எஸ்பொ – சில நிகழ்வுகளின் பகிர்வு!…. வழக்குரைஞர், கலைஞர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா (அவுஸ்திரேலியா)
அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய இணைய இதழும், யேர்மெனி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்திய மூதறிஞர் எஸ்பொ நினைவுப் பேருரை இரண்டாம் நாள் மெய்நிகர் நிகழ்ச்சியில் (18.12.2021)
வழக்குரைஞர், கலைஞர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா (அவுஸ்திரேலியா) அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்வாழ்க!
முன்னைப் பழமைக்கும் மூத்தவளாய்,
பின்னைப புதுமைக்கும் ஏற்றவளாய்
இன்னும் இளமை எழில் பூத்தவளாய் விளங்குகின்ற
என் அன்னைத்தமிழுக்கு முதல் வணக்கம்!
எனது அரும்பு மீசைக்காலத்திலே நான் விரும்பிப் படித்த நாவல், நிலக்கிழி! இலங்கை நாவல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நாவல் அது. அந்த நாவலை எழுதிய பெருமைக்குரிய எழுத்தாளர் திரு. அ.பாலமனோகரன் அவர்களது தலைமையிலே நடபெறும் இந்த நிகழ்ச்சியிலே பங்குகொள்ளக்கிடைத்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. அவரை நேரிலே காணவேண்டும், கதைக்கவேண்டும் என்றெல்லாம் ஊரிலே இருந்தபோதே எழுந்த எண்ணம் கனவாகிப் போனாலும், காணொளியில் காணுகின்ற வாய்ப்புக் கிடைத்தைமட்டில் மகிழ்ச்சியே.
அந்த இலக்கியச் செம்மலுக்கு என் பணிவான வணக்கம்.
சிறப்புரை ஆற்றிய எழுத்தாளர் க . நவம் அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனுசரனைவழங்கும் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். எஸ் பாஸ்கர் அவர்களுக்கும், தமிழ் மரபு அறக்கட்டளை கலாநிதி. K. சுபாசினி அவர்களுக்கும், இரண்டு நாட்களும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நெறியாள்கை செய்து கொண்டிருக்கும் கரவையூரான் தர்மகுலசிங்கம் அவர்களுக்கும் எனது செந்தமிழ் வந்தனங்கள்.
இன்று உரை நிகழ்த்தவுள்ளோரையும், பங்குகொண்டிருப்போரையும், ஒவ்வொருவராக விழித்து வணக்கம் சொல்வதற்கு எனக்கு ஆசை இருக்கிறது.
ஆனால் வழங்கப்பட்ட கொஞ்ச நேரமும் வணக்கம் சொல்வதிலே கரைந்துவிடக் கூடாதே என்ற கவலை தடுக்கிறது.
அதனால், அன்பர்கள், நண்பர்கள், அறிவார்ந்த பெரியோர்கள்,
இளையவர்கள், மூத்தவர்கள்
எல்லோருக்கும் என் உள்ளத்து வணக்கங்களை
உவகையுடன் சொல்லி மகிழ்கின்றேன்!
எஸ்.பொ!
தமிழ் இலக்கிய உலகைக், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கலக்கிக்கொண்டிருந்த, தன்னிகரில்லாத் தனித்துவம் மிக்கதோர், இலக்கியச் ஆளுமையைக் குறிக்கும் இரண்டு எழுத்துக்கள், இவை!
ஈழத்து இலக்கியத்தின் தரத்தினை இமயத்தின் அளவுக்கு உயர்த்தியவர். தனக்கெனத் தனித்துவமானதோர் எழுத்து நடையைக் கையாண்டு அசத்தியவர். இந்தியாவின் புகழ்பூத்த எழுத்தாளர்களை இலங்கைத் தமிழ் இலக்கியத்தை திரும்பிப்பார்த்துத், திகைக்க வைத்தவர், அமரர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள்!
தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் இனத்தின் – குறிப்பாக – ஈழத்தமிழ் இனத்தின் வாழ்வியலையும், பண்பாட்டையும் தனது தன்னிகரற்ற எழுத்துக்களால் உரத்துச் சொன்னவர் எஸ்பொ. அவர்கள். அந்த இனத்தின் மண்ணிலே வாழ்ந்து, அந்த மண்ணிலே புரண்டு, அந்த மண்ணின் வாசத்தை ஒழிவு மறைவு இல்லாமல் நுகர்ந்து, அகிலத்தையே முகர்ந்து பார்க்க வைத்தைவர் எஸ்.பொ அவர்கள்.
அத்தகைய மாபெரும் எழுத்தாளரைப் பற்றிய நினைவு உரையிலே,
அவர் எழுதிய நூல்களைப் பட்டியல் இடுவது எனது நோக்கமல்ல. அதனை இணையத்தளத்திலே எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அவரது நூல்களை ஆய்வு செய்யப்போவதுமில்லை. அதற்கு நேரமும் இல்லை.
அந்த முயற்சியில் எத்தனையோ பேர் ஈடுபட்டுத் தத்தளித்துக்கொண்டமையை இலக்கிய உலகு அறியும்.
இது அவரது நினைவு உரை. எஸ்பொ என்ற ஆளுமை மிக்க எழுத்தாளரின், தனித்துவக் குணங்கள் பற்றியும், தன்னிகரற்ற ஆற்றல்களைப் பற்றியும், மனித்தற் பண்புகள் பற்றியும், மயக்கும் மொழிவளம் பற்றியும், எனக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள், இயன்றவரை எடுத்துரைக்கும் முயற்சியில் எடுத்தடி வைக்க எண்ணுகின்றேன்.
எஸ்.பொ என்று சொன்னாலே பலர் கலங்கினார்கள். இன்னும் சிலர் நடுங்கினார்கள். அவரை மேடையேற்றத் தயங்கினார்கள். ஆனால் அந்த எழுத்துக்குரியவரின் எழுத்துக்களை எல்லோருமே விரும்பினார்கள்.
தங்கள் விருப்பத்தை, தங்கள் இரசிப்பினை, அதில் உள்ள புளகாங்கிதத்தை வெளிக்காட்டிக் கொண்டவர்கள், பலர். வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெளிக்காட்ட விரும்பாமல் மனதிற்குள் பூட்டிவைத்துக்கொண்டவர்கள் சிலர். மாற்றுக் கருத்துக் கூறுகிறோம் என்று புறப்பட்டு, எஸ் பொ வின் எழுத்துக்களைவிட, அவரை விமர்சித்தவர்கள் இன்னும் சிலர். அந்தச் சிலரில் கலாநிதிகளும் இருந்தார்கள், கல்லாநிதிகளும் இருந்தார்கள்.
எனது பள்ளிப்பருவத்திலே, எஸ்.பொ என்றால் யாரென்று தெரியாத நிலையில், “தினை விதைக்காதவர்கள்” என்ற அவரது நாடகமொன்றை நெறியாள்கை செய்தேன். அதில் சேனரதன் என்ற பாத்திரத்திரத்தில் நான்
நடித்தேன். அதுதான் எஸ்பொ அவர்களுடன் ஏற்பட்ட முதலாவது ஈர்ப்பு. அப்போது எஸ்.பொன்னுத்துரை என்றால் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.அவர் ஓர் ஆசிரியர் என்றோ, ஒரு பெரிய எழுத்தாளர் என்றோ நான் அறிந்திருக்கவில்லை.
ஆனால், பின்னர் பத்தாம் பதினோராம் வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவரது “தீ” யையும், “வீ”யையும் வாசிக்கும் பாக்கியம் பெற்றேன். அந்த வயதிலே அது ஒரு பாக்கியம்தானே! வாசிக்க வாசிக்க இன்பக் கிழுகிழுப்பு!
உள்ளத்தில் மட்டுமல்லாமல், உடலிலும் – எழுச்சி ஏற்படுத்திய – தீயையும், வீயையும் பலதடவைகள், – வாசித்து, வாசித்து – இன்புற்றேன்.
