாக நடக்கும் பெண்மணி ஒருவர் என் வாழ்வில் குறுக்கிட்டார்.
வயது வடிவு வனப்பு வலிமை வசதி வளம் என அனைத்திலும் என்னிலிருந்து வேறு பட்டவர் அவர்.
சிறு சிரிப்புடன் ஆரம்பமான அறிமுக நட்பு காணும் வேளைகளில் எனது சைக்கிளில் ஏற்றி இறக்கும் நெருக்கத்தில் பல வருடங்கள் நீடித்தது.
“நான் நல்லவளாக மென்மையானவளாக இருந்தேன்.
உள்ளம் பயந்து நடுங்கும். அதனை வெளிக்காட்டினதில்லை இதுதான் எனது வாழ்வு முறை.
வாழ்வித்து – வாழ் என்பதையே எனது கோட்பாடாக்கி வாழ விரும்பினேன்.
என்னை அணுகும் எல்லோரும் வாழ் – வித்துவாழ் என்பதனையே முன்னிறுத்தினர்.
தனிமையில் பொல்லாங்குடனே வில்லங்கமானவர்களாக மாறினர்.
நான் என்னைப் பாதுகாக்க வாயாடியானேன்.
வம்பிழுத்தவர்களை வாயாலே அடிபின்னிடுவேன்.
என்னை நெருங்க விடாத படியால் பிறரையும் அதனால் பாதுகாத்தேன்.
ரௌடி என்பார்கள்.
இணக்கமானவர்கள் பிணக்கமானார்கள்.
நேரில் ராணி என கூப்பிடுபவர்கள் கூட பெயரின் முன்னே இரவு சேர்க்க மறைவில் மறப்பதில்லை.
ஐட்டம் பிராத்தல் அகளன் என தமக்கு தெரிந்தவற்றால் குசுகுசுக்கவும் தவறுவதில்லை.
ஒன்றை சத்தமாகச் சொல்வதை விட கிசுகிசுப்பாகச் சொல்லும் போது நம்பும் மக்கள் நிறைந்த ஊர் அது!
ஆனால் என்றுமே நான் சோரம் போனதில்லை! என்னை நான் ஏமாற்றிக் கொள்ள நினைத்ததுமில்லை!”
ராணியின் இந்த வாக்கு மூலம் அவரது அந்த வாழ்வின் மூலத்தை அறிவித்தது.
எமது பாதையிலே ராஜாவின் சைக்கிள் கடையும் இருந்தது. நல்ல உழைப்பாளி. தோட்டக்காரர்.வாடகை கார் சாரதி. ஒலி பெருக்கி வாடகைக்கு விடுபவர் என பல முகம் கொண்டவர்.
தனது ஐந்து சகோதரிகளையும் தனது உழைப்பால் கரை சேர்த்தவர்.
சிறு சிறு திருத்தங்களுக்கோ அல்லது காற்றடிக்கவோ அங்கு செல்வதால் ராஜாவுடன் சிறு பரிச்சயமும் ஏற்பட்டிருந்தது.
மழை காரணமாக நானும் ராணியும் கடையின் தாழ்வாரத்தில் பல தடவைகள் ஒதுங்கி உள்ளோம்.
என்றுமே மனுஷன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. சீரியஸ் பேர் வழி. முகத்தில் சிரிப்பு மருந்துக்கும் கிடையாது.
அன்றும் அப்படித்தான். வீடு திரும்பும் வேளை. மழை விட்டபாடில்லை. ஒதுங்கினோம்.
மனம் விட்டபாடில்லை.உள்ளுக்குள் ஏதோ குடைந்தது.
முற்றாத பிஞ்சு மூளைக்குள் உதித்த திட்டமிடாத ஒரு கேள்வியால் விசிலடித்தது மனது.
நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாமே?
ஓராயிரம் வரிகள் பதிலுக்குத் தேவை வரக் கூடும் எனினும் ஓர் அசட்டுத் தைரியத்துடன் ஒரு வரியில் எனது கேள்வியை அவர்கள் முன் வைத்தேன்.
கேள்வி நல்லது என்பது மட்டும் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.
சின்னச் சின்ன அறங்களில்தானே இருக்கிறது வாழ்க்கை!
சம்மதிப்பார்கள் மாதிரி் இருந்தது சுவாரஸ்யத்தையும் – நிராகரிப்பார்கள் மாதிரி் இருந்தது குழப்பத்தையும் மனதில் தோற்றுவித்தது.
வரவிருக்கும் தருணங்கள்..அடுத்த விநாடி ஆச்சரியங்கள்..எதிர் கால கற்பனைகள்.. அவர்களின் மனங்களில் படம் காட்டி இருக்க வேண்டும்.
அவர்களது அந்த மௌனமே ரம்மியமாக இருந்தது.
முகத்தில் தெறித்த மழைத்துளியைத் துடைக்க நீண்ட ராஜாவின் கைக்குள் நாணத்டன் தளர்ந்தது ராணியின் தாவணித் தலைப்பு!
இருவர் முகங்களிலும் கிளர்ச்சியூட்டும் ஒரு வசீகரமும் சிறு பரவசமும் ஒப்புதலை ஒப்புவித்தன.
சிரிக்க மறந்து சிரிக்க மறந்து உலர்ந்து போன முகங்களில் முதன் முறையாக அழகு சிரித்தது.
அந்தப் புரிதலில் தோன்றிய வெட்கமும் ஒளித்து வைக்கப்பட்ட சந்தோஷமும் இப்பொழுது நினைத்தாலும் கூடிக் கொண்டே போவது போலவே தெரியும்.
ஏனோ தெரியவில்லை. மனதுக்கு பிடித்தவரகள் எல்லோரும் மனதோடு வாழ்கின்றார்கள்.
1 ) மயிரிழையில் உயிர் தப்பிய உடுப்புகள்
2 ) பயம் -இடையில் நுழைந்த வ்
3 ) சிவப்பழகே -இருட்டு உள்ளங்கள்
4 )நட்பும் அழகு -எதிரியும் அழகு
5 )ஞமகம -எடுப்பு என்ற தொடுப்பு
6 )பணம் > சொத்து. | அழகு < சொத்து
7 )அழகான பெண்களை அணைத்துகொள் -அறிவான பெண்களை அணைத்து விடு
8 )தேன் -நீயும்- உன்னாலும் -கெடக்கூடாது
9 )வாழ்வித்து -வாழ்
10 ) சத்தமாக கூவும் சொல்லைவிட கிசுகிசு உயர்ந்தது
11 ) முற்றாத பிஞ்சு மூளைக்குள் உதித்த -திட்டமிடாத கேள்வியால் விசிலடித்த மனசு
12 )மனதுக்கு பிடித்தவர்கள் எல்லோரும் மனதோடு வாழ்கின்றார்கள்
அழகாகச் சிரிக்கின்றது -முகர்ந்து பார்க்காத -அனிச்சம்பூவும் மல்லுவேட்டியும் -அழகு பாஞ்சாலன் அவர்களே
ஆழமான முதிர்ந்த எழுத்துநடை,
அர்த்தமுள்ள யதார்த்தமான கருத்துகள் அனைத்தும் பொந்திடை வைத்து மூடி மறைக்காமல் கோபுர தீபமாக கொழுந்து விட்டு எரிதல் வேண்டும்.
இந்த எழுத்தை வாசிக்க கிடைத்தமைக்கு மிக நன்றி.