அதுவரை வாசித்துத் தள்ளிய இந்தியச் சஞ்சிகைகளிலும், துப்பறியும் நாவல்களிலும் இல்லாத தூய்மையையும், இலக்கியச் செறிவையும், என் இதயம் உணரத் தொடங்கியது, முதன்முதலாக தமிழ் மொழியின் வித்தியாசமான நடையழகொன்றை என் மூளை பதிவுசெய்யத் தொடங்கியது.
தீயையும், வீயையும் வாசித்த பின்னர் எஸ்பொவின் நூல்களை வாசிக்கத் தேடினேன். புத்தகக் கடையொன்றிலே, எஸ்பொ “ ? ” என்று ஒரு நூலைக் கண்டேன். வாங்கி வாசித்தேன். 2147 ஆம் ஆண்டிலே, தான் வாழ்வதாகக் கற்பனை செய்துகொண்டு, 1972 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட அந்த நூலின் பெயரே “ ? ” என்பதுதான்.
1975 ஆம் ஆண்டு, எனது 21 ஆவது வயதில், அந்தநூலை வாசிக்கக் கிடைத்தபோது சில விடயங்கள் எனக்குப் புதிராக இருந்தன. பல விடயங்கள் புரியாமல் இருந்தன. சில வருடங்களின் பின்னர், அதை மீண்டும் வாசித்தபோது ஒவ்வொரு வரியையும் உணர்ந்து படித்துச் சுவைத்தேன். கேலியும், கிண்டலும் நிறைந்த சொல்லாட்சி அந்த நூல்முழுவதும் தூவிக்கிடக்கின்றது.
எஸ்பொ அவர்கள், முற்போக்கு எழுத்தாளரா, நற்போக்கு எழுத்தாளரா என்பதையெல்லாம் தாண்டிய, அபூர்வமான எழுத்தாளர் என்பதை அந்த நூல் எனக்கு உணர்த்தியது. அவர்மேல் பற்றும், மதிப்பும் பன்மடங்கு அதிகரித்தது.
அவரது “?” என்ற அந்த நூலில், வந்தாறுமூலை என்ற இடத்தை விபரிப்பதற்கான அடிக்குறிப்பில், ” வந்தாறுமூலை என்பது தற்காலத்தில் விபுலானந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள இடமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநூல் வெளியிடப்பட்டது 1972 இல்.
அந்தக் காலகட்டத்தில், தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஒரு பல்கலைக்கழகம் அமையுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. திருகோணமலையில் ஒரு தமிழ்ப்பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்றவாறான அரசியல் கோரிக்கை 1972 காலகட்டத்தில் எழுந்திருந்தாலும் அதன் விளைவாக ஒரு பல்கலைக் கழகக் கல்லூரிதான் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. அது பல்கலைக்கழகமாக 1979 இல்தான் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று யாரும் நினைத்ததில்லை. அப்படி அமைந்தாலும் அது வந்தாறுமூலையில் அமைக்கப்படும் என்று, 1980 ஆம் ஆண்டுவரை யாரும் கனவுகூடக் கண்டிருக்க முடியாது.
1972 இல், எஸ்பொ அவர்கள் எழுதியுள்ள நூலில், வந்தாறுமூலையில் ஒரு பல்கலைக்கழகத்தைப் பதிவுசெய்திருக்கிறார் என்றால் அது மிகுந்த
ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இதுபற்றி அவரிடம் நான் நேரடியாகக் கேட்டேன். அதற்கு அவர், “அதடாப்பா…எழுத்துப் போக்கில் வந்துவிட்டது. அவ்வளவுதான்” என்று கூறினார். அப்படியென்றால், அவரது எழுத்துக்களில் தீர்க்க தரிசனம் என்பது, எதிர்வுகூறல் என்பது அவரை அறியாமலே வந்திருக்கிறது என்றுதானே சொல்லவேண்டும்?
அவரை ஓர் எழுத்துச் சித்தர், ஓர் அதிசய எழுத்தாளர் என்று தானே கொள்ள
வேண்டும்?
எனது 20 ஆவது வயதில், மட்டக்களப்பு நகரமண்டபத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே, அவரும் நானும் ஒரே மேடையில், ஒரேதரப்பில் நின்று பேசக்கிடைத்தது. அன்றுதான் அவரை முதல் முதலில் நேருக்கு நேராகச் சந்தித்தேன்.
1977 இல் என்று நினைக்கிறேன். ஆண்டு சிலவேளை வேறாக இருக்கலாம். கலாசார அமைச்சின் தமிழ் நாடகப்போட்டிகள் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவரைக் கண்டேன். மிகுந்த ஆவலுடன் அவரை அணுகிக் கதைத்தேன். அடுத்த நூல் என்ன என்று கேட்டேன். “ஓர் ஆமத்துறுவின் காதல்” என்று சொன்னார். அவரது இறுதிக்காலம் வரை எத்தனையோ தடவைகள், அந்த நாவலைப் பற்றிக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அவரின் எழுதாத கதையாக அல்லது வெளிவராத அவரது கதையாக அது நின்றுபோயிற்று.
1992 இல் அவுஸ்திரேலியாவில் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ்.எஸ். பாஸ்கரின் வீட்டிலே எஸ்பொ அவர்களை நெருக்கமாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. சிட்னியிலே வாழும் எஸ்பொ அவர்கள், அன்றுமுதல் மெல்பேணுக்கு வரும்போதெல்லாம் என்னைத் தொடர்பு கொள்வார். அடிக்கடி தொலைபேசியிலும் பேசிக்கொள்வோம். மாபெரும் எழுத்தாளரான எஸ்பொ அவர்களுடன் அவ்வாறு மிக அன்னியோன்னியமாக கலந்துரையாடுவது என்வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே நான் கருதினேன். அவரைப்பற்றி முன்னர் நான் கேள்வியுற்ற சுவையான கதைகள், உலவிய வதந்திகள், நிலவிய அவதூறுகள், அவரது மேடைப்பேச்சுக்களில் இடம்பெற்ற சாடல்கள், அச்சமின்றி, அவர் உச்சரித்த சொற்பிரயோகங்கள் இப்படிப் பல்வேறு விடயங்களைப் பற்றி நேரடியாக, நெருக்கமாக, நட்பாக அவரோடு பேசியதெல்லாம் இனிமையான அனுபவங்கள்.
எந்த விடயத்தைப் பற்றி அவர் நமக்கு எடுத்துச் சொல்லும்போதும்
புதியதொரு பல்கலைக்கழகத்திலே பயில்வதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
1993 இல் மெல்பேணில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவரது “வலை” என்ற நாடகம் எனது நெறியாள்கையில் அரங்கேறியது. எஸ்பொவின் வசன நடையை, அதுவும் அந்த வரலாற்று நாடகத்திலே அவர் வடித்து வைத்திருக்கும் வார்த்தைச் சாலங்களை கருத்து மாறாமல் உச்சரிக்க
வைப்பதிலும், பொருத்தமான நடிப்பை நடிகர்களிடம் இருந்து வெளிப்படுத்தச் செய்வதிலும் மிகவும் கரிசனை எடுக்கவேண்டியிருந்தது.
எஸ்பொவிடம் மேதாவித்தனமாகச் சில கற்றுக்குட்டிகள் பேச முற்படுவதுண்டு. அப்பொதெல்லாம்; அவர் இலேசான ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பார். எதுவும் தெரியாதவர்போலவே அமைதியாக இருப்பார். அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவரோடு கதைப்பவர்களுக்கு அவர் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்வார். மிகப்பெரிய பண்டிதர்களையும், எழுத்தாளர்களையும், பேராசிரியர்களையும் தாக்கு தாக்கென்று தாக்கி விமர்சித்தவர் எஸ்பொ அவர்கள்.
கைலாசபதி உலா, வித்தியானந்த தூது, கணபதிக்கலம்பகம், பேராசிரையர், நச்சாதார்க்கும் இனியர்….இப்படியெல்லாம் மற்றவர்களைப்பற்றிய அவரது எள்ளல்களை பேச்சுக்களிலும் வீசினார். எழுத்துக்களிலும் தூவினார்.
தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியில், கலைமகள் ஆசிரியர் கி. வா.ஜகந்நாதன் அவர்கள், மேடையிலே, எஸ்போ அவர்களைப் பேச அழைக்கும் போது “ஈழத்தின் ஜெயகாந்தன்” எஸ்பொன்னுத்துரை, என்று அழைத்திருக்கிறார். எஸ்பொ அவர்களுக்கு அது என்னவோபோல இருந்திருக்கிறது. அதனால், அவர் பேசும்போது, “ஜெயகாந்தன் எழுத்துலகுக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தான் எழுத ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டு, “நீங்கள்வேண்டுமானால் ஜெயகாந்தனை இந்திய எஸ்பொ என்று அழையுங்கள். எனக்கு ஆட் சேபனையில்லை. தயவு செய்து என்னை ஈழத்து ஜெயகாந்தன் எனக் குறிப்பிட வேண்டாம்” என்று எடுத்துரைத்துள்ளார். யாருக்கு வரும் இந்த ஓர்மை?
எஸ்பொ தனது நனவிடை தோய்தல் நூலில் எழுதியுள்ள, முன்னீட்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
“உண்மை அறிந்தவனின் சுகம், பிறந்த மண்ணிலிருந்து விலகிய தூரங்களும் காலங்களும் அதிகம், அதிகமாக ஆகிக்கொண்டிருக்கும்பொழுது, மண்ணின் பற்றும் வாசனையும் நெருக்கம் நெருக்கமாக அப்பிக்கொள்கிறது. அது மண்பற்று. நாட்டுப்பற்றின் கரு மையம். அதுவின்றி நானில்லை. அந்த மண்ணின் இயல்பும் கலந்ததே என் அனைத்து ஆற்றல்களும் தனித்துவங்களும்.”
இது எவ்வளவு உண்மையான வாசகம்!
அந்த முன்னீட்டில் மேலும் அவர் கூறுகையில்,
” ‘நனவிடை தோய்தல்’ புதிய இலக்கியம். இது கட்டுரைக்கோவையா? கடந்தகால நினைவுகள் மட்டுமா? நடைச் சித்திரங்களா? கதைகளா? வரலாற்று நூலா? இல்லை..இல்லை..பின்? நிச்சயமாகப் புதிய இலக்கியம். இலக்கணத்திற்கு இசைந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. புதிய
இலக்கணம் தோன்றவும் இலக்கியம் எழும். அந்த ஓர்மம் விடுதலை வெறியனுக்கு உண்டு.”
என்கிறார்.
இது மிகப்பெரிய உண்மையாகி, அவர் புதிதாக அறிமுகப்படுத்திய,
அல்லது பெயரில்லாதிருந்ததைப் பெயரிட்டு அடையாளப்படுத்திய
ஓர் இலக்கியவடிவம்தான் “நனவிடை தோய்தல்”.
இன்று பலரும் அந்த வடிவத்தில் ஆக்கங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாவலைப்போல, தொடர்கதையைப்போல, சிறுகதையைப்போல இன்னும் சொல்லப்போனால் அவைகளைவிட மேம்பட்டதாகக்கூட நனவிடை தோய்தல் இன்று வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வரலாறாகக்கூடிய பதிவுகளை அது கொண்டிருப்பதும், வாசகர்களைத் தங்கள் நினைவுகளை மீட்டுப்பார்க்க வைக்கக்கூடியதாக
இருப்பதும் அதற்குக்காரணமாக இருக்கலாம். எனவே அந்த இலக்கிய வடிவத்தை அடையாளப்படுத்தியமை எஸ்பொ அவர்களின் தனித்துவமான சாதனைகளில் ஒன்றாகின்றது.
1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, “வீ” என்னும் அவரது சிறுகதைத் தொகுதியில், இரசிகமணி கனக. செந்தினாதன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையில் “ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின், வண்ணத்தையும், வகையையும் அறிய விரும்பும் தென்னகத்தாருக்கு, ‘வீ’ யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பி வைக்கலாம்” என்று, குறிப்பிட்டிருப்பது, எஸ்பொ அவர்களை, இளமைக்காலத்திலேயே, தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உச்சாணியில் வைத்துவிட்ட உண்மையான கணிப்பீடாகும்.
எஸ்பொ, 30 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், நாடகங்கள், நேர்காணல்கள், சுய வாழ்வு நிகழ்வுப்பதிவுகள் –
என்றிப்படிப் பல்வேறு வகைகளிலான அவரது படைப்புக்கள் நூல்களாக வெளிவந்துள்ளன.
தமிழ் ஆசிரியராக, ஆங்கில ஆசிரியராக, பாடசாலை அதிபராக, கல்லூரிப் பேராசிரியராக இலங்கையிலும், நைஜீரியாவிலும் பணியாற்றிய அவர், தனது வாழ்வின் பிற்பகுதியில், இந்தியாவிலே, சென்னையிலே, சொந்தமாக ஒரு பதிப்பகத்தை நிறுவிப், பல நூல்களின் பதிப்பாசிரியராகவும் செயற்பட்டார்.
அந்தத் தள்ளாத வயதிடகூட, பாதி தமிழ் நாட்டில், மீதி அவுஸ்திரேலியாவில் என்றவாறு வாழ்ந்து, எழுத்து ஊழியத்திலும் நூல்பதிப்புப் பணியிலும் முழுநேரமும் ஈடுபட்டிருந்தார்.
எஸ்பொவின் எழுத்துக்களைப் படிப்பது இன்பம். இந்த உலகில் அது எல்லோருக்கும் கிடைக்கலாம். எப்போதும் கிடைக்கலாம். அவரது பேச்சுக்களைக் கேட்பது இன்பம். அது பலருக்குக் கிடைத்தது.
அவரோடு உறவாடக் கிடைப்பதோ ஆனந்தப் பேரின்பம். அது சிலருக்குத்தான் சிடைக்கும். அந்தச் சிலரில் நானும் ஒருவன் என்பதிலே எனக்குப் பெருமை.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதற்கும், அவர் நடந்துதிரிந்த என் தாயக மண்ணிலே நடந்துதிரிவதற்கும், அவர் புலம்பெயர்ந்த நாட்டிற்கே புலம் பெயர்வதற்கும், அவர் அடிக்கடி சென்று தங்கும் தமிழ் நாட்டிலும் சென்று அவரைச் சந்திப்பதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக அவரது விருந்தோம்பலில் மகிழ்வதற்கும், எனது இல்லத்தில் அவரை விருந்தோம்பி மகிழ்வதற்கும் என்போன்ற சிலருக்குகிடைத்த வாய்ப்பு வாழ்வின் மகத்தான கொடுப்பினை என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு மட்டும், ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலம் தருவீர்களாக இருந்தால், எஸ்பொ படைத்த இலக்கியங்களைப்பற்றியல்ல, இலக்கியங்களைப் படைத்த எஸ்பொ வைப்பற்றி, எழிலான, சுவையான, இதமான, இரம்மியமான, திகைப்பான, வியப்பான, உயர்வான எத்தனையோவிடயங்களைக் குறித்துப் பேசி உங்களையெல்லாம் குதூகலப்படுத்த முடியும். அதுதான் உண்மையான நினைவுப்பேருரையாக அமையும்.
இப்போது எஸ்பொ அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் இலக்கிய வரலாற்றின் சிலபக்கங்களில், தடித்த எழுத்துக்களால் நிரப்பப்பட்டு, எஸ்பொ எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார்., என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
வாழ்க தமிழ்! வணக்கம்.